பெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி!!
அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு மூலிகை என தினம் மூலிகையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் மகளிருக்கு பயனுள்ள வகையில் சில இயற்கை மருத்துவ உணவுகள் குறித்து பார்க்கலாம்.இரும்பு, சுண்ணாம்பு, புரதச்சத்து, போலிக் அமிலம் ஆகியவை பெண்களின் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டசத்துகள். இவைகளின் குறைபாடால் ஒழுங்கில்லாத மாதவிடாய், இடுப்பு வலி, எலும்பு முறிவு, ரத்த சோகை உள்ளிட்டவற்றை எதிர்கொள்கின்றனர். அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை பெறுவது தொடர்பான உணவுகள் குறித்து பார்க்கலாம்.
இரும்புச்சத்து நிறைந்த முருங்கை கீரை மசியல் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முருங்கை கீரை, நிலக்கடலை, பூண்டு, வரமிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு, நல்லெண்ணெய், உப்பு.பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி உளுந்து கடுகு சேர்த்து பொரிய விடவும். பின்னர் அதனுடன் முருங்கை கீரை சேர்த்து நீர் விட்டு கொதிக்கவிடவும். அதே சமயம் வேர்க்கடலையை வறுத்து பொடித்து தோல் நீக்கிய பின் அதனுடன் வரமிளகாய், பூண்டு பற்கள் சேர்த்து அரைக்கவும். இந்த கலவையை வதக்கிய கீரையுடன் சேர்த்து கிளறவும். தினமும் ஒருபிடி முருங்கை கீரையை சாப்பிட்டு வருவதால் உயிர்சத்துகள், தாது உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ஏ, சி ஆகியன உடலில் சேர்ந்து, உடலுக்கு வலு சேர்க்கிறது.
முருங்கை கீரையை பயன்படுத்துவதன் மூலம் சொறி, சிரங்கு, பித்த மயக்கம், கண் நோய், தொண்டை தொடர்பான நோய், இரத்த சோகை ஆகியன நீங்கும். மேலும் வளரும் இளம்பெண்களுக்கு இரத்த விருத்தி அடைய செய்வதோடு, குழந்தை பேறு அடைந்த பெண்களுக்கு பால் நன்றாக சுரக்க உதவும்.
உடலுக்கு பலம் தரும் கருப்பு உளுந்து களி செய்யலாம். தேவையான பொருட்கள்: வறுத்து பொடி செய்த கருப்பு உளுந்து, நெய், வெல்லம், ஏலக்காய் பொடி.உளுந்து மாவுடன் சிறிது நீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பொங்கி வரும் உளுந்த மாவுடன், சிறிது வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் நெய்விட்டு அதனை கிளறி அல்வா பதத்தில் இறக்கவும். இதனை சிறு பருவம் முதல் பெண்கள் உண்டு வருவதால், உடலுக்கு தேவையான புரதம், மாவு சத்து கிடைக்கிறது.
பூப்பெய்த பெண்களின் சீரான மாதவிடாய், 40 வயதை கடந்த பெண்களின் உடல் பலத்துக்கு இது முக்கிய பங்காற்றுகிறது. பெண்களின் இடுப்பு, மூட்டு வலி, எலும்பு முறிவு பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாகிறது. உடல் சூட்டினை தணிக்க செய்வதோடு, இரத்த கட்டிகளுக்கு சிறந்த மருந்தாகிறது.
இடுப்புக்கு பலம் தரும் எள் உருண்டை தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கருப்பு எள்(வறுத்து பொடித்தது), வெல்லம், ஏலக்காய் பொடி.
மேற்கண்ட மூன்று பொருட்களை ஒரு சேர பிசையவும். அப்போது எள்ளில் இருந்து சிறிது எண்ணெய் வெளியேறும். இதனுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து உருண்டையாகவோ அல்லது அப்படியே கலவையாக சாப்பிடலாம்.எள் முறையான உதிரப்போக்கை ஏற்படுத்தி, உடலில் உள்ள கெட்ட இரத்தத்தை வெளியேற்றுகிறது. இதனை தொடர்ந்து தின்பண்டமாக பெண்கள் எடுத்து கொள்வதன் மூலம் உடலுக்கு பலம் சேர்க்கிறது. ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. எள் பதார்த்தங்களை மாதவிலக்கு நேரங்களிலும், கருவுற்ற காலங்களிலும் எடுக்காமல் இருப்பது நல்லது.
Average Rating