உள்ளூராட்சி சபைத்தேர்தல்: சிதறப்போகும் தமிழ் வாக்குகள்? – நிலாந்தன்..!! (கட்டுரை)
இம்முறை தமிழ்ப்பரப்பில் நான்கு அணிகள் தேர்தலில் இறங்கியுள்ளன. முதலாவது தமிழரசுக் கட்சியும் அதன் கூட்டாளிகளும், இரண்டாவது சுரேஸ் – சங்கரி அணி, மூன்றாவது கஜன் அணி, நான்காவது தென்னிலங்கை மையக் கட்சிகளும், ஈ.பி.டி.பியும், சுயேட்சைகளும். இப்படிப் பார்த்தால் சில இடங்களில் நான்முனைப் போட்டியும், சில இடங்கில் மும்முனைப் போட்டியும், பல இடங்களில் இருமுனைப் போட்டிக்கும் இடமுண்டு.
உதாரணமாக யாழ் மாநகர சபையை எடுத்துக் கொள்வோம். மாநகர பிதா என்ற பதவி அதிகம் முக்கியத்துவமுடையது. வெளிக்கவர்ச்சி மிக்கது. இப்பதவிக்காக மாநகர சபைக்குள் மும்முனைப் போட்டிக்கு இடமுண்டு.
தமிழரசுக்கட்சி அதன் சின்னத்தை முன்வைத்து அரங்கில் இறங்கியுள்ளது. அதன் பிரதான வேட்பாளரின் மதப் பின்னணியும் இது விடயத்தில் உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள். பெருமளவிற்கு கத்தோலிக்கர்கள் செறிந்து வாழும் கரையோரப் பிரதேசங்களில் தனக்கு வாக்குகள் அதிகம் விழும் என்று அக்கட்சி நம்புகிறது. எனினும் அந்த வாக்குகளின் ஒரு பகுதியை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும், ஈ.பி.டி.பியும் பங்கு போடக்கூடும்.
கஜன் அணியைப் பொறுத்தவரை அதன் பிரதான வேட்பாளர் படித்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ஓரளவிற்கு செல்வாக்குடையவராகக் காணப்படுகிறார். இளஞ் சட்டத்தரணிகள் அணியொன்று அவருக்காக வேலை செய்கிறது. உதவி நகரபிதா பதவிக்குப் போட்டியிடுபவர் ஓர் ஆசிரியர் தொழிற்சங்கவாதி. கல்விச் சமூகத்தில் அவருக்கு எவ்வளவு ஆதரவு உண்டு என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக கத்தோலிக்கக் கிராமங்களில் வேலை செய்யும் பங்குத்தந்தைமார்கள் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை விட்டுக்கொடுக்கும் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. இது கஜன் அணிக்கு சாதகமானது.
அதே சமயம் யாழ் மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் ஈ.பி.டி.பிக்கு ஓர் ஆதரவுத்தளம் உண்டு.
யாழ் மாநகர சபைக்கு வெளியேயும் ஒடுக்கப்படும் சமூகங்கள் மற்றும் நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் மத்தியில் ஈ.பி.டி.பி.க்கும், தென்னிலங்கை மைய கட்சிகளுக்கும் ஒரு பகுதி ஆதரவு உண்டு. இப்படிப் பார்த்தால் யாழ் மாநகர சபைக்கான போட்டிக் களத்தில் மும்முனைப் போட்டிக்கு இடமுண்டு.
வவுனியாவில் உதயசூரியன் ஒப்பீட்டளவில் ஸ்திரமாகக் காணப்படுகிறது. எனினும் தமிழரசுக்கட்சி கடுமையான போட்டியை ஏற்படுத்தும். மன்னாரிலும் நிலமை அப்படித்தான்.
வன்னியில் பெரும்பாலும் சூரியன், வீடு, சைக்கிள் என்ற மும்முனைப் போட்டிக்கே இடமுண்டு. சில இடங்களில் தென்னிலங்கைமைய கட்சிகளும் வாக்குகளைப் பங்கு போடும்.
கிளிநொச்சியில் கூடுதலான பட்சம் இருமுனைப் போட்டி அல்லது சில சமயம் மும்முனைப் போட்டிக்கு இடமுண்டு. அங்கே தமிழரசுக் கட்சிக்கும், கேடயத்தைச் சின்னமாகக் கொண்ட சுயேட்சைக் கட்சிக்குமிடையே முதன்நிலை மோதல் இடம்பெறலாம். கஜன் அணியும் சுரேஸ் அணியும் கடுமையாக வேலை செய்தால்; நான்முனைப் போட்டிக்கு இடமுண்டு.
கிழக்கில் பல்லினச் சூழல் குறைந்த தமிழ்ப் பகுதிகளில் வீட்டுக்கும் அதன் எதிரணிகளுக்கும் இடையேயான இருமுனை அல்லது மும்முனைப் போட்டிக்கு இடமுண்டு. இதில் பிள்ளையானின் கட்சியும் வாக்குகளைப் பங்கு போடும் என்று எதிர்பார்க்க்பபடுகின்றது.
