அழகே…அழகே…(மகளிர் பக்கம்)!!

Read Time:13 Minute, 35 Second

பியூட்டி பார்லர் போகாமல் வீட்டில் இருந்தபடியே ஒரு சில பார்லர் முறைகளை பயன்படுத்தி மழை மற்றும் குளிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் அண்டாமல் சருமத்தை பாதுகாத்துக்கொள்ளலாம் என்கிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

* தேனை ‘யூமிடென்ட்’ என்று சொல்வோம். இதில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளதால் தேனை பயன்படுத்துவது நல்லது. சிலர் தேனை புருவத்திலும், தலை முடியிலும் பட்டால் கலர் மாறிவிடுமா? என்று கேட்பார்கள். இல்லை. தேனை அடிக்கடி பயன்படுத்தினால் மட்டுமே தலைமுடியில் மாற்றம் தெரியும். ஆனால் அது முடியை நரைக்க வைக்காது. ஆகையால் மழைக்காலத்தில் தேன் பயன்படுத்துவது சருமத்திற்கு நல்லது. ஒரு கப் தேன் எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் தோல் வறண்டுபோகாமல் இருக்கும்.

* கிளிசரின் பார்மஸியில் கிடைக்கும். இதை கை மற்றும் கால்களில் தடவிக்கொள்ளலாம். ‘லிக்விட் பேரஃபின்’. இது உருகிய மெழுகு போன்றது. வறண்ட சரும பகுதியில் தடவும்போது சருமம் ஈரத்தன்மையை தக்க வைத்துக்கொள்கிறது. சேற்றுப்புண்களுக்கும் இதை சிறந்த மருந்தாக பயன்படுத்தலாம். ஆயிலி ஸ்கின் உள்ளவர்கள் கிளிசரின் பயன்படுத்தி கழுவும்போது சருமத்தில் உள்ள கிருமிகள் அழிந்து சருமம் பளபளப்பாக இருக்கும்.

* ஓட்ஸ் ஒரு நல்ல ஸ்கிரப்பாக பயன்படுகிறது. தண்ணீரில் நன்றாக வேக வைத்து எடுத்து கூழாக்கி லெமன் அல்லது ஆரஞ்சு 2 டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தண்ணீரில் கழுவவேண்டும். இதை சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை பயன் படுத்தலாம். 10 நாட்களுக்கு ஒரு முறை இந்த எளிய முறையை செய்யலாம்.

* ஒரு கப் பாலை எடுத்து அதை காட்டன் துணியால் நனைத்து சருமத்தை துடைத்து பின்னர் 10 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்திற்கு நல்ல ஊட்டச்சத்து அளித்து இறந்த செல்களை எல்லாம் நீக்கி சருமத்தை புதுப்பிக்கிறது.

* எளிதாக கிடைக்கக்கூடிய சாமந்திப்பூவை நன்றாக கசக்கி வெந்நீரில் போட்டு 5 நிமிடம் மூடவேண்டும். பிறகு அந்த நீரில் குளிக்கும்போது அது நல்ல மாய்ச்சரைசிங் தருவதுடன் சருமத்தை பாதுகாக்கிறது. மழைக்காலத்தில் சருமத்திற்கு லைட் லோஷன் பயன்படுத்துவது நல்லது. பேரீச்சம் பழத்தை இரவு நேரத்தில் வெந்நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்து மசித்து சிறிதளவு பால் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்துக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

* பாதாமை வெந்நீரில் ஊறவைத்து தோல் எடுத்து அரைத்துப் பால் சேர்த்து பயன்படுத்தினால் சருமத்திற்கு நல்ல ஊட்டச்சத்து கிடைத்து சருமப் பிரச்னைகள் வராமல் தடுக்கும். மழைக் காலங்களில் பவுடர் போடுவதை தவிர்க்க வேண்டும். சாதாரணமாக மேக்கப் போடுவதை தவிர்த்து வாட்டர் புரூஃப் கிரீம் ஆகிய மேக்கப் சாதனங்களை பயன்படுத்தலாம்.

