மன இறுக்கம் குறைக்கும் கலை!!
உனது ஆடையையும்
எனது ஆடையையும்
அருகருகே காய வைத்திருக்கிறாயே
இரண்டும்
காய்வதை விட்டுவிட்டு
விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர்
கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள். சந்தியாவுக்கு சென்னை, தரமணியில் வேலை… கோபிக்கு பழைய மாமல்லபுரம் சாலையில். இருவரின் வேலை நேரங்களும் வேறு வேறு. கோபி வேலை முடிந்து வீட்டுக்கு வருவான். சந்தியா அப்போதுதான் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருப்பாள். இருவருக்கும் ஞாயிறு மட்டுமே விடுமுறை. இப்படியே திருமணமாகி ஒன்றரை வருடம் கடந்துவிட்டது. சந்தியா கருவுறுவது மட்டும் தள்ளிக்கொண்டே போனது. அவளுடைய பெற்றோர் மகப்பேறு மருத்துவரை கலந்தாலோசிக்க சொன்னார்கள்.
இருவரையும் பரிசோதித்தார் டாக்டர். எல்லா முடிவுகளும் நார்மல்! டாக்டர் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார். ‘ரெகுலராக செக்ஸ் வைத்துக்கொள்கிறீர்களா?’ என்ற கேள்வி வந்தபோது சந்தியா தயக்கத்துடன் பதில் சொன்னாள். ‘இருவருக்கும் இருக்கும் பணிச்சுமையில் எப்போதாவதுதான் உறவு வைத்துக்கொள்ள முடிகிறது’ என்ற உண்மையைப் போட்டு உடைத்தாள். அலுவலகம் முடிந்து வீடு திரும்பினாலும் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவது, டிவிடியில் நள்ளிரவு வரை சினிமா பார்ப்பது என்று நேரம் கழிந்திருக்கிறது. விடுமுறை நாளில் வீட்டு வேலைகளில் ஈடுபடுவாள் சந்தியா. கோபி நண்பர்களுடன் பார்ட்டி, அது இது என்று எங்கேயாவது போய்விடுவான்.
‘படுக்கையறையில் மின்னணுச் சாதனங்களை பயன்படுத்துவது தூக்கத்தையும், உங்கள் இருவருக்குமான நெருக்கத்தையும் கெடுக்குமே?’ என்று கேட்டார் டாக்டர். ‘வேலையால் ஏற்படும் மன இறுக்கத்தை குறைக்கவே அப்படிச் செய்கிறோம்’ என்றான் கோபி. ‘ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை என்று ஈடுபாடில்லாமல் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும்’ என்று எச்சரித்தார் டாக்டர். ‘வீட்டில் ஒருவருக்கொருவர் நெருக்கத்தையும் புரிதலையும் அதிகப்படுத்திக் கொண்டு, ‘போதும்… போதும்’ என்கிற அளவுக்கு செக்ஸ் வைத்துக்கொண்டால்தான் குழந்தை பிறக்கும்’ என்பதை வலியுறுத்தினார். அதன் பிறகே இருவரும் தவறை உணர்ந்தனர்.
வேலைக்குச் செல்லும் பல தம்பதிகளுக்கு பணிச்சுமையால், அதனால் ஏற்படும் மன இறுக்கத்தால் அவர்களுடைய செக்ஸ் வாழ்க்கை ஓரளவு பாதிப்படைகிறது என்பது உண்மையே! இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது? பார்க்கலாமா? 1950ம் ஆண்டில் இருந்து இன்று வரை கணக்குப் போட்டுப் பார்த்தால், நமது ஓய்வு நேரம் 40 சதவிகிதம் குறைந்துவிட்டது. தம்பதி இருவருமே வேலைக்கு போகும் சூழ்நிலையில் அலுவலகமே பெரும்பாலான நேரத்தை விழுங்கி விடுகிறது. வீட்டில் இருக்கும் நேரம் குறைந்துவிடுகிறது.
வேலை முடிந்து வீட்டுக்கு வரும் தம்பதிகளுக்கு பொறுமை இருப்பதில்லை. சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டால் கூட சண்டை உருவாகிவிடுகிறது. இதனாலேயே பெரும்பாலான தம்பதிகள் பேச்சைக் குறைத்து, டி.வி. பார்ப்பது, லேப்டாப்பில் சினிமா பார்ப்பது, ஸ்மார்ட்போனில் இணையதளங்களை மேய்வது என பொழுதைக் கழிக்கிறார்கள். இது தவறான அணுகுமுறை. பிரச்னை வருகிறது என்றால் அது எதனால் வருகிறது என்று பார்த்து சரி செய்ய வேண்டும். அதில் இருந்து விலகியிருப்பது பிரச்னையை அதிகப்படுத்தவே செய்யும். மனித குலத்தை மகிழ்விக்கும் கலையான காமத்துக்கு கடைசி இடம் அளித்தால், அது பல சிக்கல்கள் உருவாக காரணமாக அமைந்துவிடும்.
பிறகு, மன இறுக்கம் எப்படி விலகும்? எனவே, ‘Work while you work; play while you play’ என்கிற பழமொழியைக் கடைப்பிடித்தல் அவசியம். நேர்மறை எண்ணங்களை அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதை ‘ஆப்டிமிசம்’ என்பார்கள். ‘நடக்கும்’, ‘நம்மால் முடியும்’ என்று எண்ண வேண்டும். மனக்கட்டுப்பாடு இருக்க வேண்டும். தன்னைத்தானே கட்டுப்படுத்தி அகத்தாய்வு செய்தால் பணிச்சுமையோ, மன இறுக்கமோ நம்மை பாதிக்காது.
ஸ்மார்ட்போன், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை தேவைக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும். எந்நேரமும் அதில் மூழ்கி கிடக்கக்கூடாது. யோகா, தியானம், நடனம் போன்ற உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொண்டால் மன இறுக்கம் குறையும். ஆதிகாலத்தில் இருந்து மனிதனுக்கு சோர்வை அகற்றி, புத்துணர்வு தரும் காமக்கலையான செக்ஸில் அடிக்கடி ஈடுபடுதலே மன இறுக்கத்திலிருந்து மீள மிகச் சிறந்த வழி!
Average Rating