பட்டுநூல் ஆபரணங்கள்!!

Read Time:9 Minute, 5 Second

இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பவை நவீனமான புதுவித அணிகலன்கள். நாளுக்குநாள் டிரண்ட் மாறிக்கொண்டே வருகிறது. இதற்கேற்ப சந்தையில் புதிதாக என்ன அறிமுகம் ஆகியிருக்கிறது என்று ஆவலோடு எதிர்பார்க்கும் பெண்களிடையே சில்க் த்ரெட் ஜுவல்லரி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தங்க நகை அணிந்து செல்வதுதான் கௌரவம் என்ற மரபை இந்த சில்க் ஜுவல்லரி மாற்றி அமைத்திருக்கிறது.

தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடிகைகள் அணிந்துவரும் இத்தகைய அணிகலன்களால் மக்களுக்கு இந்நகைகளில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சந்தைகளில் புதிய டிசைன்களில் இந்த சில்க் அணிகலன்களின் வரவு அதிகரித்து இருக்கிறது. தங்க நகைகளுக்கு கிடைக்கும் அதே வரவேற்பும், ஆர்வமும் கிடைப்பதால் மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு வீட்டிலிருந்தே எளிய முறையில் சம்பாதிக்கும் ஒரு சிறு தொழிலாக மாறிவிட்டது ஜுவல்லரி மேக்கிங் எனும் சிறு தொழில். ஒவ்வொருவரும் தாங்கள் அணியும் உடைகளுக்கு ஏற்ற வண்ணங்களில் நகைகள் அணிவதை விரும்புகிறார்கள். அப்படி விரும்புகிறவர்களுக்கு அவர்கள் விரும்பும் வடிவங்களிலும், வண்ணங்களிலும் வீட்டிலிருந்தபடியே புதிய முறையை பயன்படுத்தி பட்டுநூல் நகைகள் செய்து விற்பனை செய்து வரும் மதுமிதாவை சந்தித்தேன்.

“சந்தைகளில் கிடைக்கக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் மோல்டிங் நகைகளால் சரும பாதிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்படுகிறது. நாம் அணியும் ஆபரணங்கள் தரம் வாய்ந்ததாக இருக்கிறதா என்பதில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம் நாம் அணியக்கூடிய ஆபரணங்கள் தற்போதைய டிரண்டிற்கு ஏற்றவாறு மாடர்னாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நாங்கள் அறிமுகப்படுத்துவதுதான் சில்க் த்ரெட் ஜுவல்லரி. பெண்கள் அணியும் புடவை, சுடிதார் மற்றும் மாடர்ன் டிரஸ் எதுவாக இருந்தாலும் அவர்கள் விரும்பும் நிறங்களில் குறித்த நேரத்தில் அனைத்து விதமான ஜுவல்லரியும் பட்டு நூல் கொண்டு செய்து கொடுக்கிறோம்.

ஜிமிக்கி கம்மல், நெத்திச்சுட்டி, ஆரம், லாங் மற்றும் டைட் நெக்லஸ், வளையல் என அனைத்து விதமான அணிகலன்களும் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இந்த முறையில் வடிவமைக்க முடியும். வீட்டில் இருந்தே சம்பாதிக்க நினைக்கும் ஆண், பெண் அனைவருக்கும் இது ஒரு சிறந்த சிறு தொழிலாக இருக்கும்” என்றவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். “எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். திருமணத்திற்குப் பிறகு சென்னைக்கு வந்துவிட்டோம். என்னோடு கல்லூரியில் படிச்ச நந்தினியும் நானும் சேர்ந்து ஏதாவது ஒரு சிறு தொழில் செய்யலாம் என்று முடிவெடுத்து, ஜுவல்லரி மேக்கிங் பயிற்சிக்குச் சென்றோம். சில்க் த்ரெட் ஜுவல்லரி எப்படி செய்வது என கற்றுக்கொண்டோம். நாங்கள் அங்கு கற்றுக்கொண்டது அடிப்படையான சில விஷயங்கள் மட்டும்தான்.

