ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…!!
திறமை, அழகு, உழைப்பு என்று பல்வேறு திறமைகளுடனும் எண்ணற்றவர்கள் முட்டிமோதும் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஒருவர் உயர்வது அபூர்வம். அதிலும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்கள், திரைத்துறையினர் என எல்லோரின் அபிமானத்தையும் பெற்று ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று கொண்டாடப்படும் அளவுக்கு நம்பர் 1 இடத்தை ஒருவர் அடைவது இன்னும் அபூர்வத்திலும் அபூர்வம். பல்வேறு சர்ச்சைகளுக்கும், தோல்விகளுக்கும் நடுவிலும் நயன்தாரா அந்த இடத்தை அடைந்திருக்கிறார்.
நவம்பர் 18-ம் தேதியன்று 34-வது வயதில் அடியெடுத்து வைக்கும் நயன்தாராவின் இந்த வெற்றியையும், அவரது ஸ்லிம் சீக்ரட் பற்றியும் வியக்காதவர்களே இருக்க முடியாது. ‘ஐயா’வில் பார்த்த இன்னசன்ட் நயன்தாராவா இது என்று வியக்கும் வகையில், சமீபத்திய ‘அறம்’ படத்தின் புகைப்படங்களில் ஆச்சரியமளிக்கும் கம்பீரத் தோற்றத்துக்குத்தான் மெச்சூர்டாகியிருக்கிறாரே தவிர, அதே ஸ்லிம் ஃபிட் உடலை இன்றும் பராமரித்துக்கொண்டிருக்கிறார். நயன்தாராவின் அந்த ஃபிட்னஸ் ரகசியம்தான் என்ன?!
‘‘உடலை ஃபி்ட்டாக வைத்துக் கொள்வதற்காக குறிப்பிடும்படியான எந்தவொரு டயட் பிளானையும் நான் பின்பற்றுவதில்லை. உணவு விஷயத்தில் அதிகம் மெனக்கெடுவதுமில்லை. சொல்லப்போனால், படப்பிடிப்புகளில் யூனிட்டில் உள்ளவர்களுக்கு என்ன கொடுக்கிறார்களோ… அதையேதான் நானும் சாப்பிடுகிறேன். வட இந்திய உணவுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இந்தியர்கள் அனைவருமே தங்களின் ஆரோக்கியமான உடலுக்கு 8 மணிநேர தூக்கத்தையும், யோகா செய்வதையும் கடைபிடிப்பவர்கள்.
நானும் அதையே பின்பற்றுகிறேன். அதற்காக தனிப்பட்ட முறையில் பயிற்சியாளர் ஒருவரை என்னுடன் வைத்திருக்கிறேன். அவர் சொல்லித் தரும் பயிற்சிகளை தவறாமல் செய்துவிடுவேன். சினிமாதான் வாழ்க்கை என்றான பிறகு ஆரம்ப காலங்களில் சற்று பூசினாற்போல் இருந்த உடலை ஸ்ட்ரிக்ட்டான டயட் கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையைக் குறைத்தேன். தொடர்ந்து படப்பிடிப்புகள் இருந்தாலும், ஒருநாள் கூட தவறாமல் உடற்பயிற்சி செய்வேன்.
படப்பிடிப்புக்காக வெளியிடங்களில் தங்க நேரும்போது, அங்கே ஜிம் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்னர்தான் அங்கு தங்கவே ஒப்புக் கொள்வேன்’’ என்கிறார் நயன்தாரா. தன் எனர்ஜி லெவலை தக்க வைத்துக்கொள்ள இவர் பயன்படுத்தும் இன்னொரு மந்திரம் குட்டித் தூக்கம். ‘‘ஷூட்டிங் ஷெட்யூல் எவ்வளவு டைட்டாக இருந்தாலும் நடுவே கொஞ்சநேரமாவது தூங்குவதை தவிர்க்க மாட்டேன்.
டென்ஷன் நிறைந்த சினிமா வாழ்க்கையின் பாதிப்புகள் என்னை தொந்தரவு செய்யாமல் இந்த குட்டித் தூக்கம் பார்த்துக் கொள்ளும். முக்கியமாக, வாழ்க்கையில் எத்தனை பெரிய பிரச்னைகளும், சோதனைகளும் வந்தாலும் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டேன். அந்த பிரச்னையிலிருந்து வெளிவருவது எப்படி என்று மட்டும்தான் ஆக்கப்பூர்வமாக யோசிப்பேன். அதுவும் என்னுடைய ஃபிட்னஸுக்கும், அழகுக்கும் காரணமாக இருக்கலாம்’’ என்று தன் கூல் சீக்ரட்டையும் சொல்கிறார் நயன்தாரா.
Average Rating