மொட்டில் ஈழம் மலருமா; ஈழத்தில் மொட்டு மலருமா?

Read Time:12 Minute, 46 Second

தமிழீழம் பிறக்கும் எனின், அது மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே பிறக்கும் என்று ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோருகின்றோம். தமிழீழக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோபம் பொங்க, அண்மையில் தெரிவித்து உள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியைத் தொடர்ந்தே, இவ்வாறாகக் கருத்து வெளியிட்டு உள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் கூற்று, கோபத்தின் பேச்சா, ஏமாற்றத்தின் வெளிப்பாடா, கள யதார்த்தத்தின் கருத்தா, விரக்தியின் விளிம்பிலா என்று புரியவில்லை.

இரா. சம்பந்தன், தற்போது நாடாளுமன்றத்தை அலங்கரிப்பவர்களில், வயதில் மூத்தவர்; பல அரசியல்வாதிகளைக் கண்ட பழுத்த அரசியல்வாதி. சிங்கள அரசியல்வாதிகளின் தில்லுமுல்லுகளை நன்கு அறிந்தவர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மதிக்கப்படுபவர்.

ஆனாலும், இவ்வாறெல்லாம் இருந்தாலும், என்னமோ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார வேளைகளில், மைத்திரி – ரணில் தலைமையிலான நடப்பு அரசாங்கம், தமிழீழத்தை, தமிழ் மக்களுக்குத் தாரை வார்க்கப் போகின்றது என்ற போலிப் பரப்புரையில் அவரும் பங்காளியாகி விட்டார் போலவே உள்ளது.

ஏனெனில், ஈழம் மற்றும் தமிழீழம் போன்ற சொற்கள், தமிழ் மக்களது மனங்களில் ஒரு காலத்தில் நீக்கமற நிலைத்து நின்ற சொற்களாகும்.

அவ்வாறான, தனிநாடு என்ற நிலைக்குள், தமிழ் மக்களைத் தள்ளியதும், நீண்ட காலமாக அதிகாரத்தில் இருக்கும், இருந்து வருகின்ற சிங்கள அரசாங்களின் தொடர்ச்சியான பாரபட்சப் போக்கே ஆகும். புலிகளின் ஆயுதப்போராட்டம் மௌனித்ததன் (2009) பின்னர், தமிழீழம் என்ற தமிழர்களின் எண்ணமும் மௌனம் பெற்றிருந்தது.

ஆனால், உள்ளூராட்சித் சபைத் தேர்தலில் மஹிந்தவின் வெற்றியில், தமிழீழத்தின் பங்கும் கணிசமான அளவில் உள்ளது. அதாவது தமிழீழம் என்ற ஒற்றைச் சொல், பல இலட்சம் வாக்குகளை, அந்த அணிக்குக் கொட்டித் தீர்த்து, பெறுபேற்றை உயர்த்தி விட்டது.

ஏனெனில், நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையுடன் நாட்டில் புதிய பல திருப்பங்கள் ஏற்படும் என அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களும் எதிர்பார்ப்புகளுடன் காத்து இருந்தனர். அதிலும் குறிப்பாக, போரால் அனைத்தையும் இழந்த தமிழ் மக்களது எதிர்பார்ப்புகள் மேலும் அதிகமாகக் காணப்பட்டன.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் ஆகியோர் புதிய அரசமைப்பு, தமிழர்களுக்கு விடிவைத் தரும் எனக் கூறி வந்தனர்; பலமாக நம்பினர். அவ்வாறான நம்பிக்கையைத் தமிழ் மக்களுக்கும் ஊட்டினர் என்று கூடக் கூறலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே இவ்வாறு அரசமைப்பு மாற்றத்தினூடாகத் தீர்வுவரும் எனக் கூறி வந்தனர். அதிலும், சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் பங்கு, சற்று அதிகம் எனவும் கூறலாம்.

