இலங்கையின் இடதுசாரிகளும் பிரதிபலிப்புகளும்!!
சுதந்திர இலங்கையின் வயது, 70 ஆண்டுகளை அடைந்துள்ள நிலையில், சுய விமர்சனங்களின்றி, தன்னைத் தானே அது மீளக்கட்டியெழுப்ப முடியாது. சிங்கள – பௌத்த தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம் என, இரண்டு சக்திகளுக்கு நடுவில் நாம் வாழும் நிலையில், அவ்வாறான சுய விமர்சனத்துக்கான தூண்டல், எங்கிருந்து வரும்? தமிழ் இடதுசாரிகளின் பிரதிபலிப்பான எழுத்துகள் எழுச்சியடைவதைக் கண்டு நான், சிறிய நம்பிக்கையொன்றைக் காண்கிறேன்.
ஜனநாயக அரசாங்க மாற்றமொன்று, 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பின்னர், பல்வேறான நல்லிணக்க முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டாலும், கடந்த காலம் பற்றிய அடிப்படையான மீளச் சிந்திப்புகள் சிறியளவே காணப்படுகின்றன. நல்லிணக்கம் பற்றிய பெரும்பாலான பேச்சுகள், அனுசரணையாளர்களாலோ அல்லது அரசாலோ நிதியளிக்கப்படும் மேலோட்டமான முன்னெடுப்புகளுடனும், அரசசார்பற்ற நிறுவனங்களின் மன்றங்களுடனும் நிகழ்வுகளுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்றன. இவை, மக்களின் உலகப் பார்வையைச் சவாலுக்குட்படுத்துவதில்லை.
அநேகமான இம்முன்னெடுப்புகள், தென்னாபிரிக்காவைப் பற்றி அதிகமாகக் கருத்தில் கொள்வதாகவும், எமது கடந்த காலத்தை அரிதாகவே கருத்திற்கொள்வதாகவும் காணப்படுகின்றன. தென்னாபிரிக்காவில் காணப்படும் ஆழமான ஏற்றத்தாழ்வுகளையும் கறுப்பினச் சனத்தொகையை விலக்கிவைப்பதையும் அதை முக்கியத்துவம் அற்றதாக்குவதையும் புரிந்துகொள்ளாமலேயே, இது மேற்கொள்ளப்படுகிறது.
ஜனவரி 2015க்கு முன்னர் பல தசாப்தங்களாக, கிளர்ச்சிகள், போர், பின்னர் ஆட்சியாதிக்கக் கொள்கையுடைய அரசாங்கம் என, சமூகப் பிரதிபலிப்புக்கான ஜனநாயக இடைவெளி காணப்பட்டிருக்கவில்லை. ஆனால், இப்போது என்ன சாக்குப்போக்குக் காணப்படுகிறது? குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காணப்படும் தமிழ் மாற்றுக் கருத்துகள் மூலமாக, எமது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றிச் சிந்திக்க ஆரம்பிப்பது பற்றிக் கருத்திற் கொள்ளப்படுகிறது.
தமிழ்ப் பொதுவெளி
தமிழ் எழுத்துகளின் முற்போக்கான பாரம்பரியம், 1920களில் யாழ்ப்பாணம் தமிழ் இளைஞர் காங்கிரஸில் இருந்து, தொடர்ந்து வந்த தசாப்தங்களில், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த எழுத்தாளர்களின் எழுத்துகளில் இருந்து, 1970களிலும் 1980களிலும் பொங்கியெழுந்த இளைஞர்களின் எழுத்துவரை செல்கிறது. தமிழ் முற்போக்கு இளைய எழுத்தாளர்களில் பலர், ஆயுத அரசியலின் சோகமயமான விதியைச் சந்தித்தனர் — குறிப்பாக, மாற்றுக் கருத்துகளைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அடக்கியதில் சிக்கினர்.
