மும்முனைப் போட்டிக் களம்!!

Read Time:13 Minute, 29 Second

என்றைக்கும் இல்லாதளவுக்குக் கடந்த சில நாட்களாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்கள், நாடு பூராகவும் சூடு பிடித்திருக்கின்றன.

தெற்கின் பெருந்தலைகளான மைத்திரியும் ரணிலும் மஹிந்தவும் மும்முனைப் போட்டிக் களத்தில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

தெற்கின் அரசியல் என்பது, கட்சி அரசியலாகச் சுருங்கி, நீண்ட நாட்களாகின்றன. எப்போதாவது, ஆட்சிகளுக்கு எதிரான பொதுமனநிலை எழுச்சி கொண்டு, தேர்தல்களில் பிரதிபலிப்பதுண்டு.

கட்சி அரசியலைப் பலப்படுத்துவதனூடு அல்லது கட்சி அரசியலில் பலம் பெறுவதனூடு ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதே, தெற்கின் அரசியல் அடிப்படை.

மைத்திரி – மஹிந்த முறுகல் என்பது, தனிப்பட்ட ரீதியிலானது அல்ல; அது, சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை, யார் பிடிப்பது என்பது சார்ந்தது.

ராஜபக்ஷக்கள் மீது, தெற்கில் ஒரு தொகுதி மக்கள் பெரும் அதிருப்தியைக் கொண்டிருக்கின்ற போதும், இன்னொரு தொகுதி மக்களோ, அவர்களை நாட்டின் காவலர்களாகவும் வெற்றி வீரர்களாகவும் இனத்தின் காவலர்களாகவும் காண்கின்றார்கள்.

அதுதான், நீண்ட திட்டமிடலுக்குப் பின்னர், வெட்டி வீழ்த்தப்பட்ட பின்னரும், மஹிந்தவால் எழுந்து நிற்க முடிந்திருக்கின்றது.

தெற்கில் இம்முறை மும்முனைப் போட்டி நீடித்தாலும், இந்தப் போட்டி முறை விசித்திரமானது. மஹிந்தவின் அதிக எதிர்பார்ப்பு என்பது, ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்பது அல்ல. மாறாக, மைத்திரியைத் தோற்கடிப்பது.

சுதந்திரக் கட்சிக்கு விழும் வாக்குகளில் கணிசமானவற்றைக் குறைப்பதுதான் அவரின் முதல் திட்டம். அந்தத் திட்டம், இந்தத் தேர்தலில் ரணிலுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதிக ஆதாயங்களைத் தரலாம்.

ஆனால், மைத்திரியை மிகவும் பலவீனப்படுத்தி, ராஜபக்ஷக்கள் பலம் பெறும் பட்சத்தில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் என்பது ராஜபக்ஷக்களுக்கானதாக மாறிவிடுவதற்கான சூழல் உண்டு.

அப்போது, ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் கடந்த காலங்களில் எதிர்கொண்ட நெருக்கடிகளைத் தாண்டிய பெரும் இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டியேற்படும்.

ராஜபக்ஷக்களின் கடந்த கால ஊழல்கள், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மீது பதிந்திருக்கின்ற கறை ஆகியவற்றை முன்னிறுத்திக் கொண்டு, தன்னை அப்பழுக்கற்ற தலைவராக நிலை நிறுத்த வேண்டும் என்று மைத்திரி முயன்று கொண்டிருக்கின்றார்.

கூட்டு அரசாங்கத்தின் தலைவராக இருந்த போதிலும், அரசாங்கத்தில் நிகழும் மோசடிகள், குளறுபடிகள், குழப்பங்கள் தொடர்பில் எந்தவித பொறுப்புக் கூறலுக்கும் தயாரில்லாத அவர், இன்றைக்கு சிரால் லக்திலக, பைசர் முஸ்தபா உள்ளிட்ட தரப்பினரின் ஆலோசனைகளில் வழிநின்று தடுமாறுகின்றார்.

ராஜபக்ஷக்களை எதிர்ப்பதற்காக மைத்திரியை முன்னிறுத்திய சந்திரிக்கா குமாரதுங்கவாலும் மைத்திரியின் தற்போதைய நடவடிக்கைகளை அவ்வளவாக இரசிக்க முடியவில்லை. மைத்திரி, சிறுபிள்ளை வேளாண்மைக்கு முயல்வதாக அவர் வருத்தப்படுகின்றார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான நாட்களில், மைத்திரியிடம் கிடைத்த சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைக் கொண்டு, அவர் கட்சியை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைப்பதிலிருந்து தவறிவிட்டார்.

