தண்டிக்கப்படுவோம் என்ற பயம் ஏற்படாத வரை தாக்குதல்கள் தொடரும்(கட்டுரை)!!
இலங்கை, முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் ஒன்றென, இலண்டன் நகரை மையமாகக் கொண்டியங்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான, சர்வதேச மன்னிப்புச் சபை, பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி வெளியிட்ட, தனது வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
கடந்த காலங்களில், இலங்கை முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகள் அடிக்கடி சிங்களவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வந்தன.
கடந்த நவம்பர் மாதம், காலி, கிந்தொட்டையில் சிறு பிரச்சினையொன்றின் காரணமாக, முஸ்லிம்களின் உடமைகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன.
ஆயினும், இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற நாடுகளில் ஒன்று என்பதை இலங்கை முஸ்லிம்களாவது கடந்த மாதம் நினைக்கவில்லை.
2012 ஆம் ஆண்டு முதல், 2014 ஆண்டு வரை, அதாவது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் இறுதி மூன்று ஆண்டுகளில், இலங்கை முஸ்லிம்களுக்கு, எப்போது எது நடக்குமோ என்ற பீதியில், வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு இருந்தது.
முஸ்லிம் விரோதக் கும்பல்களுக்கு, அப்போதைய அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்தமையே அதற்கு முக்கிய காரணமாகும். அக்காலத்தில், சர்வதேச மன்னிப்புச் சபை, இந்த அறிக்கையை வெளியிட்டு இருந்தால், முஸ்லிம்கள் மட்டுமல்லாது, வேறு மதத்தவர்களும் அதை நம்பியிருப்பார்கள்.
கடந்த மாத அறிக்கையை, வாசித்தவர்களும் அதைப்பற்றி அறிந்தவர்களும் எவ்வளவு பொருட்படுத்தாமல் விட்டார்கள் என்றால், சிலர் ஓரிரு நாட்களிலும் சிலர் ஒரு சில மணித்தியாலங்களிலும் அதை மறந்து விட்டார்கள்.
ஆனால், அந்த அறிக்கை வெளியிடப்பட்டு சுமார் 10 நாட்களில், அம்பாறையிலும் கண்டி மாவட்டத்தில் திகன, தெல்தெனிய, கட்டுகஸ்தொட்ட மற்றும் தென்னக் கும்புற போன்ற பகுதிகளிலும் முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல்கள் மற்றும் கடைகள் பற்றி எரியும்போது, மன்னிப்புச் சபையின் அறிக்கை உண்மையாகி விட்டது.
இன்று நாடெங்கிலும் முஸ்லிம்கள், எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வாழ வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அரசாங்கமும் பாதுகாப்புத் துறையினரும் என்னதான் உத்தரவாதம் அளித்தாலும், எந்தவொரு முஸ்லிமுடைய உயிருக்கும் உடமைகளுக்கும் மதவழிபாட்டுத் தலத்துக்கும் பாதுகாப்பு என்ற உத்தரவாதமே இல்லாத நிலையே உருவாகியிருக்கிறது. ஆம்! உலகில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது, நிரூபணமாகி விட்டது.
அம்பாறையில், பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி, இடம்பெற்ற தாக்குதல்களைப் போலல்லாது, கண்டி மாவட்டத்தில் மார்ச் நான்காம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல்கள், பயங்கரமானதும் பல நாட்கள் நீடித்ததுமாகக் காணப்பட்டன.
அரசாங்கம் ஐந்தாம் திகதி, கண்டி மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தையும் மறுநாள், ஒரு வார காலத்துக்கு அவசரகால நிலையையும் பிரகடனப்படுத்தும் அளவுக்கு அவை பயங்கரமாகின.
ஆரம்பத்தில், இரவு நேர ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதிலும், வன்செயல்கள் தொடரவே, பகல் நேரங்களிலும் அச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் காலி, கிந்தொட்டை என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் இடம்பெற்ற போதும், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், முஸ்லிம்கள் சம்பந்தமான ஒரு விடயத்துக்காக, 103 ஆண்டுகளுக்குப் பின்னரே, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இதற்கு முன்னர், 1915 ஆம் ஆண்டு, சிங்கள-முஸ்லிம் கலவரம் ஏற்பட்ட போதே, முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்துக்காக, அவ்வாறான சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அன்று அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருக்கவில்லை. எனவே, ‘மார்ஷல் லோ’ எனப்படும் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
கண்டி மாவட்டத்தில், அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த வேளையிலும், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்றமையாலேயே அரசாங்கம் தொடர்ந்து, ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டியதாயிற்று.
மறுபுறத்தில், அச்சட்டங்கள் பெயரளவில் மட்டுமே இருந்தன என்பதற்கு, அச்சட்டங்களே சிறந்த உதாரணங்களாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால், அச்சட்டங்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தினவேயன்றி, தாக்குதல்களை நடத்திய காடையர்களைக் கட்டுப்படுத்தவில்லை.
