வீட்டில் வைக்கலாம் ப்யூட்டி ஷாப்!

Read Time:12 Minute, 25 Second

இன்றைய நாகரிக உலகில் ஒவ்வொருவரும் தன்னை அழகாக்கிக் கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். அதற்காக செலவிடும் தொகையும் அத்தியாவசியச் செலவுத்தொகையில் ஒரு பங்கு வகித்து வருகிறது.

மெனக்கெட்டு கடைகளில் வாங்கி வரும் அழகுசாதனப் பொருட்கள் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இருந்த அழகையும் பாழ்படுத்திவிடுகிறது. இப்படி அழகைக் கெடுக்கும் ரசாயனக் கலவை இல்லாத இயற்கை பொருட்களைக் கொண்டு அழகு சாதனப் பொருட்களை நாம் வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதை அக்கம்பக்கத்தினர் மற்றும் கடைகளுக்கு விற்றும் வருமானம் ஈட்டலாம் என்கிறார் மகளிருக்கான சுயதொழில் பயிற்சி அளித்துவரும் நந்தினி கோபிநாத். அவரிடம் பேசியதிலிருந்து…

‘‘பெண் என்பவள் காலையில் படுக்கையிலிருந்து எழும்பி நெருப்புப் புகையோடு போராடி பாத்திரங்களைக் கழுவி, வீட்டில் குப்பைகளை பெருக்கி, அழுக்குத்துணிகளைப் பிரித்தெடுத்துப் போட்டுவிட்டு, வேலைக்குக் கிளம்பும் கணவருக்கு டிபன்பாக்ஸில் சாப்பாடு அடைத்து கொடுத்துவிட்டு, குழந்தைகளுக்கு சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்பிவைத்துவிட்டு என பரபரப்பாக இத்தனை வேலைகள் செய்கிறோம். வீட்டிலும் வேலை, வெளியிலும் செல்ல முடியவில்லை என நான்கு சுவர்களுக்குள்ளேயே உலகம் அடங்கிவிடுகிறது.

வீட்டில் இருந்தபடியே ஏதாவது சிறு தொழில் செய்து வருமானம் ஈட்டலாமே என நினைப்பவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லை. அவர்களுக்கு வருமானத்திற்கு வருமானமும், அழகுக்கு அழகும் சேர்க்கும் வகையில் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களைக் கொண்டு அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி கொடுத்தால் என்ன என்று என் மனதில் தோன்றியது’’ என்றவர், அழகு நிலையங்களுக்கு செல்வதாலும், கடையில் விற்கும் பொருட்களை வாங்கி உபயோகிப்பதாலும் ஏற்படும் தீங்குகள் குறித்து கூறினார்.

‘‘சமூகத்தின் முன் தன்னை கம்பீரமாக நிறுத்துவதற்கு நம் தோற்றம்தான் உதவுகிறது. அதனால் தன்னை அழகாக்க கடையில் விற்கும் பிராண்டட் என்று சொல்லக்கூடிய ரசாயனம் நிறைந்த தலைமுடிச்சாயம், உதட்டுச்சாயம், காஜல், லோஷன், உடலில் பூசம் வெண்ணெய், களிம்புகள் மற்றும் தலைமுடிக்குத் தேய்க்கும் எண்ணெய் ஆகியவற்றை வாங்கி உபயோகிக்கின்றனர். கொஞ்சம் வசதிவாய்ப்புள்ளவர்கள் அக்கம்பக்கத்தில் உள்ள அழகு நிலையங்களுக்குச் சென்று தன்னை அழகுப்படுத்திக் கொள்கின்றனர்.

இப்படி ரசாயனம் கலந்த பொருட்களை உபயோகிப்பதால் சொரியாஸிஸ், தோல் புற்றுநோய், ஒவ்வாமை, முடி உதிர்வு, இளமையிலேயே முதுமை போன்ற தோற்றம் மற்றும் சரும வியாதிகள் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதுடன் அதிகமான பணமும் செலவாகிறது.

சொந்தச் செலவில் நாமே சூனியம் வைத்துக் கொள்ளும் கதையாகும் இது. காசு கொடுத்து கண்ட கண்ட நோயை வாங்காமல் இருக்கவும், கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தை வீணாக செலவழிக்காமல் இருக்கவும் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களைக் கொண்டே அழகுசாதனப் பொருட்களை தயாரிக்கலாம்.

உதாரணத்திற்கு, உதட்டுச் சாயம் எனப்படும் லிப்ஸ்டிக்கில் ரசாயனமே இல்லாமல் பூக்களில் உள்ள வேக்ஸை வைத்தும், அதேபோன்று பீட்ருட், மாதுளம்பழத்தோல் பவுடரைக் கொண்டு அந்தக்கலரை கொண்டு வந்து தயாரிக்கலாம். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற வற்றைக் கொண்டு குளியல் சோப் தயாரிக்கலாம்’’ என்றார் நந்தினி.

பயிற்சி மற்றும் விற்பனை வாய்ப்பு பற்றி கூறுகையில், ‘‘இயற்கை முறையில் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பது எப்படி என்பதை ஒருநாள் மற்றும் ஒருவாரப் பயிற்சி வகுப்பின் மூலம் கற்றுக் கொடுக்கிறேன். இந்தப் பயிற்சியின் மூலம் பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்வதோடு, தன் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரையும் அழகுபடுத்திப் பார்க்கலாம். முற்றிலும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தியே இந்த அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச்சாயத்தில் லெட் எனப்படும் காரீயம் சேர்ப்பதால் உதடு வெடிப்பு, ஸ்கின் கேன்சர் போன்றவையும், ஹேர் டை, ஹேர் ஆயில், ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல், முடிக்கொட்டுதல், பொடுகு, முடி உடைதல், முடிக்கிளைத்தல், வழுக்கை, இளம்நரை, இளமையிலேயே முதுமையான தோற்றம் உண்டாகின்றன.