ராஜபக்ஷக்கள் மீதான அபிமானம் வீழ்ச்சிக் கட்டத்தில் இருந்த தருணத்தில்தான், மைத்திரியின் கைகளில் கட்சி சென்றது. ஆனால், அவரின் ஆளுமையற்ற முடிவுகளால், வீழ்ந்திருந்த ராஜபக்ஷக்கள் மீதான அபிமானம், கடந்த மூன்று ஆண்டுகளில் மீண்டும் குறிப்பிட்டளவு கூடவே செய்திருக்கின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், அமைச்சர் ஒருவர், இந்தப் பத்தியாளரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார். “… தாறுமாறாக ஓடி, நாட்டையும் நாட்டு மக்களையும் படுகுழியை நோக்கி அழைத்துச் சென்ற குதிரையைத் தோற்கடிப்பதற்காகவே, புதிய குதிரையாக மைத்திரியைக் களமிறக்கினோம். உண்மையிலேயே புதிய குதிரையின் முகமாக மாத்திரமே மைத்திரி இருந்தார். ஆனால், எஞ்சிய பாகங்கள் பூராகவும் ரணிலும் நாங்களுமே இருந்தோம். ஏன், புதிய குதிரையின் ஒவ்வொரு காலும் ஒவ்வொரு தரப்பினால் பலப்படுத்தப்பட்டது. புதிய குதிரையால் ஒரு கட்டம் வரையிலும் சீராக ஓடவும் முடிந்தது. ஆனால், புதிய குதிரை, பழைய குதிரையைக் கண்டதும் தடுமாற ஆரம்பித்த புள்ளியில்தான், பெரும் பிரச்சினைகள் ஆரம்பித்தன. இன்றைக்கு மைத்திரி, மஹிந்தவையும் ரணிலையும் நோக்கி விரல் நீட்டிவிட்டு, தான் தனிப்பெரும் தலைவராக உருவாகும் முயற்சிகளில் ஈடுபடுகின்றார். ரணில் நொண்டிக் குதிரைதான். ஆனால், எவ்வளவு பாரத்தையும் தாங்கக் கூடிய குதிரை. அதுபோல, மற்றவர்களைத் தடக்கிக் கீழே விழவைக்கும் வல்லமையுள்ள குதிரை” என்றார்.

ரணிலின் அரசியல் என்பது, அவரின் எதிர்காலக் கணிப்புகளின் அடிப்படையிலேயே அதிகம் அமைந்திருக்கின்றது. அவரினால், ஒரு குறுகிய காலத்துக்குள், தன்னை நோக்கி மக்களை ஒருங்கிணைக்கும் வல்லமை கிடையாது.

மாறாக, நீண்ட காலத் திட்டமிடலின் போக்கில் வளைக்க முடியும். அதுதான் அவரின் பலமும் பலவீனமும். அத்தோடு, அவரின் அரசியல் தோல்விகள் என்பது, அவரோடு நெருக்கமாக இருந்தவர்களினாலேயே நிகழ்ந்திருக்கின்றன.

இம்முறையும் ரணில் எதிர்கொண்டிருக்கின்ற பிணைமுறி மோசடி குறித்தான சிக்கல், அவரின் நண்பர்கள் உள்ளிட்ட நெருக்கமானவர்களால் நிகழ்ந்ததுதான். கட்சிக்குள் தனக்கு பெரும் நெருக்கடியை அளித்து வந்த சஜித் பிரேமதாஸவுக்கு, நெருக்கடியைக் கொடுப்பதற்காக, அவரால் அதிவேகமாக வளர்க்கப்பட்டவர்களில், ரவி கருணாநாயக்க ஒருவர்.

இன்றைக்கு, ரவியின் முறையற்ற நடவடிக்கைகளினால் ரணில், முட்டுச் சந்தில் நிற்கவேண்டி வந்திருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு, தற்போதைக்கு எந்தவிதமான ஆபத்துகளும் இல்லாத போதும், அடுத்து வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை முன்னிறுத்தி வெற்றிபெறுவதற்கான சூழல்களை உருவாக்குவதற்கான நிலைமைகளையும் காண முடியவில்லை.

