இனவாத தாக்குதல்கள்: முஸ்லிம்களின் தனித்துவங்கள் (கட்டுரை)..!!
இதற்கு முன்னர், முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் இடம்பெற்ற நேரங்களைப் போலவே, கடந்த மாதம் அம்பாறையிலும் இம்மாத ஆரம்பத்தில் கண்டி மாவட்டத்திலும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்ற போதும் ஊடகங்களில், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் போவதாக, அரசாங்கம் கூறிவருகிறது.
இம்முறை அரசாங்கம், ஒருபடி முன் சென்று, ‘பேஸ்புக்’, ‘வட்ஸ்அப்’, ‘வைபர்’ ஆகிய சமூக வலைத்தளங்களைத் தற்காலிகமாகத் தடை செய்தது.
அத்தோடு, அதன் காரணமாக, இலங்கைக்கு விஜயம் செய்த ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் அதிகாரிகளோடு, ‘பேஸ்புக்’இல் வெறுப்பூட்டும் கருத்துகளைப் பரப்புவதைத் தடுப்பது தொடர்பாக, அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.
இவ்வாறு செயற்பட்டமையானது, பாராட்டுக்குரியதாயினும் ஏற்கெனவே, இத்தகைய ஊடகங்கள் மூலமாகப் பரப்பப்பட்டுள்ள வெறுப்பு மற்றும் குரோதங்களின் தாக்கத்தை, அதனால் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது.
பிரதான பிரவாகத்தில், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பரப்பப்பட்டுள்ள குரோதங்களின் காரணமாக, எவரது உடலிலும் கீறலாவது ஏற்படாத வாகன நெரிசலொன்று கூட, மாபெரும் இனக்கலவரமாக மாறும் நிலை, நாட்டில் இருந்து வருகிறது.
2014 ஆம் ஆண்டு அளுத்கமவிலும் கடந்த நவம்பர் மாதம் காலி, கிந்தொட்டவிலும் இம்மாதம் கண்டி, தெல்தெனியவிலும் இடம்பெற்ற வன்செயல்கள், வாகனச் சாரதிகளிடையே எற்பட்ட வாக்குவாதங்களின் தொடர்ச்சியாகவே ஆரம்பிக்கப்பட்டன.
ஆனால், இம்முறை ஏற்பட்ட கலவரங்களின்போது, சிங்கள – பௌத்த மக்களிடையேயும் பௌத்த பிக்குகளிடையேயும் ஊடகங்களிடையேயும் பாரிய மாற்றமொன்றையும் காணக்கூடியதாக இருந்தது.
இதற்கு முன்னர், அவர்கள் எவரும் முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட அபாண்டங்களை, மறுக்க முன்வரவில்லை. ஆனால், இம்முறை முன்வந்தார்கள்.
2012 ஆம் ஆண்டு, முஸ்லிம் ஆடை விற்பனை நிலையங்களில், சிங்களவர்களின் இனப்பெருக்கச் சக்தியை இல்லாமல் செய்யும், இரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்டு இருப்பதாக, வதந்திகள் பரப்பப்பட்ட போது, சிங்கள புத்திஜீவிகளோ, பௌத்த துறவிகளோ அதை மறுக்கவில்லை.
அவர்கள், அதை ஏற்காவிட்டாலும், அந்த வதந்தியைப் பரவவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். ஆனால், இம்முறை அம்பாறையில் ஒரு முஸ்லிம் ஹோட்டலில், உணவில் கருத்தடை வில்லைகள் கலக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அப்பகுதியில் முஸ்லிம் கடைகளும் பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டபோது, அவர்கள் அந்த வதந்தியை, எடுத்த எடுப்பிலேயே மறுக்க முன்வந்தனர்.
குறிப்பாக, சிங்கள ஊடகங்கள், உடனடியாக அது தொடர்பாக, மருத்துவ நிபுணர்களிடம் வினவி, அந்தப் பிரசாரத்தின் பொய்மையை அம்பலப்படுத்த முன்வந்தன.
முன்னர், ஞானசார தேரர் குழப்பங்களை விளைவிக்கும் போது, பௌத்த பிக்குகள் அவற்றை நியாயப்படுத்தினர். ஆனால், இம்முறை அவர்களில் சிலர், பள்ளிவாசல்களுக்குச் சென்று, அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தனர்.
சில பகுதிகளில், பீதியால் வீடுகளில் இருந்து வெளியேறிய முஸ்லிம் குடும்பங்களுக்கு, சில விகாரைகளில் தஞ்சம் வழங்கப்பட்டதாகச் செய்திகள் கூறின.
எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கம், தமது பொறுப்பை சரிவர நிறைவேற்றாமல், பொலிஸார் சில இடங்களில், குண்டர்களோடு கைகோர்த்துச் செயற்பட்ட நிலையில், சட்ட ரீதியாக அவதூறான பொறுப்பை ஏற்காத, சிங்களச் சாதாரண மக்களில் சிலர், இம்முறை பொறுப்போடு செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறானதொரு நிலைமை, மூன்று வருடங்களுக்கு முன்னர் எதிர்ப்பார்க்க முடியாமல் இருந்தது.
வியாபாரப் போட்டி, பொறாமை மற்றும் அரசியல் போன்ற பல காரணங்கள், குழுக்களாலும் தனி நபர்களாலும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அண்மைக் கால வன்செயல்களுக்குக் காரணமெனப் பலர் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், அப்பட்டமான பொய்களையும் அவதூறுகளையுமே இனவன்செயல்களைத் தூண்டுவதற்காக, இனவாதிகள் பாவித்து வருகின்றனர். படித்தவர்கள் உட்படப் பலர், அந்தப் பொய்களை நம்புவதாகவும் தெரிகிறது.
2012ஆம் ஆண்டு பொதுபல சேனா, முஸ்லிம்களுக்கு எதிராகக் குரோத பிரசாரத்தை ஆரம்பித்தபோது, சந்தையில் சில பொருட்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஹலால் சான்றிதழைத்தான், அவர்கள் அதற்காக முதன் முதலாகப் பாவித்தார்கள்.
அப்போது, உண்மையை அறிந்திருந்த அரசாங்கமோ, சுயவிருப்பத்தில் ஹலால் சான்றிதழைப் பெற்றிருந்த சிங்கள வியாபாரிகளோ, அந்தச் சான்றிதழ் தொடர்பாகப் பரப்பப்பட்டு வந்த தப்பபிப்பிராயத்தை முறியடிக்க முன்வரவில்லை.
ஹலால் சான்றிதழுக்காகச் செலுத்தப்படும் கட்டணத்தால் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகிறது என்பதே, அக்காலத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டாகும்.
அப்போது, அந்தச் சான்றிதழுக்காக தாம், ஒரு நாளுக்கு 27 ரூபாய் மட்டுமே செலவிடுவதாகவும் ஆனால், அந்தச் சான்றிதழினால் தமது சந்தை விரிவடைந்துள்ளதாகவும் வாய்திறந்து கூற, ஒரே ஒரு சிங்கள வியாபாரிக்கு மட்டுமே, தைரியம் இருந்தது.
முஸ்லிம்களைப் பயங்கரமான சமூகமாகச் சித்திரிப்பதற்காக, இனவாதிகள் புனித குர்ஆனையும் பாவித்தனர். குர்ஆனில் பெரும்பாலான வசனங்கள், குறிப்பிட்ட நிலைமையின் கீழ் இறக்கப்பட்டவையாகும்.
அதைக் கூறாது, சில பௌத்த பிக்குகள், குர்ஆன் வசனங்கள் சிலவற்றை, அந்தச் சூழலில் இருந்து பிரித்து எடுத்து, தவறான கருத்துப்பட பிரசாரம் செய்தனர். அதற்கு ஏற்றாப் போல், மத்திய கிழக்கு நாடுகளில் சில பயங்கரவாத அமைப்புகளும் செயற்பட்டன. அது அவர்களுக்கு வசதியாகிவிட்டது.
1871இல் நடைபெற்ற, இலங்கையின் முதலாவது சனத்தொகை மதிப்பீட்டில் இருந்து, 1981 ஆம் ஆண்டு, சனத்தொகை மதிப்பீடு வரை, இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை, மொத்த சனத்தொகையில் ஏழு சதவீதத்துக்கும் எட்டு சதவீதத்துக்கும் இடைப்பட்டதாகவே இருந்துள்ளது.
ஆனால், போரின் காரணமாகத் தமிழ் மக்களின் சனத்தொகை, 21 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைந்ததால், முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் ஒன்பது சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
இதைச் சுட்டிக்காட்டி, இலங்கையில் முஸ்லிம்களின் சனத்தொகை அசாதாரணமாக அதிகரித்துள்ளதாக, இனவாதிகள் எடுத்துக் கூறினர். ஆனால், தமிழர்களின் சனத்தொகை விகிதாசாரம் குறைந்ததால், சிங்களவர்களின் இன விகிதாசாரமும் கடந்த நூற்றாண்டுகளில் 65 சதவீதத்திலிருந்து 74 ஆக உயர்ந்துள்ளதை அவர்கள் குறிப்பிடவில்லை.
