தீக்காயங்களை குணப்படுத்தும் மருத்துவம்!!
எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள மருத்துவத்தை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தீ விபத்து ஏற்படும். பலகாரம் செய்யும்போது உடலில் எண்ணெய் தெறித்து தீக்காயம் ஏற்படும். சிறிய தீக்காயத்துக்கான மருத்துவம் குறித்து காணலாம். கற்றாழை, உருளைக்கிழங்கு, மாவிலை, வாழை இலை போன்றவற்றை பயன்படுத்தி முதல்நிலை தீக்காயங்களை குணமாக்கலாம்.
சோற்றுக் கற்றாழையை பயன்படுத்தி தீக்காயங்களுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோற்றுக் கற்றாழை, தேங்காய் எண்ணெய். சோற்றுக் கற்றாழையின் தோல் பகுதி நீக்கிவிட்டு சாறு எடுக்கவும். இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி சிறுசிறு தீக்காயங்களுக்கு பூசும்போது வடு இல்லாமல் காயம் குணமாகும். தீ காயத்தை குணப்படுத்துவதில் சோற்று கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது.
பல்வேறு நன்மைகளை கொண்ட இது உள் மருந்தாகவும், மேல் பூச்சாகவும் பயன்படுகிறது. சீல் பிடிக்காமல் காயத்தை ஆற்றும் தன்மை கொண்டது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது. குளிர்ச்சி தரக்கூடியது. தீ காயம் பட்டவுடன் சிறிது நேரம் குளிர்ந்த நீரில் வைத்து, சோற்று கற்றாழை சாற்றை மேல்பற்றாக பூசுவதன் மூலம் தீக்காயம் விரைவில் குணமாகும். உருளைக் கிழங்கை துண்டுகளாக்கி அதிலிருந்து சாறு எடுத்து தீ காயங்கள் மேல் பூசுவதால் காயம் குணமாகும்.
தீக்காயத்துக்கு உருளைக்கிழங்கு நல்ல மருந்தாகிறது. இது, நோய் எதிர்ப்பு சக்தியை உடையது. புற்றுநோய்க்கு காரணமான நச்சுக்களை அழிக்க கூடியது. எரிச்சலை தணிக்க கூடியது. தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் நீர்விட்டு கழுவிய பின் உருளைகிழங்கு சாற்றை பூசுவதால் தீக்காயம் குணமாகும். உருளைக்கிழங்கு சாற்றை தீக்காயத்தின் மீது உடனடியாக பூசினால் வடு இருக்காது. வாழை இலை தண்டுவை பயன்படுத்தி தீ காயத்துக்கான மருந்து தயாரிக்கலாம். வாழை இலைக்கு பின்னால் உள்ள தண்டுகளை துண்டுகளாக எடுத்து சாறாக்கி தீக்காயங்களின் மேல் பூசுவதால் காயம் சரியாகும்.
சிவந்த தன்மை மாறி, எரிச்சல் அடங்கும். காயம் வெகு விரைவில் ஆறும். பல்வேறு நன்மைகளை கொண்ட வாழை இலை தண்டு தீக்காயங்களுக்கு மருந்தாகிறது. மாவிலையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் இளம் தளிரான மாவிலைகளை நீர்விடாமல் அரைத்து சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை தீ காயங்களின் மீது பூசுவதால் காயம் விரைவில் குணமாகும்.
மாவிலை துவர்ப்பு சுவை உடையது. இது நீர்வடிய கூடிய புண்களை கூட விரைவில் ஆற்றும். காய்ந்த மாவிலையை எடுத்து தீயிலிட்டு சாம்பலாக்கி எண்ணெய்யில் இட்டு குலைத்து போடும்போது தீ காயம் வெகுவிரைவில் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு, சிவப்புதன்மையை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். உடலில் திடீரென அரிப்பு ஏற்படுவது, திடீரென மறைந்து விடுவது போன்ற பிரச்னைக்கு வாழைப்பழம், பெருங்காயம் மருந்தாகிறது. வாழைப்பழம் ஒரு துண்டு எடுத்து சுண்டைக்காய் அளவுக்கு பெருங்காயத்தை பொறித்து வாழைப் பழத்தினுள் வைத்து விழுங்கினால் ஓரிரு நாட்களில் தோலில் ஏற்படும் அரிப்பு, சிவப்பு தன்மை குணமாகும்.
Average Rating