தடைகள் தாண்டிய சாதனை!!( மகளிர் பக்கம் )
இதோ புத்தாண்டு பிறந்துவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் 2018 புது வருடத்திற்கான நாட்காட்டி புதிதாக சுவரை அலங்கரிக்கப் போகிறது. சிலர் தங்களுக்கு பிடித்த தலைவர்கள் அல்லது மாடல் இருப்பது போன்று அல்லது பிடித்த கருத்துகள் இருப்பது மாதிரியான நாட்காட்டியாகப் பார்த்து வாங்கி வீட்டுச் சுவர்களை அலங்கரிப்பார்கள். அப்படியான வித்தியாசமான அர்த்தம் உள்ள சிந்தனையோடு 2018 புத்தாண்டுக்கான காலண்டர் ஒன்றை வடிவமைத்து தந்திருக்கிறார் சுவர்ணலதா.
“ஏதாவது ஒரு விதத்தில் பாதிப்படைந்தவர்கள், தங்கள் உடல் ஊனத்தைக் கடந்து எதையாவது ஒன்றை சாதித்திருப்பார்கள். அப்படி சாதித்தவர்களில் விளையாட்டுத் துறை சார்ந்த 6 பெண்கள், 6 ஆண்கள் என 12 நபர்களை இந்தியா முழுவதும் தேடிக் கண்டுபிடித்து, அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று போட்டோ ஷூட் மற்றும் வீடியோ எடுத்து வந்தோம்.
விளையாட்டின் ஒவ்வொரு துறையிலும் ஜெயித்த ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்னாலிட்டிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதத்தை அலங்கரித்திருக்கிறார்கள்” என்று கூறும் இந்த நாட்காட்டியை வடிவமைத்த சுவர்ணலதாவும் ஒரு மாற்றுத் திறனாளர்தான். பேட்டரியால் இயங்கும் மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலியில் வலம் வரும் இவர், பார்த்தவுடன் மனதில் பசக்கென ஒட்டிக் கொள்ளும் புன்னகை முகத்திற்கு சொந்தக்காரர்.
“மாற்றுத்திறனாளர் எதையாவது செய்தால் ஏன் அவர்கள் சாதனைகளை இரக்கத்தோடு பார்க்கிறீர்கள்? “சாதனைகளை நிகழ்த்த நாங்களும் நூறு சதவிகிதமும் உழைக்கிறோம்” என நம்மிடம் பேசத் துவங்கியவர், எங்கள் பிரச்சனைகளை நாங்கள்தானே பேசியாக வேண்டும். நாங்கள் சொல்லாமல் எங்கள் கஷ்டங்கள் கண்டிப்பாக யாருக்கும் புரியாது” என்கிறார். நான் பெங்களூரில் பிறந்தேன். எம்.ஏ. இந்தி இலக்கியம் படித்து, கணினி அறிவியலில் டிப்ளமோ முடித்தேன். எனக்கு 12 மொழிகள் பேசவும், 6 மொழிகள் பேச எழுதவும் தெரியும். திருமணம் முடிந்ததும் கணவரோடு மும்பையில் வசித்தேன். பெங்களூரு மற்றும் மும்பையில் மிட்ஸுபிஷி, அவுடி, ஐ.டி.சி. போன்ற நிறுவனங்களில் பணியில் இருந்தேன்.
2009ல் திடீரென்று ஒரு நாள் காலையில் அதீத காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். என்னால் என் கை கால்களை அசைக்கவோ செயல்படவோ முடியாமல் பக்கவாதம் போன்ற நோயினால் முடக்கப்பட்டேன். மருத்துவர்கள் என்னை சோதித்து மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் (Multiple sclerosis) அதாவது தண்டுவட மரப்பு நோய் சுருக்கமாக எம்.எஸ். எனும் நோயால் நான் பாதிப்படைந்திருப்பதாகத் தெரிவித்தனர். என் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக சிதைவை நோக்கிச் சென்றது. இதை முற்றிலுமாக குணப்படுத்த இயலாது, தொடர்ந்து மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் மூலம், உடல் நிலை பாதிப்படைவதை தள்ளிப்போடலாம் எனத் தெரிவித்தனர். துள்ளலும், மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிறைந்த ஒரு நல்ல வாழ்வை வாழ்ந்துட்டு இப்படி ஆகிவிட்டேனே என நான் வருந்தாத நொடிகள் இல்லை.
