கண்டி கலவரம்(கட்டுரை)!!
கண்டியே பற்றியெரிந்தபோது, அதைக் கணக்கிலெடுப்பதற்கு யாரும் தயாராய் இருக்கவில்லை, அதற்காகச் சமூக ஊடகங்களை தடை செய்துதான் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிலை தோன்றியிருந்தது.
அப்படியானால், சமூக, சிவில் அமைப்புகள், தலைவர்கள் எங்கே இருந்தார்கள், என்ன செய்தார்கள் என்ற கவலையொன்று இலங்கையில் உருவாகியிருக்கிறது. இலங்கையின் சரித்திரத்தில் இடம்பிடித்த முதலாவது இனக்கலவரம், 1915 ஆம் ஆண்டின் கண்டிக் கலவரம் தான். ஆனால், இப்போது 2018 மார்ச்சில் ஏற்பட்ட கலவரத்தோடு இரண்டாகிக் ‘கண்டிக் கலவரங்கள்’ என்று வரலாறு பதிவு செய்கிறது.
இலங்கையில் மாத்திரமல்ல, உலகத்திலேயே தேசியம் சார் நல்லிணக்கத்துக்கு, ஆரோக்கியமான பங்களிப்பைச் செய்யக்கூடிய, பொருத்தமான ஒழுங்கமைப்புகள் இருக்கின்றனவா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ளும் காத்திரமானவர்கள் சிலர், இப்போதும் கவலைப்படுவதைத்தவிர வேறு வழியில்லை என்றாகிப்போனது நிகழ்காலம்.
சிவில் சமூகம், அரசாங்கம், அரசியல்வாதிகள், ஊடகங்கள், மதத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் யாவும் இணைந்தவையாக ஒன்று சேர்ந்து இயங்கும் பொழுதே, நல்லதொரு நாடு இயக்கம் கொள்ளும்.
சிவில் சமூகங்களைப் பொறுத்தவரையில், சிறந்த ஊடக கலாசாரத்தை வளர்த்தெடுத்தல், நேர்த்தியான அரசியல்வாதிகளைத் தெரிவு செய்வதற்கு மக்களை வழிப்படுத்துதல், அதற்கான ஊக்கம் கொடுத்தல், மதச் சார்பான அமைப்புகள், மதத்தலைவர்களை ஒருங்கிணைப்புச் செய்தல், அரசியல் தரப்பினரை வளப்படுத்துதல் எனப் பல செயற்பாடுகளைச் செய்தல் வேண்டும். இதன் ஒரு பகுதியாகத்தான், இந்தச் சிவில் சமூகங்கள் சரியான முறையில் தமது கடமைகளைச் செய்கிறனவா என்ற கேள்வி வலுக்கிறது.
ஆனால், மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளைச் செய்யமுடியாத சூழல், சிவில் தரப்பினருக்கு இருக்கிறதா இல்லையா என்ற விவாதத்துக்கு வருவதற்கு முன்னர், வௌ்ளை அங்கி தரித்த அரசியல்வாதிகள் கூட்டம், நாட்டின் அனைத்துச் செயற்பாடுகளையும் தங்களது கைகளுக்குள் வைத்துக் கொண்டிருக்கின்ற நிலைமை மேலோங்கி வருகிறது.
அத்தோடு மத அமைப்புகள், நிறுவனங்கள், மதத்தலைவர்கள் அணி மக்களுக்கு மதம் என்ற விஷத்தைப் பருக்கி, பிழையான வழிக்கே கொண்டு செல்ல எத்தனிப்பதையும் ஆங்காங்கே அவதானிக்க முடிகின்றது.
அதாவது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான செயற்பாட்டைச் செய்வதை விடுத்து, இந்த நிறுவனங்கள் ஒருபக்கம் வெளியே நின்று கொண்டு, தங்களது மதநிறுவனங்களை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்குமான முயற்சிகளிலேயே ஈடுபடுகின்றனர். அதாவது, சமூகத்தின் ஆரோக்கியமான செயற்பாட்டுக்குள் அவர்கள் இல்லை.
ஊடகத்துறையினரைப் பொறுத்தவரையில், ஒருசில அரசியல் கட்சிகளைச் சார்ந்தும், இனம் சார்ந்தும் செயற்படுகின்றமையைக் காணமுடிகிறது. இதன்படி, அவர்கள் உண்மையான ஊடக தர்மத்துக்கு ஏற்ப செயற்படுவதாக இல்லை என்றே சொல்லிக்கொள்ளலாம்.