அவதூறுகள் எந்தளவு கீழ் மட்டத்துக்கு தாழ்ந்தது என்றால், சில முஸ்லிம் ஆடை விற்பனை நிலையங்களில், வாடிக்கையாளர்களை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் டொபிகளிலும் அந்த நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் உள்ளாடைகளிலும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும், இரசாயனப் பொருட்களைத் தடவி, சிங்கள மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகப் பிரசாரம் செய்தார்கள். அவர்கள், இப்பிரசாரத்தின் மூலம், தான் சார்ந்த மக்களின் அறிவையே ஏளனம் செய்தார்கள்.
அப்போது பதவியில் இருந்த, மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், இந்தப் பிரசாரங்களைத் தடுக்க எதையும் செய்யவில்லை. மாறாக, கோட்டாபய ராஜபக்ஷ போன்ற அந்த அரசாங்கத்தின் சில தலைவர்கள், பொதுபல சேனா போன்ற அமைப்புகளை ஊக்கப்படுத்தினர்.
நாட்டை எரித்துவிடக்கூடிய அளவில், நாடெங்கிலும் பெட்ரோல் தெளிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டை எரித்துவிட, ஒரு தீக்குச்சி மட்டுமே தேவை எனவும், ஒருமுறை, விமல் வீரவன்ச மட்டும் எச்சரித்தார்.
வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்தவைத் தோற்கடிக்கும் நோக்கில், மஹிந்தவைப் பற்றி, முஸ்லிம்கள் வெறுப்படையச் செய்யும் வகையிலான வெளிநாட்டு சதியொன்று செயற்படுவதாகவும் விமல் எச்சரித்தார்.
ஆனால், தம்மில் இருந்த இனவாத உணர்வுகளின் காரணமாக, அப்போதைய இனவாதப் பிரசாரத்தின் விளைவுகளை உணர, மஹிந்தவால் முடியவில்லை. இறுதியில், முஸ்லிம்களின் வாக்குக் கிடைக்காததால், மஹிந்த, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தார்.
இவ்வாறு, அக்காலத்தில் பரப்பப்பட்டு வந்த குரோத மனப்பான்மையின் காரணமாக, அம்பாறையில் ஒரு சாப்பாட்டுக் கடையில், இறைச்சிக் கறியில் விழுந்திருந்த மா உருண்டையை, கருத்தடை மாத்திரையாகப் பிரசாரம்செய்து, பெரும் இனக்கலவரத்தை ஏற்படுத்த, ஒரு சிலரால் முடிந்தது.
அண்மைக் காலமாக, முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டு வரும் சில மாற்றங்களும் அவர்களுக்குச் சாதகமாக அமைந்தன. அரபு மற்றும் பாகிஸ்தானிய கலாசாரத்தின் சில அம்சங்களை, இலங்கை முஸ்லிம்கள், நாளுக்கு நாள் அதிகமாகத் தழுவி வருகிறார்கள்.
அதனால், இலங்கை நாடு அரபுமயமாகி வருவதாக, இனவாதிகள் கூறத் தொடங்கினர். அறிவுஜீவிகள் எனக் கருதப்பட்ட பிமல் ரத்னாயக்க, மனோ கணேசன், கலாநிதி ஹர்ஷ டி சில்வா போன்றோர்களே, முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவையும் தீவிரவாதத்தையும் முடிச்சுப் போட்டார்கள் என்றால், இனவாதத்தால் கண்கள் மூடப்பட்டுள்ளவர்களைப் பற்றிக் கேட்கத் தேவையில்லை.
முஸ்லிம்கள் அண்மைக் காலமாக அணியும் அபாயா, முகத்திரை மற்றும் ஜுப்பா போன்ற உடைகளுக்கும் தீவிரவாதத்துக்கும் இடையே, எந்தவிதத் தொடர்பும் இல்லை. அந்த ஆடைகளை அணியும் பலர், குறிப்பாக பெரும்பாலான அபாயா அணியும் பெண்கள், அரசியலோ நாட்டு நடப்புகளோ அறியாத அப்பாவிகள்.
ஆரம்ப காலத்தைப் போலல்லாது, தற்போது பல பெண்கள் அணியும் அபாயாக்கள், உடலுறுப்புகளை உப்பிக் காட்டும் இறுக்கமான உடைகளாகவும் பகட்டானவையாகவும் இருக்கின்றன. இவை, இஸ்லாமிய முறையிலான உடையெனக் கூறவும் முடியாது. நிலைமை இவ்வாறு இருக்க, அபாயா அணியும் பெண்களைப் பார்த்துத்தான், சிலர் முஸ்லிம் தீவிரவாதிகள் என்கிறார்கள்.
