மேலெழும் இனவாதம் அம்பாறையிலும்!!
உலகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்கள் மிகவும் நெருக்கடியான ஒரு நிலைமையைத் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள்.
சிரியாவிலும் பலஸ்தீனத்திலும் நடைபெறுகின்ற திட்டமிட்ட இனஅழிப்புகள், வார்த்தைகளுக்குள் அடங்காத பெரும் சோகத்தையும் மனச் சஞ்சலத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்க, இலங்கையில் மீண்டும் இனவாத சக்திகள் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தம்மைத் தயார்படுத்தி இருக்கின்றன.
இதைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டும் விதத்தில், அம்பாறை வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
சர்வதேச ரீதியாக, முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற ஆயுத பலப்பிரயோகத்துக்குப் பின்னால், அமெரிக்காவும் இஸ்ரேலும் சியோனிச சக்திகளும் நிற்கின்றமை சகலரும் அறிந்ததொன்றாகும்.
அதேபோல், இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள், இலங்கை அரசியலின் நெருக்கடி, சட்டம் ஒழுங்கு அமைச்சு பிரதமருக்கு கிடைத்தமை என எல்லா விவகாரங்களின் பின்னணியிலும் திட்டமிட்ட காய்நகர்த்தலுடனும் அறிவுடனுமே, அம்பாறையில் இடம்பெற்ற வன்முறைகளையும் அதற்குப் பிறகான தொடர் நிகழ்வுகளையும் நோக்க வேண்டியிருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற போதிலும், அம்பாறை நகரில் சிங்களச் சமூகமே பெரும்பான்மையாக வாழ்கின்றது.
அங்கு, சுமார் நூறு முஸ்லிம் குடும்பங்களே அங்குமிங்குமாகப் பரந்து வாழ்கின்றன. அம்பாறையில் வாழ்கின்ற மக்கள், இன்றுநேற்று குடியேறியவர்கள் அல்லர். அங்கிருக்கின்ற பள்ளிவாசலோ அல்லது ஏனைய முஸ்லிம்களின் அடையாளங்களோ அண்மைக்காலத்தில் நிறுவப்பட்டவையும் அல்ல.
அம்பாறை நகரில் எந்தவொரு முஸ்லிம் குடும்பமும், அண்மைக்காலத்தில் அங்கு சென்று குடியேறவில்லை. அங்கிருக்கின்ற முஸ்லிம்கள் எல்லோரும், அங்கேயே பிறந்து, வளர்ந்தவர்கள். அதாவது, குறைந்தது மூன்று தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வருகின்றார்கள்.
வரலாற்றில் இருட்டடிப்புச் செய்யப்பட்ட பக்களைப் பார்த்தால், அம்பாறை என்ற பிரதேசமே சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அதிக உரித்துடையது என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து, அம்பாறை மாவட்டம் பிரிந்து, தனி மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போது, நூற்றுக்கணக்கான வாக்காளர்களே இருந்தனர். இன்று இலட்சக்கணக்கான வாக்காளர்களைக் கொண்டு, அம்பாறைத் தொகுதி காண்படுகின்றது.
எனவே, சிங்களக் குடியேற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, அபிவிருத்தி திட்டங்கள், நீர்ப்பாசன திட்டங்கள் என்ற பெயரில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள், பஸ்களில் அழைத்து வரப்பட்டு, அம்பாறையில் குடியேற்றப்பட்டார்கள் என்பதே வரலாறாகும்.
அம்பாறை மட்டுமல்ல, அம்பாறை நகரில் இருந்து சில கிலோமீற்றர் தொலைவில் இருக்கின்ற கொண்டுவெட்டுவானுக்கு அந்தப் பக்கம் வரை, முழுமையாக முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. கொண்டுவெட்டுவானில் இருக்கின்ற நூற்றாண்டு பழைமை வாய்ந்த பள்ளிவாசலும் இதற்கு ஒரு சான்றாகும்.
இப்படி இன்னும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த நிலப்பரப்பில், சிங்களப் பிரதேசம் எவ்வாறு மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது, அதற்குப் பின்னர், முஸ்லிம்களுக்கு உரித்தான நிலப்பரப்பு எவ்வாறு குறுகலாக்கப்பட்டது, அம்பாறை நகரில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் அங்கிருந்து எதற்காக வெளியேறினார்கள் என்பதெல்லாம் எல்லோரும் அறிய வேண்டிய வரலாறாகும்.