அத்துடன், அதுவரை ஆளும் அரசாங்கம் வீழ்ந்து விடக்கூடாது என்ற கருத்தியலையும் முன் வைத்தனர். அதற்காக பல விட்டுக் கொடுப்புகளையும் ஆதரவையும் நிபந்தனைகள் எதுவுமின்றி, வழங்கி வந்தனர்; வருகின்றனர்.

ஆனால், வரப்போகும் அரசமைப்பில் வடக்கு, கிழக்கு இணைப்பு இல்லை; ஒற்றையாட்சி முறையிலான தீர்வு; பௌத்தத்துக்கு முன்னுரிமை போன்ற, தமிழ் மக்களுக்கு ஒவ்வாத அம்சங்களே பொதிந்து உள்ளதாகப் பலரும் தொடர்ந்து கூறி வந்தனர்.

அதற்கு, இவர்கள் வெளியே இல்லை; உள்ளேதான் பொதிந்துள்ளன என்றவாறாகக் கூறினர்.
அதேநேரம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இவ்விடத்தில் இதைக் கௌவிப் பிடித்துக் கொண்டது. “இந்தா, தமிழர்களுக்கு தமிழீழம் தாரை வார்க்கப்படப் போகின்றது. போரில் வெல்ல முடியாததை சமாதானத்தில் பெறப் போகின்றார்கள்” என விசமப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள். தொடர்ந்து செய்தார்கள் – வெற்றி பெற்றார்கள்.

ஆகவே சம்பந்தன், தடியைக் கொடுத்து, அடி வேண்டியது போன்றதே இதுவாகும். ஏனெனில், பொதுவாக வியாபாரம் செய்வதெனில், வாடிக்கையாளரைக் கவரக்கூடிய வகையில் கதைக்கும் ஆற்றல் வேண்டும். இவ்வாறான, ஆற்றல் அவர்களது தொழிலைத் திறம்படச் செய்வதற்கான ஊக்கிகள் ஆகும்.

ஆனால், இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகளின் பெரும் முதலீடு, ஊக்கிகள் எல்லாமே இனவாதமும் மதவாதமும் ஆகும். அது நம்நாட்டில் வீழ்ந்து கிடக்கும் அரசியல்வாதியைத் தூக்கி நிறுத்தும்; நிறுத்தி உள்ளது. இதுவே நமது நீண்ட கால துன்பியல் பட்டறிவு.

இதில் சுவாரசியம் என்னவெனில், வரவுள்ள அரசமைப்பில் உள்ளே ஒன்றும் இருக்காது; வெளியேயும் ஒன்றும் இருக்காது என்று, மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு நன்கு தெரியும்.
ஆனாலும், தேர்தல் பிரசாரக் காலங்களில், அவர்கள் பயன்படுத்திய வலுவான சக்திமிக்க தாக்கம் செலுத்தக் கூடிய குண்டாக, தமிழீழம் விளங்கியது.

இது இவ்வாறு நிற்க, இரா. சம்பந்தன் கூறியது போல, மஹிந்த ஆட்சிக்கு வந்தால், மொட்டிலிருந்து தமிழீழம் மலரும் என்பதைப் போன்று, மைத்திரி, ரணில் தலைமையிலான கூட்டாட்சி ஆட்சிக்கு (2015) வந்தபடியால், அன்னத்திலிருந்து சமஷ்டி மலரும் என்று கூறி விட முடியுமா? “இல்லை” என்பதே பொருத்தமானதும் மிகச் சிறந்த விடையாகவும் அமையும்.

கடந்த மூன்று வருடங்களில், மைத்திரி நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட பல விடயங்கள், இன்னமும் கிடப்பில் உள்ளன. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள், இந்த மூன்று வருடங்களில், ஒரு வருடத்தை வீதியில் கழித்து விட்டார்கள்.

சிறைகளில் வாடும் உறவுகளை நல்லிணக்கம் மீட்கவில்லை. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், அவர்கள் விடயத்தில் மட்டும் நல்லிணக்கமும் சிறைப் பிடிக்கப்பட்டது போலவே உணர்கின்றனர்.

