புலிகளுக்கு ஆதரவாக கனடா அரசை கண்டித்த சிங்களப் பிரமுகர்
கனடாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகள் ஆதரவாளர்களும் கனடிய அரசதரப்பிலிருந்தோ அல்லது சட்டரீதியாகவோ எந்தவித இடையூறுமின்றி இயக்கம் சம்பந்தப்பட்ட நிதி சேகரிப்பு, பிரசாரம் மற்றும் ஆயுத சேகரிப்பு மற்றும் அனைத்துச் செயற்பாடுகளிலும் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்த நிலையில் சிறிதுகாலத்துக்கு முன் கனடாவின் புதிய பிரதமராக ஸ்ரீபன் ஹாப்பர் பதவியேற்ற பின்னர் கனடிய அரசால் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாகத் தீர்மானிக்கப்பட்டு சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டது. அதற்கேற்ப புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் மட்டுமன்றி இயக்கத்துக்கு ஆதரவாக இயங்கிவந்த அமைப்புகள் மற்றும் பிரமுகர்களின் செயற்பாடுகள் பற்றியும் கனடிய சமஷ்டிப் பொலிஸ்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைகள், சோதனைகள் நடத்தப்பட்டு புலிகள் இயக்கத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் எனக்கருதப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதுடன், புலிகளின் தொடர்புடைய அமைப்புகளும் தடை செய்யப்பட்டன. இந்த வகையில் அண்மையில் பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பரின் தலைமையிலான கனடிய அரசால் புலிகள் இயக்கத்துடன் மிக நெருங்கிய சம்பந்தம் உடையதும் கனடாவில் மட்டுமன்றி, உலகமெங்கும் புலிகள் இயக்கத்துக்காக பெருந்தொகையில் நிதி சேகரித்து வழங்கிவந்ததுமாகிய “”உலகத் தமிழர் முன்னணி’ என்னும் பெயருடைய பிரபல அமைப்பும் அண்மையில் சீல் வைக்கப்பட்டது. புலிகள் இயக்கத்தின் வெளிநாடு நிதி வருவாயில் பெரும் பகுதியும் மேற்படி உலகத் தமிழர் முன்னணி மூலமே கிடைத்துவந்ததால் இவ்வாறு அந்த அமைப்பும் அதன் அனைத்து செயற்பாடுகளும் கனடிய சமஷ்டிப் பொலிஸாரால் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்ட பின்னர் கனடாவில் செயற்படும் புலிகள் இயக்கத்தினரும் ஆதரவாளர்கள், பிரதிநிதிகளும் பெரும் குழப்பத்துக்குள்ளாகினர்.
இந்நிலையில், மேற்படி தடை செய்யப்பட்ட உலகத் தமிழர் முன்னணி அமைப்பினர் உட்பட புலிகள் இயக்க ஆதரவாளர்கள் கனடா ரொறொன்ரோ நகரில் கனடிய அரசு மேற்படி அமைப்பைத் தடைசெய்ததைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றைக் கடந்த வாரம் நடத்தியுள்ளனர். விரும்பியோ விரும்பாமலோ பெருந்தொகையில் கனடியத் தமிழர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பல தமிழ்ப் பிரமுகர்களும் கனடிய நாட்டு அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். பல முக்கிய பிரமுகர்களும் உரையாற்றிய அந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பிரதான பேச்சாளராகப் பங்கெடுத்துக்கொண்டவர் ஒரு சிங்கள இனத்தவர் ஆகும். ஸ்ரீலங்கா நாட்டின் குடிமகனும் வைத்திய கலாநிதியுமாகிய இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்துவருகிறார்.
இவ்வாறு புலிகள் இயக்கத்தினரின் ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் சிங்கள இனப் பிரமுகர் ஒருவர் பிரதான பேச்சாளராகத் தோன்றி பயங்கரவாதப் புலிகள் அமைப்புக்காகக் கனடாவில் நிதி சேகரித்து வழங்கிவந்த உலகத் தமிழர் முன்னணியைத் தடைசெய்ததற்காக கனடிய அரசைக் கண்டித்துப் பேசிய சம்பவத்திற்கு சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுள்ளன. விசேடமாக கனடாவிலிருந்து வெளியாகும் பிரபல நெஷனல் போஸ்ற் பத்திரிகை தலைப்புச் செய்திகளில் ஒன்றாக மேற்படி சிங்கள வைத்தியக் கலாநிதி புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக கனடிய அரசைக் கண்டித்துள்ள சம்பவத்தை வெளியிட்டு பெரும் பிரசாரம் செய்துள்ளது.
ஆயினும், இவ்வாறு மேற்படி சிங்களப் பிரமுகரின் உரை பற்றி அறிக்கைகள் பத்திரிகைகளில் வெளியாகியதைத் தொடர்ந்து கனடாவிலுள்ள ஸ்ரீலங்காவின் கவுன்சிலர் ஜெனரல் பந்துல ஜயசேகர குறித்த சிங்களப் பிரமுகர் புலிகளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா கவுன்சிலர் ஜெனரலின் இந்த எதிர்ப்பு அறிக்கையையும் அதுபற்றி செய்திகளையும் கனடிய பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.
Average Rating