இந்த நிலையிலேயே, கடந்த திங்கட் கிழமை நள்ளிரவு வேளையில், அம்பாறை நகரில் இருந்த ஒரேயொரு பள்ளிவாசல், இனவெறியர்களினால் தாக்கப்பட்டு, கடுமையாகச் சேதமாக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி, முஸ்லிம்களுக்குச் சொந்தமான உணவகங்கள் சிலவும், வாகனங்கள் சிலவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. சில உடமைகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதுடன், ஓரிருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பள்ளிவாசல், கட்டம் கட்டமாக அடுத்தடுத்து வந்த குழுவினரால் தாக்கப்பட்டதாகச் சம்பவத்தை நேரில் கண்ட முஸ்லிம்கள் கூறுகின்றனர். எல்லாம் கிட்டத்தட்ட நடந்து முடிந்த பிறகே, பொலிஸார் அங்கு வந்ததாகவும் அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
அம்பாறை நகரில் இருக்கின்ற முஸ்லிம்களுக்குச் சொந்தமான உணவகம் ஒன்றில், கொத்துரொட்டி வாங்கச் சென்ற பெரும்பான்மை இனக் குழுவினருக்கும் கடைக்காரருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இத்தனை பெரிய வன்முறைகளுக்கு இட்டுச் சென்றுள்ளது என்று பாதுகாப்பு தரப்பினர் கூறுகின்றனர்.
அதாவது, இந்த முஸ்லிம் ஹோட்டலில் சிங்களவர்களுக்கு விற்கப்படும் சாப்பாடுகளில், கருத்தடையை ஏற்படுத்தும் மாத்திரைகள் கலக்கப்படுவதாக ஏற்கெனவே புரளிகள் கிளப்பி விடப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் சம்பவ தினம் இரவு, கொத்துரொட்டி வாங்குவதற்காகச் சென்ற சிங்கள இளைஞர்கள், கொத்துரொட்டிக்குள் கருத்தடை மாத்திரை போட்டீர்கள்தானே என்று அதட்டிக் கேட்டுள்ளதுடன், கடை நடத்தியவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன், கடைக்காரரை அதட்டி, அந்த மாத்திரை போட்டதாக ஏற்றுக் கொள்ளச் செய்து, ஒரு வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர். ஆனால், அவர்களது தாக்குதலுக்குப் பயந்து, வேறுவழியின்றி, சிங்களம் விளங்காமலும் தான், “ஆம்” எனத் தலையாட்டியதாக, அந்தக் கடை உரிமையாளர், பின்னர் விளக்கமளித்திருக்கின்றார்.
இந்தச் சம்பவம் நடந்து, சில நிமிடங்களில் அந்த இடத்துக்குப் பெருமளவிலான சிங்கள இளைஞர்கள் வாகனங்களில் வந்திருக்கின்றார்கள்.
கர்ப்பத்தடை மாத்திரை போட்டதாகக் கூறப்பட்டது, ஒரு புரளியாக இருந்தாலும், ஹோட்டலில் வாய்த்தர்க்கங்கள் இடம்பெறுவது வழக்கமானது.
ஆனால், இந்த முரண்பாடு ஏற்பட்டு, குறுகிய நேரத்துக்குள், அதாவது நள்ளிரவு நேரத்தில், பல நூற்றுகணக்கானோர், எங்கிருந்தோ வந்து இறங்கியதாக, அம்பாறையில் வசிக்கும் சிங்களவர்கள் கூறுகின்றார்கள்.
அவர்கள், வெளியில் இருந்து அழைத்து வரப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அவர்கள் சொல்கின்றார்கள்.
ஆனால், அம்பாறை நகரில் வசிப்போரே, அதிகமாக இந்த வன்முறையில் ஈடுபட்டதாக, முஸ்லிம்கள் தரப்பில் கூறப்படுவதுடன், அதன் பிறகு, நடைபெற்ற சில சம்பவங்கள் தொடர்பான காணொளிகளின் ஊடாகவும் அது உறுதிப்படுத்தப்படுகின்றது.
குறிப்பிட்ட உணவகம் தொடர்பாக, பரப்பப்பட்ட வதந்தி பரிசீலனைக்குரியது. ஒரு கர்ப்பத்தடை மாத்திரையை நூறு பாகை செல்சியஸ் வெப்பத்தில் தயாராகும் உணவுக்குள் போட்டு வழங்க முடியாது என்றும், அவ்வாறான சக்திமிக்க கர்ப்பத்தடை மாத்திரைகள் எதுவும் கிடையாது என்றும் சிங்கள வைத்தியர்களே கூறியுள்ளனர்.