தமிழ் ஆயுதக் கலாசாரத்துக்கு எதிரான ஆரம்பகால விமர்சகரும் பலமான விமர்சகராகத் திகழ்ந்தவருமான, 1984ஆம் ஆண்டில் “புதியதோர் உலகத்தில்” எழுதிய கோவிந்தன், சில ஆண்டுகளின் பின்னர் காணாமல் போனார். பல இளைய பெண்ணிய எழுத்தாளர்கள் பலர், 1980களின் இறுதியில், அடக்கப்பட்டனர்: செல்வி, காணாமல் போயிருந்தார்; சிவரமணி, தற்கொலை செய்திருந்தார். தமிழ் ஆயுத எழுச்சி தொடர்பாக, விமர்சன எழுத்தை வெளிப்படுத்தும் புத்தகமொன்றை எழுத முற்பட்ட சபாலிங்கம், பரிஸில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மாற்றுக் கருத்துகள் மீதான, தமிழ் அரசியல் வட்டத்துக்குள் காணப்பட்ட ஒடுக்குமுறை தொடர்பாக இங்கு கவனஞ்செலுத்தப்பட்டாலும், மேலும் பல எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும், அரச முகவராண்மைகளாலும் ஏனைய ஆயுதக்குழுக்களாலும் இலக்குவைக்கப்பட்டனர்.
போர்க் காலத்தில், தமிழ்த் தேசியம் மீதான பலமான பயணத்தின் போதும், மாற்றுக் கருத்துகளை விடுதலைப் புலிகள் இரக்கமற்று ஒடுக்கியதன் பின்னணியிலும், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) அமைப்பின் — அதன் இணை நிறுவுநர் ரஜனி திரணகம சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் — தைரியமான எழுத்துகள், நிமிர்ந்து நிற்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்த தமிழ் ஊடகங்கள், இறுதியில், குறுகிய தமிழ்த் தேசியவாதத்தை உள்வாங்கிக் கொண்டன.
வெவ்வேறான ஐரோப்பிய நகரங்களில் தொடர்ச்சியாகச் சந்தித்த “இலக்கிச் சந்திப்பு” போன்ற சில சிறிய அமைப்புகளுடன், தமிழில் மாற்றுக் கருத்துகள் சுருங்கிப் போயின.
தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறான இயக்கங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகளின் நினைவுக் குறிப்புகள் உள்ளிட்ட சில படைப்புகள், கடந்த ஒன்றரை தசாப்த காலத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆரம்பத்தில் மேற்கத்தேய நாடுகளில் வெளியிடப்பட்ட இந்த எழுத்துகள், போரின் பின்னர் இலங்கையிலும் வெளியிடப்பட்டன.
ஆனால், யாழ்ப்பாணத்தில் பரந்தளவிலான முற்போக்கானதும் விமர்சனரீதியானதுமான கலந்துரையாடல்கள், பொது வெளியில் காணப்படும் தமிழ்த் தேசியவாதக் கலந்துரையாடல்களின் ஆதிக்கத்தால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கிகள் மீதான அச்சம் குறைவடைந்துள்ள போதிலும், சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்படும் அச்சம் தொடர்கிறது. இதனால் தமிழ் எழுத்தாளர்கள் பலர், தேசியவாதப் பாதையில் செல்வதோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பகிரங்கமான விமர்சனத்தையும் தவிர்க்கிறார்கள்.
வரலாற்றை மீளச் சிந்தித்தல்
யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற குறைந்த எண்ணிக்கையான இடதுசாரிகள் குழுக்கள், அவர்களுக்குள் முழுமையான ஒற்றுமையுடன் இல்லாத சந்தர்ப்பங்களிலும் கூட, உள்ளூரிலும் வெளியூரிலும் நடைபெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் மீதான அவர்களது பார்வை காரணமாக, அதிர்வுத்தன்மை வாய்ந்த கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன. கொம்யூனிசக் கட்சியால், யாழ்ப்பாணத்தில் சாதிக்கெதிரான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, 2016ஆம் ஆண்டு ஒக்டோபரில், 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அந்தப் போராட்டங்கள் தான், தீண்டாமையில் முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. போல்ஷெவிக் புரட்சியின் 100ஆவது ஆண்டு நிறைவு, கடந்தாண்டு இடம்பெற்றது.
கார்ல் மார்க்ஸின் “மூலதனம்” நூல் வெளியிடப்பட்டு, கடந்தாண்டுடன் 150 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கின்றன.