எல்லோருடையதும் என்றில்லாமல், தங்களுக்கு விரும்பியவர்களது கருத்துகளையும் விடயங்களையும் வெளிப்படுத்திக்கொண்டு, ஏனையவர்களின் விடயங்களை மறைத்து விடுவதாக அல்லது இருட்டடிப்புச் செய்வதாக அமைந்திருக்கிறது.
சிவில் சமூகத்தைப் பொறுத்தவரையில் அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் என்றெல்லாம் இணைத்துக் கொண்டு, தாங்கள் சார்ந்தவர்கள் அல்லது தங்களைச் சார்ந்தவர்களிடையே நிதிவளங்கள் செலவு செய்யப்படுகின்றன.
அவர்கள் சார்ந்து, தெரிவு செய்யப்பட்ட முகவர்களுக்கே நிதிகள் வழங்கப்படுவதுடன் திட்டங்களுக்கு அனுமதிகளும் கொடுக்கப்படுகின்றன. இத்தகைய நடைமுறைகளினால் சிறந்த திட்டங்கள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. அரச துறையினர் ஒதுக்கும் நிதி ஒதுக்கீடுகள்கூடப் பிழையானவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இதுஇவ்வாறிருக்க, இலங்கையில் மூன்று தசாப்தத்துக்கும் மேலாக நீடித்த, தமிழ் – சிங்கள இனமக்களிடையேயான இனப்பிரச்சினை, முடிவுக்குக் கொண்டு வரப்பட்டபின், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலைமாறு கால நீதிக் காலத்தில், முன்னேற்றகரமானதும் மேம்பட்டதுமான செயற்பாட்டின் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கிறது.
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், நாட்டில் எல்லாமே முடிந்து விட்டது என்றெண்ணிக் கொள்ள முடியவில்லை. அடுத்து ஏற்பட்ட பிரச்சினைகள், பேருவளைக் கலவரம் மிகவும் கொடுரமானதாகவே கொள்ளப்பட்டது. ஆனால், அது ஒரு வகையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, அமைதி காக்கப்பட்டது.
பின்னர், றோகிஞ்சா அகதிகள் பிரச்சினை எழுந்து, அமைதி பெற்றது. அவ்வேளைகளில், ஒருசில சிவில் அமைப்புகள் ஒன்று திரண்டு அமைதிக்காகப் பாடுபட்டன.
இப்போது, அம்பாறையில் ஹோட்டல் ஒன்றில் உணவருந்த வந்த பெரும்பான்மைச் சிங்கள இளைஞர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரச்சினை, தற்போதும் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. ‘பேஸ் புக்’ என்கிற முகநூலே வாழ்க்கை என்றிருந்தவர்களுக்குப் பேரிடியைக் கொடுத்திருக்கிறது.
அதேபோலத்தான் வைபர்; பக்கத்திலிருப்பவரைக்கூட கணக்கிலெடுக்காது வைபருடன் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், அடுத்தவருடனும் பேசத்தான் வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது.
பிடிக்காதவர் எதைச் சொன்னாலும் பிழை; எதைச் செய்தாலும் தவறு; அவற்றை நாங்கள் கருத்திலோ, கவனத்திலோ எடுக்கமாட்டோம் என்கிற மனோபாவம், தமிழர் அரசியலில் மாத்திரமல்ல மனித வாழ்வின் அரசியல், நிருவாகம் அனைத்திலுமே இருக்கிறது.
இது பக்குவப்படாத தன்மையே அன்றி வேறேதுமில்லை. நாம் நினைத்தது மாத்திரமே நூற்றுக்கு 200 சதவீதம் சரியானது என்ற பிடித்த பிடியைத் தளர்த்தக்கூட முடியாதிருக்கின்றவர்களுக்கு மத்தியில்தான் எல்லாமே நடைபெற்று வருகின்றது.
இலங்கை நாட்டில், யுத்தத்தின் நிறைவுக்குப் பின்னர், சந்தேகங்கள் பலவற்றுக்கு மத்தியில், மார்ச் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் பல்வேறு விதமான பிரச்சினைகள் தலை தூக்குவதுதான் வழக்கம்.
இதைக் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர், மட்டக்களப்பில், நீண்ட காலமாகப் போராட்டங்களை நடத்தி, பிரச்சினைகளைக் கிளப்பிக் கொண்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு, நியமனங்களை வழங்குவதற்காக, மட்டக்களப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வந்திருந்தபோது, உறுதிப்படுத்தியிருந்தார்.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினை, தானாக ஏற்பட்டதா? இல்லாவிட்டால் உள் நோக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சதியா என்ற ஆழ்மனச் சந்தேகங்கள் பலவற்றைத் தோற்றுவித்திருக்கின்றது.
