நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம்!!
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, எளிதான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பலவீனத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். திருநீற்றுப்பச்சை, தூதுவளை, வல்லாரை ஆகியவை நரம்புகளை பலப்படுத்தும் மூலிகைகளாக விளங்குகின்றன. நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை பொறுத்துதான் உடலின் அனைத்து செயல்பாடும் இருக்கும்.
ஞாபக சக்தி, ஜீரண சக்தி, தூக்கம் போன்றவற்றுக்கு நரம்பு மண்டலம் உதவுகிறது. முதுகுத்தண்டில் அடிபடுதல், அழுத்தம் ஏற்படுவது, மன உளைச்சல், உடற்பயிற்சி இல்லாதது, மூச்சுப்பயிற்சி இல்லாமை, சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது போன்றவை நரம்பை பலவீனப்படுத்தும். இதனால், கை கால்களில் நடுக்கம், சோர்வு, மறதி, உள்ளங்கை கால்களில் வியர்வை போன்ற பிரச்னைகள் ஏற்படும். திருநீற்றுபச்சையை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
10 திருநீற்று பச்சை இலைகளை சுத்தப்படுத்தி எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி சிறிது காய்ச்சிய பால் சேர்த்து, காலை வேளையில் குடித்துவர நரம்புகள் பலம் அடையும். சோர்ந்துபோன நரம்புகளை தூண்டுகிறது. உடல் சோர்வை போக்கும். பல்வேறு நன்மைகளை கொண்ட திருநீற்று பச்சை மணத்தை தரக்கூடியது. நரம்புகளை பலப்படுத்தும் தன்மை உடையது. சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்தும்.
தூதுவளையை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தூதுவளை இலை, மஞ்சள் மற்றும் வெள்ளை கரிசாலை இலை ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர நரம்புகளுக்கு பலம் ஏற்படும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். நுரையீரல், கல்லீரலை பலப்படுத்தும். நீலநிற பூக்களை உடைய தூதுவளை, நரம்புகளை தூண்டக்கூடிய மூலிகையாக விளங்குகிறது.
வல்லாரை கீரையை பசையாக அரைத்து, தேவையான நல்லெண்ணெய் விட்டு தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை வாரம் ஒருமுறை தலை, உடலில் பூசி குளித்துவர நரம்புகள் தூண்டப்படும். தலைவலி, கழுத்து வலி சரியாகும். உடல் சோர்வு போக்கும். மன சோர்வு நீங்கும். நரம்பு பலவீனம் அடையும்போது உள் உறுப்புகள் அனைத்தும் பலவீனம் அடைகிறது. மூளை செயல்பாடு குறையும். ஞாபக மறதி, விரல்கள் மரத்துபோகுதல், தொடு உணர்வு குறைதல் ஏற்படுகிறது. நரம்புகளை பலப்படுத்துவதில் செம்பருத்தி, ரோஜா ஆகியவை அற்புதமான மருந்தாகிறது.
காலிபிளவர், முளைகட்டிய தானியங்கள் ஆகியவையும் சிறந்த மருந்துகளாகின்றன. தினமும் அரைமணி நேரம் புல் வெளியில் வெறும் காலோடு நடக்க வேண்டும். இதனால் நரம்பு மண்டலம் தூண்டப்படும். மூளைக்கு இதமான சூழல் ஏற்பட்டு ஞாபக சக்தி பலப்படும். வேணல் கட்டியை குணப்படுத்தும் மருத்துவத்தை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெங்காயம், மஞ்சள். சின்ன வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி நசுக்கி, மஞ்சள் சேர்த்து கலந்து கட்டிகள் மீது போட்டுவர நச்சுக்கள் வெளியேறி கட்டிகள் விரைவில் குணமாகும்.
Average Rating