பாகிஸ்தானின் கொள்கை மீறல்(கட்டுரை)!!
சவூதி அரேபியாவுக்கு சுமார் 1,000 இராணுவப் படையினரை அனுப்புவதற்கு பாகிஸ்தான் அண்மையில் முடிவெடுத்திருக்கின்றமை, யேமன் தொடர்பில் பாகிஸ்தான் நாடாளுமன்றம், 2015ஆம் ஆண்டில் யேமன் தொடர்பில் நிறைவேற்றிய தீர்மானத்தை மீறியதான ஒரு செயற்பாடு என்பதற்கு அப்பால், இது மத்திய கிழக்கைப் பொறுத்தவரை அதன் இரண்டு பிரதான பிராந்தியப் போட்டியாளர்களான சவூதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளுக்கு நடுவே நடுநிலையான நிலைமையைப் பேணுதல் தொடர்பில் கடைப்பிடித்திருந்த தொடர்ச்சியான கொள்கையை விட்டு விலகும் செயலாகவே பார்க்கப்படுகின்றது.
குறித்த நடுநிலையைப் பேணும் கொள்கையானது, வெளிவிவகார கொள்கையொன்று என்பதற்கப்பால், பாகிஸ்தான் அரசமைப்பின் உறுப்புரை 40இன் பிரகாரம், பாகிஸ்தானானது எல்லா முஸ்லிம் நாடுகளிடையே சகோதர உறவுகளை வலுப்படுத்துவதைக் கட்டாயப்படுத்துகின்றது. இதன் காரணமாக எவ்விதச் செயற்பாடாயினும், மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் குந்தகமாக அமைவது, பாகிஸ்தானைப் பொறுத்தவரை அதன் சொந்த அரசமைப்பை மீறும் செயலாகவே பார்க்கப்படவேண்டியதாகும்.
இதற்கு மேலதிகமாக, குறித்த பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சவூதி – ஈரான் முரண்பாடானது, மத்திய கிழக்கின் பூகோள அரசியல் மற்றும் ஷியா, சுன்னி இன மக்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் என்பதும், குறித்த முரண்பாடானது நீண்டகாலச் செயற்பாட்டில் பாகிஸ்தானின் உள்ளார்ந்த பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு விடயமாக அமையும் என்பதனாலுமே, பாகிஸ்தான் குறித்த பிராந்திய முரண்பாட்டில் கொள்கை அடிப்படையில் நடுநிலைப்போக்கைக் கடைப்பிடிக்க விரும்புகின்றது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாகவே, அண்மையிலான பாகிஸ்தானின் சவூதி அரேபிய சார்பான இராணுவத் துருப்புகளை அனுப்புதல் தொடர்பான முடிவு பார்க்கப்படவேண்டியதாகும். அவ்வாறாக பாகிஸ்தான் தனது நடுநிலைக் கொள்கையிலிருந்து மாறுபடக் காரணம் என்ன என்பது பற்றியே இப்பத்தி ஆராய்கின்றது.
முதலாவதாக, சவூதி அரேபியாவுக்குத் துருப்புகளை அனுப்புவதற்கான பாகிஸ்தானின் சமீபத்திய முடிவு, யேமன் யுத்தத்தின் ஒரு நிலையாகவே பார்க்கப்பட வேண்டியதாகும். சவூதி அரேபியா, தனக்கான ஓர் இராணுவ மற்றும் அரசியல் நலன்கள் குறித்த யுத்தத்தில் ஈடுபடுவதால் கிடைக்கப்போவதில்லை என்ற நிலையிலும், மிகவும் செலவீனமான யேமன் மோதலில் சிக்கியுள்ளது. ஹூதிகளுக்கு எதிரான சவூதி அரேபியாவின் வான்வெளித் தாக்குதல் வெற்றிபெறவில்லை என்பது ஒரு புறமிருக்க, சவூதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான தரைவழிப் படைகள் ஒன்றுடன் ஒன்று மோதியிருந்தமை, குறித்த மோதலை மேலும் சிக்கலாக்கி இருந்தது.
இதற்கு மேலதிகமாக ஹூதிகள், சவூதி விமானத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள இந்நிலையில், குறித்த தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தும் போரியலில் ஈடுபட்டிருக்கும் சவூதி, நேரடியாகவே பாகிஸ்தானிடம் உதவி கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபிய நாடுகள் பயங்கரவாதத்தை ஒடுக்குதல் மற்றும் ஏற்றுமதி வியாபாரத்தில் முக்கிய பங்காளிகளாக இருப்பதும், தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறும் நம்பத்தகுந்த நட்பு நாடாக அமைந்திருந்தமையும், பாகிஸ்தான் குறித்த வரையறைக்குட்பட்ட துருப்புகளை அனுப்பவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதெனலாம்.
