கூட்டமைப்பின் பிடி; முன்னணியின் சறுக்கல்!!(கட்டுரை)
அரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அடிப்படையானது. அதற்கு, சாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருப்பதை அண்மைய உதாரணமாகக் கொள்ளலாம்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு- கிழக்கு பூராவும் கூட்டமைப்பு சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளை இழந்தது. முக்கியமாக, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் தோல்வியடைந்திருந்தது.
யாழ். மாநகர சபையில் மயிரிழையில் தப்பிப்பிழைத்தது. இவ்வாறான நிலையில், யாழ். மாநகர சபையில் மாத்திரமல்ல, சாவகச்சேரி நகர சபையிலும் பருத்தித்துறை நகர சபையிலும் கூட்டமைப்பு ஆட்சியமைக்க முடிந்திருக்கிறது என்கிற விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
புதிய தேர்தல் முறைக்கு அமைய நடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், நாடு பூராவும் சில சபைகளைத் தவிர, அனைத்துச் சபைகளிலும் மற்றைய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைக்க வேண்டிய சூழலே, வெற்றிபெற்ற கட்சிகளுக்கு ஏற்பட்டது. வடக்கு- கிழக்கில் கூட்டமைப்பு வெற்றி பெற்ற சபைகளிலும் இதுவே பெரும்பாலும் நிலைமையாகக் காணப்பட்டது.
இந்த நிலையில், வடக்கு- கிழக்கில் பொது இணக்கப்பாடொன்றுக்கு வருவது சார்ந்து, கூட்டமைப்பு ஆர்வம் காட்டியது. அதாவது, ஒவ்வொரு சபையிலும் எந்தக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றிருக்கின்றதோ, அந்தக் கட்சியிடம் ஆட்சியைக் கையளிப்பது தொடர்பிலானது.
இந்த யோசனைக்குப் பரவலான ஆதரவும் இருந்தது. இந்த யோசனை வெற்றியளிக்கும் பட்சத்தில், யாழ். மாநகர சபை உள்ளிட்ட, தாம் அதிக உறுப்பினர்களை வெற்றி கொண்ட சபைகளில், மேயர், பிரதி மேயர் மற்றும் தவிசாளர், பிரதித் தவிசாளர் பதவிகளுக்குப் போட்டித் தவிர்ப்பு நிலையை உருவாக்க முடியும் என்றும் கூட்டமைப்பு நம்பியது.
ஆனால், யாழ். மாநகர சபையைத் தமது ஒற்றை இலக்காகக் கொண்டிருந்த முன்னணியின் முடிவால், அது சாத்தியமில்லாமல் போனது.
பருத்தித்துறை, சாவகச்சேரி நகர சபைகளில் அதிக உறுப்பினர்களைப் பெற்றிருக்கின்ற முன்னணி, பொது இணக்கப்பாட்டின் பிரகாரம் ஆட்சியமைக்கும் சூழல் இருந்தது. ஆனால், அதைப் புறந்தள்ளிவிட்டு, யாழ். மாநகர சபைக்கான மேயர் போட்டியில் குதித்தமையானது, வெற்றி பெற்ற சபைகளிலும் எதிர்க்கட்சியில் உட்காரும் நிலையை உருவாக்கி விட்டிருக்கின்றது.
பொது இணக்கப்பாட்டின் மூலம், முன்னணி, ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளிடம் கூட்டமைப்பு வெளிப்படுத்தியது, மோதல் தவிர்ப்பு ஒப்பந்தமேயாகும். அது, சபைகளில் நிர்வாக நடவடிக்கைகளைக் கருத்திக் கொண்டது.
ஆனால், மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை எத்தித்தள்ளும் நிலைக்கு முன்னணி வந்தபோது, சுமந்திரனும் தன்னுடைய ஆட்டத்தை ஆடுவது சார்ந்து ஆர்வம் வெளியிட்டார். அதை அவர், வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்.
யாழ். மாநகர சபையில், மொத்தமுள்ள 45 உறுப்பினர்களில் கூட்டமைப்பு 16 உறுப்பினர்களும், முன்னணிக்கு 13 உறுப்பினர்களும் ஈ.பி.டி.பிக்கு 10 உறுப்பினர்களும் ஐ.தே.க, சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுக்கு ஆறு உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.
