கடும் அழுத்தங்களால் ஜனாதிபதி பதவி விலகினார்!!
தனது சொந்த கட்சியில் இருந்து உண்டான கடும் அழுத்தத்துக்கு பிறகு தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா பதவி விலகியுள்ளார்.
தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அவரது உரையில், தான் உடனடியாக பதவி விலகுவதாகவும், ஆனால், அதே சமயத்தில் தனது கட்சியான ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் முடிவை தாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் ஜுமா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜனாதிபதி ஜேக்கப் ஜுமாவிடம் அவர் பதவி விலக வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திக்க வேண்டும் என்று ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
நாட்டின் துணை ஜனாதிபதியும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருமான சிரில் ராமபோசா, ஜனாதிபதி பதவி ஏற்கும் வகையில் ஜுமா பதவி விலக வேண்டும் என்று தொடந்து பல அழுத்தங்களை அவர் கடந்த சில தினங்களாக சந்தித்து வந்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி பதவியில் இருந்து வரும் ஜுமா, ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்களை சந்தித்து வருகிறார்.
முன்னதாக, கடந்த புதன்கிழமை அன்று ஜுமாவுக்கு நெருக்கமான குப்தா தொழில் குடும்பத்தினரின் வீட்டில் அந்நாட்டில் பெரும் குற்ற வழக்குகளை கையாளும் பிரிவைச் சேர்ந்த பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
குப்தா குடும்ப உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவைச் சேர்ந்த குப்தா குடும்பத்தினர் உடனான தொடர்பும் ஜூமா பதவி விலக அறிவுறுத்தப்பட்டுள்ளதற்கான காரணங்களில் ஒன்றாகும். ஜூமா உடன் உள்ள நெருக்கத்தின் மூலம் அரசியலில் கடுமையாக தலையிடுவதாக குப்தா குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
தனது ராஜிநாமா முடிவை அறிவிக்கும் உரையை சிரித்து கொண்டே துவக்கிய ஜுமா, கூடியிருந்த பத்திரிக்கையாளர்களிடம் அவர்கள் ஏன் மிகவும் தீவிர முகபாவத்துடன் காணப்படுகின்றனர் என்று நகைச்சுவையாக வினைவினார்.
தன்னுடன் பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றியவர்களுக்கு புகழாரம் தெரிவித்த ஜுமா, ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் ஏற்பட்ட வன்முறை மற்றும் பிளவால் தான் ராஜிநாமா முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார்.
´´எனக்காக ஒரு உயிர் இழப்புகூட நடக்கக்கூடாது. மேலும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி எனக்காக பிளவுபடக்கூடாது. அதனால், நாட்டின் ஜனாதிபதி பதவியில் இருந்து உடனடியாக விலகுகிறேன்´´ என்று ஜுமா தனது உரையில் குறிப்பிட்டார்.
இதனிடையே , நாட்டின் துணை ஜனாதிபதியும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருமான சிரில் ராமபோசா ஜனாதிபதி பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அடுத்த ஆண்டு அந்நாட்டின் நடக்கும் அதிபர் தேர்தலில் பெரும்பான்மை பெற்றபின்னரே அவர் ஜனாதிபதி பதவியை வகிக்க விரும்புவார் என்று கருதப்படுகிறது.
முன்னதாக, இந்தியாவைச் சேர்ந்த, பணக்கார குப்தா தொழில் குடும்பத்தை அரசின் முடிவுகளில் ஜுமா அதிகம் தலையிட அனுமதித்தாக பொதுமக்களின் கோபத்துக்கு அவர் ஆளானார். இதை ஜூமா, குப்தா ஆகிய இரு குடும்பத்தினருமே மறுத்துள்ளனர்.
ஜூமாவின் கிராமப்புற வீட்டை புணரமைக்க பல கோடி டாலர் மக்கள் வரிப் பணம் செலவிடப்பட்ட விவகாரம் ஒன்றும் வெளியானது. அந்த வீட்டின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த செலவிடப்பட வேண்டிய அந்தப் பணத்தில் நீச்சல் குளம், கம்பி வேலி உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. விவகாரம் பெரிதானதும் கூடுதலாக செலவிட்ட பணத்தை திரும்ப செலுத்திவிட்டார் ஜூமா.
Average Rating