வயதானால் இன்பம் குறையுமா(அவ்வப்போது கிளாமர்)?
மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!
முண்டி மோதும்
துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே
வாழ்வின் மலர்ச்சி – ந.பிச்சமூர்த்தி
ராஜராஜனுக்கு ஐம்பதை நெருங்கிவிட்டது வயது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை. வயதைக் குறைத்துக் காட்ட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தார். திடீரென்று ஒருநாள் அவருக்கு சிறுநீர் சரியாக வராமல் போனது. என்னென்னவோ வீட்டு வைத்தியமெல்லாம் செய்து பார்த்தும் கேட்கவில்லை. சில நாட்கள் பெரும் அவதிக்கு உள்ளானார். இறுதியாக ஒரு மருத்துவரிடம் போனார். பரிசோதனையில் அவரது இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்திருப்பது தெரிந்தது. ராஜராஜனுக்கு நீரிழிவு பிரச்னையோ, வேறு நோய்களோ இல்லை. சிகரெட், மது போன்ற கெட்ட பழக்கங்களும் கிடையாது.
பிறகு எப்படி சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டன?
ராஜராஜனை குறுக்கு விசாரணை செய்ததில் அந்த உண்மை வெளியே வந்தது. ‘தங்கபஸ்பம் சாப்பிட்டால் 50 வயதிலும் 20 வயது இளமையை, வாலிப முறுக்கைப் பெறலாம்’ என்ற விளம்பரத்தை ஒரு பத்திரிகையில் பார்த்திருக்கிறார். ‘தங்கபஸ்ப லேகியம்’ என்று அவர்கள் கொடுத்ததை பல மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டிருக்கிறார். சரியான முறையில் தயாரிக்கப்படாத அது சிறுநீரக செயல்பாட்டையே பாதித்து இருக்கிறது. நோயை விலை கொடுத்து வாங்கியதற்காக ராஜராஜனை கடிந்து கொண்டார் மருத்துவர். மனிதனின் பிறப்பில் இருந்து இறப்பு வரை இருப்பது செக்ஸ் ஆர்வம்.
வயது அதிகரிப்பது இயற்கையின் நியதி. அதை யாரும் தடுக்க முடியாது. அதற்காக 50 வயதில் 20 வயதுக்குரிய இளமையுடன் இருக்க விரும்புவது பேராசை. பேராசையால் கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டால் சிறுநீரகங்களையும் கல்லீரலையும் கெடுத்துக் கொள்ளத்தான் நேரிடும். 30 வயதில் செக்ஸில் இருக்கும் வேகம் 50 வயதிலும் வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். வயதானால் செக்ஸில் வேகம் குறையுமே தவிர, திறன் குறையாது. ஒருவரால் பிரியாணி சாப்பிட முடியாமல் போனால் பருப்பு சாதமாவது சாப்பிட்டு திருப்திபட்டுக்கொள்வார் அல்லவா? அது போலத்தான் செக்ஸும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இருபது வயதில் கவர்ச்சி உடையுடன் ஒரு பெண்ணைப் பார்த்தாலே ஆண்குறி விறைப்புத் தன்மையை அடைந்துவிடும். 30-35 வயதில் பெண் தொட்டு தூண்டினால்தான் விறைப்புத் தன்மை ஏற்படும். 50 வயதுக்கு மேல் தொடுதலுக்கு மேலும் சில சமாசாரங்கள் தேவைப்படும். 50 வயதுக்கு மேல் தோலில் சுருக்கங்கள் உண்டாவதால் விறைப்புத்தன்மை பெரிய அளவில் இருக்காது. ஆனால், இது கலவிக்கு தடை இல்லை. செக்ஸை தூண்டும் ஹார்மோன்களின் அளவு குறையும். உற்பத்தியாகும் விந்தின் அளவு குறைவாக இருக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் போது செக்ஸை தூண்டிவிடும் ஹார்மோன்களின் உற்பத்தியும் நின்று விடும். பெண்குறியில் நீர் சுரக்காது. இதனால் கலவியின் போது வலியும் எரிச்சலும் ஏற்படும். லூப்ரிகேஷனை பயன்படுத்தி வலி, எரிச்சல் இல்லாமல் உடலுறவில் ஈடுபடலாம். புதிதாக செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மத்திம வயதில் இருக்காது. போர் அடிக்கத் தொடங்கும். இதைப் போக்க காமசூத்திராவில் சொல்லப்பட்டிருக்கும் புதிய நிலைகளை கலவிக்குப் பயன்படுத்தலாம். இணையுடன் இன்பச்சுற்றுலா, இன்னொரு தேனிலவு கூடச் செல்லலாம். இதனால் மனமும் உடலும் புத்துணர்வு பெறும்.
படுக்கையறையில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், மனதுக்குப் பிடித்த நிறமுள்ள படுக்கை விரிப்புகள் அமைப்பது, இனிமையான இசை கேட்பது என மாற்றிக்கொண்டால் நல்ல கலவியை அந்தச் சூழலே தூண்டும். கலவிக்கு முன்னால் அதைத் தூண்ட சிறந்த ஃபோர் ப்ளேவும் (Fore play) அவசியம். அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருப்பது இன்னும் நலம். மனம் சார்ந்த எந்தப் பிரச்னைகளும் ஏற்படாது. ரெகுலர் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது அவசியம். உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகளை கொடுக்கவேண்டும். அவ்வப்போது செக்ஸிலும் ஈடுபடுதல் வேண்டும். வயதானாலும் மனதளவில் இளமையாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை முறையையும் உணவு முறைகளையும் முறைப்படுத்த வேண்டும். உடலும் மனமும் ஒத்துழைக்கும் போதே செக்ஸை வேண்டும் அளவுக்கு அனுபவித்து விடுவது நல்லது. காலம் கடந்து கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை.
Average Rating