பனிக்காட்டுப் பள்ளி!! (மகளிர் பக்கம்)
இயற்கை கொஞ்சி விளையாடும் நீலகிரி மாவட்டம் கல்விக்கு பெயர் பெற்ற ஊர். பணம் படைத்தவர்கள், மிகப் பெரிய விஐபிக்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் மலைவாச ஸ்தலமான ஊட்டி கான்வென்டில் கல்வி பயில்வதை பெருமையாக நினைப்பார்கள். பண முதலைகளுக்கு நடுவே, தேயிலைத் தோட்டங்களை நம்பி கூலித் தொழிலில் வாழ்வைத் தேடும், தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்களின் கல்வி நிலையினை அறிய கோத்தகிரிக்கு அருகில் உள்ள கக்குச்சி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பாக்யா நகர் அரசுப் பள்ளிக்குச் சென்றோம்.
மகளிர் தினத்தை வரவேற்று தங்களின் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுடன் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் வசந்தாவிடம் பேசியபோது…‘‘முழுக்க முழுக்க தேயிலைத் தோட்ட கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளி இது. எட்டாம் வகுப்புவரை இதில் உள்ளது. இவர்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் இருக்கும் ஏதாவது ஓர் அரசுப் பள்ளியை நம்பியே படிக்கின்றனர்.
எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு கராத்தே, உடற்பயிற்சி, பறை, சிலம்பம், அறிவியல் புத்தாக்கம், மாநில மற்றும் மாவட்ட அளவில் ஓவியம், பாட்டு, நடனம் என அனைத்தையும் கற்பிக்கிறோம். மாவட்ட, மாநில அளவுகளில் போட்டிகளில் பங்கேற்பதற்கான பல திறமைகளை மாணவர்களிடத்தில் வளர்த்தெடுக்கிறோம். அதேபோல் ஒவ்வொரு மாணவரின் தனித் திறமையையும் அறிந்து அவர்களுக்கு தைரியத்தையும் இணைத்தே வளர்க்கிறோம்.
நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தேயிலைத் தோட்டத் தொழிலை இங்குள்ள மக்கள் பழகியதால் வேற வேலைக்கு அவர்களால் போகமுடியாது. தேயிலை வளர்ச்சி மற்றும் சாகுபடி சரியாக இல்லாத காலங்களில் வருமானமின்றி பெற்றோர்களுடன், குழந்தைகளும் கஷ்டப்படுவார்கள். போதிய வருமானம் இன்மையால், வேறு வேலை தேடி குடும்பத்தோடு பலர் ஊரைவிட்டு வேலை கிடைக்கும் இடத்தை நோக்கி நகரும் நிலை இங்கு கண்கூடு. வேலையின்மையால் நகரும், அவர்களின் நிலையற்ற வாழ்வில், குழந்தைகளின் கல்வியில் பெரும் பாதிப்பு வரும்.
நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மிகமிகக் குறைவு. படித்தவர்களும் தோட்ட வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும்போது ஊரைவிட்டு குடும்பத்தோடு கிளம்பவே செய்வார்கள். அட்டி போன்ற மிகச் சிறிய ஊர்களில் 10 குடும்பம் இருந்தால் இரண்டில் மட்டும்தான் ஆட்கள் இருப்பார்கள். மற்ற வீடுகள் பூட்டியே கிடக்கும். மக்கள்தொகை குறையும்போது, அரசுப் பள்ளியில் மாணவர்கள் வருகையும் குறையும்.
மேலும் தனியார் பள்ளிகளின் வருகையும், ஆங்கிலக் கல்வியின் மோகமும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகைக் குறைவுக்கு ஒரு காரணம். குறைந்தது 20 குழந்தைகள் இருந்தால்தான் அரசுப் பள்ளிகளை இயக்க முடியும். ஒன்பது மாணவர்களுக்கு குறைவாக மாணவர்கள் எண்ணிக்கை இருந்தால் அப்போது குறிப்பிட்ட அந்தப் பள்ளியை அருகில் இருக்கும் வேறொரு பள்ளியோடு இணைக்கும் நிலையும் வரும்.
இயல்பாகவே தோட்டத் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் மற்றும் தனித் திறமைகள் நிறைய உண்டு. மாணவர்கள் அவர்களாகவே நிறைய தெரிந்தும் வைத்திருப்பார்கள். நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்காத நிலை ஏற்படக் கூடாது என்று அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பல கஷ்டங்கள், பிரச்னைகளுக்கு நடுவே பணியாற்றுகிறோம்.
குழந்தைகள் முன் குடித்துவிட்டு வருவது, அதனால் ஏற்படும் குடும்பப் பிரச்னைகள் போன்றவை படிக்கும் குழந்தைகளின் மனநிலையினை அதிகம் பாதிக்கிறது. வீட்டுக்கே செல்ல விரும்பாத குழந்தைகள் கூட இங்கு இருக்கிறார்கள். ஆனால் எல்லாப் பிரச்னைகளையும் மீறி அவர்கள் திறமையானவர்களாக இருக்கிறார்கள்” என முடித்தார்.
Average Rating