சர்வகட்சி மாநாடும் பிரஜாவுரிமை பிரச்சினையும்!!

Read Time:19 Minute, 40 Second

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 133)

சர்வகட்சி மாநாட்டின் ‘இணைந்த குழு’

சர்வகட்சி மாநாட்டில் அரசாங்க முறைமை பற்றியும் பயங்கரவாத ஒழிப்புப் பற்றியும் இரு குழுக்களாகப் பிரிந்து, ஆராய்ந்த மாநாட்டினர், இணைந்த குழுவாக ஒன்றிணைந்தனர்.

இருவிடயதானங்கள் பற்றியதுமாக, அவர்கள் இணைந்து கலந்துரையாடுவதுடன், அதனடிப்படையிலான அறிக்கையிடல், பின்வரும் தலைப்புகளில் அமைய வேண்டும் என்ற வழிகாட்டும் வரைமுறைகளும் வழங்கப்பட்டிருந்தன.

அந்த வழிகாட்டும் வரைமுறைகளானவை:

(1) நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பேணப்படுவதுடன், அதன் அடிப்படையில் அனைத்துச் சமூகங்களினதும் உறுப்பினர்கள் நல்லிணக்கத்துடன் வாழத்தக்கதானதும், சகல பிரதேசங்களிலும் தமது கருமங்களை அமைதியான முறையில் கொண்டு நடத்தத்தக்கதுமானதுமான அரசாங்க முறைமையொன்றை உறுதிசெய்தல்.

(2) கல்வியில் நியாயமான வாய்ப்புகளை வழங்குதல்.

(3) தொழிலில் நியாயமான வாய்ப்புகளை வழங்குதல்.

(4) காணி உரிமை நிர்ணய அமைப்பு முறைகளை வழங்குதல்.

(5) சகல பிரதேசங்களிலும் வசிப்போருக்குரிய பாதுகாப்பு அமைப்பு முறைகளை வழங்குதல்.

(6) பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குதல்.

(7) வேறு விடயங்கள். இந்தத் தலைப்புகள் எதுவும் நேரடியாக அதிகாரப் பகிர்வு பற்றியோ, அனெக்ஷர் ‘சி’யின் அடிப்படையிலான பிராந்திய சபைகள் பற்றியோ பேசவில்லை.

இந்த முயற்சியை, காலங்கடத்தும் செயல் என்று சிலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதன் உண்மைத் தன்மை வௌித்தெரிய, இன்னும் கொஞ்சக் காலம் தேவைப்பட்டது.

ஜனவரி மாதத்தில் சில தினங்கள், பெப்ரவரி மாதத்தில் சில தினங்கள், மார்ச் மாதத்தில் சில தினங்கள் என்று 1984 மார்ச் 15ஆம் திகதி வரை, இணைந்த குழு கூடிக் கலந்தாய்ந்தது.

பெருந்திரள்வாதமும் இனவாதமும் இனப்பிரச்சினைத் தீர்வும்

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என தமிழ் சிறுபான்மை முழுவதும் ஒன்றுபட்டு, அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை முன்னிறுத்திக் கொண்டிருந்தமை, ஜே.ஆருக்கு பெருஞ்சவாலாக இருந்தது.

அனெக்ஷர் ‘சி’யை முழுமையாகவன்றி, அதன் பெரும்பான்மையையேனும் அமுல்படுத்தும் எண்ணம் ஜே.ஆருக்கு இருந்திருந்தால், அதை அவர் மிக இலகுவாகவே செய்திருக்கலாம்.

அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை ஜே.ஆர் எதிர்ப்பதைவிட, ஏற்றுக்கொள்வதற்கான நியாயங்களே நிறைய இருந்தும், ஜே.ஆர் அதைச் செய்யத் தயாராக இல்லாதிருந்தது இந்த நாட்டின் துரதிர்ஷ்டம். இது ஜே.ஆர் என்ற தனிமனிதனின் தவறு என்பதிலும், இந்த நாட்டின் அரசியலில் கட்டமைக்கப்பட்டிருந்த உபாக்கியானத்தின் விளைவென்றே கருத வேண்டும்.

பெருந்திரள்வாத (populism) அரசியல் என்பது, இந்தநாட்டில் இனவாதத்தின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு, இந்த நாடு கொண்டாடும் மகாவம்சமே சான்று.

