கர்ப்பத்தின் க்ளைமாக்ஸ் மாதங்கள்!!!( மருத்துவம் )
கர்ப்பத்தின் வளர்ச்சியை இரண்டாம் டிரைமெஸ்டர் வரை பார்த்துவிட்டு, கர்ப்ப காலத்தில் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படும் பலதரப்பட்ட உடல்-மனம் சார்ந்த பிரச்னைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் பார்க்கத் தொடங்கிவிட்டோம். ஆரோக்கியமாக இருக்கும் கர்ப்பிணிகள் இதை படித்துவிட்டு, அதீத கற்பனைகளைச் செய்துகொண்டு பயப்படத் தேவையில்லை.
இதுவரை சொன்னதெல்லாம் ஓர் எச்சரிக்கைக்குத்தான். இந்தப் பிரச்னைகள் எல்லா கர்ப்பிணிகளுக்கும் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. பிரச்னைகள் ஏற்படுமானால், அவற்றை தைரியமாக எதிர்கொள்வதற்கு கர்ப்பிணிகள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளத்தான் அந்த ஆலோசனைகள்.ஒரு கர்ப்பிணியானவள் இவ்வாறான பிரச்னைகளையெல்லாம் கடந்து வருகிறாள் என்பதை மற்றவர்கள் குறிப்பாக கணவர்கள் – தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவற்றை சொல்லியிருக்கிறேன்.
கர்ப்பம் என்பது நோயல்ல அச்சப்படுவதற்கு… அது பெண்ணுக்கே கிடைத்துள்ள ஓர் அற்புதமான அனுபவம் உணர்ந்து ரசிப்பதற்கு! இரண்டாம் டிரைமெஸ்டர் முடிந்து, மூன்றாம் டிரைமெஸ்டரில் (28 – 40 வாரங்கள்) அடி எடுத்துவைக்கும்போது, குழந்தைக்கும் கர்ப்பிணிக்கும் என்ன மாதிரியான வளர்ச்சி காணப்படும் என்பதை இப்போது பார்ப்போம்…
கர்ப்பிணியானவள் அடுத்த மூன்று மாதங்களில் தான் தாயாகப் போகிறோம் எனும் மகிழ்ச்சி ஒருபுறம், சுகப்பிரசவம் ஆக வேண்டும் எனும் எதிர்பார்ப்பு மறுபுறம் மனதை அழுத்த, இரு வேறு மனநிலைகளையும் சமாளித்துக்கொண்டு, தன்னைக் கவனித்துக்கொள்வதன் மூலம் வயிற்றில் வளரும் சிசுவையும் பேணிக்கொண்டு வருகிறாள்.
சிசுவின் அற்புத அசைவுகள்
ஏழாவது மாதத்தில் குழந்தையின் எடை ஒரு கிலோவைத் தொட்டிருக்கும். தலையில் முடி அடர்த்தியாகி இருக்கும். கருக்குழந்தையின் கண்கள் முதல் முறையாகத் திறக்கும் காலம் இது. இதுவரை பனிக்குட நீரில் ஜாலியாக நீந்தி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அடுத்தடுத்த மாதங்களில் அளவில் பெரிதாவதால், நீந்த இடம் இல்லாமல், அடிக்கடி வெறுமனே கைகால்களை அசைத்துக் கொண்டே இருக்கும். இதனால், வயிற்றில் குழந்தை உதைப்பதுபோன்ற உணர்வு தாய்க்கு இருந்துகொண்டே இருக்கும். இவ்வாறு அசைவதன் வாயிலாகக் குழந்தை தன்னுடைய தசைகளை வலுப்படுத்திக்கொள்கிறது என்கிறது அறிவியல்.
ஏழாவது மாத இறுதியில் குழந்தையின் எடை 1.250 கிலோவாக இருக்கும். மூளை வளர்ச்சி மிக வேகமாக நடக்கும். உடலில் கொழுப்பு சத்து சேர்ந்து, தோலின் நிறம் அடர்சிவப்பிலிருந்து ரோஜா நிறத்துக்கு மாறிவிடும். ஆனாலும் சருமத்தில் சுருக்கங்கள் காணப்படும்.இந்தப் பருவத்தில் கர்ப்பிணியின் மார்பகங்கள் கனமாக இருக்கும்.
எந்தப் பக்கம் படுத்தாலும் சிரமமாக இருக்கும். இதனால், அசந்து உறங்குவது சிறிது கடினமாக இருக்கும். ஒரு பக்கமாகப் படுத்துக்கொண்டு, வயிற்றுப் பகுதியைத் தாங்குவதற்கு ஒரு தலையணையை வைத்துக்கொண்டும், முழங்கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைத்துக்கொண்டும் படுத்தால் உறக்கம் வரும்.