அவசரகால நிலையோ அல்லது ஊரடங்குச் சட்டமோ, இலங்கை மக்களுக்கு தெரியாத அல்லது பழக்கமில்லாத சட்டங்கள் அல்ல. நாடு சுதந்திரமடைந்து கழிந்த 70 ஆண்டுகளில் அரை வாசிக்கு மேல், அதாவது 40 ஆண்டுகளுக்கு மேல் நாடு அவசரகால நிலையின் கீழேயே நடத்தப்பட்டுள்ளது.
1971 ஆம் ஆண்டு, மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது கிளர்ச்சி காரணமாக, அந்த ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம், புலிகளுக்கும் ஆயுதப் படையினருக்கும் இடையிலான போர் முடிவடைந்து, இரண்டு ஆண்டுகள் முடிவடையும் வரை, இடைக்கிடையே ஒரு சில மாதங்கள் நீக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வரை அமுலில் இருந்தது.
அந்தக் காலத்தில், அடிக்கடி நாட்டில் ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. அவற்றின் பயங்கரத் தன்மையை, தற்போது 20 வயதைத் தாண்டியவர்கள் நன்கறிவர். அவற்றை மீறினால் ஏற்படும் விளைவுகளையும் அவர்கள் அறிவர்.
அந்தச் சட்டங்கள் மட்டுமல்ல, பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ இருக்கும் போது, ஒரு குப்பைப் பையை வீதியில் தூக்கியெறிவதற்குக்கூட, எவருக்கும் தைரியம் இருக்கவில்லை. செயற்படும் சட்டத்துக்கு அவ்வாறுதான் பயப்படுவார்கள்.
ஆனால், கண்டிப் பகுதி காடையர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அவசரகாலச் சட்டத்தையோ அல்லது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தையோ மதிக்கவில்லை.
அவை, மீறக்கூடியவை என்பதையும் மீறினால் தமக்கு எதுவும் நடக்கப் போவதில்லை என்பதையும் அவர்கள் நன்கறிந்திருந்தனர் போலும்.
பல நூற்றுக் கணக்கான குண்டர்கள், தடிகளோடும் பொல்லுகளோடும் நடமாடுவதை தொலைக்காட்சியில் மக்கள் கண்டனர். ஆனால், சுமார் 280 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதாவது, குண்டர்களில் பலரை, எந்தவொரு சட்டமும் கட்டுப்படுத்தவோ பின் தொடர்ந்து வரவோ இல்லை.
இதற்கு முன்னைய இனக் கலவரங்களின் போது, எதையும் விசாரித்து அறியாது, சிங்கள மக்களின் பக்கத்தை எடுக்கும் ஜாதிக ஹெல உருமயவின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவே, இம்முறை சட்டம் குண்டர்களை கட்டுப்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறார். பிரச்சினைகள் ஆரம்பிக்கும் போது, பொலிஸார் செயற்படாததன் காரணமாகவே வன்செயல்கள் பரவின என்று அவர் கூறியிருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நிலைமையைக் கட்டுப்படுத்தச் செய்திருக்க வேண்டிய ஒரே வேலை, சட்டத்தை அமுல்செய்வதே எனக் கூறியிருந்தார்.
பல இடங்களில் சம்பவங்கள் இடம்பெறும்போது, பொலிஸார் வெறும் பார்வையாளர்களாகவே இருந்துள்ளனர் என அரசாங்கத்தின் தலைவர்களின் மிக நெருங்கிய நண்பரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன கூறினார். செயலுருவம் பெறாவிட்டால் அவசரகாலச் சட்டமோ, ஊரடங்குச் சட்டமோ எதற்கு என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
புலனாய்வுப் பிரிவினர் ஒழுங்காகச் செயற்படவில்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகிறார்.
பொலிஸாரின் செயற்பாடுகளில் மந்தநிலை இருந்ததாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார். அவர் தான், தாக்குதல்கள் இடம்பெறும் போது, பொலிஸாருக்குப் பொறுப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக இருந்தார்.
அம்பாறையில் முஸ்லிம் சாப்பாட்டுக் கடை ஒன்றில், உணவருந்த வந்த சிங்களவர் ஒருவரின் உணவில், கருத்தடை மாத்திரைகளைக் கலந்துவிட்டார்கள் என்ற பொய் வதந்தியைப் பரப்பிவிட்டே, அந்தக் கடையையும் அயலில் இருந்த ஏனைய முஸ்லிம்களின் கடைகளையும் பள்ளிவாசலையும் தாக்கியிருந்தார்கள்.
அது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக, சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐ.நா ஒப்பந்தத்தின் கீழ், வழக்குத் தாக்கல் செய்வதற்கு ஆரம்பத்தில் நடவடிக்கை எடுத்த பொலிஸார், பின்னர் இது இனக்கலவரம் அல்ல எனக்கூறி, சாதாரண சட்டத்தின் கீழ் வழக்கைத் தொடர்வதாக நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, விசாரணை செய்யுமாறு பிரதமர், மட்டக்களப்பு பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரைப் பணித்துள்ளார்.
பொலிஸாருக்கு எதிராக அரசாங்கத்தின் தலைவர்களே இவ்வளவு குற்றஞ்சாட்டும் போதும், பொலிஸ் திணைக்கள உயர்அதிகாரிகள், அதற்குப் பதிலளிப்பதாகத் தெரியவில்லை.