மகாவம்சத்தின் கதாநாயகனான சிங்கள-பௌத்த துட்டகைமுனு, தமிழனான எல்லாளனைக் கொன்று, வென்று இந்த நாட்டை ஒன்றுபடுத்தி, சிங்கள-பௌத்தத்தை ஓங்குவித்தான் என்ற பகட்டாரவாரமே (rhetoric), இலங்கையின் பெரும்பான்மை அரசியலின் அடிநாதமாக இருக்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில், துட்டகைமுனு என்ற பாத்திரமே, தலைமைத்துவத்துக்கான மதிப்பீட்டு அளவையாகிறது.

ஆகவே, இதன்வழியிலான பெருந்திரள்வாத அரசியலை முன்னெடுப்பதற்கு, இங்கு தமிழர்களை வென்றாக வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.

சிறுபான்மை இனமொன்று, அதுவும் ஆயுதக்குழுக்கள் சிலதைக் கொண்டுள்ள இனம், அந்த இனம் கோருவதைக் கொடுத்துவிட்டால், இனப்பிரச்சினை தீரும். ஆனால், அப்படி இனப்பிரச்சினை தீர்வதை, எவ்வளவு தூரம் பெருந்திரள்வாத அரசியல் ஒரு வெற்றியாகக் காணும் என்ற கேள்வி எழுகிறது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுமுயற்சிகள், இன்று வரை தோற்றுக் கொண்டேயிருப்பதற்கு, இந்த அரசியல் அடிப்படைதான் காரணமெனலாம். இந்தப் பெருந்திரள்வாத அரசியல் கட்டியெழுப்பிய பகட்டாரவாரப் புனைவானது, ஒரு போலி அல்லது வெற்று மாயை என்பதை எடுத்துக்காட்டும் பலமான பெரும்பான்மை அரசியல் சக்திகள் இலங்கையில் இல்லை என்பதும், அதைத் தகர்த்துக் கொண்டு வௌியில் வரத்தக்க தலைமைத்துவப் பலம், எந்தத் தலைமையிடமும் இதுவரை இருக்கவில்லை என்பதும் துர்ப்பாக்கியமானது.

ஆகவே, ஜே.ஆர் தீர்வொன்றை வழங்கிவிட்டால், “தமிழர்களுக்கு நாட்டைக் கூறுபோட்டுக் கொடுத்தார்” என்று, சிறிமாவோ தலைமையிலான மற்றைய பெரும்பான்மைப் பெருந்திரள்வாதத் தரப்பு, பிரசாரத்தை முன்னெடுக்கும்,

சிறிமாவோ தரப்பு தீர்வை வழங்கினால், அதே பிரசாரத்தை ஜே.ஆர் தரப்பு முன்னெடுக்கும். அரசியல் பலத்துக்கான, ஆட்சி அதிகாரத்துக்கான இந்தப் பெருந்திரள்வாதச் சண்டையில் இந்த நாடும், மக்களும் தோற்றுக் கொண்டிருந்தார்கள்; இன்றும் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நாடற்றவர்களுக்குப் பிரஜாவுரிமை

அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை நிறைவேற்ற, ஜே.ஆரிடம் எண்ணம் இல்லாதபோதும், ஏறத்தாழ மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், சர்வகட்சி மாநாட்டின் மூலம், ஏதாவது நடந்ததாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. அந்தச் சூழலில் ஜே.ஆருக்கு வசமாகக் கிடைத்தது, சௌமியமூர்த்தி தொண்டமான் வைத்த ஒரு கோரிக்கை.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் தலைமையாக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமான், 1964இல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம், 1974 சிறிமா-இந்திரா காந்தி ஒப்பந்தம் ஆகியவற்றின்படி, அன்று இலங்கையிலிருந்த ஏறத்தாழ, 975,000 இந்திய வம்சாவளி மக்களில் 600,000 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும், 375,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஒரு மக்கள் கூட்டத்தை அவர்களது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் கூறுபோடும் “குதிரைப்பேரம்” முடிவாகியிருந்தது.

இதன் அடிப்படையில், 506,000 பேர் மட்டுமே இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆக, இந்திய ஒதுக்கீட்டுக்குள் வரவேண்டிய 94,000 பேர் மற்றும் அவர்களது இயற்கைச் சந்ததிகள், தொடர்ந்தும் இலங்கையில், நாடற்றவர்களாகத் தொடர்ந்த நிலையில், அவர்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கையை, சர்வகட்சி மாநாட்டில் தொண்டமான் முன்வைத்திருந்தார்.

இது ஒப்பீட்டளவில் ஜே.ஆருக்குத் தீர்க்கக்கூடிய ஒரு பிரச்சினையாகத் தெரிந்தது. அதற்கு, சில காரணங்களை ஊகிக்கலாம்.

இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் கோரிக்கைகளின் முன்னுரிமைகள், இலங்கைத் தமிழ் மக்களின் (குறிப்பாக வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின்) அரசியல் முன்னுரிமைகளிலும் வேறுபட்டிருந்தன.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மூன்று ஸ்தாபகத் தலைவர்களுள் ஒருவரான தொண்டமான், அதனின்று விலகிச் செயற்படுவதற்கும் இது முக்கிய காரணமாகும்.

அதிகாரப்பகிர்வு, தனி அலகு என்பவை அன்றைய சூழலில் இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் தலைமைகளின் அரசியல் முன்னுரிமையாக இருக்கவில்லை. பிரஜாவுரிமை, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி என்பவையே இந்திய வம்சாவளித் தலைமைகளின் அரசியல் முன்னுரிமையாக இருந்தன.

இதை அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுவதன் மூலமே, அடைய முடியும் என்பது தொண்டானின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. இறுதிவரை அவர் அதன்வழியிலேயே பயணித்திருந்தார்.
இந்த அரசியல் முன்னுரிமைகளின் வித்தியாசத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஜே.ஆர் நினைத்திருக்கலாம். இதுவும் ஒருவகைப் பிரித்தாளும் தந்திரம்தான்.

தமிழர்கள் என்ற ஓர் அடையாளத்தின் கீழ், தமிழ் பேசுவோர் ஒன்றித்திருப்பதில் இருக்கும் பலம், அவர்கள் பிரதேச ரீதியாக, மதரீதியாகப் பிளவுற்று நிற்கும்போது பலம் குறைந்தவர்களாகிறார்கள்.

மற்றையது, நாடற்றவர்களாக இருக்கும் மக்களுக்குப் பிரஜாவுரிமையை வழங்குவது, தமக்கு ஆதரவான வாக்குவங்கியையும் உயர்த்தக்கூடும் என்றும் ஜே.ஆர் எண்ணியிருக்கலாம்.

அத்தோடு தொண்டமான், ஜே.ஆரின் நம்பிக்கைக்குரிய அமைச்சராகவும் இருந்தார். ஆனால் இதைச் செய்வதும் ஜே.ஆருக்கு சவாலானதாகவே இருந்தது.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், பிரஜாவுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், இலங்கையின் இன-மைய அரசியலை வைத்துப் பார்க்கையில், அன்று, இலங்கையில் வாழ்ந்துவந்த அனைத்து இந்திய வம்சாவளி மக்களுக்கும் பிரஜாவுரிமை வழங்கப்பட்டிருந்தால், அது இலங்கையின் சனத்தொகையில், சிறுபான்மையினரின், அதிலும் குறிப்பாக தமிழர்களின் எண்ணிக்கையை ஏறத்தாழ பத்து இலட்சம் அளவில் உயர்த்தியிருக்கும் என்பது முக்கிய காரணம் எனலாம்.

இன்றும் நாடற்றிருந்தவர்களுக்கு பிரஜாவுரிமையை வழங்கினால், தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். இதைப் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி ஜே.ஆர் முன்பு தொக்கி நின்றது.

குறிப்பாக, சர்வகட்சி மாநாட்டுக்குப் பங்காளிகளாக ஜே.ஆர் அழைத்திருந்த மகாசங்கத்தினர், இதை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டிய சவால், ஜே.ஆர் முன்பு இருந்தது.

‘ஆசியாவின் நரி’, ஒரு கல்லில் மீண்டும் சில மாங்காய்களை வீழ்த்துவதற்கு காய்களை நகர்த்தியது.

மகாசங்கத்தினரைச் சம்மதிக்க வைத்தல்

தொண்டமானிடம் நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமையை வழங்க ஜே.ஆர் சம்மதித்தார். அடுத்து, மகாசங்கத்தினரைத் தனியாகச் சந்தித்துப் பேசிய ஜே.ஆர், இந்திய வம்சாவளி மக்களில் நாடற்றிருந்தவர்களுக்குப் பிரஜாவுரிமை வழங்கும் முன்மொழிவை, தேர்ந்த இராஜதந்திரத்துடன் முன்வைத்தார்.

இலங்கையின் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதை மகாசங்கத்தினர் கடுமையாக எதிர்த்து வந்தனர். மகாசங்கத்தினரிடம் பேசிய ஜே.ஆர், இந்திய வம்சாவளியினர் நலன் என்பது மட்டுமே இலங்கையில் தலையிடுவதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரே நியாயமான உரிமை.

