குளிர்கால ஒலிம்பிக்ஸ்: உறையும் பனியில் முகிழ்த்த உறவு!!
கோடைகால ஒலிம்பிக் போட்டியை அறியும் அளவுக்கு நாம், குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அறிவதில்லை. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியே பலவற்றைச் சாதித்திருக்கின்றன. இம்முறையும் அதற்கு விலக்கல்ல.
தென்கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி, அதன் போட்டிகளுக்காகவன்றி, அதைச் சூழ நிகழும் அரசியல் விடயங்களுக்காக மிக்க கவனிப்புக்கு உள்ளாகிறது.
தென்கொரியாவில் நடைபெறும் போட்டிகளுக்கு வடகொரியா கொடுத்த முக்கியத்துவம் இவற்றுள் ஒரு முக்கிய விடயமாகும்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க அணிவகுப்பில், போரால் பிரிக்கப்பட்ட வட கொரியாவும் தென் கொரியாவும் கொரிய தீபகற்பத்தின், ஒரே கொடியின் கீழ் அணிவகுத்தன.
மகளிர் ஐஸ் ஹொக்கி போட்டியில், இரு நாடுகளும் ஒரே அணியாகக் களமிறங்கின. விளையாட்டு வீரர்கள் 22 பேருடன் இசைக் கலைஞர்கள், அதிகாரிகள் உள்பட 400க்கும் மேலானோரை வட கொரியா, தென் கொரியாவுக்கு அனுப்பியிருந்தது. இது, வட – தென் கொரிய உறவை மேம்படுத்தும் அதேவேளை, கொரிய இணைப்புக்கான வாய்ப்பை வலுவாக்கியுள்ளது என்பதை மறுக்கவியலாது.
இம்முறை ஒலிம்பிக் போட்டிக்கு, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், தனது சகோதரி கிம் யோ ஜொங்கை அனுப்பி, இருநாடுகளுக்கும் இடையிலான நேரடி உறவுகளின் தேவையையும் தனது பரஸ்பர நட்பையும் வெளிப்படுத்தினார்.
1950ஆம் ஆண்டு முதல், 1953ஆம் ஆண்டு வரை நீடித்த, கொரியப் போருக்குப் பின், தென்கொரியாவுக்கு முதலில் சென்ற வடகொரிய ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர் கிம் யோ ஜொங் ஆவார்.
மறைந்த தலைவர் கிம் ஜொங் இல்லின் இளைய மகளும் கிம் ஜொங் உன்னை விட, நான்கு ஆண்டுகள் இளையவருமான கிம் யோ ஜொங், தனது சகோதரருக்கு மிக நெருக்கமானவர் எனப்படுகிறது.
இவரை, அமெரிக்கா தனது கறுப்புப் பட்டியலில் வைத்திருக்கிறது. வடகொரியாவின் ‘மனித உரிமை மீறல்களில்’ அவருக்குத் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அதேவேளை, மனிதஉரிமை மீறல்கள் பட்டியலில் உள்ள ஒருவர், ஒலிம்பிக் நிகழ்வுகளில் பங்கேற்றலாகாது என அமெரிக்கா எதிர்ப்புக்கூறியது. இருந்தும் தென்கொரியாவின் அழைப்பின் பேரிலேயே அவர் வருவதாகவும், ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் நாடு என்கிற வகையில், விருந்தினரை அழைக்கும் உரிமை அதற்கு உள்ளதாகவும் சர்வதேச ஒலிம்பிக் சபை கூறியது.
கிம் ஜொங் உன்னின் வருகையை தென்கொரிய மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். மேற்குலக ஊடகங்களோ, அவருடைய வருகையைக் கண்டித்ததோடு, “வடகொரியா, ஜனநாயகத்தைக் கோமாளிக் கூத்தாக்குகிறது” என எழுதின.
‘வடகொரியா, தனது அணுவாயுத முயற்சிகளை முற்றாக நிறுத்த வேண்டும். வடகொரியா அதைச் செய்ய மறுப்பின், அதன் மீது தாக்குதல் தொடுத்தாவது அதை நிறுத்த வேண்டும்’ என்ற தொனியில் அமெரிக்க ஊடகங்கள், ஒரு பொதுப்புத்தி மனநிலையைக் கட்டமைக்கின்றன.
இந்நிலையில், வட – தென் கொரிய உறவு, அமெரிக்க நலன்களுக்கு வாய்ப்பானதல்ல; இதனாலேயே வடகொரியாவுடன், தென்கொரியாவின் உறவு குறித்து, அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கிறது.
