சுன்னாகம் சந்தைப் படுகொலையும் தொடர்ந்த வன்முறைகளும்(கட்டுரை )!!
ஒரு விமானப்படை அதிகாரி, சட்டவிரோதமான முறையில், துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இதில் குற்றவாளி, அந்தத் துப்பாக்கிதாரி மற்றும் அந்தக் குற்றத்துக்கு உதவிபுரிந்தவர்கள் மற்றும் அந்தக் குற்றத்துக்கான சூழ்ச்சியில் ஈடுபட்டவர்கள்.
குறித்த படுகொலையாளி, குறித்த ஓரினத்தைச் சார்ந்தவர் என்று அறியப்பட்டதால், குறித்த படுகொலைக்குப் பழிவாங்க, குறித்த விமானப்படை, குறித்த இனத்தைச் சேர்ந்த, பொதுமக்கள் ஒன்றுகூடும் பொது இடமொன்றுக்குச் சென்று, திறந்த துப்பாக்கிச் சூடு நடாத்தி, எட்டு அப்பாவி உயிர்களைப் பலி கொண்டதுடன், ஏறத்தாழ 50 அப்பாவிப் பொதுமக்களையும் காயமுறச் செய்தமை, நியாயத்தின் எந்த அளவுகோலின்படி, ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்?
இது ஒரு காடையர் குழுவோ, வன்முறைக் குழுவோ நடத்திய தாக்குதல் அல்ல; அரச படைகள் – அதாவது ஓர் அரசையும் அதன் மக்களையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ள படைகள்; அந்த மக்களின் ஒருசாராரை எந்தவித அடிப்படைக் காரணங்களுமின்றிச் சுட்டுக் கொன்ற கொடூரம் நடந்தேறியிருக்கிறது.
யுத்த காலத்தின் போதான,குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பான, 1949ஆம் ஆண்டின் 4ஆவது ஜெனீவா ஒப்பந்தத்தின் 147ஆவது சரத்தானது, தன்னிச்சையாக உடல்ரீதியான அல்லது ஆரோக்கிய ரீதியான தீவிரமான காயங்களை அல்லது துன்பங்களை விளைவித்தல், சட்டத்துக்குப் புறம்பான வலுக்கட்டாயமான நாடுகடத்தல் (இடம் பெயர்த்தல்) அல்லது சட்டத்துக்கெதிரான வகையில் நபரொருவரைத் தடுத்துவைத்தல் அல்லது சிறைப்படுத்தல், நபரொருவரை வலுக்கட்டாயமாக எதிர்ப்புணர்வுமிக்க படைகளில் சேவையாற்றச் செய்தல், மனவுறுதியுடன் நபரொருவரது நியாயமான விசாரணைக்கான உரிமையை இல்லாது செய்தல், பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்திருத்தல், பாரிய அழிப்புகள் மற்றும் சொத்துகளை சட்டவிரோதமாக அபகரித்தல் உள்ளிட்ட சட்டவிரோதமானதும், நியாயமான இராணுவத் தேவை என நிரூபிக்க முடியாததுமான கொலை, சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற நடத்துமுறைகள் என்பவை தண்டனைக்குரிய குற்றம் என்கிறது.
அதாவது, இவற்றில் ஈடுபடுவது யுத்தக் குற்றமாகும். முன்னாள் யுகோஸ்லாவியா தொடர்பிலான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கூட ஆயுதப் போராட்டங்களின் போது, குடிமக்களுக்கு எதிராக நடத்தப்படும் சட்டவிரோதமான கொலை, குழுரீதியான அழிப்பு, அடிமைப்படுத்தல், வலுக்கட்டாயமான நாடுகடத்தல், இடப்பெயர்த்தல், கைதுகள், சித்திரவதை, கற்பழிப்பு, இன, மத, அரசியல் காரணங்களுக்கான கொலைகள் என்பன பிரதான யுத்தக்குற்றங்கள் என்கிறது. இந்த ஜெனீவா ஒப்பந்தங்களில், இன்றுவரை இலங்கை கைச்சாத்திடவில்லை என்பதையும் கருத்தில் கொள்க.