தொடர்ந்து மருந்து மாத்திரைகளுடன், சரிவிகித உணவுகளையும் எடுத்தால் ஓரளவிற்கு உடல்நிலையினை பாதுகாக்கலாம் என்ற மருத்துவர்களின் ஆலோசனைகளை ஏற்று 70 சதவிகிதம் உடல் நிலை தேறினேன். 2013ல் மிகவும் மெதுவாக நடந்துகொண்டிருந்த நான் 2014ல் வாக்கர் உதவியுடன் நடக்கத் துவங்கினேன். 2015ல் நடக்கும் சக்தியினை இழந்து வீல் சேருக்கு மாறினேன். என் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வருவதை நான் இப்போது உணர்கிறேன்.
குடுபத்துடன் கோயம்புத்தூருக்கு இடம் மாறினோம். பத்து வயதில் மகனும், ஆறு வயதில் மகளும் எனக்கு இருக்கின்றனர். கணவர் மற்றும் குடும்பத்தினர் உதவியுடன் அவர்களையும் கவனித்து வருகிறேன். குழந்தைகள் என் நிலை உணர்ந்து எனக்கு உதவியாக இருந்து வருகின்றனர். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து மருந்து மாத்திரைகளை எடுத்துவருகிறேன்.
அதிகம் செலவு ஏற்படுத்தக்கூடிய நோய் இது. ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் வரை தோராயமாக செலவாகிறது. ஊசி ஒன்றின் விலை ஏழாயிரம் ரூபாய். ஒரு மாதத்தில் ஊசிக்கு மட்டும் எனக்கு அறுபதாயிரம் ஆகிறது. வியாதியின் தீவிரத்தைப் பொறுத்து, தேவைக்கு ஏற்ப உடலில் ஊசி ஏற்றுகின்றனர். நான் வாரத்திற்கு இரண்டு ஊசிகள் போட்டுக் கொள்கிறேன். இந்த நோய் தாக்கத்திற்குப் பிறகு உடலை அதிகம் கவனிக்க வேண்டியுள்ளது. யோகா, மெடிடேசன், பிராணாயாமம், உடற்பயிற்சியில் டிரட்மில் இவற்றைத் தொடர்ந்து செய்கிறேன்.
தொழில்நுட்பம் அதிகம் வளராத காலகட்டத்தில் நான் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளானதால், மருத்துவர்களால் எளிதில் என் நோயினை கண்டுபிடிக்க முடியவில்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இரண்டு லட்சம் நோயாளிகள் இந்நோயால் பாதிப்படைந்தனர். இப்போது அது இரட்டிப்பாகியுள்ளது. நான் சிகிச்சையில் இருந்தபோது, என்னைப்போல் பாதிக்கப்பட்ட நிறைய நோயாளிகளை பார்த்தேன். அதில் சிலருக்கு கண் பார்வை பறிபோய் இருந்தது. சிலருக்கு பேச்சு வரவில்லை. சிலர் முழு உடலும் பாதிப்படைந்து அசைவற்று இருந்தனர். ஒப்பீட்டளவில் அவர்களோடு நான் பரவாயில்லை என்ற எண்ணமே எனக்கு அப்போது வந்தது.
நோயாளிகளை நிறைய பார்த்து மனசே ஒரு மாதிரியாகிவிட்டது. என்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியது. 2014ல் அவர்களின் மருத்துவச் செலவிற்கு உதவ, ஸ்வர்க்கா பவுண்டேசன் தொடங்கினேன். இந்த நோயால் பாதிப்படைந்தால் வாழ்வை எப்படி தொடர்ந்து தன்னம்பிக்கையோடு வாழ்வது என கவுன்சிலிங் கொடுக்கத் துவங்கினோம். முதலில் நண்பர்கள் நிறைய உதவினார்கள். தொடர்ந்து போட்டோகிராஃபி ஒர்க்ஷாப், பப்பட் ஷோ, ஆர்ட் அண்ட் கிராஃப்ட் இதெல்லாம் கற்றுக் கொடுக்கத் துவங்கினோம்.
