நோயைக் குணப்படுத்துவதை விடுத்து, நோய் அறிகுறிக்கு மருந்து போடுதல்(கட்டுரை )!!

Read Time:12 Minute, 42 Second

இந்தப் பத்தி வெளியாகும் போது, இலங்கையில் சமூக ஊடக வலையமைப்புகளின் இணையத்தளங்களையும் செயலிகளையும் அணுகுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டிருக்கலாம்; இல்லையெனில், அத்தடைகள் தொடர்ந்த வண்ணமும் இருக்க முடியும். எது எவ்வாறாக இருந்தாலும், இலங்கையின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்தல், வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்தல், தனிமனித உரிமை எதிர் தேசிய பாதுகாப்பு போன்ற பல விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை, இந்தத் தடை அல்லது கட்டுப்பாடு ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது.

இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில், இவ்வாறான தடைகள் அல்லது கட்டுப்பாடுகள், புதிதானவை அன்று. மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கக் காலத்தில், அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் விமர்சனங்களை வழங்கும் இணையத்தளங்கள் பல, தொடர்ச்சியாக முடக்கப்பட்டு வந்தன. அதேபோல், சமூக ஊடக இணையத்தளங்கள், இன்றோ, நாளையோ முடக்கப்படலாம் எனப்படும் அளவுக்கு, கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வந்தன.

இதற்கு மாறாக, 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றமைக்கு, சமூக ஊடக இணையத்தளங்கள் முக்கியமான பங்கை வகித்திருந்தன. தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, தகவல்களும் கருத்துகளும், பிரதான ஊடகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அவற்றை அறிவதற்கு பேஸ்புக் தான் பயன்படுகிறது எனக் குறிப்பிட்டிருந்தார். “இவற்றையெல்லாம் நீங்கள் ஊடகங்களில் பதிப்பிக்க முடியாது. ஏனென்றால், என்ன பதிப்பிக்கப்படுகின்றன என்பதை அவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள்” என, அவர் தெரிவித்திருந்தார்.

இப்படியாக, நவீன ஊடகங்களுக்குச் சார்பானவர்களாகவோ, முற்போக்காளர்களாகவே, தற்போதைய ஆட்சியாளர்கள் கருதப்பட்டனர். இதனால், இவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் உயர்ந்த அளவில் காணப்பட்டன. ஆனால், கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து, சமூக ஊடக வலையமைப்புகளுக்கான அணுக்கத்தை தடைசெய்தமை, அரசாங்கம் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதில், அரசாங்கத்தின் பக்கத்தில் நியாயங்கள் இல்லாமலில்லை. சமூக ஊடக வலையமைப்புகள், குறிப்பாக பேஸ்புக்கும் வட்ஸ்அப்பும் வெறுப்புப் பேச்சுகளையும் பொய்யான தகவல்களையும் பரப்புவதன் காரணமாக, உலகம் முழுவதும் பெரும் சவால்களை வழங்கி வருகின்றன. இவ்வாறான நிலைமைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என, உலகிலுள்ள பல்வேறு நாடுகள் தடுமாறி வருகின்றன. மாபெரும் கலவரம் இடம்பெறும் போது, அந்தக் கலவரங்கள், பேஸ்புக் அல்லது வேறு சமூக ஊடக வலையமைப்புகள் மூலமாகத் தூண்டப்படுமாயின், அப்பகுதிக்கான இணையத்தள வசதிகளைக் கட்டுப்படுத்துவது ஒன்றும், புதிய விடயமும் கிடையாது.

ஆனால், இலங்கை விடயத்தில் அது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அம்பாறையில் இடம்பெற்ற வன்முறைகளின் தொடர்ச்சியாக, இம்மாதம் 5ஆம் திகதி தான் வன்முறைகள் ஆரம்பித்தன.

வன்முறைகளின் போது, பொலிஸாரால் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது, பொதுவான குற்றச்சாட்டாக உள்ள நிலையில், மறுநாள் 6ஆம் திகதி, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது என, ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரும் வன்முறைகள் தொடர்ந்தன. அவசரகால நிலையில், முப்படையினருக்கும் மேலதிக அதிகாரங்கள் கிடைக்கப்பெறுகின்றன என்ற நிலையில், அதைவைத்துக் கூட வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது கேள்விக்குரியது தான். அதன் பின்னர் தான், 7ஆம் திகதி, சமூக ஊடக வலையமைப்புகளைக் கட்டுப்படுத்தும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி எண்ணுமளவுக்கு, நிலைமை மோசமடைந்த தருணத்திலும் கூட, சமூக ஊடக வலையமைப்புகளையோ அல்லது இணைய வசதிகளையோ கட்டுப்படுத்தும் முயற்சி எடுக்கப்படவில்லை. அவசரகால நிலை எனப்படும், மிக அதிகமான அதிகாரங்கள் காணப்படும் நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரும் கூட, வன்முறைகளைக் கட்டுப்படுத்தாமல், சமூக ஊடக வலையமைப்புகளைத் தடை செய்வதென்பது, அவசரகால நிலைப் பிரகடனத்தால், பயனில்லை என அர்த்தத்தை வழங்குமல்லவா? அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், நாட்டின் வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கிறது என்றால், இரண்டே இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். 1. ஆளுவோருக்குத் திறமையில்லை. 2. ஆளுவோருக்கு வன்முறைகளைக் கட்டுப்படுத்த விருப்பமில்லை.