அதேவேளை, அவ்வாறு பொலிஸாரைக் குறை கூறிக் கொண்டு இருக்கும் அரச தலைவர்கள், அந்தப் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரியவில்லை.
அம்பாறையில் இடம்பெற்ற சம்பவமே, தாக்குதல்கள் திட்டமிடப்பட்டவை என்பதை மிகவும் தெளிவாக, வெளிமாவட்டங்களில் உள்ளவர்களுக்கு எடுத்துக் காட்டியது. இரவு ஒன்பது மணிக்குப் பின்னர், அந்தச் சாப்பாட்டுக் கடைக்கு வந்தவர், தமது உணவில் ஏதோ வித்தியாசமான ஒரு பொருளைக் காண்கிறார். அவர் உடனே அது வேறொன்றும் அல்லாது, கருத்தடை மாத்திரையே என முடிவுக்கு வருகிறார். அவரது அலைபேசி அழைப்பை அடுத்து, அங்கு விரைந்துவரப் பலர் தயாராகவும் இருந்துள்ளனர். அவர்கள், கடையின் காசாளரை மிரட்டுகின்றனர். அவர் செய்வதறியாது பயத்தினால் தலையை அசைக்கிறார். அது வீடியோ செய்யப்பட்டு, உடனே சமூக வலைத்தளங்கள் முலம் பரப்பப்படுவதோடு கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன.
இப்போது, உணவில் இருந்தது வெறும் மாஉருண்டை என அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் ஏ. வெலிஅங்ககே முடிவு செய்துள்ளார். அவ்வாறாயின், கடையின் காசாளர், தாம் கருத்தடை மாத்திரைகளை உணவில் சேர்த்ததாக ஏற்றுக் கொண்டார் என்றவர்கள் இப்போது என்ன கூறப் போகிறார்கள்?
குடிபோதையில் இருந்த நான்கு ‘முஸ்லிம்கள்’ ஒரு சிங்களவரைத் தாக்கி, அவர் மரணமடைந்ததை அடுத்தே, கண்டி மாவட்டத்தில் கலவரநிலை ஏற்பட்டது. ஆனால், அந்தச் சிங்களவர் தாக்கப்பட்ட சம்பவம், கலவரத்தை ஆரம்பிக்கக் காத்திருந்தவர்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பமாக அமைந்ததாகவும் தெரிகிறது.
2012 முதல் 2014 வரை, இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கும் இம்முறை இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் இடையில் உள்ள முக்கியமானதொரு வேறுபாடு என்னவென்றால், இம்முறை ஆரம்பத்திலிருந்தே சிங்களப் புத்திஜீவிகள், இனவாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தமையாகும்.
கருத்தடை மாத்திரை குற்றச்சாட்டை, அவர்கள் எடுத்த எடுப்பிலேயே பகிரங்கமாகவே நிராகரித்தனர்.
அரசாங்கமும் ஹலால் பிரச்சினையின் போது, மஹிந்தவின் அரசாங்கம் நடந்து கொண்டதைப் போல், வருடக் கணக்கில் இழுத்தடிக்காது ஒரு வார காலத்துக்குள்ளேயே உத்தியோக பூர்வ தெளிவுபடுத்தல்களை வெளியிட்டது. அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்குப் புறம்பாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், நிரந்தரமாகக் கருத்தரிப்பைத் தடுக்கும் இரசாயனப் பொருட்கள், உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை என உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
முஸ்லிம்கள் சிலரது குற்றச் செயலொன்றைப் பாவித்து, கண்டியில் கலவரம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், சிங்களப் புத்திஜீவிகள் அதையும் பகிரங்கமாக எதிர்த்தனர்.
ஆனால், அன்றும் இன்றும் ஒரு விடயம் பொதுவாக இருக்கிறது. அதுதான் பயங்கரமானது. இனவாதிகள் விடயத்தில் பொலிஸார் காட்டும் மிருதுவான போக்கும் அவர்களுக்குச் சார்பாகச் செயற்பட்டு, அவர்களைக் காப்பாற்ற முயற்சிப்பதுமாகும்.
தமது சிங்கள வாக்கு வங்கி பாதிக்கப்பட்டு விடுமோ எனப் பயந்து, ஆட்சியாளர்களும் பொலிஸாரின் அந்தச் செயற்பாடுகளைக் கண்டும் காணாததைப் போல் இருப்பதும், அன்றுபோல் இன்றும் காணக்கூடியதாக இருக்கிறது. இனவாதம், பொலிஸ் திணைக்களத்தில், நிறுவனமயப்படுத்தப்பட்டு விட்டது போலும்.
கண்டியிலும் அம்பாறையிலும் நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்கள், தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.
தாம் தண்டிக்கப்படுவோம் என்ற உணர்வு இனவாதிகளின் மனதில் ஏற்படாத வரை, அவர்கள் தமது நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை. அவ்வாறானதொரு நிலைமை நாட்டில் இல்லை.
Average Rating