(கட்டுரை)மாகாண சபையை வைத்தே உள்ளூராட்சி ஆட்சியமைப்பு!!
எல்லோரும் அரசியல்வாதிகள். ஆனால், இன்னமும் எதுவும் முடிந்தபாடில்லை. அரசியலில் இலங்கை முழுவதுமே இப்போது பெரும் அமளி துமளியாக இருக்கிறது. யாருக்கு அமைச்சுப்பதவி போகும்; யாருக்கு வரும், பிரதமர் இருப்பாரா இல்லையா. நாடாளுமன்றம் கலையுமா என்பதே அந்த அமளிதுமளி. இதற்கு எப்போது முடிவு கிடைக்கும் என்றே தெரியவில்லை.
இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இன்னும் ஆட்சியமைக்க முடியவில்லை. பல சபைகளில் பெரும்பான்மை உறுப்பினர்களை வென்றுள்ள கட்சிகளுக்குக்கூட வேறு கட்சிகள், நபர்களின் ஆதரவுகள் தேவை என்ற நிலை இருக்கிறது. அதற்கு விட்டுக்கொடுப்புகளுடனும், நிபந்தனைகளுடனும் ஆதரவை வழங்க, பல்வேறு கட்சிகள் முன்வந்தும் இருக்கின்றன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பான்மையான சபைகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை பெற்றிருந்தாலும் ஆட்சியமைப்பது தொடர்பில் கட்சிகளிடையே பெரும் இழுபறிநிலை தொடர்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் மாநகரசபை உட்பட, ஏறக்குறைய எல்லாச் சபைகளிலும், எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைப்பதற்கான சாதாரண பெரும்பான்மையற்ற நிலையே உள்ளது.
இதற்கிடையில், மக்களின் பிரதிநிதித்துவங்கள் பலவீனமடையா வண்ணம், கொள்கை வேறுபாடுகளைக் கடந்து, தமிழ்க் கட்சிகளின் ஒருங்கிணைப்பு மூலம், உள்ளூராட்சி சபைகளை ஆளும் வல்லமையை ஏற்படுத்துவதே நல்லது என்ற வகையிலான கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கட்சி நலன்களையும் பதவிகளையும் முன்வைத்து, மக்களின் ஆட்சியதிகாரங்களை மழுங்கடித்துவிடாத வகையிலான பேரம்பேசல்களே இப்போதைக்குத் தேவையென்பது அதன் உட்பொதிகை.
மக்களின் இறைமைக்கு மதிப்பளித்து, அதற்கமைய செயற்படக்கூடியவைகளாகக் கட்சிகள் இருக்க வேண்டும். ஆனால், இப்போதைய கட்சிகள், சுயநல அரசியல்வாதிகளின் நிரம்பலாக இருந்து வருகின்றன.
இந்த நிலையில், மாற்றம் கொண்டு வருவதற்கான ஒரு சிறு முயற்சியாக, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் முன்வைக்கப்பட்டாலும், அனேகமான சபைகள் இன்னமும் பெண் பிரதிநிதித்துவங்களற்றனவாகவே இருக்கின்றன.
உள்ளூராட்சியைப் பொறுத்தவரையில், உறுதிப்பாடுமிக்க மாநகர, நகர, பிரதேச சபைகளை உருவாக்குவதற்காகவே மக்கள் ஆணையையும் பொறுப்பையும் வழங்கியிருந்தாலும் ஏற்படுத்த முடியாததாகவே இருக்கிறது. அதற்கு நடைபெற்ற தேர்தல் முறையும் காரணம்.
எமது மக்களின் நலன் சார்ந்தது என்பதை, அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறோம்; அதன்படியே செயற்படுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, மக்களுக்குக் கொடுமை செய்து கொண்டே இருக்கும் கட்சிகளுக்கு மத்தியில், பல சுயேட்சைக்குழுக்களும் அரசியலில் குதிக்கின்றன. அது கட்சி சார்ந்தும் சாராமலும் நடைபெறுகிறது.
இந்த நிலையில்தான், மாகாண சபைத் தேர்தலைப்பற்றியும் அறிவித்தல்கள் வந்திருக்கின்றன. உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியே அமைக்க முடியாமலிருக்கையில், மாகாண சபைகளைப்பற்றி கட்சிகள் வேறு சிந்திக்கின்றன.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட நல்லாட்சி (புதிய ஜனாதிபதி) மாற்றத்துடன் என்பதையே சொல்லிச் சொல்லி, எல்லோரையும் ரணமாக்கிக் கொண்டிருக்கையில், நடைபெற்ற நாடு தளுவிய உள்ளூராட்சித் தேர்தல், ஒரு களேபரத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முடிவுகளைப் பொறுத்தவரை, பிரதான கட்சிகள் சபைகளில் கூடுதல் வட்டாரங்களைப் பெற்றுள்ள போதிலும், வட்டாரம் மற்றும் விகிதாசார அடிப்படையிலான கலப்புத் தேர்தல் முறை காரணமாக, வட்டார ரீதியாகக் கூடுதல் ஆசனங்களைப் பெற்ற கட்சிகளை விட, வட்டார ரீதியாக வெற்றி பெறாத கட்சிகளே கூடுதல் பலனைப் பெற்றுள்ளன.