முகநூல் மற்றும் வைபர் போன்ற சமூக வலைத்தளங்கள், ஒரு பிரதேசத்துக்குள் தடைசெய்யப்படுவதால் பிரயோசனமில்லை.
ஆனால், நாடு முழுவதும் தடை செய்யப்படுவதற்கு என்ன காரணம் என்ற கேள்வி கேட்கப்பட்டாலும், உண்மையைச் சொன்னால், உலகத்துடனான தமது தொடர்பை அறுத்து விட்டிருப்பதாகவே நாட்டு மக்கள் உணர்கிறார்கள்.
2015ஆம் ஆண்டு ஐ.நாவில், இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்கி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் பொறுப்புக் கூறல் விடயம், வெறும் கண்துடைப்பாக அமையக் கூடாது என்ற வலியுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்ற இந்தச் சூழலில், பற்றவைக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையிலான குழப்பம், இப்போது தணிந்து விட்டது என்று வெளிப்படையாகச் சொன்னாலும், அது முடிந்துவிடவில்லை.
தொடர்ச்சியாக வன்முறைகள், கொடூரங்களுக்குள் இருந்து கொண்டே வந்த சமூகத்தில், இரத்தத்துடன் ஊறியது என்பது போல, வன்முறைச் சிந்தனைகள் இருந்தேதான் தீரும்.
அவசரகாலச்சட்ட அமுலாக்கம், சமூக ஊடகங்களின் மீதான தடை போன்றவைகள் எல்லாம் உலக வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சில நாடுகளில் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
மியான்மாரில் பௌத்தர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் உருவான கலவரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகக் கடைப்பிடிக்கப்பட்டதே இந்த முகநூல் முடக்கம்.
இதை, இலங்கை 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்தி வரலாற்றில் பதிவொன்றை மேற்கொண்டிருக்கின்றது. இந்தப்பதிவு மறக்கவோ மறைக்கவே முடியாததுதான்.
ஆனால், சமூக ஊடகங்கள் இலங்கையில் சாதாரணமாகப் பாவனைக்கு வராத காலத்தில், ஊடகங்களுக்கான தணிக்கை, வலைத்தளங்களுக்கான தடைகள் கட்டுப்பாடுகளோடு ஒப்பிடும்போது, சிறிய செயற்பாடு என்றாலும், இன்றைய காலச்சூழலில் பெரியளவான தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் நிறைவு பெற்ற பின்னர், நல்லிணக்க உறவுகளுக்கான செயற்பாடுகள் பல்வேறு அமைப்புகளாலும் மேற்கொள்ளப்பட்டன. அவை, ஆரம்பநிலையிலேயே இருந்தன.
அவ்வாறு கட்டமைக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையேயான உறவு, சிதைவடைவதானது சிறப்பானதொரு இலங்கைக்கான அடையாளமாக இருக்காது. இனங்களக்கிடையிலான ஒற்றுமையைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல வேண்டியது கட்டாயமானதாகும்.
மந்த கதியில் இருக்கின்ற நல்லிணக்கப் பொறிமுறைக்கான சர்வதேச நியமங்களைச் சரியான முறையில் செயற்படுத்துகின்ற நடவடிக்கை இன்னமும் கண்டனங்களை எதிர்கொள்ளுகின்ற நிலையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் சமாதானம், அமைதியற்ற சூழல், மேலும்மேலும் நம்பிக்கையீனத்தையே தோற்றுவிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டுவராது.
பிரச்சினைகள் ஏற்படுகின்ற வேளைகளில், அவற்றை ஊதிப் பெரிதாக்குவதற்காக அமைப்புகளும் நிறுவனங்களும் தனி நபர்களும் தோன்றிவிடுகின்றனர். ஆனால், பிரச்சினைகளைச் சீர்செய்வதற்கும் ஆரோக்கியமான கருத்தாடல்களை மேற்கொள்வதற்கும் யாரும் இல்லாததொரு நிலையே இப்போதைய காலத்தில் நாட்டில் இருக்கின்றது.
இந்நிலைமையை மாற்றியமைப்பதற்கு அரசியல்வாதிகள் கூடத் தடையாக இருக்கின்ற சூழலும் காணப்படுகிறது. அல்லது, அரசாங்கம் மாத்திரமே அனைத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற பார்வையும் இருக்கத்தான் செய்கிறது.
