கொடிய ஆயுதங்களோடு வென்றோரும் புனித ஆன்மாக்களோடு தோற்றோரும்..!! (கட்டுரை)
கடந்த வருட இறுதிப் பகுதியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ‘எலிய’ என்ற சிங்களப் பெயரை உடைய ‘ஒளி மயமான அபிலாஷைகள்’ என்ற தமிழ்க் கருத்து கொண்டதுமான புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.
“2009 ஆம் ஆண்டு, மே மாதம் 19ஆம் திகதி காலை 10.30 மணிக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொலை செய்த பின்னர், தீவிரவாதம் தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை” என, அந்த அமைப்பை ஆரம்பித்து வைக்கும் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறாகக் கருத்துத் தெரிவித்த ஓய்வு பெற்ற தளபதி, பிரபாகரன் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது அல்லது அந்த நிலைக்குள் ஏன் தள்ளப்பட்டார் எனச் சிந்திக்கத் தவறி விட்டார்.
மிகக் கொடூர மரணத்தைப் பரிசாகத் தரக்கூடிய ஆயுதங்களை ஏன், அந்தக் காலப்பகுதியில் தமிழ் இளைஞர்கள் அரவணைக்க வேண்டிய தேவை எற்பட்டது எனச் சிந்திக்கத் தவறி விட்டார்.
காலம் காலமாகத் தென்னிலங்கை ஆட்சியாளர்களால், சகல வழிகளிலும் ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டப்பட்டு, வேறு மார்க்கமின்றி, இறுதித் தீர்வாக நாடியதே ஆயுத வழியிலான தமிழர்களின் விடுதலைத் தேடல் ஆகும்.
மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன மேலும் தெரிவிக்கையில், “நாம் தமிழ் மக்களுடன் இருந்தோம். எனது 35 ஆண்டுகால இராணுவ வாழ்க்கையில், 26 ஆண்டுகளை வடக்கு, கிழக்கில் செலவிட்டு உள்ளேன். அவர்களுடைய மனநிலை எனக்குப் புரியும். அதாவது, அவர்கள் (தமிழர்கள்) எவருக்கும் பொலிஸ் அதிகாரமோ, நீதித்துறை அதிகாரமோ, அதிகாரப் பகிர்வோ அல்லது தனி நாடோ தேவை இல்லை. மாறாக அவர்கள் கோருவது அமைதியான, மதிப்பான வாழ்வை மட்டுமே” எனத் தெரிவித்து உள்ளார்.
“மஹிந்த ஆட்சிக் காலத்தில், நாம் அவர்களுக்கு அந்த வாழ்க்கையைப் பெற்றுக் கொடுத்தோம்; சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியும் போராட்டம், படை ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்களை மீட்கும் போராட்டம் தற்போதும் தொடரும் பலவித போராட்டங்களால், 2017ஆம் ஆண்டின் தமிழ் மக்களது கணிசமான காலப்பகுதி, வீதியிலேயே வீணாக விரயமாகி விட்டது.
அவர்களில் சில தாய்மார், துன்பத்தில் துவண்டு, மரணத்தைக் கூடத் தழுவி விட்டார்கள். உண்மையிலேயே தமிழ் மக்கள் விரும்புவது அமைதியான, மதிப்பான, வாழ்வு என்பதில் மறு பேச்சுக்கு இடமில்லை.
ஆனால், மறுவளமாகத் தற்போது தமிழ்மக்கள் அவ்வாறு உள்ளனரா? அவ்வாறு இருப்பதாக உணர்கின்றனரா? அல்லது இவர்கள் மீட்டுக் கொடுத்து உள்ளார்களா? ஆனால், கொடிய இனப்பிரச்சினைக்கான விடயங்கள், தொடர்ந்தும் நீறு பூத்த நெருப்பாக, மேலும் கொழுந்து விட்டு எரிகின்றன.