மேலும் நாம் பயன்படுத்தும் கொசுவர்த்தி, கொசுவிரட்டி திரவம் மூலம் சுவாசம் சம்பந்தமான ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. நாம் தயார் செய்யும் ஆர்கானிக் கொசுவிரட்டி கேண்டில், கொசுவிரட்டி திரவத்தில் வேப்ப எண்ணைய், வேப்பங்கொட்டை, நொச்சி, வேப்பிலை போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

அத்துடன் சுவாச கோளாறுகளும் சரிசெய்ய முடிகின்றது. நாம் செய்யும் குளியல் சோப்பு, ஹேர் ஆயில், ஹேர்டை, ஷாம்பு, லோஷன், பாடி பட்டர், லிப்ஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் முடி சம்பந்தமான பிரச்னைகள் சரும சம்பந்தமான பிரச்னைகள் ஆகியவற்றை முற்றிலும் சரி செய்ய முடியும்.

நாம் தயார் செய்யும் அழகு சாதன பொருட்களில் மூலப் பொருளாக ஷீபட்டர், கோகோ பட்டர், பீஸ் வாக்ஸ், மேங்கோ பட்டர், சென்ட்ரோலினா உள்ளிட்ட பற்பல மூலிகைகள் பயன்படுத்தப்படுவதால் சருமம் மினுமினுப்பாகவும், மென்மையாகவும் காட்சியளிக்கும். எந்தப் பக்கவிளைவும் ஏற்படுவதில்லை.

நாம் தயாரிக்கும் பொருட்களில் சேர்க்கப்படும் மூலப் பொருட்களான மேங்கோ பட்டர் என்பது மாங்காயிலிருந்து தயார் செய்யப்படும் ஒரு வித எண்ணெய். கோகோ பட்டர் என்பது கோகோ மர பழக்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் ஒருவகை எண்ணெய். கோகோ வெண்ணெயில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீஸ், இரும்பு, காப்பர் மற்றும் பல மினரல்கள் நிறைந்துள்ளது.

இந்த கோகோ வெண்ணெயில் உள்ள மாய்ஸ்சுரைசிங் தன்மை ஒரு போற்றத்தக்க தன்மையாகும். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நம் சருமத்தை நல்ல முறையில் மாய்ஸ்சுரைசிங் செய்யும் தன்மை வாய்ந்தவை. சொரியாசிஸ் மற்றும் எக்சிமா போன்ற சரும தொல்லைகளை சரிசெய்யும்.

இவை அனைத்தையும் தவிர்த்து அது ஒரு மென்மையான நறுமணத்தை தருவதால் அரோமா தெரபியில் ஒரு போற்றத்தக்க பொருளாக விளங்குகின்றது. ஷீபட்டர் என்பது ஆப்ரிக்க மர வகை யிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை எண்ணெய் பீஸ் வாக்ஸ் என்பது தேன் மெழுகு (பீஸ்வ்யாக்ஸ்). இதன் உப்பு டெர்மட்டிட்டிஸ், சொரியாசிஸ், வல்கேரிஸ் மற்றும் பிற நிலைமைகளுக்கு தீர்வாக அமைகின்றது. இதற்கு தேவைப்படுவது எசன்சியல் ஆயில்ஸ். இது ஜேஸ்மின், சென்ட்ரோலினா, ரோஸ் வாட்டர்- இது பன்னீர் ரோஸில் இருந்து எடுக்கப்படுகிறது.

யலாங் யலாங் ஆயில்- மனோரஞ்சித பூவிலிருந்து எடுக்கப்படுகிறது. அடுத்து அதில் சேர்க்கும் வண்ணங்கள் யாவும் முற்றிலும் இயற்கை. அதாவது பட்ரூட் ,கேரட் போன்றவற்றிலிருந்து தயார் செய்யப்படுகிறது. முற்றிலும் நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தயாரிப்பது எப்படி என்பதையும், தயாரிக்க தேவையான இன்னபிற மூலப் பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதையும் பயிற்சியின்போது சொல்லிக் கொடுக்கிறேன்.

மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் இதற்கான மூலப்பொருட்களை நம் வீட்டுக்கு அருகிலேயே வாங்கிக் கொள்ளலாம். குளியல் சோப்பு தயாரிக்க ஆயிரம் ரூபாய் முதலீடு போதுமானது. இயற்கையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே எளிதாக அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது என்பது புதுசு. அதேநேரத்தில் ஐயாயிரம் ரூபாயில் வீட்டில் இருந்து இதில் ஒரு சில அழகுப் பொருட்களைத் தயாரிக்கலாம்.

இந்தப் பொருட்களை அக்கம்பக்கம் வீடுகளுக்கு விற்பனை செய்வதோடு, அழகு நிலையம் மற்றும் மருந்தகங்கள், சிறு கடைகள், சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றில் விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானமும் பார்க்கலாம். தற்பொழுது இயற்கைப் பொருட்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

அதனால், இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துவதுதான் நல்லது என்பது எல்லோரது மனதிலும் ஆழப்பதிந்துள்ளது. இது இத்தொழிலுக்கு சாதகமே. மாதம் குறைந்தது 20000 ரூபாய் முதல் 30000 ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம். வீட்டில் இருந்தபடியே ஒரு தொழிலையும் செய்து, வருமானத்தையும் ஈட்டினால் குடும்பத்தின் அழகுக்கு அழகு சேர்க்கலாம்’’ என்றார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வகட்சி மாநாட்டில் தமிழ் தலைமைகளின் நிலைப்பாடு!!
Next post தங்கையை தாயாராக்கிய அண்ணனுக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை!!