கொரிய இணைப்பு, இன்று வரை இயலாமைக்கு, அமெரிக்காவே பிரதான காரணி. அதன் வரலாற்றுப் பின்னணி முக்கியமானது.
இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பானின் கொலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட கொரிய மக்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், தேசிய விடுதலைப் படையைக் கட்டியமைத்து, அன்றைய சோசலிச சோவியத் படைகளின் உதவியுடன், கொரியாவின் வடபகுதியை 1945இல் விடுதலை செய்து, சுதந்திர அரசைப் பிரகடனம் செய்தனர்.
தென்பகுதியில் அனைத்து கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும் இணைந்து, ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர் லியூ வூன் கியூங் தலைமையிலான கொரிய மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தனர்.
ஆனால், ஜப்பானின் கொலனிகளைக் கைப்பற்றிய அமெரிக்கா, தென் கொரியாவை ஆக்கிரமித்து, அதன் தேசிய விடுதலை இயக்கத்தை ஒடுக்கி, லியூ வூன் கியூங்கைப் படுகொலை செய்து, சிங்மன் ரீ என்ற கம்யூனிச விரோதியின் சர்வாதிகாரத் தலைமையில், அமெரிக்க விசுவாச பொம்மை ஆட்சியை நிறுவியது என்பதை, ஊடகங்கள் இப்போது சொல்வதில்லை.
அமெரிக்கத் தலையீட்டாலேயே, 1948இல் கம்யூனிஸ்டுகள் தலைமையில் வடகொரியாவில் சுதந்திர அரசும், தென்கொரியாவில் அமெரிக்க ஆதிக்கத்துக்கு உட்பட்ட பொம்மையாட்சியுமாக 38ஆவது அட்சரேகைக்கு வடக்கு – தெற்காகக் கொரியா பிளவுபட்டது.
வடகொரியாவின் பகுதிகளைக் கைப்பற்ற விரும்பிய தென்கொரியா, வடகொரியா மீதான தாக்குதல் நடவடிக்கைகளைத் தூண்டியது. வடகொரியாவின் பகுதிகளைக் கைப்பற்றி, தென்கொரியாவை விரிவுபடுத்துவதே அமெரிக்க நோக்கமாக இருந்தது.
இதேவேளை, அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட நாடாக உள்ளதால், தென்கொரியாவை ஒரு சுதந்திர நாடாக ஏற்க முடியாது என்றும் இரு தேசங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் வடகொரியா, தொடர்ந்து வாதிட்டு வந்தது.
தென்கொரியாவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, 1950இல் தென்கொரிய பொம்மை ஆட்சியாளர்களை எதிர்த்து, வடகொரியா படையெடுத்து, பல பகுதிகளைக் கைப்பற்றியது. இதற்கெதிராக, அமெரிக்கா தலைமையில் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், கம்யூனிச அபாயத்தை முறியடிப்பது என்ற பெயரில் போரில் குதித்தன.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, போரிடுவதற்காகப் படைகளை அனுப்பிய முதலாவதும் இறுதியுமான சந்தர்ப்பமாக இது அமைந்தது.
இது தொடர்பான வாக்கெடுப்பில், சோவியத் ஒன்றியம் இச்செயலைப் புறக்கணித்து வெளியேறியமையால், ஏனைய நாடுகள், படைகளை அனுப்பும் அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஆதரவளித்தன.
இக்காலப் பகுதியில் சீனப்புரட்சியின் விளைவால், தனிநாடாகத் தன்னை அறிவித்த தாய்வான், சீனக் குடியரசு என்ற பெயருடன், பாதுகாப்புச் சபையில் இருந்தது. 1971 வரை, தாய்வானே பாதுகாப்புச் சபையில் அங்கம் வகித்து வந்தது. 1971இலேயே மக்கள் சீனம், ஏற்றுக்கொள்ளப்பட்டு, பாதுகாப்புச் சபையில் அங்கத்துவம் வழங்கப்பட்டது.
பல்லாயிரக் கணக்கானோரைப் பலிகொண்ட கொரியப் போரே, கெடுபிடிப்போரின் தொடக்கமாக இருந்தது.முடிவற்றுத் தொடர்ந்த போர், போர் நிறுத்த ஒப்பந்தமொன்றின் விளைவால், முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஒரே தேசிய இனத்தவரான கொரிய மக்கள், வடகொரியா மற்றும் தென்கொரியா எனத் தனித்தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டனர்.
