(மகளிர் பக்கம்)ஹார்மோன்கள் நலமா?
காலையில் கண்விழித்ததில் தொடங்கி இரவு தூக்கம் கெட்டுப் போவது வரை உங்கள் உடல் தினமும் சந்திக்கிற பல பிரச்னைகளின் பின்னணியிலும் ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாக இருக்கலாம் என்பதை அறிவீர்களா?
தூக்கமின்மைக்கும் மறதிக்கும் பின்னால் ஹார்மோன்கள் இருப்பதே பல பெண்களுக்கும் தெரிவதில்லை. அப்படி உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்கிற பிரச்னைகளுக்கு ஹார்மோன்கள் எப்படியெல்லாம் காரணமாகின்றன என விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.
21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் நிகழ்வதுதான் இயல்பான செயல். அந்த சுழற்சி மிக சீக்கிரமாக நடந்தாலோ அல்லது தாமதமாக வந்தாலோ ஈஸ்ட்ரோஜென் அல்லது புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதாகக் கொள்ளலாம்.
அதுவே நீங்கள் 40 வயதுக்கு மேலானவர்களாக இருந்தால் அது பெரிமெனோபாஸ் எனப்படுகிற மாதவிடாய் நிற்பதற்கு முன்பு உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாறுதல்களின் விளைவாக இருக்கலாம். இளவயதில் முறையற்ற மாதவிலக்கு சுழற்சி என்பது பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னையின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதால் அலட்சியம் வேண்டாம்.
படுத்ததும் தூங்கிப்போவது வரம். அது சிலருக்கு மட்டுமே வாய்க்கும். படுக்கையில் விழுந்தும் தூங்க முடியாமல் தவிப்பதன் பின்னாலும் சினைப்பை விடுவிக்கும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் சுரப்பில் குறைவு காரணமாக இருக்கலாம். ஈஸ்ட்ரோஜென் குறையும்போது இரவில் உடல் சூடாவது, வியர்ப்பது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
மாதவிடாய்க்கு சில நாட்களுக்கு முன் முகத்தில் ஒன்றிரண்டு பருக்கள் வருவது சகஜம். ஆனால், அப்படி வந்த பருக்கள் போகாமல் அப்படியே இருப்பது ஹார்மோன் பிரச்னையால் இருக்கலாம்.
ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் சுரக்கும் ஆண்ட்ரோஜென் ஹார்மோன்கள் சருமத்தின் எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி அவற்றின் செயல்களைத் தீவிரப்படுத்தும். தவிர சருமத்தின் செல்களையும் பாதிக்கும். இதனால் சருமத் துவாரங்கள் அடைபட்டு பருக்கள் வரும். அதிகரிக்கும்.
மூளையின் செயல்பாட்டுக்கும் ஹார்மோன்களுக்கும் கூட நெருங்கிய தொடர்புண்டு. பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களில் ஏற்படுகிற சமநிலையின்மை காரணமாக அவர்களுக்கு மறதி ஏற்படலாம். ஒரு விஷயத்தை கவனிப்பதிலும், அதை நினைவில் வைத்துக்கொள்வதிலும் சிக்கல் ஏற்படுவதை மெனோபாஸ்க்கு முந்தைய நாட்களில் பெரும்பாலான பெண்கள் சந்திப்பதுண்டு.
ஆனால், அது மட்டுமே காரணம் என அலட்சியமாக இருக்க வேண்டாம். ஹார்மோன் நோய்களான தைராய்டு போன்றவற்றின் அறிகுறியாகவும் அது இருக்கலாம் என்பதால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே பாதுகாப்பானது.
மாதவிடாய்க்கு முன்பாக சில பெண்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம், வாந்தி போன்றவை வரலாம். இவற்றுடன் பருத் தொல்லை, அதீதக் களைப்பு போன்றவையும் இருந்தால் அவை ஹார்மோன்கள் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கலாம். கவனம் தேவை.
எப்போதும் களைப்பாக உணர்வதும்கூட ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறிதான். அளவுக்கதிக புரோஜெஸ்ட்ரோன் அதிகமான தூக்கத்தைத் தரும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் களைப்பு அதிகமிருக்கும். எளிமையான ரத்தப் பரிசோதனையின் மூலம் தைராய்டு இருக்கிறதா என
கண்டறியலாம்.
மூளையின் முக்கிய ரசாயனங்களான செரட்டோனின், டோபமைன், நார்எபினெப்ரைன் போன்றவற்றை ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் பெரிதும் பாதிக்கும். அதன் விளைவாக மனநிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். காரணமில்லாத கோபம், விரக்தி, சோகம் போன்றவை ஏற்படலாம்.ஈஸ்ட்ரோஜென் அளவு குறையும்போது அதிகம் சாப்பிடும் உணர்வு ஏற்படும்.
அதனால்தான் ஈஸ்ட்ரோஜென் குறைவதன் அறிகுறியாக எடை அதிகரிக்கிறது. உணவு எடுத்துக்கொள்ளும் முறையையும் ஈஸ்ட்ரோஜென் சுரப்பில் ஏற்படும் குறை பெரிதும் பாதிக்கிறது.மாதவிடாய்க்கு முன்பு ஈஸ்ட்ரோஜென் குறையும். அதன் விளைவாக சிலருக்கு தலைவலி தீவிரமாகும். மாதாமாதம் அப்படித் தலைவலி தொடர்வது ஹார்மோன் சமநிலையின்மைக்கான அறிகுறி. மருத்துவப் பரிசோதனை அவசியம்.
Average Rating