சுன்னாகம் சந்தைப் படுகொலை என்பது, இதுவரை நடந்த இதுபோன்ற தொடர் சம்பவங்களின் இன்னோர் அத்தியாயம்தான். உள்நாட்டுக்குள் ஆயுதக் கிளர்ச்சி இயக்கங்கள் உருவானால், அதை ஆயுதவழி கொண்டு அடக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில், அப்பாவிக் குடிமக்களைக் கொன்று குவித்தல், எவ்வகையில் நியாயப்படுத்தத்தக்கது?
தொடர்ந்த வன்முறைகள்
‘கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல்’ என்ற பதிலடி நியாயம், ஆபத்தானது. ஏனென்றால் காந்தி சொன்னது போல, அது குருடான உலகத்தைதான் உருவாக்கும்.
ஆனால், இந்த மீயுயர் தத்துவ கருத்துருவாக்கங்களுக்கும் யதார்த்தத்துக்கும் ஓர் இடைவெளி இருந்துகொண்டே இருப்பதை நாம் அவதானிக்கலாம். பதிலடிக்குப் பதிலடி என்பது, ஒரு முடிவிலாத் தொடரி. ஆனால், அது வீழ்ச்சியை நோக்கிய தொடரி என்பதை இருதரப்பும் உணராமை கவலைக்குரியது.
யாழ்ப்பாணம் மிக மோசமான ஒரு காலப்பகுதிக்குள் நுழைந்திருந்தது. மார்ச் 28ஆம் திகதி, சுன்னாகம் சந்தைப் படுகொலைகள், இலங்கை ஆயுதப்படைகளால் நடத்தப்பட்டிருந்த நிலையில், 1984 ஏப்ரல் ஒன்பதாம் திகதி, விடுதலைப் புலிகள் அமைப்பு, யாழ்ப்பாணத்தில் இராணுவ ட்ரக் வாகனம் ஒன்றின் மீது கார்க் குண்டுத்தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் முழுவதும் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது. யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதுடன், அரச படைகள் யாழ். நகரெங்கும் வன்முறை வெறியாட்டத்தை முன்னெடுத்தன. அரச படைகளின் இந்த வெறியாட்டத்தில் கார், பஸ் உள்ளிட்ட பல வாகனங்கள், பல்வேறு கட்டடங்கள் என்பன பெரும் சேதத்தைச் சந்தித்தன.
அரச படைகளின் தாக்குதலில் யாழ். அடைக்கலமாதா தேவாலயமும் சேதமடைந்தது. இது மக்களிடையே கடும் ஆத்திரத்தை உருவாக்குவதாக அமைந்தது. இந்தத் தாக்குதலைக் கண்டித்து, பொதுமக்கள் பலரும் வீதியிலிறங்கி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அரச படைகளின் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, யாழ். நகரில் ஆரியகுளம் சந்திக்கருகில் அமைந்துள்ள நாகவிகாரை மீது, காடையர் குழுவொன்று தாக்குதலொன்றை நடத்தியது. இந்தத் தாக்குதலில் நாகவிகாரை பெருஞ் சேதத்தைச் சந்தித்தது. தேவாலயம் மீதான அரச படைகளின் தாக்குதலுக்கான பதிலடி இது என்று ரீ.சபாரட்ணம், கே.ரீ.ராஜசிங்கம் உள்ளிட்ட சிலர் இந்தச் சம்பவம் பற்றிக் கருத்துரைக்கிறார்கள். இரு தவறுகள், ஒரு சரியை ஒருபோதும் உருவாக்காது. இந்தத் தாக்குதல்களின் விளைவு என்பது இரட்டை அழிவேயாகும்.
ஜனநாயகப் பாதையா, வன்முறைப் பாதையா?
நாகவிகாரை மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஜனாதிபதி ஜே.ஆருக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் பெரும் அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது. அதுபோலவே, இது ஜே.ஆரின் தந்திரோபாயத்தை வலுவாக முன்னெடுக்கும் வாய்ப்பையும் அவருக்கு உருவாக்கித் தந்தது என்பதையும் மறுக்க முடியாது.