தென்கொரிய சுதந்திர அரசாங்கத்தைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நிலைநாட்டுவது என்ற போர்வையில், அமெரிக்கா பல ஆயுதத் தளங்களைத் தென்கொரியாவில் நிறுவியுள்ளது. அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது, இப்போது வடகொரியாவை மிரட்டப் பயன்படும் ஒரு புதிய உபாயமாகும். அமெரிக்காவின், ஆசிய ஆதிக்க முனைப்பின் பிரதான தளமாகத் தென்கொரியா உள்ளது.
சமகாலத்தில் அமெரிக்கா, வடகொரியாவை மிரட்டுவதையும் தென்கொரியா மீது அதன் பூரண ஆதிக்கத்தையும் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் மீதான அமெரிக்க ஆவலுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
இப்பிராந்தியத்தில் வளரும் சீனச் செல்வாக்கைத் தடுப்பதும், அமெரிக்க நட்பு நாடுகளை இணைத்து, கூட்டுத் தாக்குதல் தொடுப்பதுமே அமெரிக்க நோக்கங்களாகும்.
வளைகுடா நாடுகளிலிருந்து கப்பல் மூலம் எண்ணெயை, மியான்மார் வரை கொண்டுவந்து, பின்னர் மியான்மாரிலிருந்து நிலத்தடிக் குழாய் வழியாக, சீனாவுக்குக் கொண்டுசெல்லும் திட்டத்தை சீனா செயற்படுத்துகிறது.
இத்திட்டத்தைத் தொடங்காமல் தடுக்கவே, மியான்மாரில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் பெயரில், அமெரிக்கா தலையிட்டு, அந்நாட்டை, சீனாவின் செல்வாக்கிலிருந்து மீட்டுத் தன்பக்கம் வளைத்தது.
அமெரிக்காவின் இத்திட்டம் கைகூடின், சீனாவுக்கு எண்ணெயைக் கப்பல் மூலம் கொண்டு செல்லும் ஒரே வழியாக, மலாக்கா நீரிணை மட்டுமே மிஞ்சும். அப்பகுதியிலுள்ள நாடுகளைத் தனது கூட்டாளிகளாக்கி, இராணுவத் தளங்களை அமைத்து, சீனாவைச் சுற்றிவளைப்பது அமெரிக்காவின் திட்டம்.
கொரிய இணைப்புக்குப் பலதடவைகள், சீனா முயன்றுள்ளமையும் இணைப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமையும் கவனிக்க உகந்தன.
வலிந்து பிரித்த, ஒரே தேசமான கொரியா, மீள ஒரே நாடாக இணையவும், கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவவும் வேண்டும் என்பது சீன நிலைப்பாடாகும்.
கொரிய தீபகற்பத்தில், அமைதியை வேண்டி, வட, தென் கொரிய அரசுகளோடு அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் ஆகியன உட்பட்ட ஆறு நாடுகளும் கூடி, பேச்சுகளை நடத்த வேண்டுமென்ற ஆலோசனையை சீனா முன்வைத்தது. அதன்படி 2003ஆம் ஆண்டு, ஆறு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தின.
வடகொரியா, தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதெனவும், அதற்கு ஈடாகப் பொருளாதாரத் தடைகளை நீக்கி, வடகொரியாவுக்கு எரிபொருள் வழங்குவது எனவும் முடிவாகி, அனைத்துலக அணுசக்தி முகாமை மூலம், வடகொரியாவின் அணுசக்தித் திட்டங்களைச் சோதனையிட்டுக் கண்காணிப்பது நடந்தது.அமெரிக்கா உடன்பாட்டை மீறி நடந்து, இம்முன்னேற்றத்தைத் திட்டமிட்டுச் சீர்குலைத்தது.
கெடுபிடிப் போருக்குப் பின், கிழக்கு, மேற்கு ஜேர்மனிகள் இணைந்ததைப் போல, வட – தென் கொரியாக்கள் இணைவது ஏன் இன்னமும் இயலவில்லை என்பது நோக்கற்குரியது.