உதயசூரியனும், சைக்கிளும் கிழக்கில் போட்டியிடுகின்றன. இவர்களுடைய பலம், பலவீனம் என்பவற்றை இத் தேர்தல் நிரூபித்துக் காட்டும். இப்படிப் பார்த்தால் தமிழ்ப் பகுதிகளில் இரண்டுக்கு மேற்பட்ட முனைகளில் போட்டிகளுக்கு இடமுண்டு. இம் மோதலானது யாருக்கு சாதகமாக மாறும்?
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ஒரு தனிப்பட்ட உரையாடலின் போது சொன்னார் மாற்று அணிக்குள் ஏற்பட்ட உடைவு தமிழரசுக்கட்சிக்கே வெற்றி வாய்ப்புக்களை அதிகப்படுத்தக்கூடும் என்று.
மாற்று அணி ஒருதிரட்சியாக முன் வந்திருந்தால் அது தமிழரசுக்கட்சிக்கு பெரிய சவாலைக் கொண்டு வந்திருக்கும் என்று. அதே சமயம் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு மூத்த ஊடகவியலாளர் – ஒரு சர்வதேச ஊடகத்தில் வேலை செய்பவர் – சொன்னார் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படும் பொழுது அது முஸ்லிம் கட்சிகளுக்கே சாதகமாக அமையும் என்று.
இப்படிப் பார்த்தால் இம்முறை தமிழ் அரங்கில் வாக்குகள் இரண்டுக்கு மேற்பட்ட முனைகளில் சிதறடிக்கப்படும் வாய்ப்புக்களே அதிகமாகக் காணப்படுகின்றன. இது சில சமயங்களில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறும் விகிதத்தைக் குறைத்து விடலாம். அல்லது குறைந்த பட்ச பெரும்பான்மையோடு தமிழரசுக்கட்சியை சில பல இடங்களில் வெற்றி பெறச் செய்யலாம்.
எனினும் கஜன் அணியும், சுரேஸ் அணியும் பெறப்போகும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையானது வீட்டிற்கு கிடைக்கும் வாக்குகளை விட அதிகமாக இருந்தால் அது கடந்த எட்டாண்டு காலப் போக்கில் ஒரு திருப்பம் ஏற்பட்டிருப்பதைக் குறிக்கும்.
இப்பொழுது உடைந்து போயிருக்கும் மாற்று அணி புதிய தெரிவுகளைப் பற்றியும் புதிய இணைவுகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டியிருக்கும்.
தமிழரசுக்கட்சியும் உட்பட மாற்று அணியைச் சேர்ந்த இரண்டு கட்சிகளும் தங்களுடைய மெய்யான பலம் எது? பலவீனம் எது? என்பதைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு சோதனைக் களமாக இத்தேர்தல்களம் அமையும்.
இப் பரீட்சையில் பெறப்போகும் முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் யதார்த்தத்தை உணர்ந்து முடிவுகளை எடுக்க இது தூண்டும்.
கூட்டமைப்பு தொடர்ந்தும் பலமாகத் தோன்றுவதற்குக் காணம் அதற்கொரு பலமான தலைமை உண்டு. சரிக்கும் பிழைக்குமப்பால் சம்பந்தர் கேள்விக்கிடமற்ற ஒரு தலைவராகக் காணப்படுகிறார். முரண்பாடுகளை எதுவிதத்திலோ வெற்றிகரமாகக் கையாண்டு விடுகிறார்.
இதைத் தவிர கூட்டமைப்பின் அடுத்த பலம் தமிழரசுக்கட்சியாகும். உள்ளதில் பெரிய கட்சி அது. அதோடு கிராம மட்ட வலயமைப்பைக் கொண்டிருக்கிறது.
கடந்த எட்டாண்டுகளாக அவ்வலயமைப்பு ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் பலமாகக் காணப்படுகிறது. மாலையும் கழுத்துமாக வெள்ளையும் சொள்ளையுமாக வாகனங்களும் ஆளணியுமாக உள்ளூரில் பிரமுகர்களாக வலம் வரும் பலர் அக்கட்சியைச் சேர்ந்தவர்களே.
இந்த அடிப்படைப் பலத்தை வரும் தேர்தலில் எப்படிப் பாதுகாப்பது என்பது ஒரு சவால்தான். தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையோடு மாற்று அணி ஒரு திரட்சியாக மேலெழுந்திருந்தால் அது கூட்டமைப்பிற்கு பெரிய நெருக்கடியைக் கொடுத்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை.
மாற்று அணிக்குள்ள பலம் கூட்டமைப்பின் தவறுகள்தான். அதன் பலவீனம் ஒரு பலமான தலைமை இல்லையென்பது. கஜனின் தலைமையை சுரேசும், சுரேசின் தலைமையை கஜனும் ஏற்கும் ஒரு நிலை அங்கே இல்லை.