அவ்வப்போது அடிவயிற்றில் வலி ஏற்படலாம். கருப்பையைத் தாங்கும் தசைநார்கள் விரிவடைவதால், இந்த வலி ஏற்படுகிறது. இதுவரை லேசாக இருந்த கீழ் முதுகு வலி இப்போது சிறிது அதிகப்படும். வயிறு பெரிதாக இருப்பதால், நடையில் மாற்றம் தெரியும். கொஞ்சம் கவலை, படபடப்பு போன்றவை தொடங்கிவிடும்.
இரட்டைக் குழந்தையாக இருந்தால், இப்போதே நிறைமாதக் கர்ப்பிணியின் வயிறுபோல் காணப்படும்.புகார் சொல்லும் காலம் எட்டாம் மாத ஆரம்பத்தில் குழந்தையின் எடை 1.700 கிலோவாக இருக்கும். இப்போதிலிருந்து குழந்தையின் எடை வேகமாக அதிகரிக்கும். இதனால் அதன் அசைவுகள் அதிகமாகும். அப்போதெல்லாம் குழந்தை அதிகமாக உதைப்பதுபோன்று தோன்றும். ஆண் குழந்தையாக இருந்தால், விரைப் பகுதிகள் கீழிறங்கும். குழந்தையின் உடலைப் போர்த்தியிருக்கும் மெழுகின் கனம் அதிகரிக்கும். கை விரல் நகங்கள் நன்கு வளர்ந்திருக்கும்.
எட்டாவது மாத இறுதியில் குழந்தையின் எடை இரண்டு கிலோவாக இருக்கும். மெதுவாக அதன் தலைப்பகுதி கீழே இருக்கும்படி நகர ஆரம்பிக்கும். அதன் அசைவுகளில் மாற்றங்கள் தெரியும். காலால் உதைப்பது குறைந்துவிடும். குழந்தை புரண்டு, சுற்றிச்சுற்றி வரும். குழந்தை வளர வளர கருப்பையில் இடம் குறைவாக இருப்பதால், இந்த நிலைமை ஏற்படுகிறது. ஆனால், நடைமுறையில் முதன்முறையாக தாயாகப் போகிறவர்கள் பயந்து ‘குழந்தை முன்பு போல் அசையவில்லை’ என்று புகார் சொல்லிக்கொண்டு மருத்துவமனைக்கு அடிக்கடி வருவதுண்டு.
கிளைமாக்ஸ் மாதம்
ஒன்பதாவது மாதத்தில், குழந்தையின் கன்னப்பகுதியில் கொழுப்பு சேர்ந்து, முகம் வட்ட வடிவத்துக்கு மாறிவிடும். குழந்தை தாயின் மார்பிலிருந்து பாலை நன்றாக உறிஞ்சிக் குடிக்க இது உதவியாக இருக்கும். உடலில் இருந்த சரும சுருக்கங்கள் முழுவதுமாக மறைந்துவிடும். குழந்தையின் தலை தாயின் பிறப்புப் பாதைக்கு வரத் தொடங்கும்.
குழந்தையின் அசைவுகள் முன்பு இருந்த மாதிரி இருக்காது; மிகவும் குறைந்திருக்கும். கர்ப்பிணியின் பிறப்புறுப்பில் பிசுபிசுப்பான திரவம் லேசாக கசியும். கால்களில், முகத்தில், உடலில் நீர்வீக்கம் அதிகரிக்கலாம். கால் பிடிப்பும் உடலில் அரிப்பும் ஏற்படலாம். கிட்டத்தட்ட பிரசவத்துக்கு கர்ப்பிணி தயாராகிவிட்ட நிலை இது.
ஒன்பதாவது மாத இறுதியில் குழந்தையின் எடை 2.500-லிருந்து 2.900 கிலோ வரை இருக்கும். குழந்தை கொழுகொழுவென்று சதைப்பிடிப்புடன் இருக்கும். உடல் முழுவதும் பரவியிருந்த லேனுகோ(Lanugo) எனும் முடி மறைந்துவிடும். குழந்தையின் மலக்குடல் முழுவதும் மெக்கோனியம்(Meconium) எனப்படும் பச்சை நிற மலம் நிரம்பியிருக்கும். இதுதான் குழந்தையின் உடலிலிருந்து வெளிவரும் முதல் மலம்.
இப்போது குழந்தையின் உடலில் முக்கியமான உறுப்புகள் எல்லாமே நன்றாக வளர்ந்து, வெளி உலக வாழ்க்கைக்குத் தயாராக இருக்கும்.
