அம்பலமான உண்மை முகம்!!

Read Time:13 Minute, 57 Second

‘முக்காலம் காகம் மூழ்கிக் குளித்தாலும் கொக்காகுமா?’ இந்தப் பழமொழிக்குச் சரியான உதாரணம், இலங்கை இராணுவம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது.

தமிழ் மக்களுடன், இலங்கை இராணுவம் 100 சதவீதம் நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க பேட்டி ஒன்றில் கூறியிருந்த பின்னர், அவரது கருத்துக்குச் சவால் விடும் வகையில் செயற்பட்டிருக்கிறார், ஓர் இராணுவ உயர் அதிகாரி.
அதுவும், மனித உரிமைகள் பற்றிய கரிசனைகள் அதிகம் உள்ள நாடு ஒன்றிலுள்ள, இராஜதந்திரத் தூதரகத்திலேயே அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்.

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலண்டனில் உள்ள இலங்கைத் தூதுரகத்துக்கு வெளியே, எதிர்ப்புக் கோசம் எழுப்பிக் கொண்டிருந்த தமிழர்களைப் பார்த்து, கழுத்தை அறுத்து விடப் போவதாக எச்சரிக்கும் வகையில், அந்த இராணுவ அதிகாரி சைகை மூலம் காண்பித்திருந்தார்.

அவர், மூன்று தடவைகள், திரும்பத் திரும்ப கோபத்துடன் அந்த எச்சரிக்கையை வெளிப்படுத்தும் வீடியோக் காட்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த எச்சரிக்கையை விடுத்தவர் ஒன்றும், சாதாரணமானவர் அல்ல. அவர் இலங்கை இராணுவத்தின் உயர்நிலைப் பதவியில் உள்ளதுடன் இராஜதந்திரப் பதவியிலும் உள்ளார். பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ என்ற அந்த அதிகாரி, இலண்டனில் உள்ள இலங்கைத் தூதுரகத்தில், பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.

2017ஆம் ஆண்டு, இவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். எதிர்ப்புப் போராட்டம் நடத்துபவர்களை, ‘கழுத்தை அறுத்து விடுவேன்’ என்று பகிரங்கமாக மிரட்டும் அளவுக்கு, இவர் நடந்து கொண்டிருப்பது, இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குள் மறைந்திருக்கும் வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
இன்னமும் ஜனநாயக உரிமைகளை மதிக்கின்ற பக்குவம், இலங்கை இராணுவத்துக்கு ஏற்படவில்லை என்ற உண்மையையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. அவரின் இராஜதந்திர ஆவணங்களை விலக்கிக் கொண்டு, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று, தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயனும், நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரிடம் கோரியிருக்கின்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள சூழலில், இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரின் நடத்தை, அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் சர்வதேச அளவில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய ஓர் இராணுவ அதிகாரி. 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவின் தலைமையிலான 59 ஆவது டிவிசன், மணலாறு பகுதியில் ஒரு களமுனையைத் திறந்திருந்தது.

அந்த 59 ஆவது டிவிசனின், கீழ் கேணல் ஜெயந்த குணரத்னவைக் கட்டளைத் தளபதியாகக் கொண்ட 59-3 பிரிகேட், முல்லைத்தீவுக்கு தெற்கேயுள்ள கரையோரப் பகுதிகளை இலக்கு வைத்து முன்னேறியது.

அந்த பிரிகேட்டில் இருந்த 11 ஆவது கெமுனுவோச் பற்றாலியனின், கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியவர் தான், லெப்.கேணல் பிரியங்க பெர்ணான்டோ. போர் முடியும் வரை அவர் அந்தப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.

இந்தப் படைப்பிரிவே, நாயாறு, செம்மலை, அலம்பில் ஊடாக முல்லைத்தீவு நோக்கி முன்னேறியிருந்தது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், இவருக்கு கேணலாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, பிரிகேட் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

இவர், 2013ஆம் ஆண்டில் இருந்து, 2016ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் 51-1 பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். பிரிகேடியராகப் பதவி உயர்த்தப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு மே மாதம், பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரக பாதுகாப்பு அதிகாரியாக, நியமிக்கப்பட்டார்.

வெளிநாடுகளில் இராஜதந்திரப் பதவிகளுக்கான நியமனங்களின் போதும், பயிற்சிகள், கருத்தரங்குகள் மற்றும் ஐ.நா அமைதிப்படைப் பணிகளின் போதும், இராணுவ அதிகாரிகளின் மனித உரிமைப் பதிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கைகளில் இது முக்கியமான விடயமாகக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை அரசாங்கமும் கூட, ஏற்றுக்கொண்ட இராணுவ மறுசீரமைப்புத் திட்டத்துக்குள் இதுவும் ஒரு முக்கிய விடயமாக இருக்கிறது. இராணுவ மறுசீரமைப்பு என்பது போர்க்கால மீறல்களால் கறைபட்ட இராணுவக் கட்டமைப்புக்கு வெள்ளையடிப்பது போன்ற செயல். அதற்கான முயற்சிகள் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்டன. மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காகப் படையினரைத் தெரிவு செய்யும் விடயத்தில், அந்த நடைமுறையால் இழுபறிகள் ஏற்பட்டன.