முஸ்லிம்களும் ஏனைய சமூகத்தவர்களும் ஆடை அணிகளில் மென்மேலும் வேறுபடத் தொடங்கியதால் இரு சாராருக்கும் இடையிலான, மானசிக நெருக்கம், முன்னரை விட வெகுவாகக் குறைந்துள்ளது என்பது உண்மை.
ஒருபுறம், இனவாதிகள் தமது குரோதப் பிரசாரத்தினால், முஸ்லிம்களை அந்நியப்படுத்துவதோடு, மறுபுறம் முஸ்லிம்களும் தாமாகவே அந்நியப்படும் ஒரு நிலைமை உருவாகியிருக்கிறது.
ஆடை அணிகளில் வேறுபட்டதன் விளைவாக, முஸ்லிம்களை ஏதோ ஒரு வித்தியாசமான மிருகத்தைப் பார்ப்பதைப் போல், சிங்களவர்கள் பார்ப்பதாகத் தெரிகிறது.
போரின் காரணமாக முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு தனியான பிரச்சினைகளை எதிர்நோக்கினர். அப்போது தேசிய கட்சிகள், அவர்களைப் பாதுகாக்கவோ, அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கவோ முன்வராததன் காரணமாக, முஸ்லிம்கள் தனியான அரசியல் கட்சிகளை ஆரம்பித்து, தனியான அரசியலையும் முன்னெடுத்தனர்.
1978 ஆம் ஆண்டுக்கு முன்னர், தொகுதிவாரித் தேர்தல் முறை அமுலில் இருந்த காலத்தில், சிங்களவர்கள், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் வாக்களிக்க முன்வந்தனர்.
அதேபோல், முஸ்லிம்களும் தமிழர்களும் சிங்களவர்களுக்கு வாக்களித்தனர். தமிழ்க் கட்சிகளில், முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஆனால், விகிதாசாரத் தேர்தல் முறையினால், முஸ்லிம்கள் முஸ்லிமுக்கும், சிங்களவர் சிங்களவருக்கும், தமிழர்கள் தமிழருக்கும் வாக்களிக்கும் நிலை உருவாகியது.
இவ்வாறு அரசியலும் முஸ்லிம்களை மென்மேலும் சிங்களவர்களிடமிருந்தும் தமிழர்களிடமிருந்தும் அந்நியப்படுத்திவிட்டது.
இஸ்லாம், ஆடைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய சில தேவைகளைத் தான் கூறுகிறதேயல்லாது, அபாயா போன்ற குறிப்பிட்ட ஓர் ஆடையைப் பரிந்துரை செய்யவில்லை.
சிங்களவர்களும் தமிழர்களும் அணியும் சில ஆடைகளாலும், இந்தத் தேவை பூர்த்தியாகிறது. மேலதிகமாக, பெண்கள் தலையை மூடுவது போன்ற சில அம்சங்களைச் சேர்த்துக் கொண்டால், முஸ்லிம்களின் தனித்துவத்தை, தோற்றத்தில் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
பயத்தினால், முஸ்லிம்கள் தமது ஆடை அணிகளை, மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால், தேசிய ஒருங்கிணைப்புக்காக, அவ்வாறு செய்வதில் தவறும் இல்லை.
தனித்துவம் என்பது ஒரு சமூகத்தின் மரபு ரீதியான அடையாளங்களைப் பாதுகாத்துக் கொண்டும், சமய விதிகளை நிறைவேற்றிக் கொண்டும், ஏனைய சமூகங்களோடு ஐக்கியமாக வாழ்வதேயாகும். அதுவல்லாமல், ஏனைய சமூகங்களை விட, சகல விடயங்களிலும் மாறுபட முயற்சிப்பது அல்ல.
மறுபுறத்தில், நடத்தையில்தான் உண்மையான தனித்துவத்தைக் காட்ட முயற்சிக்க வேண்டுமேயல்லாது, நடத்தையைப் புறக்கணித்துவிட்டு, வெளித்தோற்றத்தால் தனித்துவத்தைக் காட்டுவதில் அர்த்தமும் இல்லை.
தெல்தெனியவில் சிங்களச் சாரதியைத் தாக்கிய, நான்கு முஸ்லிம்களும் நடத்தையில் இஸ்லாமிய தனித்துவத்தைக் காட்டியிருந்தால் பிரச்சினை ஏற்பட்டு இருக்காது. பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக் காத்திருக்கும் இனவாதிகளுக்கு, அங்கே ஆயுதமும் கிடைத்திருக்காது.
Average Rating