ஏனெனில், இதுவரை காலமும் கச்சதீவு அந்தோனியார் கோவிலில் தமிழ் மொழியில் மாத்திரமே ஆராதனைகள் இடம்பெற்று வந்தன. இதுவே, ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான விதியாகவும் இருந்தது.
ஆனால், இம்முறை சிங்கள மொழியிலும் ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன. இதற்கான பிரதான, வாசல் கதவைத் திறந்ததும் நல்லிணக்கம் ஆகும்.

சரி! நல்ல விடயம் நடக்கட்டும். ஆனால், அதே நல்லிணக்கம், மொழி தொடர்பில், தமிழ் மக்களுக்கும் சுபீட்சமான வாசலைத் திறந்து விட்டுள்ளதா என்பது கேள்விக் குறியே.

வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளிலிருந்து கொழும்புக்கு, அரச அலுவல்கள், வைத்தியத் தேவைகள் தொடர்பாகச் செல்லும் தமிழ் அலுவலர்கள், சிங்கள மொழி பேசக் கூடியவரை அழைத்துச் செல்லும் வழக்கம், இன்னமும் நீடிக்கின்றது.

குறித்த, சிங்கள அலுவலர் கதைத்தவுடன் நாம் கூட்டிச் சென்றவரைப் பார்த்து, “என்னவாம் என்ன சொல்கின்றார்” எனக் கேட்கும் அவலம் இன்னமும் நீடிக்கின்றது.

அடுத்து, மஹிந்த ஆட்சிக்காலத்தில், முல்லைத்தீவு, வட்டுவாகலில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான, 617 ஏக்கர் காணியில், கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டது.

இந்த நல்லாட்சியும் நல்லிணக்கமும் மீள அவற்றைத் தமிழ் மக்களுக்கு ஒப்படைப்பதற்குப் பதிலாக, நிரந்தரமாகவே நிலத்தை அபகரிக்க, அளவீடு செய்ய, அரச அலுவலர் அணியை அனுப்புகின்றது.

தமிழ் மக்கள் தமது நிலத்தை மீள வழங்குமாறு கெஞ்சி, இரந்து, மன்றாடுவதும் போராட்டம் நடத்துவதும் ஒன்றல்ல, இரண்டல்ல; பல வருடங்களாகத் தொடர்கின்றது. இவ்வாறாகத் தொடரும் ஏமாற்றங்களையும் காலம் கடத்தல்களையும் பெரும் பட்டியல் இடலாம்.

ஆகவே, கொழும்பில் எந்தக் கட்சிகள் ஆட்சி அமைத்தாலும் வடக்கு, கிழக்கில் தமிழர் வாழ்வியலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

ஈழத்தமிழ் மக்களின் தலைவிதி, புலிகளின் கையிலிருந்து, 19ஆம் திகதி மே மாதம் 2009ஆம் ஆண்டிலிருந்து, , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதை அவர்கள் சரிவரக் கையாளவில்லை. அதற்கான விளைவுகளாகப் பின்வரும் இரு நிகழ்வுகளைக் கூறலாம். முதலாவது, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பெரு விருட்சமான கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கில் இரு சபைகளில் மாத்திரமே தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய வலுவைப் பெற்றமை.

அடுத்தது, சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் உயிருடன் உள்ள வேளை, அவர்களுக்கு வவுனியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதிக்கிரியை என்பனவாகும்.

தெற்கில் நல்லிணக்க அரசாங்கத்தை உருவாக்கவும் அதைப் பாதுகாக்கவும் சக்தி உள்ள கூட்டமைப்பால், தமிழர் பிரதேசங்களில், எங்களுக்கிடையில், எங்களது கட்சிகளுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாமை, பெரும் சக்தி இன்மையின் வௌிப்படையான குறைபாடாகும். ஆகவே, இவர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்தல் சாலச்சிறந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேபாள நாட்டின் பிரதமராக சர்மா ஒலி மீண்டும் தேர்வு!!
Next post (அவ்வப்போது கிளாமர்)செக்ஸ் அடிமை (sexual addiction)