நாங்கள் வெளியில் எங்காவது செல்ல வேண்டும் என்றால் அதற்கேற்ற வசதிகள் எங்களுக்கு அங்கே இருக்காது. மாற்றுத் திறனாளர்களான எங்களால் எதுவும் செய்ய இயலாது என்ற எண்ணத்துடனே பொதுமக்களும் எங்களை எதிர்மறை கண்ணோட்டத்துடனே அணுகுவார்கள். எங்களின் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பிற்கு எந்த உதவியும் கிடைக்காது. ஆனால் எங்களாலும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை அனைவருக்குள்ளும் விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தோன்றியதே இந்த 2018 காலண்டர் கான்செப்ட்.
சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே டென்னிஸ், டேபிள் டென்னிஸ், எடை தூக்குதல், டேக் வாண்டோ, குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், பேட்மிட்டன், கூடைப்பந்து, செஸ் போன்றவைகளையும், யோகாசனம், சைக்கிளிங், மாரத்தான், ஸ்விம்மிங், துப்பாக்கி சுடுதல் போன்ற துறைகளிலும் தங்களை ஈடுபடுத்தி, பயிற்சி பெற்று இவர்களும் உலக அளவில் சாதனை படைக்க முடியும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்த 2018 அடாப்டிவ் ஸ்போர்ட்ஸ் கான்செப்ட் (Adaptive Sports) காலண்டர்.
பல்வேறு துறை சார்ந்த 12 மாற்றுத் திறனாளர் விளையாட்டு வீரர்களையும் அவரவர் துறையில் இயங்க வைத்து, போட்டோகிராஃபி மற்றும் வீடியோகிராஃபி செய்ததுடன், அந்த நாட்காட்டியை எனது மாற்றுத் திறனாளர் நண்பர்களுடன் இணைந்து நானே டிசைன் செய்திருக்கிறேன். இந்த சிறப்புக் காலண்டர் வெளியீட்டு விழாவில் இதில் இடம் பெற்றுள்ள மாற்றுத் திறனாளர் ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்னாலிட்டிகளை நிகழ்ச்சிக்கு அழைத்து காலண்டரை வெளியிடும் திட்டமும் இருக்கிறது. அவர்களை பற்றிய வீடியோவை நானே எடிட் செய்து 5 நிமிடத்திற்கான வீடியோ மான்டேஜாக வெளியிட்டுள்ளேன். எனது இந்த வீடியோ தொகுப்பிற்கு டெல்லியில் இயங்கும் சர்வதேச நிறுவனம் நடத்திய போட்டியில் விருதும் பாராட்டும் கிடைத்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளர்கள் வெளியில் எங்காவது செல்ல வேண்டுமென்றால், ரயில், பேருந்து மற்றும் விமானங்களில் செல்ல முடியாது. எங்களின் வீல் சேரினை உடன் எடுத்துச் செல்ல முடியாத தடைகள் பொது போக்குவரத்தில் அதிகம். தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்தாலும் எங்களது வீல் சேரை உள்ளே வைக்க அனுமதிக்க மாட்டார்கள். பயணத்தில் கழிப்பிட பிரச்சனைகள் வேறு எங்களுக்கு நிறைய இருக்கும்.
சொந்தமாக வாகன வசதியற்ற மாற்றுத் திறனாளர் நிலையை யோசியுங்கள். வெளியில் செல்ல வேண்டிய நிலை அவர்களுக்கு வந்தால், வெளியில் எங்கும் பயணம் செய்ய முடியாத நிலையில், கண்டிப்பாக அவர்களுக்குத் தன்னம்பிக்கை இருக்காது. இதை மனதில் இருத்தி மாற்றுத் திறனாளர்கள் மற்றும் முதியோர்கள் இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யும் வகையில், மிகவும் குறைவான கட்டணத்தில், வீல் சேர் உள்ளே செல்லும் வகையில், டாய்லெட், வாஸ் பேஷின், ஷோபா கம் பெட், வெந்நீர் போன்ற வசதிகள் நிறைந்த மாற்றுத் திறனாளர் வேன் (Disabled Friendly Van) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். வறுமை நிலையில் உள்ள மாற்றுத் திறனாளர்கள் பயன்பாட்டிற்கு சில நேரங்களில் இலவசமாகவும் இதைத் தருகிறோம். இதற்கு கோயம்புத்தூர் மற்றும் கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளது. கேரளா மாற்றுத் திறனாளர்கள் இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஐந்து நபர்கள் வரை பயணம் செய்யலாம்.
