எக்ஸாம் டென்ஷனா? கவலை வேண்டாம்!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 16 Second

புத்தாண்டு தொடங்கிய நாளில் இருந்தே பள்ளி மாணவர்களுக்கு தேர்வு பயமும் தொடங்கி விடுகிறது. பெற்றோர்களுக்கும் இந்த பயம் உருவாகிவிடுகிறது. கடந்த ஆண்டு வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதற்காக தங்களை தயார் படுத்தி வருகிறார்கள்.

தேர்வு பயம் இல்லாமல் எப்படி பொதுத்தேர்வை அணுகுவது குறித்து கூறுகிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் வெங்கடேஷ்வரன். “தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்வது என்பது தேர்வு வரவிருக்கும் 1 மாதத்துக்கு முன்போ அல்லது 2 மாதங்களுக்கு முன்போ செய்வது கிடையாது. பள்ளி தொடங்கிய நாளில் இருந்தே மாணவர்கள் தயாராகிக் கொண்டிருப்பார்கள். தேர்வு நெருங்கும் சில நாட்களுக்கு முன் குழந்தைகள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும்தான் மனதும் ஆரோக்கியமாக இருக்கும். படிக்க வேண்டிய நாட்களை எல்லாம் விட்டு விட்டு தேர்வு நெருங்கும் காலகட்டத்தில் தூக்கம் இன்றி படிப்பது ஒருபோதும் பலன் தராது. குறைந்தபட்சம் 6 மணி நேரம் குழந்தைகள் உறங்க வேண்டும். படிக்க வேண்டும் என்பதற்காக நேரத்திற்கு சாப்பிடாமல் ஆரோக்கியத்திற்கு கேடான உணவுகளை எடுத்துக்கொள்வது தேர்வு நேரத்தில் உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

சில குழந்தைகள் விளையாட்டு வீரர்களாக இருப்பார்கள், அவர்கள் தேர்வு நெருங்கும் காரணத்தால் விளையாடு வதை முற்றிலுமாக நிறுத்திவிடுவார்கள். அப்படி நிறுத்தும் போது அவர்களுக்கு கவனிக்கும் திறன் குறையத்தொடங்கும். விளையாடும் நேரத்தை வேண்டுமானால் குறைத்துக்கொள்ளலாம். விளையாடுவது உடலுக்கு ஒரு பயிற்சி போன்றது. இதன் மூலம் ஞாபகசக்தி அதிகரிக்கும். அவர்கள் எப்போதும் ஆக்டிவாகவே இருப்பார்கள். படிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக குறுகிய நாட்களில் எல்லா பாடங் களையும் படிப்பார்கள். ஆனால் அது அடுத்தநாளே மறந்துவிடும்.

இதை Memory DK என்று சொல்வோம். அவ்வளவு நேரம் படித்தும் மறுநாள் படிக்கும்போது புதிதாக படிப்பது போல் இருக்கும். இப்படி செய்யாமல் குழந்தைகள் இன்றைக்கு இவ்வளவு பாடங்களை படிக்க வேண்டும் என்று வரையறுத்துக்கொண்டு அதை வாரம் ஒரு முறை ரிவிசன் ரீடிங் செய்தால் போதும். படித்த பாடங்களை திரும்பத் திரும்ப படிப்பதன் மூலம் அதை நன்கு நினைவில் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும். அதை எழுதிப் பார்ப்பது தேர்வுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். கவனிப்புத் திறன் அதிகரிக்கும். படிக்கும்போது 45 நிமிடங்களுக்கு ஒரு முறை 10 நிமிடம் ரிலாக்ஸ் செய்யலாம். இது போன்று ஓய்வெடுத்துப் படித்தால் குழந்தைகளின் கவனிப்புத் திறன் அதிகரிக்கும்.

பாட்டு கேட்டுக்கொண்டே படிப்பது, டிவி பார்த்துக்கொண்டே படிப்பது போன்ற செயல்களை குழந்தைகள் தவிர்ப்பது நல்லது. இடையூறு இல்லாமல் தனி அறையில் அமர்ந்துபடிப்பது சிறந்தது. மனதை ஒருநிலைப்படுத்த யோகா, தியானம், நடைப்பயிற்சி போன்று மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் கல்வியில் பெற் றோர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. தேர்வு நாட்களில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை கவனமாக கையாள வேண்டும்.

