படர்தாமரை பரவாமல் தடுப்போம்(மருத்துவம்)!
வெயில் காலத்தில் மட்டும் அதிகம் காணப்பட்ட படர்தாமரை, இப்போது எல்லாப் பருவ காலங்களிலும் ஏற்படுகிறது. முன்பு சரும நல மருத்துவர்கள் மிக எளிதாக வைத்தியம் செய்து குணப்படுத்திய இந்த பிரச்னை, இப்போது மருத்துவர்களையே மலைக்க வைக்கும் அளவுக்கு மாறி உள்ளது.
அப்படியென்றால் படர்தாமரை தீர்க்க முடியாத பிரச்னையா என்று பயப்பட வேண்டாம். படர்தாமரை என்னவென்பதைப் புரிந்துகொண்டால் அதை வென்றுவிடுவதும், வரும் முன்னரே தடுப்பதும் சாத்தியமே!
படர்தாமரை என்றால் என்ன?
சருமத்தின் மேல் பகுதியை பாதிக்கும் பூஞ்சைகளினால் உண்டாகும் ஒரு சரும நோய்தான் படர்தாமரை. தலை, உள்ளங்கை மற்றும் உள்ளங்காலைத் தவிர எந்த இடத்தையும் பாதிக்கும். Trichophyton, Microsporum மற்றும் Epidermophyton குடும்பத்தைச் சேர்ந்த பூஞ்சைகள்தான் இதை உருவாக்குகின்றன.
இதன் பாதிப்புகள் எப்படி இருக்கும்?
பொதுவாக இது வட்டமாக தோல் உரிந்து, சிவப்பாக மிகவும் அரிப்பை உண்டாக்கும் திட்டுகளாக இருக்கும்.இது எங்கிருந்து வருகிறது?
இது ஒரு தொற்றுநோய் வகையினைச் சேர்ந்தது என்பதால், படர்தாமரையினால் பாதிக்கப்பட்ட சக மனிதரிடமிருந்து வரலாம். மிருகங்களிடமிருந்து வரலாம் அல்லது மண்ணிலிருந்தும் வரலாம்.
எப்போதும் வட்டமாகத்தான் இருக்குமா?
சில நேரங்களில் வட்டமாக இருக்கும். சில நேரங்களில் வட்டத்தின் நடுப்பகுதி சாதாரணமாக இருக்கும். உடலின் எதிர்ப்பு சக்தியானது இந்த பூஞ்சையை வெளியே தள்ள முயற்சித்து தோலுரிந்து உரிந்து, நடுவில் நல்ல தோல் உருவாகி, வட்டத்தின் விளிம்பில் அது பரவிக்கொண்டே செல்லும். வட்டத்தின் விளிம்பில் சில நேரங்களில் கட்டிகள், கொப்புளங்கள்கூட தோன்றலாம். மண்ணிலிருந்து அல்லது மிருகத்திடமிருந்து தொற்று ஏற்பட்டிருந்தால் இந்தத் தோலுரிதலும், கொப்புளங்களும் சிவப்பும் சற்றே அதிகமாகவே தென்படும்.
இதில் உள்ள வகைகள் என்ன?
படர்தாமரை பாதிக்கப்படும் இடத்தைப் பொருத்து அதன் பெயரும், வகைகளும் தீர்மானிக்கப்படுகிறது. உடலில் பாதிப்பிருந்தால் அது Tinea corporis, முகத்தை பாதித்தால் Tinea faciei, கைகள் பாதித்தால் Tinea manuum, கால்களை பாதித்தால் Tinea pedis, தொடை இடுக்கை பாதித்தால் Tinea cruris, அக்குளில் வந்தால் Tinea axillarcs என பல வகைகள் படர்தாமரையில் உள்ளன.
தலையை படர்தாமரை பாதிக்காதா?
Tinea capitis என்ற வகையில் தலையில் பாதிப்பு ஏற்படும். பொதுவாக, குழந்தைகள்தான் இதனால் பாதிக்கப்படுவார்கள். அதுவும் தலைக்கு மொட்டை போட்ட பிறகு 2, 3 வாரங்களில் இது ஆரம்பிக்கும். தலையில் பாதிக்கப்பட்ட இடம் சாம்பல் நிறமாகி தோல் செதிலாக செதிலாக உரிந்து கொஞ்சம் கொஞ்சமாக நிறைய இடத்தில் தலையில் பாதிப்பை உண்டாக்கும்.
குழந்தைகளுக்கு இந்த பிரச்னை ஏற்படுவதற்கான காரணம் அவர்கள் தலையில் ‘சீபம்’ என்ற எண்ணெய் இல்லாததால்தான். சீபம் பொதுவாக 12-13 வயதில்தான் நன்றாக சுரக்க ஆரம்பிக்கும்.Tinea capitis-ல் ஒரு வகையில் சிறுவர்கள் தலையில் சீழ் கட்டிகள்போல் தோன்றும். சீழ் கோர்த்துள்ளதாக நினைத்து சில மருத்துவர்களே அதை எடுக்க முயற்சி செய்து தோற்றுப் போவார்கள். பூஞ்சைகளை கட்டுப்படுத்தும் அல்லது கொல்லும் மருந்துகளை உட்கொண்டால்தான் இது சரியாகும். இப்போதெல்லாம் Tinea faciei என்று முகத்தில் ஏற்படும் வகைக்கூட சில தலையையும் சேர்த்து பாதிக்கின்றன.
நகங்கள் பாதிக்கப்படுமா?
