சமாதானத்திற்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டுமா?
நண்பர்கள் கூட்டம் எப்போது உதவுகிறார்களோ இல்லையோ நமக்கு ஏதேனும் சங்கடம், பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத வருத்தம் என்று ஏற்படும் போது நாம் தேடுகிற ஓர் உறவுநட்பாகத் தான் இருக்கிறது. அல்லது ஏதேனும் ஒரு உறவு என்னை இந்த சங்கடத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் போது நம்மை அரவணைத்துச் செல்பவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அந்த உறவுக்கும் நமக்கும் இருக்குமான அன்னியோன்னியம் தான் நம்மை அதிலிருந்து மீட்டுக்க உதவிடும். அழுது கொண்டிருப்பவரிடம் அழாதே… சரியாகிடும் என்று சொல்லலாம். ஆனால் காரணம் எதுவும் வெளியில் சொல்லாமல் சோகமாக டல்லாக உட்கார்ந்திருப்பவர்களிடத்தில் என்ன சொல்வது? எப்படி அவர்களை தேற்றுவது,சகஜநிலைக்கு கொண்டுவருவது, இந்த தருணங்களை எப்படி கையாள்வது என்று தெரியாமல் கஷ்டமாக உணர்கிறீர்களா? அடுத்து வருகின்ற சிலவற்றை முயற்சி செய்து பாருங்கள்.
நம்பிக்கை : தன் மீதான நம்பிக்கை குறையும் போது தான் இப்படியான பிரச்சனைகளின் துவக்கமாக இருக்கிறது. அந்த நம்பிக்கையை முதலில் அவர்கள் மனதில் விதைத்திடுங்கள்.
நீ வாழ்க்கையில் இன்னும் நிறைய விஷயங்களை சாதிக்க வேண்டியிருக்கிறது, இதற்கெல்லாம் துவண்டு விழக்கூடாது என்ற தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகளை பேசுங்கள்.
இதில் நீங்கள், கண்டிப்பாக செய்யக்கூடாத விஷயம் என்ன தெரியுமா? தன்னம்பிக்கை ஊட்டுகிறேன் பேர்வழி என்று உனக்கு வந்திருப்பதெல்லம ஒரு கஷ்டமே கிடையாது, உன்னை விட எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள், இது அவர்களின் மனதை இன்னும் அதிகமாக நோகடிக்கும்.
தனிமை : அவர்களுக்கான தனிமையிடத்தினை கொடுத்திடுங்கள். நீ தனியாக இருப்பதால் தான் நெகட்டிவாக யோசிக்கிறாய் என்று சொல்லி அவர்களின் பெர்சனல் டைம்களில் நீங்கள் நுழையாதீர்கள்.
அவர்களுக்கான நேரம் என்று சிலமணி நேரங்களாவது கொடுங்கள்.அதோடு,இந்த நேரத்தில் இதையெல்லம சிந்தித்து பார், உன்னிடம் எவ்வளவு திறமைகள் இருக்கிறது தெரியும் என்று சொல்லுங்கள்.அந்த நேரத்தில் அவர்கள் தன்னைப் பற்றி சுயபரிசோதனை செய்து கொள்ள முடியும்.
அட்வைஸ் : இது போன்ற நேரத்தில் மிகவும் கடுப்பாக கூடிய விஷயமென்றால் அது அட்வைஸாகத்தான் இருக்க முடியும். தயவு செய்து அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அட்வைஸ் கொடுப்பதற்கான நேரம் இதுவல்ல,நீங்கள் எதுவும் பேசாமல் அவர்கள் சொல்வதை சில மணி நேரம் காதுகொடுத்து கேட்டாலே அவர்கள் கொஞ்சம் ஆசுவாசமடைந்து விடுவார்கள்.
வார்த்தைகளில்…. : இது ஒன்றும் உங்களுடைய வாதத் திறமையை நீருபிப்பதற்கான நேரம் அல்ல என்பதை முதலில் நீங்கள் உணருங்கள். ஒரு சோகமாக இருப்பது என்பது உங்களுக்கான மேடையாக பயன்படுத்திக் கொள்ள நினைக்காதீர்கள். அதே போல நீங்கள் பேசும் வார்த்தைகளில் உங்களுடைய கவனம் இருக்க வேண்டும்.அவர்களை பழித்துப் பேசுபவையாக இருக்க வேண்டாம்.
தூண்டும் விஷயங்கள் : அவர்கள் மறக்க நினைக்கிற விஷயத்தை தூண்டும் வகையில் உங்களுடைய வார்த்தைகளோ, செயல்களோ இருக்க வேண்டாம். அதே போல பேச்சை மாற்றுங்கள்,அவர்களின் கவனத்தை திசை திருப்புங்கள்.