அத்துடன், சிங்கள வாடிக்கையாளர்களை நம்பியிருக்கும் எந்தவொரு முஸ்லிம் வியாபாரியும், இவ்வாறான படுபாதகச் செயலைச் செய்யத் துணியமாட்டார். அவ்வாறு செய்தவர் என்றால், அவர் எந்தத் தாக்குதலுக்கும் பயந்து, அதை ஏற்றுக் கொள்பவராக இருக்க மாட்டார் என்பதைச் சிங்கள மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு ஒரு சம்பவம் நடந்தாலும், அது அந்தக் ஹோட்டலுடன் சம்பந்தப்பட்ட சம்பவமாகும். எனவே, அது பள்ளிவாசலுக்கும் ஏனைய இடங்களுக்கும் பரவியிருக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை.
ஹோட்டலில் அவ்வாறு நடக்கின்றது என்றால், அது தொடர்பாகப் பொலிஸிலோ, சுகாதார அதிகாரிகளிடமோ முறையிட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடந்ததாகவோ அல்லது அதற்கு முயற்சித்ததாகவோ தெரியவில்லை. அம்பாறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில், அது பற்றி அதிகாரிகள், பிரஸ்தாபிக்கவும் இல்லை.
அந்தக் கடையில் இடம்பெற்ற முரண்பாட்டுக்குப் பிறகு, பெருமளவானோர் வந்து, அந்தக் கடை உள்ளடங்கலாக, பல கடைகளைத் தாக்கியுள்ளதுடன், அம்பாறை பள்ளிவாசலுக்குத் திரண்டு சென்று, மதிலை உடைத்துள்ளதுடன், பள்ளிவாசலின் உட்புறத்தையும் மிகக் கடுமையாகச் சேதப்படுத்தியிருக்கின்றனர்.
அங்கிருந்த வாகனங்களும் வேறு சில பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தங்கியிருந்த ஒரிருவர் தாக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை மணித்தியால இடைவெளியில் இடைவேளை விட்டு விட்டுக் குழுக்கள் குழுக்களாக வந்து தாக்குதல் நடத்தியதாக அயலில் உள்ள சிங்கள மக்கள் கூறுகின்றனர்.
எனவே, ஹோட்டலில் நடைபெற்றது எதுவாக இருந்தாலும், பள்ளிவாசலில் நடந்ததும் வாகனங்கள், ஏனைய கடைகள் உடைக்கப்பட்டதும் தற்செயலான அசம்பாவிதங்கள் இல்லை என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னால், நீண்டதோர் அரசியல் நிகழ்ச்சித் திட்டம் இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகின்றது.
நாட்டின் இன்றைய நிலைமைக்கும் இதற்கும் தொடர்பிருக்கலாம். முஸ்லிம்களை, அம்பாறையில் இருந்து வெளியகற்ற அல்லது அவர்களை அச்சப்படுத்த வேண்டுமெனக் காத்துக் கொண்டிருந்தவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இருக்கலாம்.
ஆனால், அம்பாறையில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில், ஓர் அதிகாரி குறிப்பிட்டது போல, “மரண வீடுகளில் ‘மயக்கத்தில்’ இருந்தவர்கள், திரண்டு வந்திருக்கலாம்”.
எது எப்படியிருந்தாலும், பள்ளிவாசல் உட்பட முஸ்லிம்களின் சொத்துகள் தாக்கப்பட்டதன் மூலம், முஸ்லிம்களின் உணர்வுகளும் கடுமையாகச் சீண்டப்பட்டுள்ளன.
சம்பவதினம் இரவு, ஒரு சில முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சிங்கள சகோதரர்கள் உதவியிருக்கின்றார்கள். இவ்வாறான ஒரு வன்முறையால் ஏற்படக் கூடிய ஆபத்துகளை அறிந்த, பிற இனங்களை நேசிக்கும் பெரும்பாலானோர் அம்பாறையிலும் வாழ்கின்றார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும்.
ஆனால், பல இடங்களுக்கும் சென்றுசென்று, வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள் என்பதும், நூற்றுக்கணக்கானோர் இதில் பங்குபற்றியிருக்கின்றார்கள் என்பதும், பொலிஸார் விரைந்து வரவில்லை என்பதும் மிகமிகக் கவலைக்குரியது.
