எலும்பே நலம்தானா?
சுவரின்றி சித்திரம் வரைய முடியாது இல்லையா? அப்படி மனிதனுக்கு சுவர் போன்றதுதான் எலும்பு அமைப்பு. பொதுவாக, பலமான விஷயங்களுக்கு எலும்புகளை உதாரணம் காட்டுவார்கள். எலும்பு அவ்வளவு உறுதியானது என அர்த்தம். ஆனால், ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்பட்டால் அதே எலும்பு ஸ்பான்ஞ் மாதிரி மென்மையாக மாறிவிடும். ஆஸ்டியோபொரோசிஸை எலும்பு வலுவிழப்பு நோய், எலும்புப் புரை நோய் என்றும் அழைக்கிறார்கள். ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையால் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மெனோபாஸ் காலத்தை நெருங்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் தாக்குகிறது. காரணம், அவர்களது உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறையத் தொடங்குவதுதான். அதேபோல தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரக்கும் பெண்களுக்கும் அதன் விளைவாக இந்தப் பிரச்னை தாக்குகிறது.
40 வயதைக் கடந்த பெண்கள் பலரிடம் இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகளைக் கேட்க முடிகிறது. அந்த அறிகுறிகளை சாதாரண பலவீனத்தின் அறிகுறிகளாக நினைத்துக் கொண்டு அலட்சியப்படுத்துகிறார்கள். அது உடலுக்குள்ளேயே அமைதியாக வளர்ந்து ஒரு நாள் தீவிரமாகிறது. ஆஸ்டியோபொரோசிஸ் தீவிர நிலையை அடையும்போது இருமினாலோ, தும்மினாலோகூட எலும்புகள் உடையக்கூடும். சாதாரணமாக கால் தடுக்கினால்கூட எலும்புகள் உடையக்கூடும்.
ஆஸ்டியோபொரோசிஸ் என்றால் என்ன?
எளிமையாகச் சொல்வதென்றால் எலும்புகள் வலுவிழக்கிற நிலை. அதாவது நம் உடலில் வைட்டமின் டியின் அளவானது 30 என்கிற அளவில் இருப்பதுதான் ஆரோக்கியமானது. அந்த அளவு குறையும்போதுதான் பிரச்னை. நம் உடலில் உள்ள எலும்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும்.
எலும்பிலுள்ள பழைய செல்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளும். வயதாக ஆக இந்த புதுப்பித்தல் திறன் மந்தமாகும். அதனால் எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்கும். எலும்புகளின் அடர்த்தி குறைவதால் அவற்றில் துளைகள் விழுந்து எலும்புகள் இன்னும் பலமிழக்கும். அதனால்தான் அவை ஸ்பான்ஞ் போன்ற தன்மையை அடைகின்றன. இதைத்தான் ஆஸ்டியோபொரோசிஸ் அதாவது எலும்பு வலுவிழப்பு நோய் என்கிறோம். ஆஸ்டியோபொரோசிஸ் என்பது எந்த அறிகுறிகளையும் காட்டாமல் வருடக் கணக்கில் அமைதியாக வளர்ந்து ஒருநாள் விஸ்வரூபம் எடுக்கும் ஒரு பிரச்சினை. முதுகுவலி, எலும்பு உடைதல், உயரம் குறைதல், கூன் விழுந்த தோற்றம் போன்றவை ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
இரண்டு வகையான ஆஸ்டியோபொரோசிஸ்
ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையில் Primary மற்றும் Secondary என இரண்டு வகைகள் உள்ளன. இதில் பிரைமரி ஆஸ்டியோபொரோசிஸ் என்பது இயல்பாக வயதாவதன் விளைவாக ஏற்படுவது. மெனோபாஸை நெருங்கும் பெண்களுக்கும், 50 முதல் 70 வயதுக்காரர்களுக்கும் அதிகம் பாதிப்பது இந்த வகைதான். செகண்டரி ஆஸ்டியோபொரோசிஸ் என்பது சில உடல்நல பிரச்சினைகளின் விளைவால் அவற்றுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விளைவால் ஏற்படுவது. சர்க்கரை நோய், தைராய்டு, கல்லீரல் நோய்கள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளின் விளைவால் ஏற்படுவது.
ஆஸ்டியோபொரோசிஸை அதிகரிக்கும் காரணிகள்
முதுமை, பெண் பாலினம், புகை மற்றும் குடிப்பழக்கம், உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறை, கால்சியம் குறைவான உணவுப்பழக்கம், ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவது, குடும்பத்தில் வேறு யாருக்காவது ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பு இருந்தால்…
எப்போது மருத்துவப் பரிசோதனை அவசியம்?
உங்கள் உடலில் ஏதோ ஒரு எலும்பு உடைந்துவிட்டதாக உணர்கிறீர்களா? உங்கள் உடலின் ஏதோ ஒரு பாகத்தை அசைக்க முடியாதபடி உணர்கிறீர்களா?
திடீரென உடலில் ஏதோ ஒரு இடத்தில் தாங்க முடியாத வலியை உணர்கிறீர்களா அல்லது உங்கள் உடலின் எடையைத் தாங்க முடியாதபடி சிரமமாக உணர்கிறீர்களா? உங்கள் கையோ அல்லது காலோ அதன் இயல்பான ஷேப்பில் இல்லாதது போல உணர்கிறீர்களா? இவையெல்லாம் ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னைக்கான அறிகுறிகளாக இருக்கலாம். அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
Average Rating