ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரியோ நாகலாந்தில் என்டிபிபி-பாஜ கூட்டணி ஆட்சி: ஜெலியாங் முயற்சி வீணானது!!

Read Time:6 Minute, 42 Second

நாகலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியும் (என்டிபிபி), பாஜ.வும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. என்டிபிபி தலைவர் நெய்பியூ ரியோ, ஆளுநர் ஆச்சார்யாவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார். அவரை ஆட்சியமைக்க அழைக்க ஆளுநர் முடிவு செய்துள்ளார். திரிபுராவில் 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கூட்டணி ஆட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்துள்ள பாஜ, நாகலாந்திலும் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இம்மாநிலத்தில் தேர்தலுக்கு முன்பு வரை பாஜ.வுடன் கூட்டணி அமைத்திருந்த முதல்வர் ஜெலியாங் தலைமையிலான நாகா மக்கள் முன்னணி (என்பிஎப்), தேர்தலின்போது பாஜ.வை ஒதுக்கிவிட்டு தனியாக தேர்தலை சந்தித்தது.

அக்கட்சி 29 இடங்களை தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. இக்கட்சி கழற்றி விட்டதால் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் (என்டிபிபி) கூட்டணி அமைத்து பாஜ போட்டியிட்டது. இதில், என்டிபிபி 16 இடங்களிலும், பாஜ 11 இடங்களிலும் வெற்றிப் பெற்றன. இதன் மற்றொரு கூட்டணி கட்சியான தேசிய மக்கள் கட்சி 2 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் ஒரு இடத்தையும் பெற்றுள்ளன. இது தவிர, சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவைப்படும் பட்சத்தில், தங்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் ஆட்சி அமைப்பது உறுதி என என்டிபிபி.யும். பாஜ.வும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

என்டிபிபி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, பாஜ பொதுச்செயலாளர் ராம் மாதவ் இங்கு முகாமிட்டுள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘என்டிபிபி – பாஜ கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் மூலமாக எங்களுக்கு கிடைத்துள்ள இடங்களுடன், ஒரு இடத்தை பிடித்துள்ள ஐக்கிய ஜனதா தளமும், ஒரு சுயேச்சையும் எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, ஆட்சி அமைப்பதற்கான உரிமையை அடுத்த சில நாட்களில் நாங்கள் கோருவோம்’’ என்றார்.

இதேபோல், இம்மாநிலத்தில் 3 முறை முதல்வர் பதவியை வகித்தவரும், என்டிபிபி கட்சியின் தலைவருமான நெய்பியூ ரியோவும், ஆட்சி அமைப்பது உறுதி என உறுதியாக தெரிவித்துள்ளார். ‘‘எங்கள் கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை உள்ளது. நாங்கள் ஆட்சி அமைத்ததும் நாகா அரசியல் பிரச்னைக்கு தீர்வு காணவும், சாலை வசதி, ரயில்வே மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்படும்’’ என்று ரியோ கூறினார். அதே நேரம், தேர்தலுக்கு முன்பு பாஜ.வை கூட்டணியில் கழற்றி விட்டதற்கான விலையை கொடுத்துள்ள முதல்வர் ஜெலியாங், 29 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள போதிலும் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறார்.

இதனால், பாஜ.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க தயாராக இருப்பதாக நேரடியாக அக்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும், இந்த முயற்சி வீணானது. அவருடைய கோரிக்கையை பாஜ காதில் போட்டுக் கொள்ளவில்லை என்பதைதான், என்டிபிபி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க அக்கட்சி முழு முயற்சி எடுத்து வருவது மூலம் உறுதியாகிறது.
இதற்கிடையே, நாகலாந்து ஆளுநர் பி.பி.ஆச்சார்யாவை என்டிபிபி தலைவர் ரியோ நேற்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

வெற்றியின் பின்னணியில் ராம் மாதவ்
திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பா.ஜ அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் பின்னணியில் பா.ஜ பொது செயலாளர் ராம் மாதவ் முக்கிய பங்கிாற்றியுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த ராம் மாதவ், கடந்த 2014ம் ஆண்டு பா.ஜ கட்சியில் சேர்ந்தார். வெளிநாடுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டங்களை ஏற்பாடு செய்வதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. கடந்த 2014ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடிசன் சதுக்கத்தில் நடந்த பிரம்மாண்ட கூட்டத்தை ராம் மாதவ் ஏற்பாடு செய்தார்.

அசாமில் பா.ஜ கட்சியை வெற்றி பெற செய்ததில் ராம் மாதவுக்கு பெரும் பங்கு உண்டு. வடகிழக்கில் பா.ஜ காலூண்ற முக்கிய காரணமே இவர்தான். கடந்த ஒரு மாதத்தில் திரிபுரா, நாகலாந்து, மேகாலாயாவுக்கு அடிக்கடி சென்று ராம் மாதவ் ஆலோசனை நடத்தினார். இதன் மூலம் உள்ளூர் பிரச்னைகளை எல்லாம் தெரிந்து கொண்டு செயல்பட்டார். இது பா.ஜ.வின் வெற்றிக்கு வழிவகுத்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கியால் சுட்டு வெள்ளை மாளிகை அருகே வாலிபர் தற்கொலை!!
Next post (வீடியோ)காலா ரஜனியின் திரைப்பட ரயிலர்!!