* மழை பெய்யும் காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளித்தால் நல்லது. மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் குளித்தால் தோலின் நிறம் மாறாமல் இருக்கும்.முழங்காலில் இருந்து கணுக்கால் வரை தேவையற்ற முடிகளை அகற்றி மசாஜ் செய்து கொண்டால் மழைநாட்களில் இந்த இடங்களில் பூஞ்சைத் தாக்குதல் இருக்காது.

* பப்பாளிப் பழத்தை நன்றாக கூழாக்கி முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இவை அனைத்தையும் காலை நேரத்தில் செய்வது நல்ல பலன் தரும். மழைக்காலங்களில் குளிக்கும் தண்ணீரில் லேவண்டர் ஆயில் நான்கில் ஒரு பங்காக கலந்து குளிக்கும் போது உடல் துர்நாற்றத்திலிருந்தும், நல்ல கிருமி நாசினியாகவும் சருமத்தை பாதுகாக்கிறது.

* குளிர் காலத்தில் ஏலாதி எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி தேய்த்துக் குளித்து வரலாம். இதை அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம். வீட்டிலேயே செய்த பச்சைப் பயிரை அரைத்து மற்றும் கடலை மாவை சேர்த்து தேய்த்து குளிப்பது நல்லது. மழைக்காலத்தில் சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மெடிக்யூர், பெடிக்யூர் செய்து கொள்வது சருமத்தின் அழகை பாதுகாக்கும்.

* குளிப்பதற்கு முன்பு வெந்நீராக இருந்தாலும் அல்லது குளிர்ந்த நீராக இருந்தாலும் அதில் ஒரு பிடி வேப்பிலையைப் போட்டு வைத்திருந்து பின்னர் குளிக்கலாம். தவறாமல் மஞ்சள் பயன்படுத்தலாம். மஞ்சள் நல்ல கிருமி நாசினியாக இருந்து சருமத்தை பாதுகாக்கும். மழைக்காலத்தில் சருமம் உலர்ந்து இருக்கும் போது ஆயில் மசாஜ் செய்துகொள்ளலாம். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் மூன்றையும் எடுத்து வெதுவெதுப்பாக சூடாக்கி மசாஜ் செய்யலாம்.

எண்ணெயை நேரடியாக சூடுபடுத்தாமல் டபுள் பாய்லர் மூலம் சூடாக்கி உடம்பில் தேய்த்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். அப்படி குளிக்கும்போது சருமத்திற்கு கட்டி சோப் பயன்படுத்தாமல் பாடி வாஷ் என்று சொல்லக்கூடிய லிக்விட் சோப்பை பயன்படுத்துவது சருமத்தை பாதுகாக்கும். பாடி வாஷில் மல்லிகை, அரோமா ஆகிய ஃப்ளேவர்களை பயன்படுத்துவது நல்ல பலன் தரும்.

* குளிப்பதற்கு முன்பு மேனி முழுவதும் தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொள்ளவும். பாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கிரீம் ஒன்றைத் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். ஒரு டிரேயில் சிறிது வெந்நீரை எடுத்துக்கொண்டு அதில் உங்கள் கால்களை 3 நிமிடங்கள் ஊறவைத்து கை விரல்களால் மசாஜ் செய்யுங்கள். அதன் மூலம் உங்கள் உடல் முழுவதும் இறுக்கம் விடுபட்டது போல் இருக்கும்.

* குளிக்கும்போது சீயக்காய் பயன்படுத்துவது சிறந்தது. உடலுக்கு ஆல்மெண்ட் ஆயில் மிகவும் சிறந்தது. இதில் சாமந்திப்பூ, துளசி இலை, ரோஜா இதழ் அனைத்தையும் பிசைந்து எண்ணெயில் போட்டு மூடிவைக்கவேண்டும். பிறகு உடலில் சாதாரண மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

* ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் கடலைமாவு சிறிதளவு மஞ்சள் அதனுடன் பால் சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். குளிர் காலத்தில் ஃப்ரஷ் ஃப்ரூட் மாஸ்க் மிகச்சிறந்த ஒன்று. ஆப்பிள், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை அரைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைத்து சருமத்தை அழகாக வைத்திருக்கும்.