அவ்வாறான வரலாற்று ரீதியான நிகழ்ச்சிகள் தொடர்பான பிரதிபலிப்புகளும், கடந்தகாலம் — இடதுசாரி இயக்கத்தின் பணிகளை எடைபோடுதல் உட்பட — பற்றிச் சிந்திப்பதற்கான முயற்சிகள், முக்கியமான 2 நூல்கள் வெளியிடப்படுவதை உறுதிசெய்துள்ளன: சி.கா. செந்திவேலில் “வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை” நூலும், என். ரவீந்திரனின் “சாதி சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டங்கள்” நூலும், இடதுசாரி அரசியல் இன்று சந்திக்கும் சவால்களைக் கலந்துரையாடுவதற்காக, ஒக்டோபர் 1966இல் இடம்பெற்ற சாதியத்துக்கெதிரான போராட்டங்களின் ஆரம்பப் புள்ளியாக அமைகின்றன. ஆயுத அரசியலால், தமிழ் இடதுசாரித்துவம், பல தசாப்தங்களாக மௌனிக்கப்படச் செய்யப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியவாதத்தை விமர்சிப்பதனூடாக தமிழ் அரசியலைப் பார்ப்பதற்கும், இடதுசாரி இயக்கங்கள் உலகளாவிய ரீதியில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை ஆராய்வதற்கும், இவை வரவேற்கத்தக்க பணிகளாகும்.
பேரழிவுமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு இட்டுச் சென்ற, 1970களில் காணப்பட்ட நிகழ்வுகளுக்கு, தமிழ் அரசியல் முக்கியத்துவம் கொடுப்பது பற்றி, செந்திவேல் குறிப்பிடுகிறார். 1970ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தாம் சந்தித் தோல்விகளுக்கான தமிழ்த் தேசியவாதிகளின் பதில், ஜே.வி.பி கிளர்ச்சியின் ஒடுக்குமுறை, பங்களாதேஷ் உருவாக்கத்தில் இந்தியாவின் தலையீட்டின் பாதிப்பு ஆகியன, தமிழ்த் தேசியவாதம் நிலைபெறுவதற்குப் பங்களிப்புச் செலுத்தின என, செந்திவேல் குறிப்பிடுகிறார்.
செந்திவேல், எழுத்தாளர் மாத்திரமன்றி, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஆவார். முல்லைத்தீவின் பேரரழிவுக்கு வித்திட்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டின் அடிப்படையில் எழுதும் போது, தன்னுடைய கட்சியினதும் அவர்களுடைய பணிகளினூடாகவும், அவர் எழுதுகிறார். மேலும், குறுகிய தமிழ்த் தேசியவாதப் பிடியிலிருந்து தமிழ் அரசியலை வேறு பாதைக்குக் கொண்டு செல்வதற்கான, ஒரு தலையீடாகவும் அவருடைய எழுத்துகள் அமைந்துள்ளன. தாழ்த்தப்பட்ட சாதிய மக்கள், தமது கிராமங்களோடு இணைந்து காணப்படும், உயர்த்தப்பட்ட சாதியச் சமூகங்களின் மயானங்களை அகற்றுமாறு கோரி, யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான போராட்டத்துக்கு மத்தியில், அவரது நூல் வெளியிடப்பட்டமை முக்கியமானது.
கடந்த பல தசாப்தங்களாக, இடதுசாரி அரசியல், உலகளாவிய ரீதியில் சந்திக்கும் சவால்கள் தொடர்பாக, ரவீந்திரனின் எழுத்து அமைகிறது. ஆனால், 1960களில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற, சாதியத்துக்கு எதிரான போராட்டங்களிலிருந்து அது ஆரம்பிக்கிறது. கடந்த காலத்துடன் தற்காலத்தைக் கலந்துரையாடுவதற்கான ஒன்றாக, வரலாற்றை அவர் வரைவிலக்கணப்படுத்துகிறார். பூகோள ரீதியாக இடதுசாரிகள் சந்திக்கும் தற்காலச் சவால்களோடு, இன-தேசியவாத வகை உட்பட அடையாள அரசியல் மீதான விமர்சனங்களையும் அவர் முன்வைக்கிறார்.
சாதிய சமூகக் கட்டமைப்பை வீசியெறிந்து, சமூக உறவுகளை மீள உருவாக்குவதற்காக, உயர்த்தப்பட்ட சாதியச் சமூகங்களைச் சேர்ந்த பிரிவினர் உள்ளடங்கலாக, பல்வேறு பிரிவினரையும் ஒற்றுமைப்படுத்தியமையே, சாதியத்துக்கு எதிரான போராட்டங்களின் வெற்றி என, அவரது பிரதான வாதம் அமைகிறது. இப்பின்னணியில், தொடர்ந்தும் குறுகிக் கொண்டிருக்கும், புறக்கணிக்கும் தமிழ் அரசியல் மூலமாக, தமிழ்ச் சமூகத்தைத் தனிமைப்படுத்திய தமிழ்த் தேசியவாதம் மீதான குற்றச்சாட்டுப் பதிவாகவும் இது அமைகிறது.
