அரசாங்கத்தின் இருப்புக்கு சவாலாகிவிட்ட பிணைமுறி அறிக்கை..!! (கட்டுரை)
தேசிய அரசாங்கம் என்ற பெயரில் கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் 2015 ஆண்டு கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி காலாவதியாகி விட்டது.
அந்தச் சூட்டோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக, தாம் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை கடந்த மூன்றாம் திகதி பகிரங்கப்படுத்தினார்.
அந்த அறிக்கையை அவர் வெளியிட்டு வைக்காவிட்டாலும், அதன் முக்கிய பகுதிகளை உள்ளடக்கி, அவர் நாட்டு மக்களுக்கு அன்று உரையாற்றினார். ஆணைக்குழு, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் விக்கிரமசிங்கவை குறைகூறாவிட்டாலும், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாக ஜனாதிபதி தமது உரையில் குறிப்பிட்டார்.
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது மருமகனான ‘பேர்பெச்சுவல் டிரஷரீஸ்’ நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸுக்கு, மத்திய வங்கி பிணைமுறி விற்பனை தொடர்பான தகவல்களை வழங்கியிருப்பதாகவும் அதன்படி, பாரிய மோசடியொன்று இடம்பெற்று இருப்பதாகவும் அதனால் அரசாங்கத்துக்கு 1,100 கோடிக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மேற்கோள் காட்டி ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த மோசடியைப் பற்றிய தகவல்கள் 2015 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் வெளியாக ஆரம்பித்தது முதல், அவ்வாறானதொரு மோசடி இடம்பெறவில்லை என்று அந்தத் தகவல்களை மறுக்கவும் அந்த விவகாரத்தை மூடி மறைக்கவும் ஐ.தே.க பெரும் முயற்சியை மேற்கொண்டமை நாடு அறிந்ததே.
அந்தநிலையில், ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்த விடயங்கள், ஐ.தே.கவை வெகுவாக அசௌகரியத்துக்கு உள்ளாக்கியிருக்க வேண்டும்.
அதையும் விட, அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தோ அல்லது தாம் நேரடியாகச் சம்பந்தப்படாமல் வேறு வகையிலோ வெளியிடாமல், தாமே நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையொன்றின் மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்த ஜனாதிபதி முன்வந்தமை ஐ.தே.கவை மேலும் சினம் கொள்ளச் செய்திருக்கும்.
ஏற்கெனவே, ஜனாதிபதியின் கட்சியான ஸ்ரீ ல.சு.கவுக்கும் ஐ.தே.கவுக்கும் இடையே ஒரளவுக்கு முறுகல்நிலை ஏற்பட்டு இருக்கும் நிலையில், இந்த அறிக்கை, அந்த நிலையை மேலும் மோசமாக்கியிருக்கவும் கூடும்.
ஏனெனில், இலங்கை வரலாற்றில் மிகப் பெரும் மோசடிகளில் ஒன்றான பிணைமுறி விவகாரம் தொடர்பாகப் பல அதிர்ச்சியளிக்கும் விடயங்கள் ஜனாதிபதி நியமித்த இந்த ஆணைக்குழு முன் அம்பலமாகின.
போதாக்குறைக்கு அறிக்கையின் முக்கிய விடயங்கள், ஜனாதிபதியின் கட்சியும் பிரதமரின் கட்சியும் போட்டியிடும் தேர்தல் ஒன்று நடைபெறும் ஒரு காலத்திலேயே ஜனாதிபதி வெளியிட்டு இருக்கிறார்.
ஆணைக்குழுவின் அறிக்கையினால் சாதாரண வாக்காளர்கள் மீது ஏற்பட்ட தாக்கம் என்ன, எவ்வாறானது என்பது தெளிவில்லை. ஏனெனில், பிணைமுறி என்றால் என்ன என்றோ, பிணைமுறி மோசடி என்றால் என்ன என்றோ, இதனால் யார் எவ்வாறு பயன் அடைந்தார்கள் என்றோ அதனால் தமக்கு ஏற்படும் நட்டம் என்ன என்றோ சாதாரண வாக்காளர்களில் படித்தவர்களிலும் மிகச் சிலருக்கு மட்டுமே விளங்குகிறது.