தமிழ் மக்களைப் பொறத்தவரையில், தேர்தல் காலத்தில் மாறுபட்ட ரீதியில் கட்சிகளையோ சுயேட்சைக் குழுக்களையோ ஆதரித்திருந்தாலும் அனேகமான தமிழ் மக்கள், தமிழ்த் தேசியம் சார்ந்திருக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்கும் வாக்களித்துள்ளார்கள். தங்களுடைய வாக்குகள் தமிழ் கட்சிகளுக்கும் தேசிய கட்சிகளுக்கும் பிரிந்து போனமையால், ஒரு தமிழ்க் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது என்ற கவலை மக்களிடம் இல்லாமலில்லை.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை, தமது பிரதேசங்களில் தமிழ்க் கட்சிகள் ஆட்சியமைக்க, தேசியக் கட்சிகள் அல்லது முஸ்லிம் கட்சிகள் ஆதரவை நாடுவதை தற்போதைய சூழ்நிலையில் தவிர்த்துக்கொள்வதையே விரும்புகிறார்கள். தமிழ்க் கட்சிகளின் தலைமைகள் இதுபற்றிப் பேசி, ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்து, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அது அமைந்திருக்கிறது.
இவ்வாறான நிலையில், நடைபெற்ற தேர்தலில், தமிழ் மக்கள் வழங்கிய ஆணை, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டம் என்றே கொள்ள வேண்டும் என்று சொல்பவர்கள், மக்கள் தேர்தல் முறைக் குழப்பத்தால், தமது வாக்குப் பலத்தை ஓரளவுக்கு வீணாக்கிக் கொண்டார்களோ என்ற சந்தேகத்தை மறந்து விடுகின்றனர்.
வடக்கில் முதலமைச்சராக இருக்கும் ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், மீண்டும் முதலமைச்சராவதற்கு முயற்சிகளை மேற்கொள்கிறார். வேறும் பலர் முதலமைச்சர் பதவிக்கு வருவதற்காக முயல்கின்றனர். நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாகாண சபை, முழுமையாக ஏதாவது செய்ததா என்ற சந்தேகம் மக்களிடம் இருக்கையில் தான், இதுவும் நடக்கிறது.
இம்முறை நடைபெறவுள்ள கிழக்குமாகாண சபைத் தேர்தலில், தமிழர் ஒருவரை முதலமைச்சராகக் கொண்டுவர வேண்டும் என்பதை இலக்காக வைத்து, பல்வேறு செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
செய்தி என்னவென்றால், முடிந்து போன தேர்தலின் மூலம், ஏற்பட்டிருக்கும் நிலைப்பாட்டைப் புரிந்து கொண்டு, உள்ளூராட்சி சபைகளில் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதற்கப்பால், சரியான அரசியல் ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்படுதல் நல்லது.
அரசியல், சுயநிர்ணயம் என்பவைகள் பற்றி நாம் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கையில், அபிவிருத்தி எப்போது ஏற்படும், வேலைவாய்ப்பு எங்கே கிடைக்கும் என்பது பற்றியே அதிகம்பேர் அலைகின்ற காலத்தில் அரசியலால் எதைத்தான் அடைந்து கொள்ளப்போகிறோம் என்றும் கேள்வியைக் கேட்டுக் கொள்ள முடிகிறது.
இந்த இடத்தில் தான், தமிழர்களது பிரதேசங்களில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம், அபிவிருத்தி தங்குதடையின்றி நடைபெறக்கூடிய சூழலை ஏற்படுத்தும் அபிவிருத்தி அரசியலை ஏன் செய்யக்கூடாது என்றும் கேட்கப்படுகிறது.
காட்டிக் கொடுப்பு, ஊழல்கள், வாக்கு மாறல் என எல்லா வகையான துரோகங்களும் உள்ளன. வாக்களிக்கின்ற மக்களுக்குச் அரசியல் கட்சிகள் செய்கின்ற துரோகத்துக்குப் பெயர் அரசியல் துரோகம்.
இப்போது, தமிழர்கள் ஆட்சியமைப்பதற்காகவே மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள் என்று சொல்லிக் கொண்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கைப் பொறுத்தவரையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைவதா, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸுடன் இணைவதா என்றும்,
அதேபோன்று, கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைவதா, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைவதா என்றெல்லாம் தீர்மானங்கள், மாகாண சபைகளை வைத்துக் கொண்டே எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், தமிழர்கள் இணைந்து ஆட்சியமைப்பதற்காகத் திறந்த மனதுடன் ஆட்சியமைப்பது சாத்தியமானதுதானா என்று ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ள முடியும்.
Average Rating