ஃப்ரெண்ட்லி டாய்லெட் மாற்றுத் திறனாளர் குழந்தைகள் டாய்லெட் வசதி பள்ளிகளில் சரியாக இல்லையென்றால் படிப்புத் தடைபடும். இதை மனதில் இறுத்தி, 6 அரசுப் பள்ளிகளில், மாற்றுத் திறனாளர்களும் பயன்படுத்தும் விதத்தில், வீல் சேருடன் டாய்லெட் வரை உள்ளே செல்ல, ரேம்ப் வசதி செய்யப்பட்டு டாய்லெட் அருகே பிடிமானங்களுடன், மாற்றுத் திறனாளர் பயன்பாட்டுக்கு உதவும் விதத்தில் சீரமைத்திருக்கிறோம். ஆறு அரசுப் பள்ளிக்கூடங்களில் இதுவரை முழுமையாக மாற்றியுள்ளோம்.
இன்னும் 10 பள்ளிகளில் இதை செயல்படுத்த உள்ளோம். ரயில் நிலையங்களிலும் டிசபிள்ட் ஃப்ரெண்ட்லி டாய்லெட் செய்து கொடுத்துள்ளோம். சாதாரண பயன்பாட்டில் இருந்த கழிப்பறையை மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொடுத்திருக்கிறோம் என தன் திட்டங்களை விவரித்தார். நான் ஒரு மோட்டிவேஷ்னல் ஸ்பீக்கர். தன்னம்பிக்கை கருத்துக்களை வலியுறுத்தும் பப்பட் ஷோக்களையும் தொடர்ந்து நிகழ்த்துகிறேன். அத்துடன் மாடலிங் துறையிலும் அசத்துவேன்.
சென்னையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டு, கோயம்புத்தூர் மிஸ் ப்யூட்டியாகத் தேர்வானேன். மிஸ் கான்ஃபிடன்ட் விருதும் அதில் எனக்குக் கிடைத்தது. நான் ஆங்கிலத்தில் எழுதிய நாவல் ஒன்றிற்கு டெல்லியில் விருது கிடைத்தது. போட்டோகிராஃபியும் எனது விருப்பம். 12 மொழிகளிலும் என்னால் பாட முடியும்.‘போக்கிரிராஜா’ ஆடியோ லாஞ்சில் சமீபத்தில் நான் பாடினேன்” என்கிறார்.
– மகேஸ்வரி
மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் (Multiple sclerosis)
தண்டுவட மரப்பு நோய் அல்லது மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் சுருக்கமாக எம்.எஸ். என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இளம் வயதினரை அதிலும் பெண்களையே அதிகம் இந்நோய் தாக்குகிறது. 18 முதல் 40க்குள் உள்ள இளம் வயதினர் அதிகம் இதனால் பாதிப்படைகின்றனர். மூவரில் ஒருவர் ஆண் என்ற விகிதத்தில் பெண்கள் பாதிப்படைகின்றனர்.
நமது நரம்புகளின் மேல் ஒரு கோட்டிங் இருக்கும். அதற்கு பெயர்தான் மையிலீன் (myelin). நமது நரம்பு மண்டலம் உடலின் எல்லா பாகங்களோடும் தொடர்புடையது. அதில் பிரச்சனை வந்தால் மூளையில் இருந்து நரம்பு செல்லும் இடங்களுக்கு சிக்னல் செல்லாது. இந்நோயினால், மையிலீன் உறை அழிந்தோ, பாதிப்படைந்தோ அல்லது வடுக்களுடனோ பல்வேறு நோய்க்கான அறிகுறிகளுடன் தோன்றும்.
இந்நோய் வருமுன் அறிவது மிகவும் கடினம். எம்.எஸ்ஸை குணப்படுத்த எவ்வித மருந்தும் இல்லை. எம்.எஸ் நரம்பு செல்கள் மூளை மற்றும் முதுகுத் தண்டுக்கிடையே கொண்ட தொடர்பை பாதிக்கச் செய்வதுடன், நரம்பு சம்பந்தப்பட்ட அறிகுறிகளும் உடலில் தோன்றலாம். அறிவாற்றல், உடல் ஊனம் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட மனவளர்ச்சி, முழு உடலும் இதனால் பாதிக்கப்படலாம். இதற்கு அளிக்கப்படும் சிகிச்சையால் முன்பு போல் செயல்படவும், புதிதாக எதுவும் உடலுக்கு பாதிப்பு ஏற்படாமலும், உடல் ஊனம் ஏற்படாமலும் இருக்கவுமே அளிக்கப்படுகின்றது.
Average Rating