அதேநேரம், சம்பவம் இடம்பெற்ற மறுநாள் காலை, அவ்விடத்துக்கு விஜயம் செய்த, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், சில சிங்கள நபர்கள் நடந்து கொண்ட விதம், அவ்வளவு ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.
முக்கியமாக, பிரதியமைச்சர் ஹரீஸ் அங்கு சென்றபோது, அவரைப் பேசவிடாமல்த் தடுத்தோரின் நடவடிக்கைகள், அவர்களும் இந்த வன்முறைகளுக்குத் துணை போயிருக்கின்றார்களோ என்பதையும், மாத்திரைக் கதையைப் பூதாகரமாக்கி, பள்ளிக்குக் கொள்ளி வைத்திருக்கின்றார்கள் என்பதையும் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.
இச்சம்வத்தையடுத்து, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினரும் அம்பாறைக்குச் சென்று பார்வையிட்டு, உயர்மட்டக் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளனர்.
இரு கூட்டங்களிலும் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் கொள்கையளவில் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால், சிங்களத் தரப்பில் இருந்த மதத்துறவிகள் மற்றும் வர்த்தகர்கள், வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக் கோரியதாக, அங்கிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறினர்.
அதுதான் சிக்கலான விடயாகும். வன்முறையை நடாத்தி, இத்தனை அழிவுகளையும் ஏற்படுத்திவிட்டு, கைது செய்யக் கூடாது எனக் கூறுவது எந்த வகையில் நியாயம் என முஸ்லிம்கள் கேட்கின்றனர்.
எவ்வாறிருப்பினும், எட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில், சந்தேக நபர்களை உடன் கைது செய்து, இன்றைய தினத்துக்குள் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த புதன்கிழமை மாலை, ஐந்துபேர் சரணடைய வந்த நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது, சற்று ஆறுதலளிக்கும் செய்தியாகும்.
இதற்கிடையில்,மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பிரதேசத்தில், முஸ்லிம் வர்த்தக நிலையங்களை, மூடச் சொல்லி அச்சுறுத்தியதை அடுத்து, பதற்றம் நிலவியது.
எனவே, இந்நிலைமைகளைப் பார்க்கும் போது என்றாலும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டமை, ஆறுதல் தருவதாக இருந்தாலும், நிரந்தரமல்ல என்றே தோன்றுகின்றது.
எனவே, அரசாங்கமும் சட்டம் ஒழுங்கு அமைச்சைப் பொறுப்பேற்றுள்ள பிரதமரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முஸ்லிம் அரசியல் தலைவர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் அதாவுல்லா போன்றோரும், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்ட சிறுபான்மை அரசியல்வாதிகளும், அம்பாறை வன்முறைக்கு எதிராக கண்டனத்தையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர். இத்தகைய கோரிக்கையை, சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற்ற நல்லாட்சி அரசாங்கம், எவ்வகையிலும் தட்டிக்கழிக்க முடியாது.
அங்குதொட்டு இங்குதொட்டு, இப்போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறைப் பகுதிக்கு இனவாதம் வந்திருக்கின்றது.
எனவே,அம்பாறை மட்டுமல்ல, எந்த இனம், எங்கு பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் சிறுபான்மையாக இருந்தாலும், அந்த இடத்தில் வாழ்கின்ற மற்றைய இனத்துக்கும் மத வழிபாட்டுச் சுதந்திரம் உள்ளடங்கலாக, எல்லா வகையான சம உரிமைகளும் உள்ளன என்பதைக் கடும்போக்கு வாதிகளுக்கும் அவர்களைப் பயன்படுத்துகின்ற அரசியல்வாதிகளுக்கும் கடுந்தொனியில் எடுத்துரைக்க வேண்டும்.
வன்முறைகளில் ஈடுபட்டோர் கைது செய்யப்படுவது மட்டுமல்லாமல், இனிமேல் வன்முறைகள் ஏற்படாத வகையிலும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
இனவாதத்தாலே இந்தநாட்டின் எதிர்காலம் பாதைமாறிச் சென்றது. எனவே, கடந்தகால இனவாத விஷத்தையும் அதன் அனுபவங்களையும் படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நிலைமைகள் இன்னும் மோசமடைவதைத் தடுக்க இயலாது போய்விடும்.
Average Rating