வடக்குப் பெண்களும் சமூக மாற்றமும்!!
போருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் தினசரி வாழ்க்கை, பிரச்சினைகளிலிருந்து பிரச்சினைகளுக்கு, கடனிலிருந்து துஷ்பிரயோகத்திலிருந்து வன்முறைக்கு என, நகர்ந்து செல்கிறது.
இந்த நெருக்கடிகளின் பாதிப்புகளை, பெண்களே எதிர்கொள்கின்றனர்: அவர்களது உழைப்பும் நேரமும் சுரண்டப்படுகிறது; அவர்களுடைய சொற்ப உழைப்பும், கடன் சுறாக்களால் உறிஞ்சப்படுகின்றன;
அவர்களுடைய குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியவர்களாக அவர்கள் இருக்கின்றனர்; அவர்களுடைய உடல்கள், கட்டுப்பாட்டுக்குள்ளேயே காணப்படுகின்றன. இருந்த போதிலும், தமிழ்த் தலைமைத்துவமும் அரச தலைமைத்துவமும் இந்த யதார்த்தத்தை உதாசீனம் செய்துகொண்டிருக்கும் நிலையில், சமூகப் புத்துயிர்ப்புக்கான தூரநோக்குச் சிந்தனைகளோ அல்லது தலைமைத்துவமோ காணப்படாத நிலையே உள்ளது.
உழைப்பும் கடனும்
நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது, பணியாற்றுவதற்கான நிலைமைகள், போரால் பாதிப்படைந்த பிரதேசங்களில், மோசமானவையாக இருக்கின்றன. பல தசாப்தங்களாகவே, தொழிற்சங்கங்கள் செயற்படவில்லை. அத்தோடு, தொழிலாளர்களின் உரிமைகள், பணி வழங்குவோரால் மீறப்படுவதோடு, பொதுமக்களின் கவனத்தில் அதிகளவு முன்னுரிமை பெறாத விடயமாகவே இது காணப்படுகிறது.
பணியாற்றும் நிபந்தனைகள் மோசமடைதல், பெண்களையே அதிகம் பாதிக்கின்றன: அவர்கள் இணைந்து காணப்படாத போது, வர்க்க, பாலின அடிப்படையில், பெண் பணியாளர்கள் சுரண்டப்படுகின்றனர். கடலுணவு நிறுவனங்களின் சில்லறை விற்பனை நிலையங்கள், பெண் பணியாளர்களுக்கு, மிகக் குறைந்தளவு ஊதியத்தையே வழங்குவதோடு — சில வேளைகளில், நாள் முழுவதும் மேற்கொள்ளும் கடுமையான வேலைக்கு, வெறுமனே 400 ரூபாய் தான் வழங்கப்படுகிறது — தொடர்ச்சியாக உரத்த குரலில் சத்தமிடப்படுதலில் இருந்து, பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாகக் காணப்படும் நிலைமை வரை, துஷ்பிரயோகம் நிறைந்த சூழலே, அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
விவசாயப் பணிகளில், ஆண்கள் பெறும் ஊதியத்தின் அரைவாசியையே, பெண்கள் பெறுகின்றனர்.
வறுமைக்கோட்டுக்குக் கீழான அளவில் வருமானத்தைப் பெறும் பெண்கள், சிறுவர்கள் அல்லது வயதுவந்த தமது பெற்றோர்கள் என, தம்மில் தங்கியிருப்போரைக் கவனிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
ஆனால், வீடுகளில் பராமரிப்பு வேலைகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், வேலைக்காக வெளியே செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. ஊழியப் படையில் பெண்களின் பங்குபற்றல், யாழ்ப்பாணத்திலும், வடக்கு, கிழக்கு என பரந்தளவிலும், மிகக்குறைவாகவே காணப்படுகிறது. 2016ஆம் ஆண்டுக்கான ஊழியப் படைக் கருத்துக்கணிப்பின்படி, இலங்கையில் ஊழியப் படையில் 75.1 சதவீதமான ஆண்களும், 35.9 சதவீதமான பெண்களும் காணப்படுகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தில், ஆண்களின் பங்குபற்றல் 70.5 சதவீதமாகவும், பெண்களின் பங்குபற்றல் வெறுமனே 21.9 சதவீதமாகவும் காணப்படுகிறது.
