எலும்பே நலம்தானா(மருத்துவம் )?!
எலும்புகளை பலவீனமாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் பற்றிய அடிப்படை விஷயங்களை கடந்த இதழில் பார்த்தோம். ஆஸ்டியோபோரோசிஸை ஏன் கவனிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களையும், இன்னும் சில முக்கிய விஷயங்களையும் இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்…
ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னையை சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் எலும்பு இழப்புகளைத் தவிர்க்கலாம். உடல் உறுதி மேம்படும். வாழ்க்கைத் தரம் உயரும். உடலியக்கம் மேம்படும். எலும்புகளின் வலுவிழப்பால் முடங்கிப் போகிற வாழ்க்கையில் சரியான நேரத்து சிகிச்சையின் மூலம் மாற்றம் ஏற்படுத்த முடியும். கீழே விழுவதால் ஏற்படுகிற எலும்பு முறிவுகளைத் தவிர்க்க முடியும்.
வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தசைகளின் வலுவை அதிகரிக்கும். பாஸ்ச்சரை மேம்படுத்தும். உடலின் சமநிலைத்தன்மை சீராகும். மிச்சமிருக்கும் எலும்புத் திசுக்கள் பாதுகாக்கப்படும்.ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புகளில் இருந்து மீள வாழ்க்கை முறை மாற்றங்களும் முக்கியம்.
அவை…
* புகைப்பழக்கத்தை அறவே நிறுத்தவும். ஏனெனில், புகைப்பழக்கம் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைத்து எலும்புகளின் அடர்த்தியைக் குறைத்துவிடும்.
* ஆல்கஹாலும் ஆபத்தானது. அளவுக்கதிக மதுப்பழக்கம் ஆஸ்டியோபோரோசிஸ் உருவாகக் காரணமாகி விடும்.
* உடற்பயிற்சி உதவும். உடற்பயிற்சி செய்வதை முறையாகப் பின் பற்று வோருக்கு எலும்புகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
குறிப்பாக, வயதானவர்கள் மிதமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆஸ்டியோ போரோசிஸ் பாதிப்பிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்.
* உணவிலும் கவனம் தேவை. வைட்டமின் சி, கே, பொட்டாசியம் மற்றும் தாமிர சத்துகள் நிறைந்த உணவுகள் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிக்காமல் காக்கும்.
* கால்சியம் அதிகமுள்ள உணவுகள் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அவசியமானவை. பால், முட்டையின் வெண்கரு, கீரைகள், மீன், மீன் எண்ணெய் போன்றவற்றில் கால்சியம் சத்து அதிகமுள்ளது.ஆஸ்டியோபோரோசிஸ் வருமுன் காக்க முடியுமா?
* உணவு மற்றும் அன்றாட வாழ்க்கைப் பழக்கங்களில் சில விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலம் பாதிப்பை ஓரளவு தவிர்க்கலாம். தவிர, தவறி விழுந்து எலும்பு முறிவுகள் ஏற்படாமலிருக்க கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
* பாத்ரூம் தரைகளை வழுக்கும் தன்மையின்றி, உலர்வாக வைத்திருக்கவும்.
* வீட்டுக்குள் வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
* படுக்கை அறையில் நைட் லேம்ப் அவசியம்.
* படிக்கட்டுகளில் ஹேண்ட் ரெயில் எனப்படுகிற பிடிமானம் இருக்கட்டும்.
* கண்பார்வையை அடிக்கடி சரி பார்த்துக் கொள்ளவும்.
* வீட்டுக்குள் நடமாடும் இடங்களில் கண்ட பொருட்களையும் கண்டகண்ட இடங்களிலும் சிதறும்படி போட்டு வைப்பதைத் தவிர்க்கவும்.
* ரிஸ்க் அதிகமுள்ளவர்கள் எனத் தெரிந்தால் ஹிப் ப்ரொட்டெக்ஷன் ப்ரேஸ் உபயோகிக்கவும்.
* வயதானவர்கள் வாக்கர் உபயோகிப்பது பாதுகாப்பானது.
மருத்துவ சிகிச்சைகள்
ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி தேவைப்படுவோர் மருத்துவரிடம் அதைப் பற்றிப் பேசி முறையாக சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். இது எலும்பு இழப்பின் ஆபத்தைக் குறைக்கும்.
எதிர்காலம் என்ன சொல்கிறது?
ஆஸ்டியோபோரோசிஸைத் தடுப்பதற்கான ஜீன் எக்ஸ்பர்ட் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை வெற்றிபெற்றால் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையில் இருந்து முற்றிலுமாக விடுதலை கிடைக்கலாம். எலும்பு முறிவுகளை சரி செய்ய போன் சிமென்ட்டும் அறிமுகப்படுத்தப்படலாம்.
சூரியன் தரும் சூப்பரான வைட்டமின்
வைட்டமின் டி சத்து உடலில் போதுமான அளவு இருந்தால்தான் கால்சியம் சத்தானது கிரகிக்கப்படும். வைட்டமின் டி சத்தைப் பெற ஒரே வழி சூரிய ஒளிதான். காலையிலும், மாலையிலும் இளம் வெயில் சருமத்தில் படும்படி 15 நிமிடங்களாவது இருப்பது உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சத்தைப் பெற உதவும். 11 மணிக்கு மேலும் 3.30 மணிக்குள்ளும் அடிக்கிற வெயில் ஆபத்தானது என்பதால் அதைத் தவிர்க்கவும்.
வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரிந்தால் மருத்துவரின் ஆலோசனையின்படி குறைந்தது 800 மிகி அளவுக்கும், கால்சியம் குறைந்தது 1200 மிகி அளவுக்கும் சப்ளிமென்ட்டாக எடுத்துக் கொள்ளலாம். தவிர மீன் எண்ணெய், முட்டை, டுனா மற்றும் சால்மன் வகை மீன்கள் எலும்புகளுக்கு பலம் தரும்.
Average Rating