அதேவேளை, இராஜதந்திர நியமனங்களின் போதும், இந்த ஆய்வு நடைமுறை அவசியம் என்று ஐ.நா வலியுறுத்தியிருந்தது. ஆனாலும், அதைமீறி, இலங்கையும் செயற்பட்டிருக்கிறது. பிரித்தானியாவும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறது.

போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்று ஐ.நா விசாரணைக் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இறுதிக்கட்டப் போரில் பங்கேற்ற முக்கிய இராணுவ அதிகாரி ஒருவர், தமது நாட்டில், பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதை பிரித்தானியா கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறது.

அதுபோலவே, ஜெனீவாவில் கொடுத்த வாக்குறுதிகளை மீறி, வெளிவிவகார அமைச்சும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை, பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காக இலண்டனுக்கு அனுப்பியிருக்கிறது. இந்த இடத்தில், பொறுப்புக்கூறல் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகள் எந்தளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்ற உண்மையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

நடைமுறைப்படுத்த வேண்டிய இலங்கையும் அதைச் செய்யவில்லை, கண்காணிக்க வேண்டிய பிரித்தானியாவும் அதைச் செய்யவில்லை. இப்படியான நிலையில், போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும்?

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் நடவடிக்கை, ஒட்டுமொத்த இலங்கை இராணுவத்தினதும் மதிப்பைக் கெடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அதுவும், இத்தகையதொரு சம்பவம் பிரித்தானிய மண்ணிலேயே நடந்திருக்கிறது.

சாதாரணமாக, ஓர் எதிர்ப்புப் போராட்டத்தையே சகித்துக் கொள்ள முடியாத ஓர் இராணுவ அதிகாரியாகத்தான், அவர் இருந்திருக்கிறார். அப்படியாயின், போர்க்களத்தில் அவர் எவ்வாறு நடந்து கொண்டிருந்திருப்பார்? என்ற நியாயமான கேள்வியும் எழுந்திருக்கிறது.

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் சர்ச்சைக்குரிய நடத்தை, அரசாங்கத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வெளிவிவகார அமைச்சு, அவரைப் பணியில் இருந்து இடைநிறுத்த, ஜனாதிபதி அதை இரத்துச் செய்து, மீண்டும் பணியில் அமர்த்தியிருக்கிறார். இதனால், இந்த விவகாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் முன்னிலைப்படுத்தப்படும் சாத்தியங்கள் உள்ளன.

இது ஒரு மனித உரிமை மீறல் அல்ல; என்றாலும், ஓர் அச்சுறுத்தலாக, பொதுவான இலங்கை இராணுவத்தின் நடத்தைக் கோலத்தின் அடையாளமாக, எடுத்துக் காட்டப்படும் வாய்ப்புகள் உள்ளன.

அதேவேளை, இலங்கை இராணுவம் இத்தகையது தான், அதை எப்படி வெள்ளையடித்தாலும், மாறப் போவதில்லை என்பதும் உறுதிப்படுத்தப்படும். போர்கள் நடந்த இடங்களில், நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில், அரசபடைகளே பிரதானமான பிரச்சினையாக இருந்துள்ளன என்ற கருத்தை, ஐ.நா நிபுணர் பப்லோ டி கிரெய்ப், தனது இலங்கைப் பயணத்தின் போது, பலருடன் பகிர்ந்திருந்தார். அது சரியானதே என்பதை, பிரிகேடியர் பிரியங்கவின் செயற்பாடுகள் உறுதி செய்திருக்கின்றன.

தற்போதைய அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகள், விசாரணைகளில் இருந்து இராணுவத்தைக் காப்பாற்ற உச்சக்கட்ட முயற்சிகளை எடுத்து வந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள், அந்த முயற்சிகளைப் பின்னடைவு காண வைத்து விடும் போலவே உள்ளன.

இராணுவத்துக்குள் இன்னமும் முன்னைய ஆட்சியாளர்களின் செல்வாக்கு அதிகமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. உள்ளூராட்சித் தேர்தலில் அளிக்கப்பட்ட தபால் வாக்குகளில், முப்படையினரில் பெரும்பான்மையானோர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கே வாக்களித்தனர் என்றும் கூறப்படுகிறது.

இதிலிருந்து, தற்போதைய அரசாங்கத்துக்கு அவர்கள் விசுவாசமாக இல்லை என்பதை உணர முடிகிறது. இராணுவத்தைக் காப்பாற்ற முனைந்தாலும், அவர்கள் அரசாங்கத்தை நம்பத் தயாராக இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.

இத்தகைய நிலையில், போர்க்கால மீறல்களுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட மக்களின் வெறுப்பையும் அரசாங்கம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ போன்ற, போரில் தீவிரமாகப் பங்கெடுத்த அதிகாரிகள் கட்டமைப்புத்தான், இன்னும் ஒரு தலைமுறைக்கு, நாட்டின் இராணுவத்துக்குத் தலைமை தாங்கப் போகிறது. இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராது என்று உறுதியாகக் கூற முடியாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊழல் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதாவுக்கு 5 ஆண்டு சிறை!!
Next post டிடி கொடுத்த அதிர்ச்சி… !!