இந்த இனப்பிரச்சினையை, இராணுவ ரீதியாக எதிர்கொண்டு அழிக்க வேண்டுமானால், தமிழ்த் தரப்பின் ஜனநாயக தலைமைகள் ஓரங்கட்டப்பட்டு, ஆயுதத் தலைமைகள் முன்னணிக்கு வர வேண்டும். அது நடந்துகொண்டிருந்தது. அதை ஊக்குவிக்கும் சில செயற்பாடுகளை, ஜே.ஆர் மற்றும் அவரது அரசாங்கத்தினரின் பேச்சு மற்றும் செயற்பாடுகளில் நாம் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.
ஜே.ஆரும், அத்துலத்முதலியும் தொடர்ந்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பலமிழந்துவிட்டது; அவர்களுடன் பேசுவதில் பயனில்லை; ஏனெனில் தமிழ் மக்களை இப்போது அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியாது; அவர்களால் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை; அவர்கள் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு அச்சப்படுகிறார்கள் போன்ற கருத்துகளை ஊடகங்களில் பகிர்ந்து வந்தார்கள்.
அத்தோடு அரசாங்கம் ஒருபோதும் பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என்றும் அத்துலத்முதலி ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார். இதில் இரண்டு விடயம் கவனிக்கத்தக்கது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி – அதாவது தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமைகளோடு பேசுவதில் பயனில்லை என்று சொன்னது ஒன்று; மற்றையது, பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தை இல்லை என்று சொன்னது.
இதன் சாரம் ஜே.ஆர் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் கோடிட்டுக்காட்டி நிற்கிறது.
தமிழர்கள் பிரிவினைவாதிகளா?
தமிழ் மக்கள் பிரிவினைவாதிகள், அவர்கள் தனிநாடு கோரியவர்கள், 1977 பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாகத் தனிநாட்டுக்கான மக்களாணையை வழங்கி இருந்தார்கள் என்ற கற்பிதங்கள் இங்கு பலமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஆனால் உண்மை இந்த கற்பிதங்களிலிருந்து சற்றே தள்ளிநிற்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.
தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமைகள் 1976 வட்டுக்கோட்டை மாநாட்டிலே தனிநாடு தான் தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வு என்று “வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை” நிறைவேற்றியது உண்மை. 1977 பொதுத் தேர்தலில் “வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை” முன்னிறுத்தி தமிழ் மக்களிடம் மக்களாணை பெற்றதும் உண்மை.
ஆனால், அதைத் தொடர்ந்து யதார்த்தத்தில், தனிநாட்டுக்கானதோ, பிரிவினைக்கானதோ ஏதுவான எந்தவோர் அடிப்படை நடவடிக்கைகளையும் அவை முன்னெடுத்திருக்கவில்லை என்பதும் உண்மை.
குறிப்பாகத் தனிநாட்டுக்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவோம் என்று 1977 பொதுத்தேர்தலின் போது அறிவித்திருந்ததைக் கூட, அவை முன்னெடுக்கவில்லை.
அவை, இணக்கப்பாடு மிக்க தீர்வுக்கு தயாராகவே இருந்தன. அதற்கான கோரிக்கைகளையும் அழுத்தத்தையும் அவை தொடர்ந்தும் அரசாங்கத்திடம் முன்வைத்து வந்தன. தனிநாடு என்பது ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளின் பகட்டாரவாரப் பேச்சுகளில் மட்டுமே இருந்ததேயன்றி, அவர்களில் செயல்களில் அது எங்கும் இடம்பிடித்திருக்கவில்லை.
ஆங்காங்கே தமிழ் இளைஞர்களிடம் தமிழ்த் தலைமைகளின் இந்தப் போக்கு தொடர்பில் அதிருப்தி காணப்பட்டாலும், பெரும்பான்மைத் தமிழர்கள் இந்தப் போக்கு எதிர்த்தமைக்கான சான்றுகள் இல்லை. ஆனால், 1983இல் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட “கறுப்பு ஜூலை” இன அழிப்புத் தாக்குதல்கள் ஒரு திருப்புமுனையாக அமைந்தன.
