பொன்விழா கண்ட பூ (சினிமா செய்தி)..!!

Read Time:7 Minute, 38 Second

தன் நான்காவது வயதில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன் பதின்மூன்றாவது வயதில் இளசுகள் மனதை கொள்ளைக் கொண்டு, சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை கோலோச்சிய நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு, சினிமா நட்சத்​திரங்களை மட்டுமல்லாமல், அனைத்து உள்ளங்களையும் நீங்கா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அழகில் மட்டுமல்லாமல், தன் வசீகர நடிப்பாலும் பல கோடி ரசிகர்களைத் தனக்கெனக் கொண்டிருந்த ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். இவரின் அழகுக்கு இணை இவர் மட்டும் தான் என்று சொல்லலாம். ஸ்ரீதேவியின் கண்களாகட்டும் சிரிப்பாகட்டும், பார்ப்பவரை சுண்டியிழுக்கும் மாயாஜாலம் கொண்டது. அழகிய நடிகை என்று சொன்னால், நம் நினைவில் முதலில் வருபவர் இவராகத்தான் இருப்பார் அத்தனை கொள்ளை அழகு கொண்டவர்.

நடிப்பிலும் இவரை மிஞ்ச ஆளில்லை என்றே கூறவேண்டும். தனக்குக் கிடைக்கும் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும், அத்தனை கச்சிதமாக பொருந்தி நடிப்பார். ரஜனி, கமலுக்கு கனகச்சித ஜோடி என்றால், அது ஸ்ரீதேவி மட்டும்தான். அவ்வளவு அழகும், திறமையும் கொண்ட ஸ்ரீதேவியின் வாழ்க்கை, இவ்வளவு விரைவில் முடிந்து விட்டதை, இன்னமும் ஏற்கமுடியாமல் தான் உள்ளது.

1963ஆம் ஆண்டு, சிவகாசியில் (இந்தியா – தமிழ்நாடு) பிறந்த நடிகை ஸ்ரீதேவியின் இயற்பெயர், ஸ்ரீ அம்மா யங்கர் ஐயப்பன் (Shree Amma Yanger Ayyapan) என்பதாகும். 1969ஆம் ஆண்டு, இயக்குநர் எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த ‘துணைவன்’ திரைப்படத்தின் மூலம், குழந்தை நட்சத்திரமாக தமிழ்த் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு, ‘நம்நாடு’, ‘கனிமுத்து பாப்பா’, ‘வசந்த மாளிகை’ போன்ற பல தமிழ்த் திரைப்படங்களிலும், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பலமொழித் திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

பின்னர், தனது 13ஆவது வயதில், இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில், 1976ஆம் ஆண்டு வெளிவந்த ‘மூன்று முடிச்சு’ திரைப்படத்தில், கதாநாயகியாக காலடி பதித்தார். அதற்கடுத்த வருடமே, இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ’16 வயதினிலே’ திரைப்படம், ஸ்ரீதேவிக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது. அத்திரைப்படத்தில் இடம்பெற்ற “செந்தூரப் பூவே” பாடலும் “சப்பானின்னு சொன்னா சப்புனு அறைஞ்சிரு” என்கிற வசனமும், அவரை பட்டி தொட்டியெல்லாம் அறிமுகப்படுத்தியது.

அன்று முதல், இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாக மாறிய அவர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர்களோடு கதாநாயகியாக நடித்தது மட்டுமல்லாமல், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடனும் கூட, சில திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருந்தார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பலதரப்பு ரசிகர்களையும் கொண்டிருந்த 70-80களின் லேடி ​சூப்பஸ்டார் ஸ்ரீதேவி, ஹிந்தித் திரையுலகிலும் கொடிகட்டிப் பறந்தார். தென்னிந்தியர்களை வடஇந்தியர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்ற பிம்பத்தை நொறுக்கினார். 15 வருட இந்திய சினிமாவில், உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.

முக்கியமாக, இந்த சிவகாசி அழகியை ஹிந்தித் திரையுலகம் தூக்கிச் சுமந்தது. இயக்குநர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி கண்ட ‘மூன்றாம் பிறை’ திரைப்படம், ஹிந்தியில் ‘சத்மா’ என்ற பெயரில் வெளிவந்து வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல், ஸ்ரீதேவிக்கு உச்ச புகழையும் தேடித்தந்தது. அதன் பின் வெளிவந்த ‘ஹிம்மத்வாலா’, ‘சாந்தினி’, ‘நாகினி’ போன்ற திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஹிந்தித் துறையில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் ஸ்ரீதேவியும் இணைந்தார்.

தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களைத் தந்த ஸ்ரீதேவி, 1996ஆம் ஆண்டு நடிகர் அனில்கபூரின் சகோதரரும் திரைப்படத் தயாரிப்பாளருமான போனிகபூரை மணமுடித்தார். இத்தம்பதிக்கு ஜான்வி, குஷி என்று இருமகள்மார் உள்ளனர். ஜான்வி கதாநாயகியாக அறிமுகமாகும் திரைப்படம், விரைவில் வெளிவரவுள்ளது.

திருமணத்துக்குப் பின், பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகியிருந்த ஸ்ரீதேவி, 14 ஆண்டுகளுக்குப் பின்னர், 2012ஆம் ஆண்டு வெளிவந்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறைக்குப் பிரவேசித்தார். இதுவரை, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஏறக்குறைய 275 படங்களில் நடித்திருக்கிறார். ஒன்றிரண்டு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். அவர் கடைசியாக நடித்த தமிழ் திரைப்படம் ‘புலி’. 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில், இது வெளிவந்தது. இதில், வில்லியாக அசத்தியிருந்தார். ஹிந்தியில் அவரது நடிப்பில் வெளியான கடைசித் திரைப்படம் ‘மாம்’.

விருதுகள்

தனது நடிப்புக்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும் கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும், நான்கு முறை பிலிம்ஃபேர் விருதையும் வென்றிருக்கிறார். கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக, 2013ஆம் ஆண்டில், பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுநீரகக் கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்(மருத்துவம்)!!
Next post கொசோவோ: விடுதலையின் விலை(கட்டுரை)!!