இப்படியான நிலையில், மேயர் பதவிக்கான வாக்கெடுப்பில், தனியொரு கட்சியின் வாக்குகள் மாத்திரம் வெற்றியை ஈட்டித்தரப் போதுமானதல்ல. எனைய கட்சிகளின் வாக்குகளும் தீர்மானம் மிக்கவையே.
எனினும், முன்னணி மேயர் பதவிக்கான போட்டியில் குதித்தது இன்னோர் எண்ணத்தின் போக்கிலாகும். அதாவது இம்மானுவேல் ஆர்னோல்டை, மேயர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பில் தமிழரசுக் கட்சிக்குள் தேர்தலின் பின்னரும் பிரச்சினைகள் இருந்தன. இதனால், ஆர்னோல்டுக்கு எதிரானவர்கள், தவிர்க்க முடியாமல், முன்னணி முன்னிறுத்திய மேயர் வேட்பாளரான வி.மணிவண்ணனை ஆதரிக்கும் சூழல் உருவாகும் என்று கருதினார்கள். இதனால்தான், கஜேந்திரகுமார் மேயர் வேட்பாளர் தேர்வின்போது, இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்.
ஆனாலும், ஆர்னோல்ட்டுக்கு எதிரானவர்களை, சுமந்திரன் தேர்தல் முடிந்து சில நாட்களுக்குள்ளேயே சரிசெய்துவிட்டார். கட்சியின் கட்டுக்கோப்பு, விதிகள் சார்ந்தும் எடுத்துரைக்கப்பட்டு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஒரே அணியில் சேர்க்கப்பட்டு விட்டார்கள்.
அத்தோடு, யாழ். மாநகர சபையில், மூன்றாவது பெரிய கட்சியான ஈ.பி.டி.பியோடு பொது இணக்கப்பாடு சார்ந்து, ஆரம்பத்தில் திரைமறைவிலும் இறுதி நேரத்தில் வெளிப்படையாகவும் கூட்டமைப்பு பேசியது. ஆனால், முன்னணியோ மேயர் பதவியைக் கைப்பற்றுவது சார்ந்து, எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை. மாறாகத் தமிழரசுக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினையில் குளிர்காயலாம் என்றிருந்தது. விளைவு, கையை மீறிப்போயிருக்கின்றது.
தன்னுடைய தன்முனைப்பு (ஈகோ) மனநிலையால் முன்னணி, தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பையும் நிராகரிக்கும் வகையில் செயற்பட்டிருக்கின்றது. பொது இணக்கப்பாடு என்கிற விடயத்தை கூட்டமைப்பு கையிலெடுக்கும் போது, முன்னணி முறுக்கிக்கொண்டு நிற்காமல் ஏற்றுக்கொண்டிருக்கலாம்.
யாழ். மாவட்டத்தில், யாழ். மாநகர சபைக்கு அடுத்து, பெரிய சபைகளான சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகளை இழந்திருப்பதானது, தங்களைத் தாங்களே பலமிழக்கச் செய்யும் போக்கிலானது.
ஏனெனில், சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகளில் முன்னணி வெற்றி பெற்றமைக்கான காரணங்கள் வேறாக இருந்தாலும், கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு கட்சியைக் கணக்கில் எடுக்காமல், முன்னணியை மக்கள் முன்னிறுத்தியமை கவனிக்கத்தக்கது.
அப்படியான நிலையில், இரண்டு நகர சபைகளிலும் ஆட்சியமைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைச் செய்வதன்மூலம், மக்களின் நம்பிக்கைகளை இன்னமும் வளர்த்திருக்க முடியும்.
இவ்வாறான நிலையில், யாழ். மாவட்டத்தின் இரண்டாவது, முக்கிய நகரங்கள் குறித்தே அக்கறை கொள்ளாத சிந்தனை என்பது, வடக்கு- கிழக்கின் ஒட்டுமொத்த மக்களின் அபிலாஷைகள் குறித்து, அக்கறையோடு இருக்கிறார்களா? என்கிற கேள்வியை இன்னமும் பலம்பெற வைத்திருக்கின்றது.
அரசியலில் நிலைத்திருப்பதற்கும் வெற்றி காண்பதற்கும் அதிக உழைப்பைக் கொட்ட வேண்டியிருக்கும். சிந்தனைகள் மாத்திரமல்ல; அதைச் செயல்வடிவமாக்க வேண்டிய சமயோசிதம் அதிமுக்கியமானது.