எல்லா பெற்றோர்களுமே தன்னுடைய குழந்தை அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அதற் காக குழந்தைகளை அதிக நேரம் படிக்க வைப்பது நிச்சயம் பயன்தராது. மாறாக அது ஒரு வித மன அழுத்தத்தை குழந்தைகளுக்கு உருவாக்கும். மதிப்பெண்ணை நோக்கி பிள்ளைகளை தள்ளும் போது அது சிறந்த கற்றலாக இருக்காது. மதிப்பெண் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். புரிந்து படித்து தைரியமாக எழுதினால் போதும் என்று அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இது குழந்தைகளுக்கு நல்ல நம்பிக்கையை கொடுக்கும்.

தேர்வு நாட்களில் குழந்தைகள் டிவி பார்க்கக் கூடாது என்று, பெற்றோர்கள் பொழுதுபோக்கான விஷயங்களை செய்ய விடாமல் தடுப்பது நல்லதல்ல. தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது ஓய்வு என்பது கட்டாயமாகிறது. ஒரு சில குழந்தைகள் நேரம் போவதே தெரியாமல் டிவி பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் வரை ஒதுக்கி கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு தேர்வு பயம் நோய் அளவிற்கு இருக்கும், அப்படி இருக்கும் மாணவர்களுக்கு கை நடுங்கும், வியர்த்துப் போகும். இந்த அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை மிக முக்கியம். பெற்றோர்கள் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துகிறார்களா என்று கண்காணிப்பது அவசியம்” என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் வெங்கடேஷ்வரன்.

தேர்வு நாட்களில் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவது குறித்து சொல்கிறார் உணவியல் நிபுணர் ஸ்ரீதேவி சத்யராஜா. “தேர்வு நெருங்க நெருங்க குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் மனஅழுத்தத்தை கொடுக்கும் ஹார்மோன்கள் அதிக கொழுப்புச் சத்தும், சர்க்கரை அதிகமாக உணவுகளை எடுத்துக்கொள்ள தூண்டும். பெற்றோர்கள் இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மனஅழுத்தத்தை குறைக்கும் விட்டமின் ‘சி’ சிங்க், மெக்னீசியம், பொட்டாசியம் நிறைந்த ஊட்டச்சத்து உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இந்த சத்துக்கள் அனைத்தும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு சமோசா, பிஸ்கெட் போன்றவற்றை தவிர்த்துவிட்டு பழங்கள், பருப்பு வகைகள், முளைக் கட்டிய தானியங்கள், நட்ஸ் போன்றவை கொடுக்கலாம்.

மேலும் புரதச்சத்து நிறைந்த மீன், முட்டை, பால் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். சாப்பாடு அளவாக சாப்பிட வேண்டும். கட்டாயமாக குழந்தைகள் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 1-1/2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். எல்லா கீரை வகைகளையும் சாப்பிடவேண்டும். தேர்வு எழுதப் போகும் முன்பு காலை உணவோடு ஜூஸ், பால் எடுத்துக்கொள்ளலாம். தேர்வு நாட்களில் வெளி உணவுகளில் கவனம் செலுத்தக்கூடாது. நிறைய கார்போ ஹைட்ரேட், கொழுப்புச் சத்து நிறைந்துள்ளதால் அது மந்தமாக்கிவிடும். அதனால் கட்டாயம் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த உணவு முறைகளை தேர்வு நடக்கவிருக்கும் 3 மாதங்களுக்கு முன்பிலிருந்து கடைப்பிடிக்க வேண்டும்’’ என்கிறார் ஸ்ரீதேவி சத்யராஜா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் 3 நாட்கள் மின்கம்பத்தின் உச்சியில் சிக்கித்தவித்த பூனை பத்திரமாக மீட்பு(உலக செய்தி)!!
Next post ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்(அவ்வப்போது கிளாமர்)…!!