வெயிலின் தாக்கத்தை போக்கும் மருத்துவம்!!
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை பயன்படுத்தி பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். சோற்றுக்கற்றாழை, இளநீரை பயன்படுத்தி வெயிலின் தாக்கத்தை தணிக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புதமான மூலிகை சோற்றுக்கற்றாழை. பல்வேறு நன்மைகளை கொண்ட இது, எந்த காலத்திலும் கிடைக்க கூடியது. கற்றாழை குளிர்ச்சியை தரும் தன்மை உடையது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை அழிக்கவல்லது. நோய் கிருமிகளை தடுக்க கூடியது. நோய்களை விரட்டுகிறது. குறிப்பாக, தீ காயங்களை குணப்படுத்துவதில் முதன்மையாக விளங்குகிறது. செல்களை புதுப்பிக்கும் தன்மை உடையது.
சோற்றுக்கற்றாழையை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோற்றுக்கற்றாழை, தயிர், உப்பு, பெருங்காயம், கொத்தமல்லி. செய்முறை: சோற்றுக்கற்றாழையின் தோலை சீவி சதை பகுதியை நன்றாக கழுவி ஒரு துண்டு எடுக்கவும். இதனுடன் 2 ஸ்பூன் தயிர், சிறிது உப்பு, பெருங்காயப்பொடி, கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உடல் குளிர்ச்சி பெறும். சோற்றுகற்றாழை அற்புதமான மருந்தாகிறது. உச்சி முதல் பாதம் வரை பயன்படுத்தும் மருந்துகளில் சோற்றுக்கற்றாழை கலந்திருக்கிறது. தீ காயங்களை ஆற்றுவதுடன் அற்புதமான உணவாகி நன்மை ஏற்படுகிறது.
கோடை வெயிலில் வெளியே சென்று வருவதால் நமக்கு நீர் இழப்பு ஏற்படுகிறது. சோர்வு உண்டாகிறது. காரமான உணவு உட்கொள்ளும்போது அல்சர் ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு சோற்றுக்கற்றாழை மருந்தாகிறது. கொத்தமல்லி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும். பெருங்காயம் வாயுவை வெளியேற்றுகிறது. செரிமானத்தை தூண்டுகிறது.
இந்த பானம் உடல் சூட்டை தணிக்கிறது. குடல் நோய்களை போக்குகிறது.சோற்றுக்கற்றாழையை இரண்டாக பிளந்து சதை பகுதியை தோலில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், தோலுக்கு குளிர்ந்த தன்மை ஏற்படும். இது, தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. வியர்குருவை போக்குகிறது. தோலை புற ஊதா கதிர்கள் தாக்காத வண்ணம் பாதுகாக்கிறது. கருமை நிறம் சரியாகிறது.
வெயிலால் ஏற்படும் நீர் இழப்பை சமன்படுத்தி உடலுக்கு புத்துணர்வு தரும் பானம் தயாரிக்கலாம். உடலில் நீர் இழப்பு காரணமாக சோர்வு, மயக்கம் ஏற்படும். இளநீருடன் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை 100 மில்லி அளவுக்கு குடித்துவர உடல் புத்துணர்வு பெறும். முற்றாத வழுக்கையாக இருக்கும் இளநீரை வாங்கி பயன்படுத்துவது நல்லது. இளநீரில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவற்றால் உடல் சோர்வு நீங்கும்.
உடல் பலம் பெறுகிறது. இழந்துபோன நீர்ச்சத்தை மீட்கிறது. இது வெயிலுக்கு அற்புதமான பானமாக விளங்குகிறது. வெயிலினால் தோலில் ஏற்படும் சுருக்கத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மாசிக்காய் தோல் நோய்களுக்கு அற்புதமான மருந்தாகிறது. மாசிக்காய் சூரணத்துடன் வெண்ணெய் சேர்த்து கலந்து பூசுவதால் சுருக்கங்கள் விலகிப்போகும்.
Average Rating