தொடர்ந்ததும், நீண்ட பணியாற்றும் மணித்தியாலங்களைக் கொண்டதுமான உத்தியோகபூர்வமான ஊழியப் படையில் பெண்கள் இணைவதற்கு, உத்தியோகபூர்வமான நாள் பராமரிப்பு நிலையங்களும் முதியோர் பராமரிப்பு நிலையங்களும் தேவைப்படுகின்றன. மாற்றாக, வீட்டில் பெண்களின் கடினமான பணியாற்றல் அங்கிகரிக்கப்பட்டு, ஊதியம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, சிறுவர்களையும் வயதுவந்த பெற்றோரையும் விசேட தேவையுடைய குடும்ப உறுப்பினர்களையும் பார்க்கும் பல பணிகளை ஆற்றும் போது, இது முக்கியமானது.
இந்தப் பின்னணியில், அரச, அரசசார்பற்ற அமைப்புகளால் வழங்கப்பட்ட கடன்கள், வீட்டில் தங்கியிருக்கும் பெண்களுக்கான “வாழ்வாதார முன்னெடுப்புகள்” என்று சொல்லப்பட்டாலும், அவர்களின் கடனை அதிகரிக்கவே செய்தன.
கால்நடைகளை வளர்த்தலிலிருந்து தையலையும் கைப்பணி வேலைகளையும் கொண்ட சுயதொழில்வாய்ப்பு போன்ற கேலித்தனமான இந்தச் செயற்றிட்டங்கள், முதலாவது ஆண்டிலேயே தோல்வியடையும். ஆடுகளுக்கு உணவு வழங்க, அவர்களிடம் பணம் இல்லை; நோய்களின் காரணமாகக் கோழிகள் அடிக்கடி இறக்கின்றன; தையல், கைப்பணி உற்பத்திப் பொருட்களுக்கான பொருத்தமான சந்தை இல்லாமல் காணப்படுகிறது. இப்படியாக, இத்திட்டங்களின் குறைபாடுகள் காணப்படுகின்றன.
வீட்டு நிதிப் பிரச்சினைகள் அதிகரிக்க, வேலைகளை அவர்கள் தொடர்ந்தும் தேடுகின்ற அதேநேரத்தில், தமது நகைகளை — கிராமப் புறங்களில் காணப்படும் பிரதானமான திரவச் சொத்துகள் இவையாகும் — அடைவு வைக்கின்றனர்.
கூலி வேலை, வீட்டு வேலை, வீட்டில் சிறிய உற்பத்திகள் ஆகியவற்றை, வயதான பெண்கள் நாடுகின்றனர். இளைய வயதுடைய பெண்கள், வடக்கில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுரண்டல்மிகுந்த ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைகளைத் தேடுவதோடு, இல்லாவிடில், சுதந்திர வர்த்தக வலயப் பணிகளுக்காகக் குடிபெயர்கின்றனர்.
வருமானங்கள் இல்லாமல் போகும் போது, அடைவு வைக்கப்பட்ட நகைகளை, பலர் இழக்கின்றனர். அத்தோடு இறுதியில், சூறையாடும் தன்மை கொண்ட நுண் நிதிக் கடன்களில் சிக்குகின்றனர். நுண் நிதி நிறுவனங்கள், தமது கடன் திட்டங்களுக்காக, பெண்களை மாத்திரமே இலக்குவைக்கின்றன.
ஏனெனில், அச்சுறுத்தல், துஷ்பிரயோகம் ஆகியவற்றினூடாக, பெண்களிடமிருந்து கடன்களை மீளப் பெறுதல் இலகுவானது. நாளாந்தம் பிழைத்தல் என்பது, கடன்கள், கடன்கள், மேலும் கடன்களை வேண்டி நிற்கிறது.
கலாசாரமும் ஒடுக்குமுறையும்
கலாசாரச் சீரழிவு என்பது, தமிழ்ச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற கலந்துரையாடலாகக் காணப்படுகிறது. தமிழ்க் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்களாக, பெண்களும் அவர்களுடைய உடல்களுமே கருதப்படுகின்றனர். போதைப்பொருட்கள், மது, ஒழுங்கீனம் உட்பட வடக்கில் காணப்படும் அநேகமான சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள், கலாசாரச் சீரழிவாகக் கூறப்படுகின்றன. கலாசாரத்தைப் பாதுகாப்பது, பெண்களைப் பாதுகாப்பதோடு, அவர்களின் குடும்பங்களையும் காக்கிறது எனக் கூறப்படுகிறது.