உலகத்தில் அதியுன்னத சிந்தனைகளைப் பல தரப்புகளும் வெளியிட்டு வந்திருக்கின்றன. அவற்றில், செயல்வடிவம் பெறாதவை காலாவதியாகிவிட்டன. அதிக தருணங்களில் தமிழ்ச் சிந்தனாவாதிகளின் நிலையும் அதுவாகவே இருந்திருக்கின்றது.
புளொட் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர், இந்தப் பத்தியாளரிடம் ஒருமுறை கூறினார், “….தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த தருணத்தில், அதிகமாகப் படித்தவர்களைக் கொண்டிருந்தது எமது இயக்கமே. தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட, பல சமூக, பொருளாதார விடயங்களைத் திட்டங்களோடு வரைந்து வைத்திருந்தோம். ஆனால், அவற்றைச் செயற்படுத்துவதில், நாங்கள் பெரிய சோம்போறிகள்; கதைப்பதோடு சரி. ஆனால், நாங்கள் உரையாடிய விடயங்களைச் செயற்பாட்டுத்தளத்தில் வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர்கள் புலிகள். அவர்கள் திட்டங்களை மாத்திரமல்ல, செயற்பாட்டையும் முதன்மையான விடயமாகக் கருதினார்கள். அதுதான், அவர்களை விமர்சனங்கள் கடந்து, தமிழ் மக்களை வழிநடத்தும் பொறுப்புக்கு வர வைத்தது…” என்றார்.
யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளர் போட்டியில் தோல்வி, சாவகச்சேரி நகர சபையில் ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டமை உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து, முன்னணி முன்வைத்திருக்கின்ற கருத்துகள் அதிகம் சிரிப்பையே ஏற்படுத்துகின்றன.
அது, ‘பேஸ்புக்’ சண்டைகளில் வெளிப்படுத்தும் கருத்துகள் போன்றதாக இருக்கின்றது. ஆனால், முன்னணி தன்னுடைய கைக்குக் கிடைத்த வாய்ப்புகளை எவ்வாறு நழுவ விட்டது என்பது சார்ந்து ‘துரோகி’ உரையாடல்களுக்கு அப்பால் நின்று சிந்திக்க வேண்டிய தருணம் இது.
ஏனெனில், மக்கள் வழங்கிய வாய்ப்பைக் கைநழுவ விடுதல் என்பது, அவர்கள் மீதான மக்களின் நம்பிக்கையை இன்னமும் நலிவடையச் செய்யும்.
யாழ். மாநகர சபை, சாவகச்சேரி நகர சபைகளில் ஆட்சியமைப்பதற்காக கூட்டமைப்பு எடுத்துக் கொண்ட முயற்சிகளை, கிழக்கிலும் முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு உண்டு. அல்லது, பொது இணக்கப்பாடு என்கிற நிலைப்பாட்டின் போக்கில், ஆட்சியமைப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
மாறாக, கிழக்கின் குரல்களுக்கு மதிப்பளிக்காமல், வடக்கில் ஒரு மாதிரியும் கிழக்கில் இன்னொரு மாதிரியுமான முடிவை கூட்டமைப்பு எடுக்குமாக இருந்தால், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகள் கிழக்கில் பலம்பெறுவதைத் தடுக்க முடியாது.
வடக்கையும் கிழக்கையும் இரு கண்களாக மிக அக்கறையோடு பார்க்க வேண்டும். கண்களில் பார்வைக் குறைபாடுகள் ஏற்பட்டு, கண்ணாடி பொருத்த வேண்டி வரலாம். கண்ணாடியில் பொருத்த வேண்டிய வில்லைகளின் அளவில் மாற்றம் வரலாம்.
ஆனால், பார்வையைச் சீர்படுத்துவதற்கான கட்டம் என்பது, சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், கண்ணாடி, இரு கண்களையும் மேலும் மேலும் பழுதாக்கிவிடும்.
வடக்கில் மாத்திரமல்ல, கிழக்கிலும் கூட்டமைப்பு சமயோசிதமாகவும் ஆக்கபூர்வமாகவும் மக்களின் குரல்களை மதித்து நடக்க வேண்டிய தருணம் இது.
Average Rating