* ஸ்பா வேண்டாமெனில் ஆயில் மசாஜ் செய்து கொள்ளலாம். இந்தியன் ெஹட் மசாஜ் என்று சொல்லக்கூடிய இந்த மசாஜ் தலை முடிக்கும் உடம்புக்கும் நல்ல பயன்தரும். இதில் 5 விதமான எண்ணெய்களை சேர்த்துக்கொள்ளவேண்டும். நல்லெண்ணெய், ஆலி்வ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆல்மண்ட் ஆயில், விளக்கெண்ணெய் அனைத்தையும் கலந்து மிதமாக சூடு படுத்தி காட்டன் துணியால் நனைத்து மசாஜ் செய்ய வேண்டும்.

பிறகு ஷவர் கேப் போட்டு சிறிது நேரம் கழித்து வாஷ் செய்தால் தலைமுடி வலுப்பெறுவதோடு உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சி கொடுக்கிறது. மழைக்காலம் தவிர்த்து மற்ற நாட்களில் எண்ணெய்களை சூடுபடுத்தாமல் பயன்படுத்தலாம். பொடுகுப்பிரச்னை உள்ளவர்கள் வேப்பிலை மற்றும் துளசியை சேர்த்துப் பயன்படுத்தினால் உடனடியாக பொடுகுப் பிரச்னை தீர்ந்துவிடும்.

* நல்ல தண்ணீர் மூலமாக கிடைக்கக்கூடிய சிகிச்சை முறைதான் ‘ஸ்பா’ என்று அழைக்கப்படுகிறது. அதனுடைய சிகிச்சைமுறையும், சிகிச்சைக்கான பொருட்களும் அரிதாகவே இருந்ததால் இது விலை உயர்ந்த சிகிச்சை என்று நினைத்தார்கள். தற்பொழுது அவை மலிவாகிவிட்டன. முதலில் தலைக்கான ஸ்பா என்பது தலைமுடியின் தன்மையை அறிந்து அதற்கான கிரீம் மற்றும் ‘கான்சன்ட்ரேட்’ எடுத்து சமமாக கலந்து கொள்ளவேண்டும்.

முடியை நன்றாக அலசி கிரீம் தடவி கான்சன்ட்ரேட் சேர்த்து மிருதுவாக மசாஜ் செய்யவேண்டும். அப்படி செய்யும்போது ரத்த ஓட்டம் சீராகி நல்ல உணர்வை தரும். சருமத்தில் உள்ள துவாரங்கள் வழியே ‘கான்சன்ட்ரேட்’ சென்று ஊட்டச்சத்தை அளிக்கிறது. பிறகு ‘ஹேர் சீரம்’ பயன்படுத்தவேண்டும். மழைக்காலத்தில் இது நல்ல சிகிச்சையாக இருக்கும். எண்ணெயில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் இந்த ஸ்பா கிரீம்களில் இருக்கின்றன.

* குளிக்கச் செல்லும் போது முதலில் கூந்தலை நன்றாகச் சீவி கண்டிஷனிங் மாஸ்க் ஏதாவது ஒன்றை போட்டுக் கொண்டு ஹேர் கிளிப்பின் உதவியுடன் கூந்தலை மூடி வைத்துக்கொள்வது அவசியம். வெந்நீரில் இருந்து வரும் ஆவியை அதில் படும்படி காட்ட வேண்டும். கண்டிஷனர் ஷாம்பூ, ஆலிவ் எண்ணெய், பழுப்பு வினிகர், கிளிசரின், விளக்கெண்ணெய், எல்லாவற்றிலும் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். இவற்றை ஒன்றாகக் கலக்கினால் கண்டிஷனிங் மாஸ்க் கிடைக்கும். இந்த மாஸ்க்கை தலைமுடியில் பூசி வைத்து கால் மணி நேரம் கழித்து கழுவி விட வேண்டும்.

* ஓட்ஸ் எடுத்து தண்ணீரில் கொதிக்கவைத்து தண்ணீரை வடிகட்டி ஒரு காட்டன் துணியில் கட்டிக்கொள்ளவேண்டும். பிறகு உடல் முழுவதும் உள்ள எண்ணெயை துடைத்து எடுக்கவேண்டும். இது இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு புத்துயிர் கொடுக்கும். இதனால் தோல் சுருக்கங்கள் வருவதை தடுத்து இளமையாக வைத்துக்கொள்ளும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்!!
Next post ரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்?