இவ்வாறான பழைமைவாதக் கலந்துரையாடல்கள், தங்களது நகர்வுகளையும் சமூகத் தொடர்புகளையும் மட்டுப்படுத்த வேண்டியதும் குறிப்பிட்ட வகையில் ஆடை அணிய வேண்டியதுமான பாரிய சமூக அழுத்தத்தை, பெண்களுக்கு வழங்குகின்றன. இந்தக் கட்டுப்பாடுகள், பெண்களை நோக்கிய ஆண்களின் தேவையற்ற ஈர்ப்பைக் குறைப்பதோடு, பெண்களின் “கற்புக்கு” அடையாளமாகும் எனக் கூறப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், துஷ்பிரயோகம், பிரிவு, கையறுநிலை ஆகியவற்றுக்கான சமூகக் குற்றச்சாட்டு, பெண்கள் மீதே வீழ்கிறது.
போருக்குப் பின்னரான தமிழ்ச் சமூகத்தில், மத நம்பிக்கைக்கான அலையொன்று காணப்படுவதோடு, பெரும்பாலான சமூக முதலீடு, கோவில்களுக்கே செல்கிறது. கோவில்களின் கட்டமைப்புக்கு, சாதியே பிரதானமான ஒன்றாக இருக்கின்ற அதேநேரத்தில், கோவில் திருவிழாக்களிலும் பல தரப்பட்ட காலங்களில் காணப்படும் விரதங்களிலும், பெண்கள் பங்குபற்றுகின்றனர். உடல்நலக் குறைபாடுகளைக் கொண்ட பெண்கள், சுகாதாரப் பராமரிப்பை நாடுவதைத் தவிர்க்கின்றனர். தமது திருமண வாய்ப்புகளை அது பாதிக்குமென்பதே அதற்கான காரணமாகும்.
திருமணங்களையும் பூப்புனித நீராட்டு விழாக்களையும் ஏற்பாடு செய்வதோடு, அவற்றில் கலந்துகொள்ளும் சமூகக் கடமைகளையும், பெண்கள் நிறைவேற்றுகின்றனர். ஏனைய மத நடவடிக்கைகளைப் போல, இந்து சமய நடவடிக்கைகளும் ஒழுக்கமும், பல்வேறு விதமான விடயங்களில் தங்கியிருப்பதோடு, அதில் கலந்துகொள்வோருக்கு, ஏராளமான உள்ளார்ந்த விடயங்களையும் வழங்குகிறது. வடக்கில், போருக்குப் பின்னரான காலத்தில் கோவில்களை நோக்கிய வாழ்க்கையென்பது, அதன் சாதி, பாலின சம்பந்தத்துக்காக, கவனமாகப் படிக்க வேண்டியதொன்றாக உள்ளது.
இயக்கமும் பிரதிநிதித்துவமும்
உயர்கல்வியும் வேலைவாய்ப்பும், பெண்களுக்கான எதிர்கால வழியா? பெண்களின் கல்வி அதிகரிப்பதோடு, போர்க்காலத்தில் ஆண்களின் குடிபெயர்வு, உயர்கல்வியிலும் அதிகாரப் பதவிகளிலும் பெண்களின் பிரசன்னம் அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தரவுகளின்படி, 2015ஆம் ஆண்டில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு 6,665 மாணவர்கள் உட்புகுந்தார்கள்.
அவர்களுள் 4,290 பேர் — அதாவது 64 சதவீதமானோர் — பெண்களாவர். அத்தோடு, யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசால் பணிக்கமர்த்தப்பட்டுள்ள 26,474 அரச ஊழியர்களுள் 43 சதவீதமானோர், பெண்களாவர்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே வடக்கிலும், பெண்களின் உயர்கல்வி தொடர்பிலும் அரச வேலைவாய்ப்புத் தொடர்பிலும், நேர்முகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பெண்களின் சமூக நிலைமையில், அது நிச்சயமான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதாகக் தான் இருக்கிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முழு வீச்சில் இடம்பெற்றுவரும் நிலையில், அதில் பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீடு காணப்படுகின்றமை, பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வழிவகுக்கும். ஆனால், தெரிவுசெய்யப்பட்ட பின்னர், அரசியல் கட்சிகளுக்குள்ளும் உள்ளூராட்சி மன்றங்களுக்குள்ளும் காணப்படும் ஆணாதிக்க நிலைமையால், பெண் பிரதிநிதிகள் ஓரங்கட்டப்பட, பெண்களின் பிரச்சினைகள், தொடர்ந்தும் உதாசீனப்படுத்தப்பட்டவையாகவே காணப்படும்.