அதேவேளை, தமது கட்சித் தலைவர்கள் எவ்வாறான பாரிய ஊழலில் ஈடுபட்டாலும், அதனால் பொது மக்கள் என்ற வகையில் தாம் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும், அதை நியாயப்படுத்தும் ஒருவித அடிமை மனப்பான்மை சாதாரண வாக்காளரிடம் இருக்கிறது.
எனவே, இந்த அறிக்கையால் ஐ.தே.கவுக்கு ஆதரவளித்து வந்த ஒரு வாக்காளரேனும் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின்போது ஐ.தே.கவுக்கு எதிராக வாக்களிப்பார் என்று உறுதியாகக் கூறமுடியாது.
சிலவேளை படித்த ஒரு சிலரிடையே அவ்வாறு மனமாற்றம் ஏற்படுவது ஒரு புறமிருக்க, மனவேதனை அடைந்தவர்கள் இருக்கலாம். எதிர்கட்சிகள் தொடர்ந்தும் “ஊழல், ஊழல்” என்று மந்திரம்போல் கூறிவந்தால், சாதாரண மக்கள் மீதும் அது தாக்கத்தை ஏற்படுத்தும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, அவ்வாறானதொரு நிலைமை அவரது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டு இருந்தது.
இலங்கையில் ஊழலுக்கு எதிரான போராட்டங்களைப் பார்க்கும்போது, ஜனாதிபதி இந்த ஆணைக்குழு அறிக்கையைச் சட்டமா அதிபரிடம் அனுப்பிய போதிலும், இந்த ஊழலில் நேரடியாகச் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் அர்ஜுன மகேந்திரனோ அல்லது அவரது மருமகன் அர்ஜுன் அலோசியஸோ அல்லது முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவோ தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.
எனவே, இந்த விவகாரத்தின் மூலம் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் 1,100 கோடிக்கு மேலான பொது மக்களின் பணம், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து மீள அறவிடப்படும் என்ற உத்தரவாதமும் இல்லை.
குறித்த ஆணைக்குழு, இந்த ஊழலை மிகத் தெளிவாக அம்பலப்படுத்திய போதும், ஆணைக்குழுவும் சிலர் விடயத்தில் மென்மையாக நடந்து கொண்டதாகச் சில ஊடகங்கள் விமர்சித்து இருந்ததையும் மறுக்க முடியாது. எனவே தான், குற்றவாளிகள் எதிர்காலத்தில் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறது.
இலங்கையில் ஆணைக்குழுக்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் ஆகியவற்றைப் பற்றிய வரலாறு திருப்தியளிப்பதாக இல்லை.
பிணைமுறி ஆணைக்குழு விசாரணையின்போது நடந்ததைப் போலவே, அந்த ஆணைக்குழுக்களின் விசாரணைகளின்போதும் படு பயங்கரமான விடயங்கள் அம்பலமாகிய போதிலும், இதுவரை அவற்றினால் எந்தவொரு நபரும் தண்டிக்கப்படவில்லை.
1960களில் இருந்து பல அரசாங்கங்கள் பதினைந்துக்கு மேற்பட்ட ஆணைக்குழுக்களை நியமித்த போதிலும் அவற்றினால் எவரும் தண்டிக்கப்படாதது போலவே, அவற்றை நியமிக்கக் காரணமான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கேனும் அவற்றினால் நியாயம் வழங்கப்படவுமில்லை. அதேபோல், ஆணைக்குழுக்களினால் பெற்ற அனுபவங்களினால் குறைந்தபட்சம் சட்டத்துறையாவது பயன்பெறவில்லை.
முன்னாள் ஜனாதிபதி எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்ட போது, அதன் பின்னால் இருந்த அரசியல் சதியை ஆராய, அவரது மனைவியான சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாவது ஆட்சிக் காலத்தில், ஓர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதுவும் புஸ்வானமாகியது.