எனவே, பொது மக்களின் நலன் எதிர்காலம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, ஆரோக்கியமான உரையாடலுக்கான பொறிமுறையொன்று இல்லாமல் இருக்கின்ற, அல்லது உருவாக்கப்படுவதற்கு முடியாமலிருக்கின்ற அல்லது முயலாமல் இருக்கின்ற சூழலில் என்னதான் நடக்கப்போகிறது என்பது ஆபத்தே. இதற்கிடையில் புகுந்து, அரசியல்வாதிகளால் கையிலெடுக்கப் பட்டிருக்கின்றமையானது, மிகவும் ஆபத்தானதாகவும் உணரப்படுகிறது.
பக்கத்தில் வீடு எரிகிறது; இருந்தாலும் தங்களது வீட்டுக்குள் பிரச்சினை வரும் வரையில் அதற்கான முன் ஏற்பாடுகள் எதுவும் அற்றவர்களாகவே எல்லோரும் இருக்கிறார்கள். அவற்றைத் தடுத்து நிறுவத்துவதற்கு குரல் கொடுப்பதற்கும் யாருமற்ற நிலைமையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதேநிலைதான் அம்பாறையிலும் கண்டியிலும் அதனையண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டது. தனி மனிதர்களுடைய பிரச்சினைகளைச் சமூகப்பிரச்சினை, இனங்களுக்கிடையிலான பிரச்சினையாக மாற்ற முயலும் சிந்தனையில் மாற்றம் சாதாரணமாக ஏற்படும் என்று எதிர்பார்ப்பது பெரும் தவறாகும்.
மனிதனுக்கு எதிராக அவலங்கள் இடம்பெறுகின்றன; அதற்கான முன்னெச்சரிக்கையிடலுக்கான பொறுப்புக்கூறல் நடவடிக்கையை மேற்கொண்டு, மனிதப்பாதுகாப்புக்கான பரிகாரத்தை எடுப்பதற்கான அமைப்புகளின் தேவை கண்டுகொள்ளப்படுவதாக இல்லை. இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்கான அணி பெரும்எடுப்பில் உருவாக்கப்பட்டாக வேண்டும்.
இது, காணி சார்ந்த பிரச்சினைகள், வாழ்வாதாரப் பிரச்சினைகள், இனமுறுகல்கள் போன்றவற்றின் அதிகரிப்பை, ஆபத்துத் தன்மையை மோப்பம்பிடித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவையை உணர்ந்து கொண்டதாக இருக்க வேண்டும்.
இதன் அடிப்படையிலேயே, அம்பாறை, கண்டி சம்பவங்களைப் பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதைச் செயற்படுத்துவதற்கு நினைப்பதை விடவும் பெரிய இடைவெளி காணப்படுகின்றது.
இந்த இடைவெளி எப்போது நிரப்பப்படும் என்பது எல்லோராலும் உணரப்படவும் வேண்டும். ஊக்கப்படுத்தலுடன் முன்னெடுப்புகள் அவசியம் என்பது, பொதுப்படையில் கலந்துரையாடப்படவும் வேண்டும்.
இவ்வாறு உருவாக்கப்படுகின்ற அமைப்புகள் மக்களைத் தயார்படுத்துவதும், தலைவர்களை உருவாக்குவதற்குமான அமைப்பாகச் செயற்படுதல் வேண்டும்.
அந்தவகையில் பொறிமுறைப்படுத்தப்பட்ட மக்கள் , சமூகம் சார்ந்து ஏற்படுத்தப்படுகின்ற வன்முறைக் கலாசாரம், புரிந்துணர்வு இன்மைக்கான தடைகளை உடைத்தெறிவதற்கான கட்டமைப்புசார் அமைப்புகளின் அல்லது அமைப்பின் தேவையை நிரப்புவதற்கு ஆலோசனை வழங்கல், வழிப்படுத்தல் என அடுக்கின் கொண்டு செல்லக்கூடிய பட்டியல் பணியைக் கொண்ட அரச சாரா நிறுவனங்கள் தயாராக வேண்டும்.
அத்துடன் சிவில் செயல்முறை இதனால் சிறப்பானதொன்றாக மாற்றம்பெறவும் இலங்கை நாட்டின் அமைதிக்கும் மகிழ்வுக்குமானதாக உருவாக வேண்டும்.
Average Rating