ஆசியாவில், அமெரிக்காவின் பிரதான அடியாளாகச் செயற்பட்டு வரும் ஜப்பான், கொரிய இணைப்பை விரும்பவில்லை என்பதும் முக்கியமானது. இதனாலேயே, ஒலிம்பிக் போட்டியைக் காணவந்த, அமெரிக்க துணை ஜனாதிபதியும் ஜப்பானியப் பிரதமரும் இணைந்து, “மேலும் தாக்கம் தரக்கூடிய பொருளாதாரத் தடைகளை, வடகொரிய மீது பிரயோகிக்க வேண்டும். இதுவே, வடகொரியாவை அடிபணியச் செய்யும்” என்று, ஒரே குரலில் கோரிக்கை விடுத்தனர்.
கொரிய இணைப்பு, அமெரிக்க, ஜப்பானிய ஆதிக்க நலன்களுக்கு எதிரானது. வடக்கும் தெற்கும் மீள இணைந்து, கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவினால், அமெரிக்க இராணுவம் அங்கிருந்து வெளியேற நேரும். தனது மேலாதிக்க நோக்கங்களுக்காக, பசுபிக் கடல் பகுதியிலும் குறிப்பாக, சீனாவை அண்டிய பகுதிகளிலும் ஜப்பானின் ஒக்கினவா தீவிலும் நிரந்தரமாகத் தமது படைகளைக் குவிப்பது, அமெரிக்க மேலாதிக்கவாதிகளுக்கு அவசியம்.
மேலும், கொரியப் பிரச்சினையைக் காட்டி, தென்கொரியாவிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் ஆயுத வியாபாரம் செய்யவும், ஆசிய பசுபிக் கடல் பிராந்தியத்தில் மேலாதிக்கம் செலுத்தவும் அமெரிக்காவுக்கு, கொரிய பிரச்சினை அவசியம் தேவை.
இவற்றாலேயே, இன்னமும் கொரிய தீபகற்பத்தில் அமைதி மீளவில்லை. தென்கொரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள், 2012இல் வெளியேறும் என்ற ஒப்பந்தமும் நிறைவேறவில்லை.
உலகின் கடற்போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு, தென்சீனக் கடலின் வழியே நடப்பதாலும் தொலைத்தொடர்புக் கம்பி வடங்கள் நிறைந்த முக்கிய கடற்பகுதியாக இருப்பதாலும், இப்பகுதி போர்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.
மேலும், தென்சீனக் கடலில் 200க்கும் மேற்பட்ட சிறிய, ஆளில்லாத் தீவுகளின் கூட்டங்கள் உள்ளன. எண்ணெய் வளமும் எரிவாயு வளமும் கடலுணவு வளமும் நிறைந்துள்ளதால் இத்தீவுகளுக்கு உரிமை கோரி, வடக்கே சீனா மற்றும் தாய்வான், கிழக்கே பிலிப்பைன்ஸ், மேற்கே வியட்நாம், மலேசியா மற்றும் புரூணை, தென்கிழக்கே இந்தோனேசியா என இப்பிராந்திய நாடுகள் உரிமை கோருகின்றன.
தென்சீனக்கடலில் உள்ள இத்தீவுகள், யாருக்குச் சொந்தம் என்பதை, அப்பிராந்திய நாடுகள் தங்களுக்குள் பேசித்தீர்வு காண வேண்டும். இதில் தலையிட்டுத் தீர்ப்புக் கூற, அமெரிக்காவுக்கோ பிற வல்லரசுகளுக்கோ உரிமையில்லை.
ஆனால், அவ்வாறு தலையிட முகாந்திரத்தைத் தேடுமாறே, தனது நட்பு நாடுகளின் பெயரால் அமெரிக்கா குறுக்கிட முனைகிறது. பொருளாதார நெருக்கடிகள் முற்றி வருவதால் அமெரிக்காவும் சில ஐரோப்பியக் கூட்டாளிகளும் ஆசிய – பசுபிக் பகுதி மீது குறி வைத்து, சீனாவின் செல்வாக்கைத் தடுத்து, இப்பிராந்தியத்தின் மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கின்றன.
கிழக்குச் சீனக் கடலில் உள்ள எரிவாயு வளமிக்க ‘சென்காகுஃடியாஓயு’ தீவுகளுக்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கோருகின்றன. எண்ணெய், எரிவாயு வளம்மிக்க ‘ஸ்பாட்லி’ தீவுகள் மீது, பாரம்பரிய உரிமை கோரும் சீனாவும் தாய்வானும் ஜப்பானை மறுக்கின்றன.
பாரசெல்ஸ் தீவுகளில் சிலவற்றை, வியட்நாமும் தாய்வானும் உரிமை கோருகின்றன. இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும் புரூணையும் மேலும் சில தீவுகளுக்கு உரிமை கோருகின்றன.
