தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவேன் – கருணாஅம்மான்
சில அரசாங்க அதிகாரிகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த முயற்சித்தபோதும், அந்த முயற்சியில் அவர்கள் தோல்வி கண்டிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணாஅம்மான் தெரிவித்துள்ளார். தமது கட்சியின் பலம்கண்டு அவர்கள் கவலையடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தெரியாமலேயே இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் பிரத்தியேக செவ்வியில் கருணா தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் இலங்கையில் இல்லாத காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூகத்துக்கும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சில அசம்பாவிதச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததுடன், அவற்றை சரியான முறையில் கையாளத் தவறியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கிழக்கு மாகாணம் மூன்று இனங்களும் வாழும் பிரதேசம் என்பதால் அனைவரும் இணைந்து வாழவேண்டிய தேவைப்பாடு இருப்பதாகவும், முஸ்லிம் சமூகத்துடன் பிரச்சினைகள் ஏற்படும்போது, முஸ்லிம் தலைவர்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டுமெனவும் கருணா வலியுறுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் அப்பாவித் தமிழர்கள் சிக்கிக் கொள்வதாகத் தான் கருதவில்லையெனவும், பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு தமிழர்களைக் கொழும்பிலிருந்து வெளியேற்றியமை சரியான செயலில்லையெனவும் கருணா தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைளை எதிர்ப்பதுடன், இது பற்றி ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டுசெல்லவிருப்பதாகவும் கூறினார். தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படப்போவதாகவும் கருணாஅம்மான் தெரிவித்தார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடவே அது உருவாக்கப்பட்டது. துரதிஸ்டவசமாக அவர்கள் தற்பொழுது விடுதலைப் புலிகளின் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். சம்பந்தன் ஒரு சிறந்த அரசியல்வாதி. எனினும், அச்சம் காரணமாக அவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை விரைவில் மாற்றமடையும்” எனவும் கருணா தனது செவ்வியில் கூறினார்.
இலங்கை விடயத்தில் இந்தியாவின் தலையீடு எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் கருணாஅம்மான், இலங்கை, பாகிஸ்தானிடமிருந்து ஆயுத உதவிகளைப் பெற்றுக்கொள்வதை இந்தியா விரும்பவில்லையெனவும் கூறியுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு சிறந்தவொரு அரசியல்வாதியாக விளங்கவேண்டுமெனத் தான் விரும்புவதாகவும் அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணாஅம்மான் மேலும் தெரிவித்தார்.
Average Rating