உண்மையான முறையில், இணையத்தள, சமூக ஊடக வலையமைப்புகளைக் கட்டுப்படுத்துவது, உடனடியாகவே, குறித்த பிரதேசத்தை மையப்படுத்திய வகையில் இடம்பெற்றிருக்க வேண்டும். அவை வெற்றியளிக்கவில்லை எனின், அவசரகால நிலைப் பிரகடனத்துக்கோ அல்லது வேறு முடிவுகளுக்கோ வந்திருக்கலாம். இதிலும் குறிப்பாக, ஜனாதிபதிக்குக் காணப்படும் அதிகாரங்களின் அடிப்படையில், அவசரகால நிலையை, முழு நாட்டுக்கும் அல்லது குறித்த பிரதேசத்துக்கும் அவரால் பிரகடனப்படுத்த முடியும். முழு நாட்டுக்கும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை, ஏனைய பகுதிக்கும் இவ்வன்முறை பரவலாம் எனவும் அதைக் கட்டுப்படுத்தும் திறன் அரசாங்கத்திடம் காணப்பட்டிருக்கவில்லை எனவும், ஜனாதிபதியும் அரசாங்கமும் ஏற்றுக்கொண்டமை என்றே பார்க்கப்பட வேண்டியிருக்கிறது.

பேஸ்புக்கிலும் ஏனைய சமூக வலையமைப்புகளிலும், வெறுப்புச் செய்திகளும் போலிச் செய்திகளும் பரப்பப்பட்டமை உண்மையானது. ஆகவே, பேஸ்புக்கைக் கட்டுப்படுத்த நினைப்பது சரியானது என்பது, ஓரளவுக்குச் சரியான வாதமென்றாலும், அதில் முக்கியமான ஒரு பிரச்சினை இருக்கிறது. வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்த, அரசாங்கமே நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் அது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்பாட்டின் பல பகுதிகளை இலங்கை ஏற்றுள்ளது.

அச்சட்டத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே, “எந்தவொரு தனிநபரும் போரைப் பிரசாரம் செய்யவோ அல்லது ஊக்குவித்தலிலிருந்து பாகுபாடு, பகைமை, வன்முறை ஆகியனவாகக் கருதப்படக்கூடிய தேசிய, இன, சமய ரீதியான வெறுப்பை ஆதரிக்கக்கூடாது” என்று குறிப்பிடப்படுகிறது. இது, சமூக ஊடக வலையமைப்புகளுக்கும் பொருத்தமானது. அப்படியாயின், பேஸ்புக்கிலும் ஏனைய இடங்களிலும் காணப்பட்ட வெறுப்புகள் தொடர்பாக, இதற்கு முன்னர் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வியை, எழுப்பப்பட வேண்டியிருக்கிறது.

அத்தோடு, அண்மைக்காலத்தில் அமைச்சர்கள் பலரும் தெரிவித்துவரும் கருத்துகள், “பேஸ்புக்கில் இருக்கின்ற இனவாதத்தை இல்லாது செய்துவிட்டால், இலங்கையில் பாலும் தேனும் ஓடும்” என்ற வகையிலேயே இருக்கின்றன. முழுமையான கவனமும், சமூக ஊடக வலையமைப்புகளில் காணப்படும் வெறுப்புப் பேச்சுகள் தொடர்பிலும் போலிச் செய்திகள் தொடர்பிலுமே காணப்படுகின்றன.

பேஸ்புக்கோ அல்லது ஏனைய சமூக ஊடக வலையமைப்புகளோடு, வெறுமனே ஊடகங்கள் தான். அவற்றால், வெறுப்பைப் பரப்புவதற்கான கருவியாகச் செயற்பட முடியும். ஆனால் வெறுப்பைப் பரப்புவது, இலங்கை மக்கள் தான். இலங்கையில் காணப்படுவது, இனவாதப் பிரச்சினை. அந்த இனவாதத்தைப் பரப்புவதற்கான ஒரு கருவி தான், பேஸ்புக். இனவாதத்தைப் பரப்புவதைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக முக்கியமாக, இனவாதத்தை ஏற்படுத்தும் வழிகளை இல்லாது செய்தல் அவசியமாகிறது.

இதைச் சரியாக விளங்கவைப்பதற்கு, இலங்கை அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்த கருத்தை, அப்படியே சொல்வது பொருத்தமாக இருக்கும்: “ஒருவர் அனுப்பும் கடிதம் அல்லது செய்தி, எங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், தபால்காரரைச் சுடுவதற்கோ அல்லது தபால் அலுவலகத்தை எரித்துவிடுவதற்கோ நாம் செல்வதில்லை. அப்படியிருக்கும் போது, பேஸ்புக்கைத் தடைசெய்வதற்கு அவர்கள் ஏன் முயல்கிறார்கள்?” இவ்வாறு சொன்னவர்: அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க. கூறிய சந்தர்ப்பம்: ஏற்கெனவே மேலே குறிப்பிடப்பட்ட அதே சந்தர்ப்பத்தில் தான்.

இன்னொரு வகையில் சொல்வதானால், இனவாதம் அல்லது இனவெறுப்பு என்பது, இலங்கையில் காணப்படும் பேரழிவுமிக்க நோய். பேஸ்புக்கில் காணப்படும் இனவெறுப்புப் பேச்சுகள் என்பன, இலங்கையில் காணப்படும் பேரழிவுமிக்க நோய்க்கான அறிகுறிகள். நோய்க்கான மருந்துகளை வழங்கும் போது, அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவது முக்கியமானது தான், ஆனால், அறிகுறிகளைக் கட்டுப்படுத்திவிட்டால் நோயே இல்லாமல் போய்விடுமென எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்(வீடியோ)!!
Next post விந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள்(அவ்வப்போது கிளாமர் )!!