இது விடயத்தில் இரண்டு தீர்வுகளே உண்டு, ஒன்று இருவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விக்னேஸ்வரன் தலைமை ஏற்பது. அல்லது இருவரும் இணைத் தலைவர்களாகச் செயற்படுவது. விக்னேஸ்வரன் அப்படித் தலைமை தாங்கத் தயாரில்லை.
இப்போதைக்கு சம்பந்தனுக்கு நிம்மதியைக் கொடுக்கும் விடயம் அது. அதே சமயம் சுரேசும், கஜனும் இணைத் தலைமைகளாகச் செயற்படும் ஒரு நிலமையும் பலவீனமாகக் காணப்படுகிறது.
பேரவை திரை மறைவிலிருந்து அதைச் செய்திருக்கலாம். ஆனால் இது தொடர்பான சந்திப்பு ஒன்றில் மறைமுகமாகப் பேச வேண்டிய விடயங்களை வெளிப்படையாகப் பேசி அதற்கு விக்னேஸ்வரன் பகிரங்கமாகப் பதில் கூறவேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.
பேரவையின் அனுசரணையோடு ஒரு மாற்று அணி உருவாக்கப் படாததற்கு இதுவும் காரணம். இந்நிலையில் மாற்று அணியைச் சேர்ந்த இரண்டு கூட்டுகளும் தங்களுடைய பலங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை இத் தேர்தல் ஏற்படுத்தி விட்டது.
இதன் மூலம் கஜனும், சுரேசும் பெறப்போகும் மொத்த வாக்குகளின் கூட்டுத்தொகையானது அவர்களுக்கு மட்டுமல்ல கூட்டமைப்பிற்கும் புதிய செய்திகளை உணர்த்தும். அது மட்டுமல்ல. விக்னேஸ்வரனுக்கும் புதிய செய்திகளை உணர்த்தும்.
மாகாண சபையின் ஆயுட்காலம் முடியும் வரையில் அவர் முடிவெடுக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. ஆனால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பின் தமிழரசுக்கட்சி, விக்னேஸ்வரன் தொடர்பில் எப்படிப்பட்ட முடிவையெடுக்கும்? விக்னேஸ்வரனை எதிர்நிலைக்குத் தள்ளினால் அவர் மாற்று அணிக்கு தலைமை தாங்கப் போய்விடுவார்.
எனவே அப்படியொரு நிர்ப்பந்தத்தை இப்போதைக்கு அவருக்குக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடியும் பொழுது விக்னேஸ்வரன் தானாக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.
எனினும் அவர் எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தாலும் பேரவையை மையப்படுத்தியே முடிவுகளை எடுப்பார் என்று தோன்றுகிறது. பேரவையை ஒரு கட்சியாக பதியக்கூடாது என்று அவர் கூறுவதும் எதிர்காலத்தில் பேரவையை பலப்படுத்த வேண்டும் என்று அவர் கருதுவதும் அந்த அடிப்படையில்தான்.
ஆனால் இதிலுள்ள நடைமுறைச் சிக்கல் என்னவென்றால் பேரவை முதலாவதாக ஒரு பிரமுகர் மைய அமைப்பு. இரண்டாவதாக அதில் அரச ஊழியர்ளே அதிகம். மூன்றாவதாக அங்கே செயற்பாட்டாளர்கள் குறைவு. நான்காவதாக அங்கே முழுநேர அரசியற் செயற்பாட்டாளர்கள் யார் என்று பார்த்தால் விக்னேஸ்வரனும், ஏனைய கட்சித் தலைவர்களும்தான்.
இப்படிப் பார்த்தால் இப்பொழுது சிதறிக் காணப்படும் கஜனையும், சுரெசையும் இணைத்துக் கொண்டுதான் பேரவையைப் பலப்படுத்தலாம். ஏனெனில் முழுநேர அரசியலைச் செய்வது அவர்கள் தான். இது தொடர்பாக விக்னேஸ்வரனிடம் ஏதும் அரசியல் தரிசனங்கள் உண்டா?
அவர் என்ன முடிவை எடுப்பாரோ தெரியாது. அவர் இது வரையிலும் முடிவெடுக்காத காரணத்தால் தமிழ் வாக்குகள் வரும் தேர்தலில் சிதறப் போகின்றன என்பது மட்டுமே உண்மை.
ஒரு அரசியல் தீர்வைப் பெறுவதற்காக ஆகக் கூடியபட்சம் ஒன்று திரளவேண்டிய ஒரு சிறிய மக்கள் கூட்டமானது ஒரு தீர்வுக்கான தொடக்க அறிக்கையாக வெளிவந்திருக்கும் இடைக்கால அறிக்கை தொடர்பில் ஆகக் கூடிய ஒருமித்த முடிவை எடுக்க முடியாத அளவிற்கு சிதறிக் காணப்படுகிறது என்பது கொடுமையானதே.
Average Rating