சிங்கள ஆட்சியாளர்களின் உச்ச அதிகாரம், வலுவான ஆட்சி மற்றும் ஆயுதபலம் என்ற அவர்களின் ஒன்று சேர்க்கப்பட்டு மொத்தமாகக் குவிக்கப்பட்டுள்ள கூட்டுப் பலத்தின் முன்னால் ஒன்றுமே செய்ய முடியாத கையறு நிலையில், தமிழ் இனம் வலுவிழந்து உள்ளது.
தங்களது இருப்பு, தமது இன அடையாளங்கள் அழிக்கப்படுவதையும் அதைத் தடுத்து நிறுத்தக் கூடிய நாதியற்றவர்களாகத் தாம் இருப்பதையிட்டு தமிழ் மக்கள் விரக்தியிலும் வேதனையிலும் உள்ளனர். ஆயுதப் போர் இல்லாத, கடந்த எட்டு வருட காலத்தில், மிகவும் சூட்சுமமாக நிழல் யுத்தம், முழு வீச்சுடன் நடைபெற்று வருவதாகத் தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர்.
சுதந்திரத்துக்காகவும் விடுதலைக்காகவும் போராடும் அமைப்புகளுக்கு, பயங்கரவாதம், தீவிரவாதம் என்று முத்திரை குத்தும் போக்கு, பொதுவானதாகவே எங்கும் தொடர்கின்றது. அவ்வகையிலேயே நமதுநாட்டிலும் நடந்து விட்டது.
1979ஆம் ஆண்டு, பயங்கரவாதத் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய தமிழ் விடுதலை அமைப்புகள் தடை செய்யப்பட்டன. ஆனால், 1985ஆம் ஆண்டு பூட்டானில், ‘திம்பு பேச்சுவார்த்தை’கள் ஜே. ஆர். ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கத்துக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் இடையிலேயே நடைபெற்றன.
1990ஆம் ஆண்டு பிரேமதாச எதிர் விடுதலைப்புலிகள் தொடக்கம் 2006இல் மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வரை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவே புலிகள் பேச்சுகளில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைகள் மற்றும் சமாதான உடன்படிக்கைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெற்றுள்ளன. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடனும் மற்றும் மத்தியஸ்தம் இல்லாமலும் பல தடவைகள் நடைபெற்றுள்ளன.
சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது, தமிழ் மக்கள் சார்பில் ஏக பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டவர்கள் சமாதான முயற்சிகள் முறிவடைந்தவுடன் பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் தோ(மா)ற்றம் பெற்று விடுகின்றனர்.
இவ்வாறாகவே, தென்னிலங்கையில் புலிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். இதுவே இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத்துக்கு எதிரான போர்.
பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போது கைலாகு கொடுத்தனர்; கட்டி அணைத்தனர். பதவியிலிருந்த அரசாங்கங்கள் தமது விமானத்தில், புலிகளின் பிரதிநிதிகளைப் பத்திரமாக ஏற்றியிறக்கி விட்டிருந்தனர். அப்போது புலிகள் யார்?
தமிழர் தரப்புப் பலமாக இருந்தபோது, இலங்கை அரசாங்கப் படைகளுக்குச் சரிநிகர் சமானமாக இருந்தபோது, சம தரப்பாக ஒரே மேசையில் இருந்தார்கள்; உரையாடினார்கள்; கைச்சாத்திட்டார்கள்.
முற்றிலும் சர்வதேச ஆதரவுடன், புலிகளின் ஆயுதத்தை மௌனம் கொள்ள வைத்தவுடன், பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டது எனச் சூளுரைக்கின்றனர்; பெருமை கொள்கின்றனர். தற்போது புலிகள் ஆயுத வழி வந்த வன்முறையாளர்களாகச் சித்திரிக்கப்படுகின்றனர்.
