ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடந்தவாரம் மட்டக்களப்புக்கான விஜயத்தினை மேற்கொண்டு ரிஎம்விபியினரைச் சந்தித்தோர்.. ‘கிழக்கான் என்னும் பிரதேசவாதம் விடிவிற்கு வழிவகுக்காது” -அரசியல் அவதானிகள்
கிழக்கான் என்கிற கோஷத்துடமான ஐந்திற்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவினர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடந்தவாரம் மட்டக்களப்புக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் அங்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துi ரயாடியுள்ளனர். இதன்போது கிழக்கின் அபிவிருத்தி, கிழக்கு தொடர்ந்தும் பிரிந்தே இருப்பது, கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கை நிலை குறித்தும் கவனம் செலுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. இக்குழுவில் டென்மார்க்சைச் சேர்ந்த குமாரதுரை, பிரான்சைச் சேர்ந்த சின்னா மாஸ்டர் எனப்படும் ஞானம், ஜேர்மனியைச் சேர்ந்த குமரன் மாஸ்டர் ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர். இவர்கள் ரி.எம்.வி.பி அமைப்பைக் கட்டியெழுப்பி, கிழக்கு மக்களின் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தம்மாலான முழு உதவியையும் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். கிழக்கு மாகாணம் பிரிந்தே இருக்க வேண்டுமென்பதை தமது நோக்காகக் கொண்ட இவர்கள், கிழக்கு பிரிந்தே இருக்க வேண்டுமென்பதில் தீவிரமாகவும் உள்ளனர். ரி.எம்.வி.பியினரின் இணையதளம் மற்றும் ரி.எம்.வி.பியினரின் தமிழ்அலை பத்திரிகை ஆகியனவற்றுக்கு கட்டுரைகளையும், ஆக்கங்களையும் எழுதுவதற்கு மேற்படி விஜயத்தின் போது இவர்கள் சம்மதம் தெரிவித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரிஎம்விபியின் தலைவரான கருணாஅம்மானின் தீவிர ஆதரவாளரான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த முக்கிய தளபதிகளில் ஒருவரும், அம்பாறை மாவட்ட “ரிஎம்விபி” அரசியல்துறை பொறுப்பாளரும், ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான இனியபாரதியை இக்குழுவினர் சந்திப்பதற்கான முயற்சி பலனளிக்கவில்லை என்றும் தெரிய வருகிறது. அதேவேளை கிழக்கான் என்கின்ற கோசமானது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியல்வாதிகளினதும், அதிகார வர்க்கத்தினரின் பிரித்தாளும் தந்திரத்திற்கு மேலும் மெருகூட்டுவனவாகவே அமைந்து உள்ளதென்பதை இவர்கள் புரிந்து கொள்ளாதிருப்பது கவலையளிக்கும் விடயமாகும். தமிழ் மக்களை பிரதேசவாதம் பேசி பிரிப்பதில் உள்ள பிரதிபலன் என்னவென்பதை இவர்கள் உணராதிருப்பது எமது இனத்துக்கான சாபக்கேடாகும். பிரதேசவாதம் பேசி கிழக்கான் என்று பிரித்துப் பேசும் நடவடிக்கைகளும், முன்னெடுப்புக்களும் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையையும் ஏற்படுத்தப் போவதில்லை. அத்துடன் இவ்வாறான நடவடிக்கைகளும், முன்னெடுப்புக்களும் ஒட்டுமொத்தம் தமிழ் சமூகத்தின் விடிவிற்கான அரசியல் தீர்வுக்கு பின்னடைவையே ஏற்படுத்துவதாக அமைந்து விடுமென அரசியல் அவதானிகள் கருத்தினை வெளியிட்டுள்ளனர்.
Thanks For.. WWW.ATHIRADY.COM
Average Rating