ஒன்பதாவது மாதத்திலிருந்து கர்ப்பிணியானவள் வாரம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். சிறிய பிரச்னை ஏதாவது எழுமானால், உடனே கண்டுபிடித்து சரி செய்ய நேரம் கிடைக்கும்.
இப்போது குழந்தை பிரசவத்துக்குத் தயாராகி, கருப்பையில் சரியான நிலையில் பொருந்தியிருக்கும். பெரும்பாலான குழந்தைகளுக்குத் தலை கீழ்ப்பகுதியில்தான் இருக்கும். 100ல் 4 குழந்தைகளுக்கு தலை மேற்புறத்தில் இருக்கலாம். கர்ப்பிணிக்கு 37 கர்ப்ப வாரங்கள் கடந்துவிட்டதென்றால், அவர் ‘நிறைமாத கர்ப்பிணி’யாகக் கருதப்படுவார்.
இப்போது கர்ப்பிணியின் விலா எலும்புகளில் வலி குறைந்திருக்கும். சுவாசத்தில் சிரமம் குறைந்திருக்கும். குழந்தையின் தலை பிறப்புப் பாதைக்கு நகர்ந்துவிட்டதால் இந்த நன்மை ஏற்படுகிறது. இந்த சமயத்தில் குழந்தையின் அசைவுகள் நாளொன்றுக்கு 20 முறையாவது இருக்க வேண்டும். கர்ப்பிணியின் பிறப்புறுப்பில் லேசாக கசிந்த பிசுபிசுப்பான திரவம் இப்போது அதிகரிக்கலாம்.
அடிக்கடி ‘பொய் வலி’ வரலாம். கருப்பையின் வாய்ப்பகுதி இப்போது அகலமாகிவிட்டதால் இந்த வலி ஏற்படுகிறது. இது பொதுவாக கீழ் முதுகில் தோன்றும். ஆனால், வலி அதிகமாகாது. கர்ப்பிணிக்கு இது முதல் பிரசவம் என்றால், உண்மையான பிரசவ வலி எவ்வாறு இருக்கும் என்பதையும், பிரசவத்துக்கு எப்போது மருத்துவமனைக்கு வர வேண்டும் என்பதையும் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.
பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய எல்லாப் பொருட்களையும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே குழந்தை இருந்தால் அதை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வீட்டில் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். பதற்றமடைய வேண்டாம். அதிக பரபரப்பும் வேண்டாம். இனி நிகழப்போவது சுகப் பிரசவம்தான்!
பிரசவத்தில் கணவரின் பங்கு என்ன?
குடும்பத்தில் புதிதாக ஒரு நபர் வரப்போகிறார் எனும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் கர்ப்பிணியைப்போல் கணவருக்கும் தொற்றிக் கொள்வதுண்டு. கர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்தே மனைவிக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளையே உதிர்க்க வேண்டும். முக்கியமாக மூன்றாவது டிரைமெஸ்டரின்போது, மனைவிக்கு ஆதரவாகவே பேச வேண்டும். எந்தக் காரணத்தைக்கொண்டும் வாக்குவாதம் கூடாது. மனதளவில் காயப்படுவதற்கு வாய்ப்பே தரக்கூடாது.
ஒருவேளை மனைவிக்கு சிசேரியன் தேவைப்படுமானால், அதற்கு அவர் மனதளவில் தயாராக உதவ வேண்டும். கணவரும் அதற்குத் தயாராகிவிட வேண்டும். மருத்துவர் அனுமதித்தால், பிரசவத்தின்போது மனைவியின் அருகில் கணவர் இருக்கலாம். கணவருக்கு இது ஒரு புதிய அனுபவமாகவும் மனைவிக்கு ஆறுதலாகவும் இருக்கும்.
எல்லாக் குழந்தைகளுக்கும் தாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்குத் தந்தையும் முக்கியம்தான். எனவே, குழந்தை பிறந்தவுடன், எவ்வளவு விரைவில் குழந்தையைத் தூக்கிவைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு விரைவில் தூக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தந்தைக்கும் குழந்தைக்கும் உள்ள உறவு வலுப்படும். குழந்தை பிறந்த பிறகும் மனைவிக்கு உணர்வுபூர்வமாக மிகுந்த ஆதரவை அளிக்க வேண்டும். குழந்தையின் வளர்ப்பிலும் பங்கெடுத்துக்கொள்ளலாம். இவ்வாறான உதவிகள் தாயின் மனதில் உற்சாகத்தைக் கொடுக்கும். அது தேவையான தாய்ப்பால் சுரப்புக்கு உதவும்.
Average Rating