கூட்டுறவு நிலையங்கள், சனசமூக நிலையங்கள், கிராமியச் சமுதாயங்கள் உட்பட, வடக்கில் காணப்படும் சமூக அமைப்புகள், தமது தலைமைப் பொறுப்பில் பெண்களை உள்வாங்காதவையாகவே காணப்படுகின்றன. வேறு வழியில் சொல்வதானால், பலமான பெண்களின் இயக்கமொன்று இல்லாமல், தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது, சமூகத் தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்தாது என்பதுடன், பெண்களின் பிரச்சினைகளும் தொடர்ந்தும் ஒதுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
சமூக நிலைமாற்றத்தை நோக்கி
போருக்குப் பின்னரான சமூக நிலைமாற்றமொன்றுக்கு நாம் எதிர்பார்த்திருக்கும் நிலையில், வடக்கில் காணப்படும் மிகவும் முக்கியமானதும் சமூகக் கட்டமைப்பில் இணைந்திருப்பதுமான இரண்டு அம்சங்களான சாதியையும் பாலினத்தையும், அதிரடியாக உடைப்பதன் மூலமாக, அவ்வாறான மாற்றம் ஏற்படுமென நினைக்கிறேன். சாதியப் பிரச்சினையென்பது, யாழ்ப்பாணத்துக்கும் வடக்குக்கும் என விசேடமான இயங்கியலைக் கொண்டிருக்கிறது.
ஆனால், பெண்களின் உரிமைகளுக்கான இயக்கங்களின் முன்னால் காணப்படும் சவால்கள், நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் சவால்களை விட வேறானவை கிடையாது. தேசிய இயக்கங்களும் அவற்றின் கூட்டுப் பொறுப்புணர்வும் அவசியமானவை.
பெண்களுக்கான புதிய குழுவான சுதந்திர இயக்கம் என்ற குழு, துன்புறுத்தலையும் தவிர்க்கப்படுதலையும் பெண்கள் எதிர்கொள்ளும் தீவிர அரசியல் பகுதிகளில் காணப்படும் இடதுசாரிகளைச் சவாலுக்குட்படுத்தி, கீழ்வரும் விடயத்தைக் குறிப்பிட்டிருந்தது:
“அரசியல், சமூக நிலைமாறலில், பெண்கள் முன்னிலையில் தான் இருந்திருக்கிறார்கள். காணிகளையும் ஏனைய வளங்களையும் மீளக் கைப்பற்றுவதற்கான போராட்டங்களில், தனியார்மயமாக்கலுக்கான போராட்டங்களில், பாதிப்புகளை வழங்கக்கூடிய அபிவிருத்திச் செயற்றிட்டங்களில், சிறந்த வேலையாற்றும் சூழலுக்கான போராட்டங்களில், அவர்கள் தொடர்ச்சியாகப் பங்குபற்றியிருக்கிறார்கள்.
ஒடுக்கப்படும் பணிச் சூழலில் தொடர்ந்தும் காணப்படுகின்ற போதிலும், பொருளாதாரத்திலும் சமுதாயங்களில் குடும்ப, சமூக வாழ்க்கையிலும், பெண்கள், முக்கியமான பங்கை ஆற்றுகின்றனர்.
“இருந்த போதிலும் அவர்கள், அரசியலிலும் அரசியல் தலைமைத்துவத்திலும் முன்னேற்றங்களை அடைவதிலிருந்து தடுத்து வைக்கப்படுகின்றனர். அதனால், பெண்களின் சுதந்திரம் தொடர்பான எங்கள் தலையீடு, பாலியல் வன்முறைகளைப் பற்றியதாக மாத்திரம் இல்லை. அது, இடதுசாரி அரசியலுக்கு மாத்திரம் தனியான பிரச்சினையாகவும் நாங்கள் பார்க்கவில்லை. முதலாளித்துவத்துக்கு எதிரான அரசியலின் பாரிய ஆற்றலை நாங்கள் அங்கிகரிப்பதோடு, சமூக உறவுகளை மாற்றியமைக்க வேண்டிய தேவையையும் உணர்கிறோம்”.
வடக்கில் அவ்வாறான சமூக நிலைமாற்றமொன்றைப் பற்றி நாங்கள் சிந்திக்கும் போது, அவ்வாறான நூறு இயக்கங்கள் உருவாகட்டும்.
Average Rating