மௌனத்தை உடைத்தல்
மேற்படி இரண்டு நூல்கள் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நூல் கலந்துரையாடல்களின் போது, விமர்சன ரீதியான பல கேள்விகளை, இப்பத்தியாளர் எழுப்பியிருந்தார். குறிப்பாக, தற்போதைய காலத்தில், இலங்கையின் தேசியவாதம் உட்பட அனைத்துத் தேசியவாதங்களும், பிற்போக்கானவையாக உள்ள நிலையில், முற்போக்கான தேசியவாதத்தைக் கொண்டு செல்ல முடியுமா என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அவ்வாறான கேள்விகளை விட்டுப் பார்த்தால், தமிழ்ச் சமூகத்தின் பெரிய பிரிவுகளைப் புறந்தள்ளி, ஒடுக்கிய சாதியம், போருக்குப் பின்னர் மீண்டும் பலம்பெற்று வரும் நிலையில், அது தொடர்பான மௌனத்தை உடைப்பதற்கு, இவ்விரு எழுத்தாளர்களும் சிறப்பான பணியாற்றியுள்ளனர்.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கடந்த காலத்தையும், தமிழ் அரசியல் எங்கே பிழைத்துப் போனது என்பதையும் விமர்சனரீதியாகப் பார்ப்பதற்கு மறுத்துவரும், தமிழ்த் தேசியவாதிகளின் சந்தர்ப்பவாத அரசியலுக்கான சவாலையும், இரு நூல்களும் முன்வைத்துள்ளன.
இரு நூல்களுமெ, நாட்டின் பல பகுதிகளிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. இவ்விரு நூல்களும், இளைய சமுதாயத்தினரைச் சென்றடையும் எனவும், தமிழ்ச் சமூகத்தை மீளக்கட்டியெழுப்புவதற்குத் தேவையான சுய விமர்சனத்தின் ஓர் அங்கமாக, அவ்வாறான விமர்சன அரசியல், சமூக வரலாறுகளை எழுவதற்கு ஏனையோரைத் தூண்டுமெனவும், இப்பத்தியாளர் நம்பிக்கை கொள்கிறார்.
தெற்காசியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள அரசியல் எழுத்துகளிலிருந்து நாம் இதைப் பார்ப்போமானால், இளைஞர்களில், குறிப்பாக இளைய பெண்களில், சாதியம் பற்றியும் அதற்கெதிரான போராட்டங்கள் பற்றியும் பாலின ஒடுக்குமுறை பற்றியும் கருத்தாக்கத்தை ஏற்படுத்துவது, தமிழ் அரசியலை புதிய வலுவூட்டும்.
மொழிபெயர்ப்புகள் மூலமாகவும் கலந்துரையாடல்கள் மூலமாகவும், இவ்வெழுத்துகள் சிங்கள, முஸ்லிம் வாசகர்களையும் சென்றடைய வேண்டும். தெற்காசிலுள்ள முற்போக்குச் சக்திகள், சகவாழ்வு பற்றியும் சமூக நீதி பற்றியும் உண்மையாக இருந்தால், தமிழ் இடதுசாரிகளால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான கலந்துரையாடல்களில் பங்கெடுக்க வேண்டுமே தவிர, தமிழ்த் தேசியவாதிகளுடன் ஒட்டி உறவாடக்கூடாது.
ஏனெனில் தமிழ்த் தேசியவாதிகள், இறுதியில் சிங்கள – பௌத்த தேசியவாதத்தையே மீளக்கொண்டுவருவர். சுய விமர்சனமும் சுய பிரதிபலிப்பும், சமூகமொன்றை மீளக் கட்டியெழுப்புவதற்கான வழிகள் மாத்திமன்றி, அச்சவால்களை எதிர்கொள்வதற்காக முன்போக்கு இயக்கங்களையும் மீளக்கட்டியெழுப்பும்.
Average Rating