அதன்பின்னர் 1977 ஆம் ஆண்டு, இனக்கலவரம் தொடர்பான ‘சன்சோனி ஆணைக்குழு’, 1997 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலையில் 67 சிவிலியன்களின் படுகொலை, 1988-89 ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சியின்போது பட்டலந்தையில் இருந்ததாகக் கூறப்படும் சித்திரவதை முகாம், 2000 ஆம் ஆண்டு பண்டாரவளை பிந்துனுவெவ பகுதியில் அமைந்திருந்த தமிழ்க் கைதிகளுக்கான மறுவாழ்வு முகாமில் இடம்பெற்ற படுகொலைகள், 1981 ஆம்ஆண்டு இனக்கலவரம் ஆகியவை தொடர்பாக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.
பல அரசாங்கங்கள் காணாமற்போனோர்கள் விடயத்தில் ஆணைக்குழுக்களை நியமித்தன. 2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கை தோல்வியடைந்தது ஏன் என ஆராய அந்த ஒப்பந்தத்துக்கு எதிராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, 2010 ஆம் ஆண்டு ஓர் ஆணைக்குழுவை நியமித்தார்.
அதுவே, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என அழைக்கப்பட்டது. அதற்குப் புறம்பாக இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவின் தலைமையில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற பெயரில் ஒரு குழுவை நியமித்தார். இந்த அனைத்துக் குழுக்களினதும் அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டன.
விசாரணை அறிக்கைகள் தயாரிப்பதிலும் அதன் பின்னரான நடவடிக்கைகள் எடுப்பதிலும் ஆயுதப் போராட்டங்களின் போது காணாமற் போனோர்கள் தொடர்பான ஆணைக்குழுக்களே மிகவும் மோசமானவையாகும்.
1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் இருந்து காணாமற்போனோர்கள் தொர்டர்பான ஒன்பது ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றன. தமது ஆட்சிக் காலத்தில், தெற்கில் 60,000 பேருக்கு மேல் காணாமற்போனதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, 1991,1992 மற்றும் 1993 ஆகிய ஆண்டுகளில் மூன்று ஆணைக்குழுக்களை நியமித்தார்.
அவரது மறைவை அடுத்து, 1993 ஆம் ஆண்டிலேயே ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க அவற்றை இரத்துச் செய்துவிட்டு, தாமும் ஓர் ஆணைக்குழுவை நியமித்தார். ஆனால், அதன் அறிக்கை வெளியிடப்படவில்லை.
அதையடுத்து 1994 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, முதலில் நாட்டை மூன்று வலயங்களாகப் பிரித்து, அம்மூன்று வலயங்களிலும் காணாமற்போனோர் தொடர்பாக ஆராய மூன்று ஆணைக் குழுக்களை நியமித்தார். அவற்றின் விசாரணைகள் முடிவடைந்ததன் பின்னர், அந்த விசாரணைகளைப் பூர்த்தி செய்வதற்கென அவர் நாடு தழுவிய ரீதியில் மற்றோர் ஆணைக்குழுவை நியமித்தார். அந்தக் குழுவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அவ்வளவுதான்.
சந்திரிகா குமாரதுங்கவை அடுத்துப் பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, சர்வதேச நெருக்குதல் காரணமாக, 2013 ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையில் மற்றொரு காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவை நியமித்தார். அதன் அறிக்கையும் வெளியிடப்பட்டது. பின்னர் மேல் நடவடிக்கைகளின்றி அதுவும் மறக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே, பிணைமுறி விவகாரம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையைப் பற்றி ஜனாதிபதி குறிப்பிட்டு இருக்கிறார். அவ்வறிக்கையைப் பகிரங்க ஆவணமாக வெளியிடுமாறு மக்கள் விடுதலை முன்னணியும் கூட்டு எதிரணியும் கோரிக்கை விடுத்துள்ளன. அவர்களது கோரிக்கையின் பிரகாரம் இன்று (புதன்கிழமை) அந்த அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற விவாதம் ஒன்றும் நடைபெறவிருக்கிறது. ஆனால், அந்த விவாதம் வெறுமனே அரசியல் கட்சிகள், தமது பிரசார பணிகளுக்குப் பாவிக்க உதவுமேயல்லாது வேறு எதற்கும் உதவாது.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும் கொள்ளையடிக்கப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை அறவிடுவதற்குமான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமா என்பது இன்னமும் நிச்சயமில்லை. ஆரம்பிக்கப்படுமாயின் எப்போது என்பது அடுத்த கேள்வியாகும்.
