சீன நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது வாழ்நாள் முழுவதும் ஜிங்பிங் அதிபராக நீடிக்க சட்ட திருத்தம் செய்யப்படுகிறது!!
சீன நாடாளுமன்றத்தின் ஆண்டு கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில், அதிபர் ஜி ஜிங்பிங் வாழ்நாள் முழுவதும் இப்பதவியில் நீடிப்பதற்கு ஏற்ற வகையில் அரசியல் சாசன சட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. சீன அதிபர் ஜி ஜிங்பிங், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தனிப்பெரும் தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன், கட்சியின் நிர்வாகம் கூட்டு தலைமையின் கீழ் இருந்து வந்தது. இதன் மூலம், கட்சித் தலைவர், ராணுவ தலைவர் மற்றும் அதிபர் என்ற நாட்டின் மூன்று அதிகாரமிக்க பதவிகளையும் ஜிங்பிங் தற்போது வகித்து வருகிறார். சீனாவின் ஒட்டு மொத்த அதிகாரமும் ஒருவர் இடத்தில் குவிந்திருப்பது, உள்நாட்டில் மட்டுமின்றி உலகளவிலும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் அதிபர், துணை அதிபர் பதவியை வகிப்பவர்கள் 2 முறைக்கு மேல் அப்பதவியை வகிக்கக் கூடாது என்று அரசியல் சாசன சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் தனது ஆதிக்கத்தை மேலும் நிலை நிறுத்தும் விதமாக இந்த சட்டத்தையும் மாற்றி அமைக்க ஜிங்பிங் முடிவு செய்துள்ளார். அதற்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒப்புதல் அளித்துள்ளது. இதை அமல்படுத்துவதற்கு ஏற்ற வகையில், சீன நாடாளுமன்றத்தின் ஆண்டு கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில், ‘சீன மக்கள் அரசியல் ஆலோசனை குழு’வும், ‘தேசிய மக்கள் சபை’யும் சேர்ந்து, சீனாவில் இந்தாண்டு நிறைவேற்றப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க உள்ளன. இதைத் தொடர்ந்து, அதிபர் பதவிக்கு விதிக்கப்பட்டுள்ள கால உச்சவரம்பை நீக்குவதற்காக அரசியல் சாசன சட்டம் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம், சமீபத்தில் 2வது முறையாக அதிபர் பதவியை ஏற்ற ஜிங்பிங், அடுத்தது மூன்றாவது முறையாகவும் இப்பதவியில் எதிர்ப்பின்றி தொடர்வார் அல்லது தனது வாழ்நாள் முழுவதும் இப்பதவியை வகிப்பார்.
இந்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டதும், சீனாவின் ஆட்சி நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஜிங்பிங் செய்ய உள்ளார். குறிப்பாக, அதிபர், துணை அதிபர் மற்றும் பிரதமரை தவிர மற்ற நிலைகளில் உள்ள அனைத்து நிர்வாகிகள், மூத்த அதிகாரிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக மாற்றி அமைக்கப்பட உள்ளனர். புதிதாக 4 துணை பிரதமர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 4 பேரை ஜிங்பிங் ஏற்கனவே தேர்வு செய்துள்ளார். ஜிங்பிங்கின் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்புகளும், வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை அமல்படுத்தும் பொறுப்பும் இவர்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளன. சீன மக்களிடம் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காக, மக்கள் நலம் சார்ந்த கவர்ச்சித் திட்டங்களில் ஜிங்பிங் கவனம் செலுத்துகிறார். அதற்கேற்ப அரசு நிர்வாகத்தை மாற்றி அமைக்கவே, ஜிங்பிங் இந்த அதிரடிகளை செய்ய உள்ளார்.
இந்தியாவுக்கு புதிய பிரதிநிதி?: சீனாவில் ‘ஸ்டேட் கவுன்சிலர்’ என அழைக்கப்படும் அரசு பிரதிநிதிகள் அதிக அதிகாரம் படைத்தவர்களாக உள்ளனர். இவர்களே பல்வேறு நாடுகளுக்கான சீன பிரதிநிதிகளாக செயல்படுகின்றனர். இவர்கள் அனைவரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில், இந்தியாவுக்கான சீன அரசு பிரதிநிதியாக யாங் ஜிய்சி உள்ளார். இந்திய- சீனா இடையிலான எல்லை பிரச்னைகள் பற்றி இவர்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளதால், இவருக்கு மாற்றாக புதிய பிரதிநிதி நியமிக்கப்பட உள்ளார். அதேபோல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, புதிய அரசு பிரதிநிதியாக நியமிக்கப்பட உள்ளார். இவருக்கு பதிலாக புதிய வெளியுறவு அமைச்சர் நியமிக்கப்பட உள்ளார்.
‘சீன மக்கள் அரசியல் ஆலோசனை குழு’வில் நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 5 ஆயிரம் பேர் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுகின்றனர். புகழ் பெற்ற நடிகர் ஜாக்கி சான் இக்குழுவில் உள்ளார். ‘தேசிய மக்கள் சபை’யில் 2,980 உறுப்பினர்கள் உள்ளனர். சீனாவில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களுக்கு இந்த இரண்டு குழுக்களும் ஒப்புதல் அளிக்கும். பெயரளவில் உள்ள இவை இரண்டுமே வெறும் ‘ரப்பர் ஸ்டாம்ப்’கள்தான். ஏனெனில், இவை ஒப்புதல் அளிக்கும் திட்டங்கள் அனைத்தும் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் கொண்டு வரப்படுகின்றன.
சீன ராணுவத்தின் பட்ஜெட் இன்று அறிவிக்கப்படுகிறது. கடந்தாண்டு ராணுவத்துக்கு சுமார் ரூ.10 லட்சம் கோடியை சீன அரசு ஒதுக்கியது.
Average Rating