எடை சரியாக இருந்தால் எலும்பும் சரியாக இருக்கும்! (மருத்துவம்)
எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஒருவரது உடல் எடையானது சரியான அளவில் இருக்க வேண்டும். அதிக எடையும் சரி, குறைந்த எடையும் சரி… இரண்டுமே எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிற விஷயங்களே!
பலரும் அதிக எடையுடன் இருப்பதுதான் பிரச்னை என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒல்லியாக, சராசரியைவிட குறைவான எடை கொண்டவர்களுக்கும் எலும்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதனால்தான் இன்று மெலிந்த தேகத்துடன் இருப்பவர்களுக்கு கூட மூட்டு வலி இருப்பதாகச் சொல்வதைக் கேள்விப்படுகிறோம்.
சரி… சரியான எடை என்பது என்ன?
நாம் நம் உயரத்துக்கேற்ற சரியான எடையுடன்தான் இருக்கிறோமா என்பதை அறிந்துகொள்ள பி.எம்.ஐ என்கிற கணக்கீடு உள்ளது.
BMI = weight (kg) / height (m)2 அதன்படி…
*பி.எம்.ஐ 18.5 முதல் 25 வரை இருந்தால் ஆரோக்கியமான எடை.
*18.5-க்கும் குறைவாக இருந்தால் குறை எடை.
*25 முதல் 30 வரை இருந்தால் அதிக எடை.
*30-க்கும் மேல் இருந்தால் உடல் பருமன் எனப் புரிந்துகொள்ளலாம்.
சில கேள்விகள்…
குறைவான எடையுடன் இருப்பது என்ன செய்யும்?
அது உங்கள் எலும்புகளையும், தசைகளையும் பலவீனமாக்கி, எலும்பு வலுவிழப்பு நோய் (Osteoporosis) தாக்கக் காரணமாகிவிடும்.
அதிக எடையுடன் இருந்தால் என்னவாகும்?
அது உங்கள் முழங்கால் மற்றும் மூட்டு பகுதிகளில் உடல் எடையின் அழுத்தத்தை ஏற்றி, மூட்டுவலி (Arthritis) பிரச்னை வர காரணமாகிவிடும்.
ஆற்றலுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொள்கிறோமா என எப்படி அறிந்துகொள்வது?
நம்முடைய உடல் எடைதான் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுக்கான பிரதிபலிப்பு. நாம் சாப்பிடுகிற உணவுகளை பொறுத்தே ஆற்றல் கிடைக்கிறது.
எடுத்துக்கொள்கிற ஆற்றலுக்கு இணையாக உடலிலிருந்து ஆற்றல் வெளியேறினால் ஆரோக்கியமான எடையில் இருப்பீர்கள். உடலில் சேர்கிற ஆற்றலின் அளவு அதிகரிக்கும்போது எடையும் அதிகரிக்கும். அந்த ஆற்றல் அதிகளவில் செலவழிக்கப்படுகிறபோது எடை குறையும்.
சரியான எடையுடன் இருப்பது எப்படி?
* எடையை குறைப்பது என்பதொன்றும் வித்தை இல்லை. எப்பாடு பட்டாவது எடையைக் குறைத்துவிட முடியும். ஆனால், அதை தக்க வைத்துக் கொள்வதுதான் பெரிய விஷயம். எனவே, எடையைக் குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளைப் போலவே குறைத்த எடையுடன் வாழ்வதையும் கட்டுப்பாட்டுடன் பின்பற்றுங்கள்.
* எப்போதுமே கொஞ்சம் கொஞ்சமாக எடையைக் குறைக்க முயலுங்கள். உதாரணத்துக்கு ஒரு வாரத்தில் 0.5 முதல் 1 கிலோ வரை குறைப்பது சரியானது. ஒரு வாரத்தில் அரை கிலோ எடையை குறைக்க வேண்டுமென்றால் தினமும் நீங்கள் 500 கலோரிகளை எரித்தாக வேண்டும்.
* ஒவ்வொரு முறை சாப்பாட்டுக்கு முன்பும் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். அது உங்களை அதிகம் சாப்பிட விடாமல் தடுக்கும்.
* காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள். அப்படி தவிர்த்தீர்களானால் உங்களையும் அறியாமல் மதிய உணவின்போது கூடுதலாக உணவு உண்பீர்கள்.
* கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிருங்கள். ஏனெனில் கொழுப்பில் புரதத்தையும், கார்போஹைட் ரேட்டையும்விட அதிக அளவில் கலோரி உள்ளது.
* ஒவ்வொரு வாய் உணவையும் நன்கு மென்று சாப்பிடப் பழகவும்.
* மெதுவாகச் சாப்பிட்டுப் பழகவும். அது குறைவாகச் சாப்பிடவும் வழி வகுக்கும்.
* சாப்பிடும்போது பேச வேண்டாம்.
* எந்த காரணத்துக்காகவும் நின்றுகொண்டே சாப்பிட வேண்டாம். உட்கார்ந்து சாப்பிடுவதே சரியானது.
* இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என நாக்கு சொல்வதைக் கேட்பதை விடவும் நிஜமாகவே உங்களுக்கு இன்னும் பசிக்கிறதா என ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து சாப்பிடுங்கள்.
* மூன்று வேளைகள் சாப்பிடுவதற்கு பதிலாக 5 வேளைகளாக பிரித்து உண்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
Average Rating