இளைய தலைமுறையின் கவனத்துக்கு…!!(மருத்துவம்)
முதியவர்கள் எதிர்கொள்ளும் உளவியல்ரீதியிலான பிரச்னைகள், அவற்றைக் கையாள்வதற்கான வழிகளைச் சொல்கிறார் மனநல மருத்துவர் சத்தியநாதன். குறிப்பாக, இளைய தலைமுறையின் கவனத்துக்கும் சில முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுகிறார்.
‘‘இன்றைய மருத்துவ உலகத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகளவில் அனைவருக்கும் வாழ்நாள் அதிகரித்திருக்கிறது. அதேபோல முதுமை சார்ந்த பிரச்னைகளும் அதிகரித்துவிட்டது. மேலும் இந்தியாவைப் பொறுத்தவரை முதியவரின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.
ஒரு காலகட்டத்தில் கூட்டுக் குடும்ப முறை நம்மிடையே இருந்தது. முதியவர்களை கவனிப்பதற்கும் அவர்களிடம் பேசுவதற்கும் ஆட்கள் இருந்தனர். இப்போது கூட்டுக் குடும்பமுறை உடைந்து தனித்தனி குடும்பங்கள்
அதிகம் உருவாகிவிட்டது. இதனால் முதியோர்களை யார் பார்த்துக்கொள்வது என்ற கேள்வி எழுகிறது. இதனால் முதியோர் இல்லத்தில் சேர்ப்பதோ அல்லது வீட்டிலேயே அவர்களை தனிமையில் தள்ளும் நிலையோ நடக்கிறது. இது அவர்களை மனதளவில் பெரிதும் பாதிக்கிறது.
அவர்களின் இயல்பான இயக்கம் நின்று போவதால் வீட்டை விட்டு வெளியில் போக முடிவதில்லை.
சக மனிதர்களை சந்திப்பதும் குறைந்து விடுகிறது. முழுக்க முழுக்க குடும்பத்தில் உள்ளவர்களையே சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது. வீட்டில் இருப்பவர்களும் புறக்கணிப்பதால் தனிமைக்குத் தள்ளப்பட்டு உறவு சார்ந்த மன அழுத்தம் ஏற்படுகிறது.
உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் இதுபோன்ற சவால்களில் தவிக்கும் முதியவர்களின் நிலையை வீட்டில் உள்ளவர்களும், இளைய தலைமுறையினரும் புரிந்துகொள்ள வேண்டும், குடும்ப நடவடிக்கைகளிலும், திட்டமிடுதலிலும் அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் கண்காணித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்படி அவர்களுக்கு உணவு கொடுப்பது, உரிய நேரத்துக்கு மருந்துகள் கொடுப்பது போன்றவற்றை கவனமாகப் பின்பற்ற வேண்டும்.
கர்மா, விதி என்பதில் எல்லோருக்கும் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் எப்படி உங்கள் பெற்றோரை கவனிக்கிறீர்களோ அதுபோலத்தான் நாளை உங்கள் குழந்தைகள் கவனிப்பார்கள். காரணம், பெற்றோரின் நடவடிக்கையைப் பார்த்துத்தான் பெரும்பாலும் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
‘அவர்களுக்கென்ன வாழ்ந்து முடிந்து விட்டார்கள்’ என்கிற அலட்சிய எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும். அன்பான வார்த்தைகளைப் பேசி அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். வளரும் குழந்தை களை அவர்களோடு பேச, விளையாட வைக்க வேண்டும். இது வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். அதேபோல முதியவர்களுக்கு ஏற்றது கூட்டுக்குடும்பம்தான். அதனால் முடிந்த அளவு கூட்டு குடும்பத்தில் வாழ முயற்சிக்க வேண்டும். தனிக்குடும்பமாக வாழக்கூடிய சூழல் ஏற்பட்டாலும் முதியவர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். முதியவர்களோடு வாழ்வதுதான் முழுமையான வாழ்க்கையாகும் என்பதை மறந்துவிட கூடாது.’’
– க.இளஞ்சேரன்
முதியோருக்கு எதிரான வன்கொடுமைகளை நிறுத்துவோம்!
முதியோருக்கு எதிரான வன்கொடுமையை ஒழிக்க ஐ.நா ஓர் உறுதிமொழியினை வழங்கியிருக்கிறது. இந்த வார்த்தைகளை எல்லா தினங்களிலும் நாம் மனதில் நிறுத்திக் கொள்வது நல்லது.அந்தஉறுதிமொழி இதோ…வாய்மொழியாகவோ, வன்முறை மூலமாகவோ, பொருளாதார ரீதியாகவோ முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்து வகை கொடுமைகளையும் தடுக்கவும், அறவே நீக்கவும், என் சொந்த முயற்சியாலும், தேவைப்பட்டால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணையோடும் பாடுபடுவேன். மேலும், அவர்களுடைய அனைத்து வகையான தேவைகளுக்கும் – அதாவது உடல்வளத்துக்குப் பாதுகாப்பும், மனவளத்துக்கும் மதிப்புக்கும், மரியாதைக்கும் அங்கீகாரத்துக்கும் இடையூறு ஏற்பட்டால் அவற்றைத் தடுத்து பாதுகாப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.
Average Rating