(மகளிர் பக்கம்)நெயில் பாலிஷ் நல்லதா கெட்டதா?
மேனிக்யூர், பெடிக்யூர், நெயில் பாலிஷ், நெயில் ஆர்ட், நெயில் க்ராஃப்ட், நெயில் கலர்…நம் உடலின் சிறிய நகங்களுக்குத்தான் எத்தனை ஃபேஷன்கள்! லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளாத பெண்கள் கூட நெயில் பாலிஷ் போட்டுக் கொள்வதை நாம் காண முடியும். ஜீன்ஸ் தெரியாத குக்கிராமத்திலும் கூட பெண்கள் வண்ணமயமாக நெயில் பாலிஷ் பயன்படுத்தும் அளவுக்கு நம் காஸ்மெட்டிக் பெட்டிகளில் அந்த வஸ்து தவிர்க்க முடியாத அளவுக்கு இடம் பெற்றிருக்கிறது. ரைட். நாம் இப்போது பயன்படுத்தும் நெயில் பாலிஷ்களும், அதன் முறையும் சரிதானா? அதற்கும் முன்னால், முதலில் நெயில் பாலிஷ் எப்படி பயன்படுத்த வேண்டும்?
“எங்க கிட்ட 1000 ஷேட்ஸ் கலர்ஸ் இருக்கு. புதுசா அறிமுகப்படுத்தியிருக்கோம்!” கலர்ஃபுல்லாக ஆரம்பித்தார் வீணா குமரவேல். Naturals group of salonsஇன் ஃபவுண்டர் இவர். ‘‘நகத்தை முதல்ல சுத்தம் செய்துட்டுதான் பாலிஷ் போடணும். சிலர் முக க்ரீம், ஆயில் இதெல்லாம் பயன்படுத்திட்டு அப்படியே பாலிஷ் போட்டுப்பாங்க. இது தப்பு. நகத்துல கொஞ்சம் ஆயிலோ, பிசுபிசுப்போ அல்லது ஷைனிங் இருந்தாலும் கூட ரெண்டு நாள்ல பாலிஷ் போயிடும். ஆயில் தன்மை அல்லது ஸ்மூத்னஸ் போக Nail Buffer பயன்படுத்தி அப்பறம் பாட்டம் கோட்டிங் போட்டுட்டு அதுக்கு மேல ரெண்டு அல்லது மூணு கோட் பாலிஷ் போடணும்.
திரும்ப டாப் கோட் அப்படினு ஒண்ணு இருக்கு. இதெல்லாம் செய்யறதுதான் முறையான நெயில் பாலிஷ் போடும் முறை. ஆனா, வீட்ல அதெல்லாம் செய்யறது ரொம்ப கஷ்டம். முடிஞ்ச வரைக்கும் டபுள் கோட் கொடுக்கலாம்…’’ என்ற வீணா, தோலின் நிறம் குறித்து விளக்கினார்.‘‘தோல் நிறம் டார்க்கா இருக்கேனு சிலர் லைட் நிறங்களை தவிர்ப்பாங்க. உண்மைல டஸ்க்கி தோல் நிறம் உடையவங்க கொஞ்சம் லைட் கலர் பயன்படுத்தறதுதான் சிறப்பு. தவிர டார்க் நிறங்களை விட லைட் நிறத்துல கெமிக்கலும் குறைவு. டார்க் நிறம் கால், கைகளை இன்னும் டார்க்கா காட்டும். பெடிக்யூர் பண்ணலைனா கூட ஓகே. முடிஞ்ச வரை நக இடுக்குகள்ல அழுக்குகள், நக அடிப்பாகத்துல இறந்த செல்கள் (க்யூட்டிக்கல்) இதையெல்லாம் நீக்கணும்.
முக்கியமா நம்ம நகம் என்ன இயல்பு… எப்படிப்பட்ட வடிவம்னு புரிஞ்சிக்கிட்டு ஷேப் செய்துக்கணும். காரணம், கண்களுக்குப் பிறகு நம்ம கைகளப் பார்த்துதான் மத்தவங்க பேசுவாங்க…’’ என்ற வீணா, சிலர் இடது கையில் மட்டும் நெயில் பாலிஷ் போட்டுக்கொண்டு வலது கை நகங்களில் போடாமல் இருப்பார்கள். அது தவறு என்கிறார். சரி. நெயில் பாலிஷில் என்னென்ன ஆபத்துகள் இருக்கின்றன… பாதுகாப்பு முறைகள் என்னென்ன..? விளக்குகிறார் காஸ்மட்டாலஜிஸ்ட் கீதா அஷோக் (Aroma Therapist). ‘‘சிலர் பொதுவாகவே கெமிக்கல் சார்ந்த வேலைகள் செய்வாங்க. பெண்களைப் பத்தி சொல்லவே வேண்டாம். பாத்திரம் கழுவ, துணி துவைக்க…னு அவங்க கெமிக்கல் சார்ந்துதான் புழங்கறாங்க.