இவ்வாறு, சிறுசிறு பிரச்சினைகள் இப்பிராந்திய நாடுகளிடையே உள்ளன. இதில், தனது ஆதிக்கத்தைத் தக்க வைக்க, அமைதியற்ற கொரியத் தீபகற்பமும் பிரிந்த கொரியாக்களும் அமெரிக்காவுக்குத் தேவை. இந்நிலையிலேயே, தென்கொரியாவுக்கான வடகொரியாவின் அரச பிரதிநிதிகளின் அண்மைய விஜயம் நிகழ்ந்தது.
கிம் யோ ஜொங்கின் தென்கொரிய விஜயம், பலர் எதிர்பாராதது. வடகொரியாவிடம் இவ்வாறான சமாதான சமிக்ஞையை மேற்குலகம் எதிர்பார்க்கவில்லை.
ஏனெனில், வடகொரியாவை உலகின் மோசமான, அமைதியை விரும்பாத நாடு என்றும் பயங்கரவாத நாடு என்றும் அமெரிக்காவும் அதன் ஊடகங்களும் தொடர்ந்து கட்டியமைத்த பிம்பம் தகர்ந்துள்ளது.
எனவே, அமெரிக்க ஊடகங்கள் பின்வருமாறு எழுதின: ‘உலகின் கவனத்தைப் பெற, வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன், ஏவுகணைகளை ஏவ வேண்டியதில்லை. அதிலும் சக்திவாய்ந்த ஆயுதங்களை அவர் வைத்துள்ளார். அது, அவரது பெண் தூதர்கள். கிம் ஜொங் உன்னின் சமீபத்திய தூதர், வசீகரத் தாக்குதல் நடத்தக் கூடியவர். கிம் யோ ஜொங், தென்கொரியத் தொலைக்காட்சி பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளார். இது ஆபத்தானது’.
இந்த ஒலிம்பிக் போட்டி, இரு கொரியாக்களும் இணைவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. ஒரே கொரியத் தீபகற்பக் கொடியை ஏந்தியபடி, இருநாட்டு வீரர்களும் அணிவகுத்தமை, எல்லைகள் மட்டுமே பிரிந்துள்ளன; மக்கள் அல்ல என்பதைக் கோடிட்டுக் காட்டியது.
வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னை வடகொரியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். தென்கொரிய ஜனாதிபதி மாளிகையில் நடந்த அதிகாரபூர்வ சந்திப்பின்போது, சித்திரக் கையெழுத்து அழைப்பிதழை, கிம் ஜொங் உன்னின் சகோதரி கிம் யோ ஜொங், ஜனாதிபதி மூன் ஜே இன்னிடம் வழங்கினார்.
கொரியர்களால் “இணைப்பைச் சாத்தியமாக்க இயலும்” என்று தென்கொரிய ஜனாதிபதி மூன் தெரிவித்தார். அதேவேளை, தங்களுக்குச் சிறப்பாக விருந்தோம்பிய தென்கொரியாவை, வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் மெச்சினார்.
போட்டிகளின் தொடக்க நிகழ்வின் போது, கொரியக் குடும்பங்களின் இணைப்புப் பற்றி, பாடல் பாடப்பட்டபோது, கிம் யோ ஜொங் உடன் சென்றவரும் கொரியப் பிரிவுக்கு முந்திய கொரியாவை அறிந்தவருமான, 90 வயதுடைய, வட கொரிய மக்கள் சபைத் தலைவர் கிம் யொங் நம், உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அப்புகைப்படம் ஊடகக் கவனம் பெறவில்லை. ஏனெனில், திட்டமிட்டுக் கொடூரமானவர்கள் எனச் சித்திரித்தவர்களின் உண்மை முகத்தை எவ்வாறு காட்டவியலும்?
இப்போதுள்ள சூழல் இணைப்புக்கு வாய்ப்பானது. ஆனால், வடக்கே ஜப்பானிலிருந்து, தெற்கே அவுஸ்திரேலியா வரையிலான பசுபிக் கடற்பகுதியில், வல்லரசுகளுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டியும் ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் இயற்கை மூலவளங்கள் மீது இந்நாடுகள் வைத்துள்ள கண்ணும் இவ்விணைப்புக்குப் பெரிய தடையாகவுள்ளன.
ஆனால், மக்கள் நினைத்தால், மனம் வைத்தால் கொரிய இணைப்பை யாராலும் தடுக்க முடியாது.
Average Rating