வாய்ப்பல்ல : இங்கே உங்களைப் பற்றியும், உங்களின் பெருமைகளையும் பகிர்ந்து கொள்ளவதற்கான வாய்ப்பாக இதனை கருதாதீர்கள். பலரும் குறிப்பாக தன்னோடு இருக்கும் நண்பர்கள் இதனை தங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதால் தான். தனக்கு நேருகின்ற வருத்தங்களை வெளியில் சொல்லாமல் மறைத்துவிடுகிறார்கள்.ஒரு கட்டத்தில் அது மிகவும் அதிகமாகி பூதகரமாக வெடிக்கும் போது தான் சுற்றியிருக்கும் உங்களுக்கே கூட விஷயம் தெரிகிறது.
உணர்வுகளை மதியுங்கள் : அவர்கள் வருத்தப்படுவது மிகவும் சில்லறைத்தனமான விஷயமாக உங்களுக்கு தெரியலாம் ஆனாலும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்திடுங்கள். வருத்தப்படும் விஷயங்களில் இருந்து மீண்டு வர நீங்கள் உறுதுணையாய் இருக்க வேண்டும்.அவர்கள் சொன்னால் செய்யலாம் என்றோ,அல்லது தானாக சரியாகிடும் என்றோ இருக்காமல் நீங்கள் அந்த மாற்றத்தின் துவக்கப்புள்ளியாக இருப்பது நல்லது.
தேவைகள் : அவர்களாக சொல்ல வேண்டும், அவர்களாக கேட்க வேண்டும் என்று நினைக்காமல் அவர்களின் தேவையை அறிந்து செயல்படுங்கள். தேவை,உதவி என்றதுமே பெரும் பணத்தை கேட்பார்கள், அல்லது உங்களால் செய்ய முடியாதவையாக இருக்கும் என்று நினைக்காமல் ஆதரவாக அருகில் இருங்கள். அவர்களுக்கு தேவை உங்களின் அருகாமையாக இருக்கலாம், உங்களின் வார்த்தைகளாக இருக்கலாம்.
எல்லாமே பெருசு தான் : அவர்களை தேற்றுகிறேன் என்று சொல்லி, அவர்களின் வேதனைகளை குறைத்து மதிப்பிடாதீர்கள். இதெல்லாம் ஒரு கஷ்டமா உன்னை விட எத்தனைப்பேர் கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா என்று சொல்லி அவர்களின் வருத்தத்தை மட்டம் தட்டிப் பேசாதீர்கள்.
கேள்வி : ஓயாமல் அவர்களிடம் கேள்வி கேட்டு இம்சை கொடுக்காதீர்கள்.இந்த கேள்விகள் தான் அவர்களுக்கு தொந்தரவாக மாறிடும். அப்படிச் செய்யாதீர்கள், இதுவே தொடர்ந்தால் அவர்கள் உங்களை விட்டும் விலக ஆரம்பித்து விடுவார்கள்.
சந்தர்ப்பங்கள் : இதிலிருந்து வெளி வருவதற்கான சந்தர்ப்பங்களை நீங்கள் தான் உருவாக்கி கொடுக்க வேண்டும். அவர்கள் சொல்வார்கள், அவர்களாக கேட்பார்கள் என்று இருக்காமல் நீங்கள் அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுங்கள். கவனத்தை திசை திருப்பும் வகையில் வெளியில் அழைத்துச் செல்லுங்கள், டாப்பிக் மாற்றி விவாதியுங்கள். அவர்களிடத்தில் நீங்கள் அட்வைஸ் கேட்பது போல அல்லது ஏதேனும் யோசனை கேட்பது போல ஆரம்பித்து விவாதியுங்கள்.
பலம் என்ன? : உன்னுடைய பலம் என்னென்ன தெரியுமா என்று சொல்லி அவர்களுடைய பலத்தை பட்டியலிடுங்கள். நீ சாதரணமாக செய்து விட்டுப்போகும் விஷயங்கள் எல்லாம் அசாதரணமான விஷயம், உன் பலமும்,உன்னுடைய திறமையைப் பற்றியும் பிறருக்குத் தெரியவில்லை, ஏன் உனக்கே தெரியவில்லை என்று சொல்லி புரியவைத்திடுங்கள்.
பொறுமை : மிக மிக அடிப்படையானது அதே சமயம் அத்தியாவசியமானதும் கூட. ஆம், இந்த நேரத்தில் அவர்கள் பேசுகிற வார்த்தைகள், செய்கிற செயல்கள் உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம் எரிச்சலை உண்டாக்கலாம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு சில மணி நேரங்கள் நீங்கள் பொறுமையாய் இருப்பது அவசியம். அந்த இடத்தில் உங்களது தற்பெருமைகளை பேசாதீர்கள், அதைக் கேட்பதில் அவர்களுக்கு ஆர்வமிருக்காது.உங்கள் மீது வெறுப்பு தான் ஏற்படும்.
Average Rating