ஆனால், அதே இனப்பூசலுடன் தொடர்புடைய மறுதரப்பான தமிழ் மக்கள், புலிகள் இல்லாத வெற்றிடத்தில், தங்களது வளமான வாழ்வு தொடர்ந்தும் வெறுமையாக இருப்பதாகவே உணர்கின்றனர்.
அண்மையில், கொழும்பில் இயற்கை எய்திய நாகவிகாரை பௌத்த பிக்குவின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. இறுதிநிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடாத்தியமை சரியா, பிழையா என்பதை விட்டு விடுவோம்.
ஆனால், அது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் மனதில் எப்படியான உணர்வை ஏற்படுத்தி உள்ளது? மக்கள் இதை ஏற்றுக்கொள்கின்றனரா, அல்லது திணிப்பு போல உணர்கின்றனரா?
மேலும் கருத்து தெரிவித்த கமால் குணரத்ன, “கொழும்பில் அதிகாரங்களைக் குவித்து வைத்திருப்பதே நாட்டை ஒன்றாக வைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அதிகாரங்களை ஒன்றாகக் குவித்து வைத்திருக்கும் ஆட்சி அமைப்புக்கு எதிராகவே கடந்த எழுபது வருடங்களாகத் தமிழ் மக்கள் போராடி வருகின்றனர். ஒற்றை ஆட்சிக்கு எதிரான இப்போராட்டம் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆகவே, தமிழ் மக்களது மனங்களைப் புரியாமலும், கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்க்காமலும் ஒற்றையாட்சி என்ற ஒற்றை வரிக்குள் உறங்கக் (ஒழிக்கக்) கூடாது. சிங்கள சமூகத்தை, தமிழ் மக்களுக்கு எதிரான கொதிநிலையில் மீண்டும் மீண்டும் ஏன் வைத்திருக்க வேண்டும்.
சிங்கள சமூகத்தை உணர்ச்சி மிகுந்த நிலையில் இருந்து மீட்டு, அறிவார்ந்த ரீதியாகவும் யதார்த்த ரீதியாகவும் நடைமுறைக்கு சாத்தியமாகவும் சிந்திக்க, சந்தர்ப்பங்கள் வழங்க ஏன் மறுத்து வருகின்றார்கள்.தமிழ் மக்கள் தற்போது பலவீனமான நிலையில் இருப்பதால் எவரும் அவர்களுக்கு எதிராக எதையும் கதைக்கலாம்; என்னவும் செய்யலாம் என ஆகிவிட்டது.
தமிழ் மக்களும் நம்நாட்டு மக்களே; அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு; உரிமைகள் உண்டு எனச் சிந்தித்தால், அதிகாரப் பகிர்வு என்பது மிகவும் சுலபமான, இலகுவாக விடயம் இதைவிடுத்து, அவர்களுடன் வேற்றுமை பாராட்டுவதால் தீர்வுகள் தொலைந்து போகின்றன.ஆனால், சிங்கள சமூகம் இனியும் காலம் தாமதிக்காது விரைவாக, விவேகமாக தமிழர் பிரச்சினைக்கான தீர்வைக் காண முன்வர வேண்டும்.
ஏனெனில், ஏழை என்றால் நாம் கருதுவது பொருளாதார வசதி குறைந்தோர் என்றேயாகும். ஆனால், ஒருவரிடம் இருக்க வேண்டிய ஒரு விடயம், அம்சம் இல்லாவிட்டால் அந்தக் குறித்த விடயத்தில் அவர் எழையே ஆவர்.
ஆகவே, தம் சகோதர உறவுகளுடன் அவர்களுக்கான உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளும் பெருந்தன்மையில், சிங்கள மக்கள் தொடர்ந்து ஏழைகளாக வாழக் கூடாது. ஏனெனில், சிங்கள மக்கள் அவ்வாறாக ஏழைகளாக வாழ முற்படின், முழுநாடும் அனைத்து விடயங்களிலும் பிச்சைப்பாத்திரம் ஏந்தும் நிலை ஏற்பட்டு விடும்.
Average Rating