சமையலறையா? விஷக்கூடமா?(மகளிர் பக்கம்)
நம் வீட்டின் அருகே இருக்கும் சின்ன மளிகைக் கடைகளில் ஞாயிறு மதிய சமையலுக்காக பதினைந்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வாங்கினால், பட்டை லவங்கம் பிரிஞ்சி இலைகளோடு சின்ன உப்புக்கல்லை சில்லு சில்லாய் செதுக்கியது போன்று அஜினோமோட்டோவும் சேர்த்து கொடுக்கப்படுகிறது. அசைவ உணவின் செரிமானத்திற்காகவும், சேர்க்கப்படும் பொருட்களில் சமீபமாக இந்த எம்.எஸ்.ஜி என்கிற சுவைகூட்டியும் இணைந்தே இந்த பாக்கெட்டுகளில் வரத்தொடங்கிவிட்டது.
உணவகங்களில் செய்யும் நூடூல்ஸ், ஃப்ரைடு ரைஸ் போன்ற எந்த உணவு வகைகளிலும் சுவைக்காக எம்.எஸ்.ஜி (Monosodium Glutamate ) என்கிற சுவைகூட்டி சேர்க்கப்படுகின்றது. மேலும் உடனடி நூடூல்ஸ் பாக்கெட் மசாலாக்களிலும், பல்வேறு வகை நொறுக்குத்தீனிகளிலும் இவை சேர்க்கப்படுகிறது உணவில் சுவை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜியில் முக்கியமானதொரு இடுபொருள் அஜினோமோட்டோதான். இந்த எம்.எஸ்.ஜி மிகக் குறைந்த விலையில் கிடைப்பதாலும் உணவின் சுவையை அதிகரிப்பதாலும் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது.
எம்.எஸ்.ஜியினால் உடலுக்கு மிக ஆபத்தான பின்விளைவுகள் ஏற்படுகின்றன என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் அதிகப்படியான சர்க்கரை இருப்பவர்களை இது கூடுதலாக பாதிப்புகளுக்கு உள்ளாக்குகிறது. டாக்டர் மெர்கொலா தனது ஆய்வில் ‘‘எம்.எஸ்.ஜி ஒரு சைலண்ட் கில்லர், அது குடிப்பழக்கம், போதைப்பழக்கம் இவற்றைவிட பயங்கரமானது. இதை நீங்கள் பயன்படுத்துவது என்பது உங்கள் சமையலறையை கண்ணுக்குப் புலனாகாத முறையில் விஷக்கூடமாக மாற்றுகிறது. இது உங்கள் குழந்தையின் பள்ளிக்கூடத்தின் காபி ஷாப்பில் கூட உண்டு” என்று தன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறார்.
எம்.எஸ்.ஜியினால் ஏற்படும் பின்விளைவுகள்
எம்.எஸ்.ஜியினால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பதை சுருக்கமாக சொல்லலாம். இதனால் முகம் மற்றும் கழுத்துக்களில் எரிச்சல், சுவாசப் பிரச்சனை, தலைவலி, வாந்தி, இதயத்துடிப்பு அதிகரித்தல் என பல வகையில் உடல் நோய்க்கூறுகளுக்கு ஆட்படுகின்றது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு
பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் எம்.எஸ்.ஜி கலந்துள்ள உணவை உட்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதனால் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு எளிதில் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் குழந்தைக்கு உணவு செல்லும் நஞ்சுக்கொடி பாதிப்பு அடைகிறது. குழந்தைக்கு உணவு செல்லும் நஞ்சுக்கொடிக்கு ஏற்படும் தடை குழந்தையின் ரத்தத்தையும் கர்ப்பிணிப் பெண்ணின் உடல் செயல் பாட்டையும் முடக்குகிறது.
இந்த வகையான உணவு முறையால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி செயலிழக்கத் தொடங்குகிறது. இதனால் வெளிப்புறத்தில் உள்ள அலர்ஜி மற்றும் நோய்த்தொற்றும் குழந்தையின் உடல்நலத்தை கெடுக்கிறது. உணவு முறையில் சோடியத்தின் அளவு கூடும்போது குழந்தை இருக்கும் பனிக்குடத்தின் நீரின் அளவு குறைவதற்கும் உயர் ரத்த அழுத்தத்திற்கும் இதுவே காரணமாகிறது.
ஒற்றைத் தலைவலி
அஜினோமோட்டோ கலந்த உணவை உட்கொள்வதால் சாதாரண தலைவலி் ஒற்றைத்தலைவலியாக மாறி விடுகிறது. ஒற்றைத்தலைவலியால் பார்வைத்திறன், குமட்டல், ஒலி மற்றும் ஒளியை உணரும் உணர் திறன் குறைகிறது.
இதயமும் ஏற்காது
எம்.எஸ்.ஜி கலந்த உணவை உட் கொள்வதினால் இதயத்துடிப்பில் மாற்றம், மார்பு வலி, இதயத் தசைகளில் வலி ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நரம்புகளுக்கு நல்லதல்ல
எம்.எஸ்.ஜி ஒரு நரம்பியக்கடத்தி. இதனால் தவறான நரம்பணுக்களை நரம்பியக்கடத்திகளின் செயல்முறைகளை தூண்டிவிட வாய்ப்புள்ளது.
உடல் எடையை அதிகரிக்கும்
எம்.எஸ்.ஜி கலந்த உணவை உண்ணும் மக்கள் ஒபிசிட்டியினால்அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களது உடல் எடை அதிகரிக்கிறது. லெப்டின் என்கிற உணர்வு நாம் நமக்கு தேவையான உணவை உண்டதும் நரம்புகள் மூளைக்கு ‘போதும்’ என்கிற கட்டளை பிறப்பிக்கும். நாமும் உடனடியாக சாப்பிடுவதை நிறுத்திவிடுவோம். எம்.எஸ்.ஜி இந்த உணர்வை மழுங்கடிக்கச் செய்கிறது. இதனால் மக்கள் தேவைக்கு அதிகமான உணவை உட்கொள்கிறார்கள்.
உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது
எம்.எஸ்.ஜி மூன்றில் ஒரு பங்கு சோடியத்தை கொண்டுள்ளது. சோடியம் ரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. குறிப்பாக பெண்களுக்கு அதிகரிப்பதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
தூக்கம் குறையலாம்
எம்.எஸ்.ஜியினால் தூக்கம் குறைய வாய்ப்புள்ளது. மேலும் தூக்கத்தில் சுவாசப் பிரச்னைகளையும் தூண்டுகிறது. ஆராய்ச்சிகளில் தூக்கமின்மை மற்றும் நுகர்வு நரம்புகளில் எம்.எஸ்.ஜி பாதிப்பை உண்டாக்குகின்றன என கண்டறியப்பட்டுள்ளன.
புற்றுநோயை வளர்க்கிறது
எம்.எஸ்.ஜியில் உள்ள குளூடமேட் புற்றுநோய்க்கான கூறுகளை கூடுதலாக வளர உதவுகின்றன என ஆராய்ச்சிகள் பல உறுதி அளிக்கின்றன. அஜினமோட்டோ குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன அறிவியல் எதிர்பார்க்கும் சாட்சியங்கள் கிடைக்காவிட்டாலும் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் எம்.எஸ்.ஜியின் இடுபொருட்கள் மனித உடல்நலத்துக்கு ஒரு போதும் உகந்தது அல்ல என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
Average Rating