அதன் பின்னர், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செல்வாக்கு தமிழ் மக்களிடையே ஓங்கத்தொடங்கியது. இப்போது கூட, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைத் தடுக்க அரசாங்கம் விரும்பியிருந்தால், ஜனநாயக வழியிலான சமரசத் தீர்வொன்றுக்கு தயாராக இருந்த தமிழ்த் தலைமைகளை அரவணைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம். மாறாக, ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் அரசியல் அரங்கிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தமிழ் மக்களிடையே முக்கியத்துவம் பெற்றதில் ஜே.ஆர் அரசாங்கத்தின் பங்கும் இருந்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.
மீண்டும் கூடியது சர்வகட்சி மாநாடு
தமிழ் ஜனநாயகத் தலைமைகள் தமது நாடாளுமன்ற ஆசனங்களை இழந்திருந்தன. தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குக் குறைந்து கொண்டிருந்தது. சிங்கள மக்கள் மத்தியில் இவர்கள் பிரிவினைவாதிகள் என்ற தோற்றப்பாடு வலுவாகக் கட்டியெழுப்பப்பட்டிருந்தது.
இது மிக மோசமான கையறு நிலை. வன்முறை நிறைந்ததாக அமைந்த ஏப்ரல், முடிவுக்கு வந்து, மே மாதம் வந்தபோது, ஜே.ஆர் அரசாங்கத்தின் நிலைப்பாடு அமிர்தலிங்கம் உள்ளிட்டோருக்கு மிகத் தெளிவாகப் புரிந்திருந்தது.
1984 மே ஒன்பதாம் திகதி, ஏழு வார கால ஒத்திவைப்புக்குப் பிறகு, சர்வகட்சி மாநாடு கூடியபோது, அதில் உரையாற்றிய அமிர்தலிங்கம், தன்னுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார்.
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோடு பேசுவதால் பயனில்லை என்று ஜே.ஆர் சொன்ன கருத்தை மனதில் வைத்து, “எம்மை இந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தவர்களே, இப்போது எமது தகுதியைச் சவாலுக்கு உட்படுத்துவதானது, பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வொன்றை எட்டும் எண்ணமேதும் அவர்களுக்கு இல்லை என்பதையே வெளிப்படுத்தி நிற்கிறது” என்று குறிப்பிட்டார்.
ஜே.ஆர் தன்னுடைய தந்திரோபாயத்தை முன்னெடுப்பதில் மிகத் தெளிவாக இருந்தார். ஏற்கெனவே சர்வகட்சி மாநாட்டில் இரண்டு குழுக்கள், பிறகு ஓர் இணைந்த குழு என்று அமைத்து ஆராய்ந்தவர், மே ஒன்பதாம் திகதி மீண்டும் சர்வகட்சி மாநாட்டில் இரண்டு குழுக்கள் அமைப்பதாக அறிவித்தார்.
முதலாவதாக, அதிகாரப்பகிர்வின் கட்டமைப்பு: அதிகாரங்கள், செயற்பாடு ஆகியவற்றை வரைவதற்கான பிரதமர் ரணசிங்க பிரேமதாஸ தலைமையிலான அதிகாரப் பகிர்வுக் குழு.
அடுத்ததாக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மொழி உரிமைகளை அமுலுப்படுத்தல் தொடர்பில் சமவாய்ப்புகளை ஏற்படுத்தத் தேவையாக நடவடிக்கைகள் பற்றி ஆராய அமைச்சர் கே.டபிள்யு. தேவநாயகம் தலைமையில் குறைகள் ஆராயும் குழு.
இந்தக் குழுக்கள் மீதான நம்பிக்கையை இழந்திருந்ததால் போலும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தக் குழுக்களில் பங்குபற்ற மறுத்துவிட்டன. ஆயினும், மீண்டும் சர்வகட்சி மாநாட்டின் பிரதான கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்தக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து கருத்தில் கொள்வதாக அவை அறிவித்தன.
Average Rating