முன்னைய அரசாங்கத்தின் தலைவர்களுக்கு எதிரான பாரிய ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெறும் வேகத்தைப் பார்க்கும் போது, இந்த அரசாங்கத்தின் தலைவர்களும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிணைமுறி விவகாரம் தொடர்பான நீதிமன்ற விசாரணை இழுத்தடிக்கப்பட மாட்டாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.
முன்னைய அரசாங்கத்தின் தலைவர்களுக்கு எதிரான விசாரணைகளை இழுத்தடிக்க பின்புலத்தில் இருந்து செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
நல்லாட்சி என்று தற்போதைய ஆட்சியாளர்கள் தமது ஆட்சியை வர்ணித்தாலும் இப்போதும் அமைச்சர்கள் நீதித்துறை மீது தமது செல்வாக்கைச் செலுத்த முடியும் என்பதையே அது காட்டுகிறது.
பிணைமுறி விவகாரம் தொடர்பாக இந்த ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளும் போது, சம்பந்தப்பட்ட பிணைமுறி விற்பனையின் போது, மோசடியான முறையில் இலாபமடைந்த அர்ஜுன் அலோசியஸிடம் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பல நிதி உதவிகளைப் பெற்றிருக்கிறார் என்பது அம்பலமாகியது.
அதையடுத்து அவர் அப்போது தாம் வகித்த வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தார். அதன் மூலம் தாம் இலங்கை அரசியலில் புதிய கலாசாரம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக கூறினார்.
அந்த விசாரணைகளின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் அடிபட்டது. எனவே, அவரும் ஆணைக்குழு முன் சில விவரங்களைத் தெரிவித்தார். அதையும் ஐ.தே.க புதிய கலாசாரமாக வர்ணித்தது. உண்மைதான். மஹிந்தவின் காலத்தில் இவ்வாறு அமைச்சர்கள் இராஜினாமா செய்திருக்கவும் மாட்டார்கள்; பிரதமர்கள் ஆணைக்குழுக்கள் முன் சாட்சியமளித்தும் இருக்க மாட்டார்கள்.
ஆனால், ஐ.தே.க பிணைமுறி விவகாரத்தை மூடி மறைக்க எடுத்த முயற்சியை கருத்திற் கொள்ளும்போது, இவற்றுக்கெல்லாம் அக்கட்சிக்கு ‘கலாசாரம்’ போன்ற பெரிய சொற்களைப் பாவிக்க அருகதையில்லை.
அதேவேளை, தாம் புதிய கலாசாரம் படைத்தோம் என்று கூறும் ஐ.தே.க ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுவது தொடர்பாக, ஜனாதிபதி மீது கோபம் கொண்டிருந்தாலும் அந்தக் கோபத்தைக் காட்ட முடியாத நிலையில் இருக்கிறது.
இந்த விடயத்தின் காரணமாக ஜனாதிபதியும் பிரதமரும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஜனாதிபதி அரசியல் காரணங்களுக்காக இந்த ஆணைக்குழுவை நியமித்திருக்கலாம். ஆனால், அரசாங்கத்தின் இருப்பு பாதிக்கப்படும் வகையில் அவர் அரசியலில விளையாட முடியாது. அவரது தனிப்பட்ட இருப்பும் இந்த அரசாங்கத்தின் இருப்பின் மீது தான் தங்கியிருக்கிறது.
அதேவேளை, பிரதமருக்கு ஜனாதிபதியை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அரசாங்கத்தைத் தனியாக நடத்திச் செல்லவும் முடியாது. அவரது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 106 ஆசனங்கள் மட்டுமே இருக்கின்றன.
அவர் ஜனாதிபதியை ஒதுக்கித் தள்ளிவிட்டு அரசாங்கத்தை நடத்துவதாக இருந்தால் ஒன்றில் ஜனாதிபதியின் அணியிலிருந்தோ அல்லது மஹிந்தவின் அணியிலிருந்தோ எம்பிகளை விலை கொடுத்து வாங்க வேண்டும். எனவே தற்போதைய நிலையில் எது நடந்தாலும் இருவரும் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.
Average Rating