அதை பயன்படுத்தி இன்றைய தலைமுறை விரும்பும் மாடர்ன் நகைகளை செய்ய வேண்டும் என்று யோசித்தபோது சில்க் த்ரெட் மூலம் செய்யலாம் என்று முடிவு செய்தோம். ஏனென்றால் மக்களுக்கு பட்டு மீது எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. மேலும் தரமானதாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க திட்டமிட்டோம். பட்டு நூலால் செய்யப்படுவதால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. இன்றைய சூழ்நிலையில் தங்க நகையை அணிந்து கொண்டு பகல் நேரங்களில் கூட நடந்து செல்வதற்கு பயமாக இருக்கிறது. த்ரெட் ஜுவல்லரி அணிந்து கொண்டு எந்தவித பயமும் இன்றி செல்லலாம். பயிற்சி எடுக்க விரும்புகிறவர்களுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து வருகிறோம். நன்றாக பயிற்சி எடுத்த பிறகு அவர்களும் இந்த வேலையை தொடர்ந்து செய்து பயன்பெறவேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

சென்னையில் நானும் தஞ்சையில் நந்தினியும் விற்பனைசெய்து வருகிறோம். ஃபேஸ்புக் மற்றும் சமூகவலைத்தளங்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறோம். மேலும் சிறு சிறு கடைகளுக்கும் கொடுத்து விற்பனை செய்து வருகிறோம். கல்லூரி மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் ஸ்டால் போடுவது குறித்து பேசி வருகிறோம். ஆன்லைன் மூலம் இந்த மாடல் நகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறைந்தபட்ச முதலீடாக ரூ.25,000 தொடங்கி கடந்த இரண்டு வருடங்களாக விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். வெளிநாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் அவர்கள் விரும்பும் மாடல்களில் ஆர்டர் செய்கிறார்கள். கம்மல் மட்டும் வேண்டும் என்று விருப்பப்படுகிறவர்களுக்கு கம்மல் மட்டும் செய்து கொடுக்கிறோம்.

அல்லது ஒரு செட் ஜுவல்லரி வேண்டும் என்பவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னதாக தெரிவித்தால் குறித்த நேரத்தில் அவர்களுக்கு நகைகளை செய்து கொடுத்து வருகிறோம். இந்த ஆபரணங்கள் இயந்திரங்கள் கொண்டு செய்யப்படுவதில்லை. முழுக்க முழுக்க கைகளால் செய்யப்படுகின்றன. வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் நல்ல லாபத்தை இந்த சில்க் த்ரெட் ஜுவல்லரி கொடுக்கிறது. தற்போது தீபாவளி சீசன் என்பதால் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு ஒரே நகையில் பல்வேறு வண்ணங்களால் ஆன நூல்களை கொண்டு ஆரம், கம்மல் தயார் செய்துள்ளோம்” என்றவரை தொடர்ந்து நந்தினியிடம் பேசினேன்.“ஆரம்பத்தில் நாங்கள் இருவர் மட்டுமே இந்த சிறு தொழிலை முன்னெடுத்து சென்றோம்.

இன்று பல்வேறு இடங்களில் இருந்தும் எங்களிடம் பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகிறார்கள். தஞ்சாவூரிலும் சில்க் த்ரெட் ஜுவல்லரி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பட்டுப் புடவை பிரியர்களுக்கு பட்டு நூல் நகைகள் புது டிரெண்டாக மாறியிருக்கிறது. கண்டிப்பாக ஒரு செட் நகை செய்வதற்கு இரண்டு நாட்கள் தேவைப்படுகின்றன. பல வாடிக்கையாளர்கள் எங்களிடம் கேட்பது இந்த நூல் சாயம் போகுமா என்பதுதான். இந்த நகைகள் சிறந்த பட்டு நூல்களால் செய்யப்படுவதால் சாயம் போகாது. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பத்திரப்படுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா?
Next post தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்… !!