நாடற்றிருக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கி அவர்களை இலங்கைப் பிரஜைகள் ஆக்கிவிட்டால், இலங்கையின் விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு எந்தவொரு தார்மீக உரிமையும் கிடையாது போகும் என்று மகாசங்கத்தினரின் இந்திய-எதிர்ப்பை, தனது காய்நகர்த்தலுக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார் ஜே.ஆர்.

ஆனால், இது சிறுபான்மையினரின் எண்ணிக்கையை அதிகரிக்குமே என்ற ஐயம் முன்வைக்கப்பட்ட போது, தற்போது இலங்கையில் இருக்கும், நாடற்ற இந்திய வம்சாவளி மக்களின் எண்ணிக்கை, பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தோடு ஒப்பிட்டால், மிகக் குறைவானதே என்றும் ஜே.ஆர் சுட்டிக்காட்டினார்.

இதைத் தொடர்ந்து, மகாசங்கத்தினர் தமது முடிவை வௌியிட்டிருந்தனர். “தம்மை, இந்தியர் என்று அழைத்துக் கொள்ளும் ஒரு மக்கள் கூட்டத்தை நாம் கொண்டிருக்கக் கூடாது. சிறிமா-சாஸ்த்ரி ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கு மீள அனுப்ப வேண்டியவர்களை அனுப்பிவிட்டு, எஞ்சியவர்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமையை வழங்குவதன் மூலம், இதை நாம் இலகுவில் சாதிக்கலாம். எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்காக அவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதை எதிர்ப்பதில்லை என்று மகாசங்கத்தின் உயர்குழு தீர்மானித்திருக்கிறது” என்று அந்த அறிக்கை கூறியது.

இந்தியாவுக்கு மீள அனுப்பப்பட வேண்டியவர்கள் அனுப்பப்பட வேண்டும் என்று தொடர்ந்தும் சொல்வது, இந்த நாட்டில் தலைமுறைகள் கடந்து, வாழ்ந்துவிட்ட ஒரு மக்கள் கூட்டத்தை, அவர்களது விருப்பு வெறுப்புகளை நோக்காது, கட்டாய நாடு கடத்தும் செயலன்றி வேறேது?

இந்த விடயம் சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டபோது, மனிதாபிமான மற்றும் அரசியல் காரணங்களுக்காக நாடற்றவர்களாக எஞ்சியுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு, இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் இந்திய வம்சாவளி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற அடிப்படையில், எமது உள் விவகாரங்களில், இந்தியா தலையிடும் என்றும் பிரதமர் ரணசிங்க பிரேமதாஸ பேசியிருந்தார்.

சிறிமா-சாஸ்திரி, சிறிமா- இந்திரா காந்தி ஒப்பந்தங்களைத் தொடர்ந்தும், நாடற்றவர்களாக இருந்த இந்திய வம்சாவளியினருக்குப் பிரஜாவுரிமை அளிக்க மகாசங்கத்தினர் சம்மதித்தனர்.

இதன் மூலம் இந்தியா, இலங்கையில் தலையிடும் தார்மீக உரிமையை இழக்கும் என்பது, மகாசங்கத்தினர் இதற்குச் சம்மதிக்க முக்கிய காரணமாக இருந்தது.

ஏனெனில் இந்த முடிவை, சர்வகட்சி மாநாடு ஏற்றுக்கொண்டதை அறிவித்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மகாசங்கத்தினர், இந்த விடயத்தை சுட்டிக் காட்டியிருந்தனர்.

அந்த ஊடக சந்திப்பில் பேசிய வல்பொல ராஹுல தேரர், “மகாசங்கத்தின் உயர்குழாமின் முன்மொழிவின்படி, நாடற்றவர்கள் என்ற நிலையை இல்லாதொழிக்க, சர்வகட்சி மாநாடு ஏகமனதாகத் தீர்மானித்திருக்கிறது. ஆகவே, தற்போதிருந்து இலங்கையின் விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. இலங்கையிலுள்ள தமிழர்கள் எங்கள் பிரஜைகள்; அவர்கள் சார்பில் இந்தியா தலையிட முடியாது” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் குவைத் அரசு நீட்டிப்பு!!
Next post உயிரை காப்பாற்ற வாட்ஸ் அப்பில் பொதுமக்கள் கதறல் வீடியோ 30 நாள் போர் நிறுத்தத்தை உடனே சிரியா அமல்படுத்த வேண்டும்: ஐநா தலைவர் உத்தரவு!!