ஆட்சியை போலவே புரியாத புதிராக உள்ள கிம் ஜாங் உன்னின் பயணம்….சீனா சென்றது எப்படி?
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் முதன்முறையாக சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து அணுஆயுத சோதனை நடத்தி வருவதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன் காரணமாக அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தென்கொரிய அதிபரின் முயற்சியால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அடுத்த மாதம் சந்திக்க உள்ளார்.
முதல் வெளிநாட்டு பயணம்
இந்நிலையில் அவர் முதன்முறையாக சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை சந்திக்க பெய்ஜிங்கிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதிபராக பொறுப்பேற்ற பின் கிம் ஜாங் உன் வேறு எந்த நாடுகளுக்கும் செல்லாத நிலையில் முதன்முறையாக சீனா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வடகொரியா அதிபரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு படையினர் பெய்ஜிங் நகர் முழுவதும் குவிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அதிபருடன் கிம் ஜாங் உன் சந்திக்க சாத்தியம் இருப்பதாகவும் அதி இப்போது உறுதிப்படுத்த முடியாது என சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
தந்தையை பின்பற்றும் கிம் ஜாங் உன்
சீனாவை ஒட்டி அமைந்திருக்கும் வடகொரியாவிலிருந்து விமானம், கப்பல், சாலை என பல வழிகளில் சீனாவுக்கு செல்ல முடியும். ஆனால் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல் சீன பயணத்துக்கு ரயிலேயே தேர்ந்தெடுத்தார். தந்தையின் வழியை பின்பற்றி கிம் ஜாங் உன்னும் சீனாவுக்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பச்சை மற்றும் மஞ்சள் நிறத்திலான இந்த ரயில் கேம்டன் என்ற எல்லை கிராமம் வழியாக சீனாவுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சியை ஜப்பான் ஊடகம் ஒன்று பதிவு செய்துள்ளது. அதே ரயில் நேற்று பெய்ஜிங் வந்தடைந்தது. இந்த ரயிலில் வடகொரியாவின் மூத்த அதிகாரிகளுடன் அதிபர் கிம் ஜாங் உன்னும் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு பயணத்திற்காக அதிநவீன ரயில்
வடகொரியாவை பொறுத்தவரை கிம் ஜாங் இல் காலத்திலேயே அதிபர் பயன்படுத்துவதற்க்கென்று 6 சொகுசு ரயில்கள் உருவாக்கப்பட்டன. கிம் ஜாங் இல் விமான பயணத்தை விரும்பியதில்லை. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு சென்ற போதெல்லாம் தனது ரயிலேயே அவர் பயன்படுத்தினார். 2011-ம் ஆண்டு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது அதிபர் கிம் ஜாங் உன் சென்றிருப்பதாக கருதப்படும் ரயில் 21 பெட்டிகளை கொண்டது. இந்த ரயிலில் அதிநவீன தொலைத்தொடர்பு கருவிகள், தொலைக்காட்சிகள், கூட்டம் நடத்துவதற்கான அறைகள், படுக்கை அறைகள் என அதிபர் மாளிகையில் உள்ள அத்தனை வசதிகளும் இருக்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக அதிபர் செல்லும் ரயில் மணிக்கு 60 கிலோமீட்டர் மேல் வேகமாகச் செல்லாது.
புரியாத புதிர்..
தனது முதல் வெளிநாட்டு பயணத்துக்கு கிம் ஜாங் உன் சீனாவை தேர்ந்தெடுத்திருப்பதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால் அமெரிக்காவுடன் சமரச பேச்சுக்கு திட்டமிட்டிருக்கும் நிலையில் பயணம் மேற்கொள்வதுதான் கேள்வியை எழுப்பியிருக்கிறது. கிம் ஜாங் உன்னின் ஆட்சியை போலவே அவரது பயணமும் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே உருவெடுத்திருக்கிறது.
Average Rating