ரணில் எவ்வளவு முயன்றாலும், சஜித்துக்கு ஆதரவான தரப்பொன்று, கட்சிக்குள் எப்போதுமே உருவாகி வந்திருக்கின்றது. சஜித்துக்கு ஆதரவான தரப்பினர், ரணிலுடன் அதிருப்தியுற்று கட்சியிலிருந்து விலகிச் சென்றிருக்கின்றார்களே அன்றி, கட்சிக்குள் இருந்து, ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப்பெயரை அவ்வளவுக்கு ஏற்படுத்தியதில்லை.

அடுத்த தலைமைக்கான போட்டியில் இன்னமும் சஜித் முன்னிலையில் இருக்கின்றார். அந்த இடத்தை நோக்கி, ருவன் விஜேவர்தனவை வளர்க்க ரணில் முனைந்தாலும், அவருக்கு நெருக்கமானவர்கள் கொடுக்கும் தேவையற்ற நெருக்கடி என்பது, அவரின் திட்டங்களைச் சடுதியாக ஆட்டங்காண வைக்கின்றது. அல்லது, வெற்றிக்கனியைப் பறிப்பதற்காக அவர் மெல்ல மெல்ல முயன்று பறிக்க முனைகையில், அவரின் தோளின் மீதேறியே, இன்னொருவர் பறித்துச் சுவைத்து விடுகின்றார்.

ரணிலின் தற்போதைய திட்டமிடல் என்பது, தொடர்ச்சியான மைத்திரி- மஹிந்த பிளவைத் தக்க வைப்பது. அதற்காக அவர், மைத்திரி கொடுக்கும் சில இடர்களையும் தாங்குவதற்குத் தயாராக இருக்கின்றார்.

மைத்திரி, கூட்டுப்பொறுப்புகளிலிருந்து விலகி, அந்தப் பொறுப்புகளை ரணில் மீது சுமத்திவிட்டு ஓடினாலும், அவற்றையெல்லாம், தாங்கிக் கொண்டு, அமைதி பேணுவது என்பது, மைத்திரியை மக்களிடம் இன்னொரு வகையில் பழிதீர்ப்பதற்காகவே. அது, தன் தோள் மீதேறி கனி பறித்தவர்களில் ஒருவரான மைத்திரியை, கனியைச் சுவைக்கும் அவகாசம் வழங்காமல், அல்லாட வைப்பதாகும்.

அந்த முயற்சிகளில், ரணில் கடந்த மூன்று ஆண்டுகளாக மறைமுகமாக, ஆனால் வெற்றிகரமாக ஈடுபட்டே வந்திருக்கின்றார். இந்தத் தேர்தல் முடிவுகளின் போக்கிலும் அவர், அதை உறுதி செய்யவே முனைகின்றார்.
ரணில் இப்போது மஹிந்தவை பிரதான எதிரியாகக் கொள்ளவில்லை. மைத்திரியையே பிரதான எதிரியாக முன்னிறுத்துகின்றார். தங்களுக்கிடையிலான முரண்பாடுகளை மெல்ல மெல்ல அதிகப்படுத்துவதன் மூலம், மைத்திரியை அதிகமாகக் கோபப்படுத்தி, ஆட்டத்தின் போக்கைத் தன்னுடைய கைகளுக்குள்ளேயே வைத்துக்கொள்ளவும் அவர் முனைகின்றார். அதன் போக்கில் சதுரங்கத்தின் ஒரு காயாகவே, மஹிந்தவை இந்தத் தேர்தலில் ரணில் கையாளவும் முனைகின்றார்.

2020 தேர்தல்களுக்கான அரசியல் கூட்டுகளையும் வெற்றி வாய்ப்புகளையும் இந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் பருமட்டாக வடிவமைக்கும்.

அதனால்தான், என்றைக்கும் இல்லாதளவுக்கு உள்ளூராட்சித் தேர்தலொன்றுக்காக பெருந்தலைகள் எல்லாமும் ஒவ்வொரு நாளும் கூட்டங்களில் மணிக்கணக்காக உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விசித்திரமான மும்முனைக் களத்தில் முன்னோக்கி ஓடுவது மாத்திரமல்ல, அடுத்து வருகின்றவர்களைப் பிரித்து வைத்து ஓட வைக்கவும் வேண்டும். அதுதான், வெற்றியை இறுதி செய்யும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 13.!!
Next post ஹெரோயினுடன் பொலிஸார் இருவர் கைது!!