இந்நிலையில், சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்படும் துருப்புகள், நேரடியாக யுத்தமுனையில் பயன்படுத்தப்படாமல், பயிற்சி மற்றும் இராணுவ ஆலோசனைகளுக்காக மட்டுமே அனுப்பப்படுகின்றன என்ற பாத்திரப்படைப்பு, இரு நாடுகளுக்கும் தேவையான ஒன்றாகும். இதன் அடிப்படையிலேயே பாகிஸ்தான் துருப்பினது ஒழுங்கற்ற முறையிலான போரை நடாத்துவதில் உள்ள திறனையும் அனுபவங்களையும் பகிர்தல் தொடர்பிலேயே துருப்புகள் அனுப்பப்பட்டமை பார்க்கப்படவேண்டியதாகும்.
இரண்டாவதாக, அண்மையிலான மத்திய கிழக்கு — குறிப்பாக சவூதி அரேபியா தலைமையிலான நாடுகளின் — வெளிவிவகாரக் கொள்கையின் பிரகாரம், பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்குதல், பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா போரியல் தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்கும் உடன்படிக்கையானது, பாகிஸ்தான் – சவூதி அரேபிய உறவு நிலையில் முன்னேற்றமான நிலைமையாகும்.
இந்தியாவில் இந்துத்துவத்தைப் பிரதிபலிக்கும் இந்தியாவின் மோடி அரசாங்கம், தொடர்ச்சியாக மாநிலங்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கின்றமை, குறித்த தேர்தல் பிரசாரங்களில் இந்துத்துவக் கருத்துக்கள் வெளியிட்டிருந்தமை, ஏற்கெனவே சீரற்றதாக உள்ள பாகிஸ்தான் – இந்தியாவின் முறுகல் நிலைக்கு மேலும் வலுச்சேர்ப்பதாகவே அமையும் என பாகிஸ்தான் கருதுவதுதான், இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான இராணுவ நிலைப்பாட்டை பாக்கிஸ்தான் எடுக்க முனையுமாயின் அமெரிக்க – ரஷ்யா ஆகிய நாடுகள் நடுநிலைமை வகிக்கும் என்பதும், சீனா மறைமுகமாக மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் எனும் நிலையில், அரபு நாடுகளுக்கு இடையிலான உறவு நிலையே, பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு உறுதுணையாக அமையும் என பாகிஸ்தான் கருதுகின்றமையும், குறித்த இராணுவ உதவியின் ஒரு வெளிப்பாடாகும்.
மூன்றாவதாக சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான சமாதானமான நிலைப்பாடொன்றை எட்டுவதில், பாகிஸ்தான் ஆக்கபூர்வமாகச் செயற்பட முடியும் என பாகிஸ்தான் கருதுகின்றது. மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு அப்பால் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் நாடு என்ற வகையிலும், பாதுகாப்பு நிலைமை மற்றும் இராணுவ வல்லமையை பொறுத்தவரை அணு ஆயுத வல்லமை மற்றும் மிகவும் தொழில்நுட்பம் கூடிய ஏவுகணை வல்லமையைக் கொண்டுள்ள நாடு என்ற வகையிலும், சவூதியுடனும் ஈரானுடனும் தொடர்ச்சியான பொருளாதார, இராணுவ, கலாசார உறவுகளைக் கொண்ட நாடு என்ற வகையிலும், தனது பங்களிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டைத் தீர்க்க உதவும் என்ற வகையிலும், இரு நாடுகளினதும் முரண்பாடானது, மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளின் வல்லமையைக் குறைக்கும் என்ற கருத்தியலின் அடிப்படையிலுமேயே, பாகிஸ்தானின் இந்நகர்வு பார்க்கப்பட வேண்டியதாகும்.
குறித்த துருப்புகள் அனுப்பப்பட்ட வேளையிலும், பாகிஸ்தான் 1982ஆம் ஆண்டின் சவூதி – பாகிஸ்தான் இணக்கப்பாட்டுக்கு அமைய குறித்த துருப்புகள், சவூதி அரேபிய எல்லைக்கு அப்பால் அல்லது போரியலுக்காக பயன்படுத்தக்கூடாது என்ற வாக்குறுதிக்கமையவே அனுப்பப்பட்டமை கவனிக்கப்பட வேண்டியதாகும்.
Average Rating