நகங்கள் தனியே பாதிக்கப்படலாம். அப்போது அதை Onychomycosis என்று அழைப்போம். ஒரு சிலருக்கு நகத்தில் இருந்து தோலுக்கு பரவியிருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் நகத்தை சரிசெய்துகொள்வது முக்கியம். நகம் பாதிக்கப்பட்டிருப்பதால் அதன் அருகே உள்ள தோலில் பாதிப்பு ஏற்பட்டு ‘நகச்சுத்தி’ உண்டாகலாம். அதன்மேல் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, சீழ் கோர்த்து வலி விண்விண்ணென்று தெறிக்கும்.
படர்தாமரை வந்தால் என்ன செய்ய வேண்டும்?
சருமம் என்பது நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு என்பதை முதலில் எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் கண்ட மருந்துகளையும் தடவாதீர்கள். மருந்து கடைக்காரர் ெசான்னார், பக்கத்து வீட்டு மாமி சொன்னார் என ஏதாவது களிம்புகளைத் தடவிவிட்டு வருவது தவறான விஷயம்.
பல்வேறு கூட்டுக்கலவையான களிம்புகளில் ஸ்டீராய்டு கலந்திருக்கும். அவற்றை சருமத்தில் தடவினால் பூஞ்சையை அழைப்பிதழ் வைத்து வரவேற்பது போல் ஆகிவிடும். ஸ்டீராய்டு தடவியதால் படர்தாமரை தோற்றம் அளிக்காமல் குணமாகிவிட்டதுபோல் தற்காலிகமாக தோன்றும். ஆனால், ஸ்டீராய்டு களிம்பினை நிறுத்திவிட்டால் மீண்டும் வந்துவிடும்.
எனவே, ஸ்டீராய்டு வகை களிம்பு உள்பட எந்த களிம்பினையோ, மருந்தினையோ மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தடவக் கூடாது. இது முதல் ஆலோசனை. இத்துடன் இன்னும் சில சின்னச் சின்ன எளிமையான குறிப்புகளும் இருக்கின்றன.
* படர்தாமரை வந்த உடன் சரும நல மருத்துவரின் உதவியை நாடுங்கள்.
* இரண்டு வேளை குளியுங்கள்.
* பருத்தி ஆடை மற்றும் உள்ளாடைகளை அணியுங்கள்.
* ஜீன்ஸ் மற்றும் சிந்தெட்டிக் உடைகள் அணிவதைத் தவிருங்கள்.
* குளித்தபிறகு உடலை நன்றாக ஈரம் போக துடையுங்கள்.
* உங்கள் துண்டு, சோப்பு போன்றவற்றை மற்றவர்களோடு பகிராதீர்கள்.
* நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் உடன் இருப்பவரோ பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் சிகிச்சை எடுக்க அறிவுறுத்துங்கள்.
என்னென்ன மருந்துகள் உள்ளன?
பொதுவாக மேலே தடவுவதற்கு Clotrimazole, kctaconazole Cream-கள் உள்ளன. தற்போது Sertaconazole, Luliconazole, Elocrconazole, Amarolfne, Amphoteruin போன்ற பல புதிய மருந்துகளும் வந்துள்ளன. உள்ளுக்குள் எடுத்துக்கொள்ள Terliurafune, Flicconazole, Itraconazole, Grscoflvin போன்ற மாத்திரைகள்
உள்ளன.இவற்றுடன் Rule of 2 என்று சரும நல மருத்துவர்கள் சொல்வதையும் பின்பற்ற வேண்டும்.
2 வேளை மருந்தினைத் தடவவும்.
2 செ.மீ. பாதிக்கப்பட்ட இடத்தை தாண்டியும் (பாதிக்கப்பட்ட இடத்தையும் சேர்த்து) களிம்பை தடவ வேண்டும்.
2 வாரம் நோய் சரியான பிறகும் வைத்தியம் செய்ய வேண்டும்.
படர்தாமரை பற்றி படிப்பதற்கு மிக எளிதாக இருக்கலாம். பல நோய்கள் படர்தாமரை போல் தெரியலாம். சின்னச் சின்ன வித்தியாசங்கள் சரும நல மருத்துவருக்குத்தான் தெரியும். தானே வைத்தியம் செய்து கொண்டவர்களும், உடல் முழுக்க பாதிக்கப்பட்டவர்களும் மிகவும் மனவேதனைப்படுவதை
கண்கூடாகப் பார்க்கிறோம்.
சிலர் பணத்தை மிச்சம் செய்வதாக நினைத்துக்கொண்டு தவறான வைத்தியம் செய்து 3, 4 வாரங்களில் சரியாகிவிட வேண்டிய நோயை 4, 6 மாதங்கள் வரை வைத்துக்கொண்டு அவதிப்படுவார்கள். ஆகையால், படர்தாமரை வந்தவுடனே மருத்துவர் உதவியை நாடுங்கள்.
முன்பெல்லாம் ஒரே மாத்திரையில் 2, 3 வாரங்களில் இதை சரி செய்தோம். ஆனால், நாடு முழுக்க அவரவர் இஷ்டம்போல் களிம்புகளைத் தடவி, இப்பொழுது இந்த கிருமி கொசுக்கள்போல எந்த மருந்துக்கும் எளிதாக மசிவதில்லை. இதை சரி செய்ய இப்பொழுதெல்லாம் நாங்கள் ஒரு மருந்தை 3, 4 வாரங்கள் கொடுத்தபின்பு வேறு ஒரு மருந்தை திரும்பவும் கொடுக்கிறோம். பிரச்னை சரியானாலும் சிலருக்கு சருமத்தின் பழைய நிறம் வர 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. முதலிலேயே மருத்துவர் உதவியை நாடினால் இந்த சிக்கல் இருக்காது.
Average Rating