அப்ப நகக்கண், அதாவது க்யூட்டிக்கல் வழியா உடலுக்குள்ள கெமிக்கல்ஸ் போக வாய்ப்புகள் இருக்கு. கால்களைப் பத்தி சொல்லவே வேண்டாம். தூசிகள் எல்லா இடங்கள்லயும் இருக்கு. இதையெல்லாம் தடுக்க நெயில் பாலிஷ் உதவும். அதே மாதிரி அழகு. சிலருக்கு சரியான வடிவங்கள்ல நகங்கள் இருக்காது. அதுக்கும் ஒரே வழி பாலிஷ்தான். இதெல்லாம் நல்ல விஷயங்கள். அதுக்காக ஆபத்தே இல்லைனு சொல்ல முடியாது. கூடாது. நெயில் பாலிஷ்கள்ல மொத்தம் மூணு மூலக்கூறுகள் இருக்கு. ஃபார்மல்டிஹைட் (Formal dehyde), தாலுயீன் (Toluene), டைபியூட்டைல் தாலேட் (DBP). என்னதான் காசு அதிகம் போட்டு பிராண்ட் வாங்கினாலும் இந்த மூணு மூலக்கூறுகளும் எல்லா நெயில் பாலிஷ்கள்லயும் இருக்கும்.
பிராண்டட்ல வேணும்னா அளவுகள் வேறுபடும். அடுத்து பொதுவாவே நெயில் பாலிஷ் பளபளப்பான அரக்குதான். ‘ஃபார்மல்டிஹைடு’க்கு இன்னொரு பெயர் கார்சினோஜென். நெயில் பாலிஷ் போட்ட உடனே உலர்ந்து போறதுக்கு இந்த மூலக்கூறுதான் பயன்படுது. இது அதீத ஆபத்தான நச்சு. அமெரிக்க ஸ்டான் ஃபோர்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் குழு நெயில் பாலிஷ் டாக்ஸிக்கானது… நடைமுறை வாழ்க்கைக்கே ஆபத்தானதுனு நிரூபிச்சிருக்காங்க. நெயில் பாலிஷ் வாசனை மத்திய நரம்பு மண்டலப் பிரச்னை முதல் கேன்சர் வரை கூட ஏற்படுத்தும்னு ஆய்வு முடிவு சொல்லுது. போதைப்பொருட்கள் பயன்படுத்தினா வரும் மறதி, குமட்டல், தலைவலி, தசைவலி, கைநடுக்கம், கருப்பை பிரச்னைகள்… இதெல்லாம் நெயில் பாலிஷ் பயன்படுத்தினாலும் வரலாம்.
முடிந்தவரை பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், மூச்சுப் பிரச்னைகள், தோல் பிரச்னைகள் உள்ளவங்க நெயில் பாலிஷ் பயன்படுத்தவே கூடாது. அடுத்து ரிமூவரில் இருக்கும் அசிட்டோன் மற்றும் குளோரோபார்ம் நுரையீரல் பிரச்னைகளைக் கொண்டு வரும். ரொம்ப டார்க் நிறங்களைத் தவிர்த்துட்டு கொஞ்சம் லைட் கலர்களை அதிகமா பயன்படுத்தலாம். டார்க் கலர்கள்ல கெமிக்கல் அதிகமா இருக்கும். பாலிஷ் போட்டுக்கிட்டு சாப்பிடுவது, நகம் கடித்தல் இதையெல்லாம் தவிர்க்கணும். அதே மாதிரி தினம் தினம் அசிட்டோன் போட்டு க்ளீன் பண்ணாம இருக்கணும். நல்ல பிராண்ட் அல்லது ஆர்கானிக் வகையாறாக்களை பரிசீலிக்கலாம். பளபளப்பு குறைவான பாலிஷ்களையும் தேர்வு செய்யறது நல்லது…’’ என்கிறார் கீதா அஷோக்.
ஆரோக்கியமான நகங்களுக்கு…
சிலருக்கு நகம் பலவீனமாக இருப்பதன் காரணமாக தண்ணீரில் சில நிமிடங்கள் வேலை செய்தால் கூட உடைந்து போகும். அப்படிப்பட்டவர்கள் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் எப்சம் உப்பு கலந்து விரல்களை சிறிது நேரம் வைக்கலாம். தொடர்ந்து இதை செய்தால் நகங்கள் வலிமை பெறும். மேலும் ஆரோக்கியமான நகங்களுக்கு கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடலாம். இயற்கையான மருதாணி அதிகம் பயன்படுத்தலாம்.
Average Rating